எனக்கு இப்போத்தான் ஏழரை சனி ஜாதகக் கட்டம் முழுசுமா ஒரு சுத்து சுத்தி கபடி ஆடிட்டு போயிருக்கிறாரு... அவரு ஆடுன ஆட்டத்துல செவ்வாய், புதன், வெள்ளி எல்லாம் எடம் மாறி அவங்க வீட்டையெல்லாம் வாடகைக்கு விட்டுட்டு தெறிச்சு ஓடி போயிட்டாங்க. கல்யாணத்துக்கு நான் ரெடின்னு சொன்னா பத்தாது, குருவாம்... அவர் வீட்டை இப்போ யாரோ பார்த்துட்டு இருக்காங்களாம், அவர் அவர் வீட்டுல காலடி எடுத்து வைச்சாத்தான் கல்யாணம்ன்னு சொல்லீட்டாங்க... ஏங்க, நான் தெரியாமத்தான் கேக்கிறேன், அவரு வீட்டுக்கு அவரு வரட்டும் போகட்டும். அதுக்கு ஏன் என் வாழ்க்கையில் விளையாடணும்?
சரி, விசயத்துக்கு வருவோம். தம்பிக்கு குரு பலன் மட்டும் வரட்டும், கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடுன்னு பல ஊருல இருந்து பொண்ணுக ஜாதகத்தை இறக்கிற மாட்டோம்னு வீட்டுக்கு வந்தா வாய் ஓயாம பேசிட்டே இருப்பாங்க.
அவங்க பாச மழையில் நனைஞ்சு போய் ஒரு நாள் என் பாங்காளிகிட்ட என் மேல உனக்கு அவ்வளவு பாசமாடான்னு கேட்டா, "பங்கு, ஜான் வாக்கர்ன்னு ஒருத்தர் கருப்பு லேபிள், சிவப்பு லேபிள்ன்னுட்டு 1820 லிருந்து காய்ச்சிட்டு இருக்காராம். அதெல்லாம் நாங்க எப்ப கண்ணுல பாக்கறது? உனக்கு கல்யாணம்ங்கற சாக்குலதானே இதெல்லாம் நினைச்சுக்கூட பார்க்க முடியும். அது மட்டுமில்லாம டாஸ்மாக் சரக்கு குடிச்சி குடிச்சி உடம்பு பழகிடுச்சி. அது ஒசத்தி சரக்கு, ஒத்துக்காம போயிடுச்சின்னு ரெண்டு நாள் வீட்டு பக்கம் போகலைன்னா கூட யாரும் கண்டுக்க மாட்டாங்கள்ல???" ன்னு அவன் கனவை நினைவாக்க நாள் பாத்துட்டு இருக்கான்.
சரி இவன் சின்ன பையன், நம்ம கிட்ட காமெடி பண்ணறான்னு நினைச்சுட்டு ஒரு பெருசு கிட்ட எனக்கு கல்யாணம் பண்ணி பார்க்க உங்களுக்கு அவ்வளவு ஆசையான்னு கேட்டேன். "நாம தட்டை கையில கொண்டு போய் வரிசையா நின்னு வாங்கி சாப்பிடுவோமே அதுக்கு பேரென்ன பஃபே தானே?" ன்னு கேட்டார். ஆமா தாத்தா, அதுக்கென்ன இப்போ??? என நான் திருப்பி கேட்டேன். காங்கிரசம்புதூர்காரர் பையன் கல்யாணத்துல சீட்டு விளையாண்டுட்டு இருந்தோம். அந்த கல்யாணத்துல சாப்பாடு அது மாதிரிதான். பேச்சு வாக்குல இதே மாதிரி எங்க ஊரு பசங்க கல்யாணத்துலையும் போடணும்னு சொல்லிட்டு இருந்தேன். உடனே இந்த ஆயிக்கவுண்டன் பாளையத்துக்காரங்க "எச்சை கையில காக்கைய கூட துரத்தாதவங்க சாப்பாடு போடறாங்களாம்ன்னு கிண்டல் பண்ணுனாங்க. அன்னைக்கு என் துண்டை உதறி சபதம் போட்டிருக்கேன்னு அவரு ஒரு கொசுவர்த்தியை சுத்தி முடிச்சாரு.
