Thursday, January 6, 2011

அறிவுரை வேண்டாம்; எச்சரிக்கை போதும்

கவின்கேர் நிறுவனர் ரங்கநாதன்: அனுபவக் கல்வியை, எப்போதும் குறைத்து மதிப்பிட முடியாது. ஏட்டுக் கல்வி, அடிப்படைகளைக் கற்றுத் தரும்; அனுபவக் கல்வி, வாழ்க்கையை கற்றுத் தரும். சில சோதனையான காலகட்டங்களில், துணிச்சலான முடிவெடுக்க வேண்டும். அதற்கு அனுபவம் தேவை; 






எந்த புத்தகமும் கற்றுத் தராது. ஒரு சமயம், சிறு தொழில் நிறுவனங்களுக்கு கலால் வரி, சுங்க வரி கட்டுவதில் இருந்து, அரசு விலக்கு அளித்திருந்தது. ஆனால், திடீரென ஒருநாள், சிறுதொழில், பெரிய தொழில் என்றெல்லாம் பார்க்காமல், அனைத்து நிறுவனங்களும் வரி செலுத்த வேண்டும் என, அரசு ஆணை பிறப்பித்தது. அப்போது, எங்களுக்குப் போட்டியாக 49 நிறுவனங்கள், ஷாம்பு தயாரிப்பதில் போட்டியிட்டன. அன்றைய காலகட்டத்தில், பல நிறுவனங்கள், ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. ஆனால், நான் மேலும், புதிய திறமையான நபர்களைக் கொண்டு வந்தேன். அவர்களை ஊக்கப்படுத்தினேன். அவர்கள் கொடுத்த உழைப்பு, நிறுவன வளர்ச்சிக்கு உரமேற்றியது. இது நடந்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எங்களுக்கு போட்டியாக இருந்த 49 நிறுவனங்களும், இருந்த இடம் தெரியவில்லை. இதற்குக் காரணம், பணப் பற்றாக்குறை அல்ல; ஐடியா பற்றாக்குறை. இந்த ஐடியா பற்றாக்குறை, அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்ளாததால் தான் ஏற்படுகிறது. அனுபவசாலிகள், இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லாமல், சில முன் எச்சரிக்கைகளைச் சொல்லலாம். கிடைக்கும் வாயப்புகளை, இளைஞர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாம் சரியானால், மாற்றங்கள் நிகழும்.

No comments:

Post a Comment