Friday, January 14, 2011

உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”


      
        என்றும் இளமை... என்றென்றும் காதல்மன்னன்... தமிழ்த் திரையுலகிற்கு கிடைத்த பொக்கிஷம்... உலகநாயகன் கமலஹாசன். 1954  நவம்பர் 7 -  உலகநாயகன் உலகத்திற்கு உதயமான உன்னதநாள்.  அந்தவகையில் கமலஹாசனின் 56 வது பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று. 

நடிகன், பாடகன், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுதுதல், பாடல் புனைதல், சிறந்த நடனக் கலைஞன் என திரைத்துறைக்கென்றே தன்னை அர்பணித்துக்கொண்டுள்ள ஒரு ஒப்பற்ற கலைஞன். 1959ல் களத்தூர் கண்ணமாவில் குழந்தை நட்சத்திரமாய் தமிழ் திரைக்களத்தில் களமிறங்கிய போதே தேசிய விருது அவரை அலங்கரித்து அழகு பார்த்தது.

‘பிறக்கும் போதே தங்கக் கரண்டியுடன் பிறந்த குழந்தை’ என்று கூறுவதைபோல... நடிக்கத் தொடங்கிய போதே தேசிய விருதுடன் திகழ்ந்த கமலின் மணிமுடியில் மேலும் 3 தேசிய விருதுகள்... மூன்றாம் பிறை ( 1982),  நாயகன் (1987), இந்தியன் (1996) படங்களின் மூலம் சிறந்த நடிகனுக்காக சிறப்பித்தன. தமிழக, மலையாள, தெலுங்கு, கன்னட என அனைத்து திரையுலகிலும் பல விருதுகளால் கௌரவப்படுத்தப்பட்டவர்.இதுவரை 28 முறை சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுள்ளார் கமல்.

ஒன்பது வேடங்களில் நடித்து (நவராத்திரி) தமிழ் திரைஉலகிற்கும், தனது நடிப்புத் தொழிலுக்கும் உலக அளவில் பெருமை சேர்ந்த,  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரைத்துறை வாரிசாய் 10 வேடங்களில் ( தசாவதாரம்) நடித்த சாதனை நாயகன் கமல். 


கிட்டத்தட்ட 200 படங்களை கடந்துவிட்ட கமலின் கனவுபடைப்புகளாக மருதநாயகம், மர்ம யோகி, போன்ற படங்கள் உள்ளன. இந்தப் படங்கள் எடுக்கப்பட்டு வெளிவரும் போது உலக அளவில் மிகச்சிறந்தவையாக போற்றப்படும் என்பது கமலின் நம்பிக்கை. தமிழ் திரையுலக எதிர்பார்ப்பும் கூட. 

56 வது பிறந்த நாள் காணும் கமலுக்கு இந்த ஆண்டு மிகச்சிறந்த ஆண்டு.  தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இந்திய திரையுலகில் 50 ஆண்டுகால கலைச்சேவை புரிந்துள்ள கமலுக்கு விழாவெடுத்து தமிழ்த் திரையுலகம் கொண்டாடியது... கேரள அரசாலும் கௌரவிக்கப்பட்டார் கமல்.

மத்திய அரசும்கூட கமலுக்காக பொன்விழா எடுத்து கொண்டாடியது. இவ்விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி,“கமலஹாசன் வியக்கத்தக்க, அற்புதமான, இந்தியாவின் தங்கமான சாதனை மனிதர். அவருக்காக நடத்தப்படும் பொன்விழா பாராட்டு விழா சிறப்புக்குரியது” என்று பாராட்டினார்.


1970 களில் பல்வேறு மலையாள படங்களில் நடித்த கமல்,  1989ம் ஆண்டு கடைசியாக ‘சாணக்கியன்' என்ற படத்தில் நடித்தார்.  20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சாஜி சுரேந்திரன் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‘ஃபோர் பிரெண்ட்ஸ்’ படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. ஜெயராம், குஞ்சக்கோ போபன், ஜெயசூர்யா மீரா ஜாஸ்மின் ஆகியோருடன் நட்புக்காக கமல் நடித்துள்ள 'ஃபோர் பிரெண்ட்ஸ் ' வசூலை வாரிக்குவித்து வருகிறது.

கமலின் கதை, திரைக்கதையில் கே.எஸ். ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மன்மதன் அம்பு’ படம் சிங்கப்பூரில் வரும் 20 ந் தேதி இசைவிழா கொண்டாடிவிட்டு திரைவிழா கொண்டாடவிருக்கிறது.

இத்தனை மகிழ்ச்சிகள் நிறைந்த இந்த ஆண்டின் இன்றைய தினம்...  ‌சென்னை அண்ணா கலையரங்கில் கமலுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 
இவ்விழாவில் கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு ‌நோட்டு - புத்தகங்கள், சீருடைகள் வழங்கினார் கமலஹாசன். 

திரைத்துறைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துவிட்ட கமல் தனது உடலையும் மருத்துவதுறைக்கு அர்பணித்துவிட்டார். அவரின் வழியில் உடல் உறுப்பு தானம் செய்து வருகிறார்கள் கமலின் ரசிகர்கள். 
 
கமலின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக காஞ்சி கிழக்கு மாவட்ட ரசிகர்கள் 200 பேர் நேற்றைய தினமே உடல் உறுப்புகள்தானம் செய்தனர் என்பது பாராட்டுக்குரியது. இதேபோல், இலவச மருத்துவ முகாம், இலவச வேட்டி- சேலை வழங்கல், ஏழை மாணவ - மாணவியர்களுக்கு உதவிகள் செய்தல் என பல்வேறு நற்பணிகளை செய்து கமலின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர் கமலின் கலாரசிகர்கள். 

திரைத்துறை நண்பர்கள், ஏனையத்துறை அன்பர்கள்,  உலக ரசிகர்கள் என அனைவரின் பிறந்த நாள் வாழ்த்துகளையும் பெற்று வரும் தலைசிறந்த கலைமகனை நாமும் வாழ்த்துவோம். 

No comments:

Post a Comment