Thursday, February 10, 2011

ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..!


ஒட்டகத்தைப்பற்றி ஓரளவுகூட அறியாத ஐரோப்பியர்களால் சொல்லப்பட்ட தவறான உவமானம்தான் ‘பாலைவனக்கப்பல்’.

ஏனென்றால்,  ‘சஃபீனத்-அஸ்-ஸஹாரா ‘ என்று எந்த பண்டைய அரபி இலக்கியங்களிலாவது எழுதப்பட்டு இருக்கிறதா?” என்றால்… அரபிகள் முழிக்கிறார்கள். ஏதோ சில ஆங்கில அறிவு பெற்றவர்களுக்கு மட்டும் ‘தெ ஷிப் ஆப் தெ டெசெர்ட்’ என்றால் தெரிந்திருக்கிறது. அநேகமாய், தங்கள் மகத்தான கண்டுபிடிப்பான ‘கப்பலில்’, மத்தியதரைக்கடலை கடந்து வடக்கு ஆப்பிரிக்காவில் கால்வைத்த ஐரோப்பியர்கள், ஒட்டகத்தையும் பாலைவனத்தையும் முதன்முதலாக பார்த்துவிட்டு.. ‘கடலுக்கு கப்பல்பிரயாணம் – பாலைக்கு ஒட்டகபிரயாணம்’ என்று மட்டுமே உணர்ந்து சொன்ன வாக்கியமாக இருக்கலாம்.
மழை, புயல், காட்டாற்று வெள்ளம், சூறாவளி, பனிப்பாறை, மணல்திட்டு, அடித்தள ஓட்டை, சுனாமி போன்ற எந்த ஒரு இயற்கைச்சீற்றத்துக்கும் திடீர் ஆபத்துக்கும் ஈடு கொடுக்க முடியாமல் இரண்டாக உடைந்து தலை குப்புறக்கவிழ்ந்து மூழ்கும் கப்பல் என்ற மனிதனால் கட்டப்பட்ட ஓர் உயிரற்ற வஸ்து என்பது…., கடும் குளிர், கடும் வெப்பம், கொதிக்கும் மணல், புழுதிக்காற்று, புல்பூண்டு & தண்ணீர் அற்ற வறட்சியில் மாதக்கணக்கில் பிரயாணம் என்று அனைத்து இயற்கை தாக்குதல்களையும் சளைக்காமல் வெற்றிகரமாய் எதிர்கொண்டு பீடுநடைபோடும் இறைவனின் நுண்ணிய படைப்பான ஒட்டகத்துக்கு…. எப்படி ஒப்பாகும்?
(ஓர் அன்பு வேண்டுகோள் : பதிவு நீ…..ளமாகிவிட்ட காரணத்தினால், ஒவ்வொரு முறையும் ‘ ..! ’ போட்ட இடங்களுக்கு அடுத்து ‘சுபஹானல்லாஹ்’ சொல்லிக்கொள்ளுங்கள்.)
நிச்சயமாக பாலைவனத்தில், தனிச்சிறப்பு வாய்ந்த தனக்கு ஒப்புமை அற்ற ஒட்டகமானது, பொதுவாக தாவர உண்ணி வகையைச்சேர்ந்த பாலூட்டி பிரிவைச்சார்ந்த ஒரு வீட்டுவிலங்கு. 250 லிருந்து 680 கிலோ எடை வரை வளரும் இவை, பொதுவாக 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன..! ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல்… உணவில்லாமல்… பாலைவனத்தில் பலநாள் வாழக்கூடியது, அதுவும் மாமூலாக செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்து கொண்டே..!
எப்படியென்றால், சூரியனின் வெப்பம் கொளுத்தும் கோடையில், கொதிக்கும் மணலில் 50° செல்சியஸ் வெப்பத்தில் உணவின்றி நீரின்றி 8 நாட்கள் வரை… தன் எடையில் 22% இழந்தபின்னும் உயிர் வாழும்..! இதை ஒரு மனிதன் முயற்சித்தால், அவன் தன் உடலில் 8% எடையை எட்டாவது நாள் இழக்க வேண்டிவரும். ஆனால், அதற்கு முன்னரே… 36-வது மணிநேரத்திலேயே அவன் இறந்திருப்பான். காரணத்தை போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லும் :- ‘அவன் உடம்பில் 88% நீர்ச்சத்துதான் இருந்தது’ என்று..! ஏனென்றால், அநேக பாலூட்டிகள் தன் உடம்பில் 12% நீர்ச்சத்தை இழந்தாலே இறந்துவிடும். ஆனால், ஒட்டகமா, அப்போது தன் உடலில் உள்ள நீர்ச்சத்தில் 40%-ஐ இழந்தும் உயிர்வாழ்கும்..! இதல்லாம் கோடை காலத்திற்கு சொன்னதுதான். கடும் குளிர் காலத்திலோ ஆறுமாதம் வரை கூட ஒட்டகம் இப்படி நீரின்றி உணவின்றி உயிர்வாழும்..! அதேநேரம், அப்போது, மேய்வதற்குப் புல் போன்ற சிறிது உணவு கிடைத்தால் கூட போதும், அடுத்த 10 மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக்கூடியது..! இடையில் சிறிது தண்ணீர் கிடைத்து விட்டால்… கேட்கவே வேண்டாம்… அந்த கால அளவு இன்னும் பலமடங்கு எகிறும்..!