பிச்சைக்காரங்க மாதிரி "கையில ஏந்தி சாப்பிடறது, ஜெயில களி வாங்க லைன்ல நிக்கறது மாதிரியான சாப்பாடெல்லாம் தேவையில்லை, வந்தவங்களுக்கு உக்கார வைச்சு தலை வாழையில் வடை பாயசத்தோட சாப்பாடு போடறதுதான் மரியாதைன்னு சொல்லிட்டு நீங்க பாட்டுக்கு ரம்மியை கன்டினியூ பண்ணிருக்கலாம். எதுக்கு வயசான காலத்துல இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகிட்டு??" ந்னு அவரை சமாதானம் பண்ணலாம்னு பார்த்தா "உன்னோட ஒரு கல்யாணந்தான் பாக்கி, அதுல இதை பண்ணியே ஆகணும்ன்னு திரும்பவும் துண்டை உதறி தோளில் போட்டார்.
தாத்தா, இதெல்லாம் நீங்க பார்த்து கல்யாணம் பன்னினா? நான் பெங்களூரிலிருந்து ஒரு பொண்ணை இழுத்துட்டு வந்து நான் இவளை கல்யாணம் பண்ணிட்டேன், ஆசிர்வாதம் பண்ணுங்கன்னு சொன்னா என்ன பண்ணுவீங்கன்னு அப்பாவியாய் அவங்களோட ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குன்னு பார்க்கறதுக்காக கேட்டேன்.
உன்னை வெட்டி போட்டுற மாட்டோம், நம்ம சாதியென்ன, சனமென்ன?? கனவுலகூட நீ இதை நினைச்சிறக்கூடாது என கட்டளை போட்டார். தாத்தா, எனக்காக சபதம் எல்லாம் போட்டிருக்கிறீங்க, இப்போ என்னை வெட்டிடுவீங்கன்னு அசோகன், நம்பியார், பி.எஸ்.வீரப்பா மாதிரி பேசறீங்க, என்ன தாத்தா இதெல்லாம்ன்னு கேட்டேன். ஆமா, நீ பாட்டுக்கு கல்யாணம் பண்ணிட்டு பெங்களூருக்கு போயிடுவ, இங்க டீக்கடை, ஆலமரம்ன்னு எங்க போனாலும் எங்களை எளக்காரமாத்தான் பார்ப்பாங்க. உன்னைய வெட்டுனும்ன்ன வைச்சுக்க, எங்க பார்த்தாலும் எந்திரிச்சு நிப்பாங்க என மீசையை முறுக்கினார்.
சிம்ரன் கடுங்கோபக்காரின்னு தினமலரில் போட்டிருக்கிறதை 10 தடவை படிக்கறதுக்கு டீக்கடைக்கு போவீங்க... தாயம் ஆடுவதுக்கு ஆலமரத்துக்கு போவீங்க. அங்க இருக்கறவங்க எல்லாரும் ஐநா சபையில நிரந்தர உறுப்பினர்கள். அவங்ககிட்ட மரியாதை வாங்கறதுக்கு ஆடு வெட்டுவேன் கோழி வெட்டுவேன்னு சொல்லற மாதிரி என்னைய வெட்டுறன்னு சொல்லறீங்கன்னு சொல்லிட்டு (எல்லாம் மனசுக்குள்ளதான்) சொல்லிட்டு எஸ்ஸாகி அமெரிக்கா வந்தாச்சு.
"இனி மேல் இந்த மாதிரி யாருகிட்டையும் கேக்க மாட்டேன்" அப்படின்னு 100 தடவை எழுதிருந்தது. (இம்போசிசன் போலிருக்கு!!!).
இது ஒரு வருத்தமுள்ள வாலிபனின் டைரிக் குறிப்பு. டைரி அதுக்கப்புறம் காலியா இருந்தது. ஒரு வேளை பயலுக்கு டைரி எழுதறக்கெல்லாம் நேரம் இல்லை போலிருக்கு... படிச்சது தப்புத்தான், ஆனா அடுத்தவன் வகையா ஆப்பு வாங்குறப்போ மட்டும் பல்லு மொத்தமும் வெளிய குதிக்குதே... அதுக்காகவே திரும்பவும் அவனோட பழைய டைரிய படிக்கலாம்ன்னு இருக்கேன், படிக்கட்டுமா?
|
No comments:
Post a Comment