சிலமாதம் நீர் அருந்தாமல் இருந்த உலர் நிலையில் இருந்து மீண்டு நீர் அருந்தும்பொழுது தன் உடலில் மூன்றில் ஒரு பங்கு எடை அளவிற்கு நீரை 10 நிமிடத்தில் குடித்துவிடும்..! (அதாவது 450 கிலோ எடைகொண்ட ஓர் ஒட்டகம் 150 லிட்டர் தண்ணீரை பத்து நிமிடத்தில் குடித்துவிடும்..!) அப்படி நீர் அருந்தியவுடன் 10 நிமிடங்களில் உடலில் நீர்ச்சத்து ஏறிவிடும்..! அதன் இரப்பையில் உள்ள நீர் அறைகளில் நீரை தற்காலிகமாக ஏற்றிக் கொள்கிறது..! அங்கிருந்து உறிஞ்சப்பட்டு இரத்தத்தின் சிகப்பு அனுக்களில் ஏற்றி சேமித்துக் கொள்கிறது..! அப்போது அச்சிவப்பணுக்கள் அதன் உண்மையான அளவை விட 240% விரிந்து இடமளிக்கிறது..! பிற விலங்குகளில் நீரற்ற உலர் நிலையில் இருந்து இவ்வளவு விரைவாக நீரை இரத்தத்தால் உறிஞ்சிக்கொள்ள முடியாது. ஏனெனில் இரத்தத்தில் திடீர் என்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால் சிவப்பணுக்கள், வெடித்துவிடும். ஆனால் ஒட்டகத்தின் சிவப்பணுக்களின் சவ்வுப்படலம் 240% அளவு விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதால், இவ்வாறு நிகழ்வதில்லை..!
மனிதன் உட்பட எந்த ஒரு விலங்கும் அப்போதையை நிலையில் தேவைக்கு அதிகமாக இவ்வளவு தண்ணீர் குடித்தபின் தேவையற்ற அனைத்தையும் சிறுநீராகவே வெளியேற்றிக்கொண்டு இருக்கும். ஆனால், ஒட்டகமோ… தன்னுடைய சிறுநீரையும் குறைத்துக்கொள்ளும்..! ஒட்டகத்திற்கு இருப்பது போல் சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது..! நம்முடைய சிறுநீரில் அதிகபட்சமாக தாது கழிவுகள் 8 சதமும் 92 சதம் நீரும் இருக்கும். ஆனால் ஒட்டகத்தின் சிறு நீரில் 40 சதத்திற்கும் அதிகமான கழிவுகளும், குறைவான நீரும் இருக்கும் அந்த அளவிற்கு குறைவான நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சத்தி வாய்ந்தது அதன் சிறுநீரகம்..! நம்முடை கிட்னியாக இருந்தால் எப்போதோ செயலிழந்திருக்கும். அதுமட்டுமில்லை, இரத்தத்தில் யூரியா அளவு அதிகரித்து இறந்து விடுவோம். ஆனால், ஒட்டகம் மட்டும் எப்படி அதிக யூரியாவினால் பாதிப்படையவில்லை என்றால், அதன் ‘விசேஷ லிவர்’ ஆனது யூரியாவை மட்டும் இரத்தத்தில் இருந்து தனியே பிரித்து எடுத்து அதை புரோட்டீனாகவும் தண்ணீராகவும் மாற்றி விடுகிறது..!
ஒட்டகத்தின் சாணத்தை அது போட்ட ஒரு சில மணி நேரத்தில் எரிபொருளாக பயன்படுத்தி விடலாம், என்ற அளவிற்கு உலர்ந்த நிலையில் சக்கையை மட்டும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது..! பசு… சிறுநீர்/சாணம் வழியாக 20 லிட்டர் நீரை ஒரு நாளைக்கு வெளியேற்றுகிறது. ஆனால் ஒட்டகம் 1 லிட்டர் நீரை கூட இழப்பதில்லை..! அவை அனைத்தையும் ஒட்டக பாலாக மனிதன் கறந்து கொள்ளலாம். கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு பத்து பசுமாடு கொடுக்கும் பாலை ஒரு ஒட்டகம் கொடுக்கிறது..! பசுவின் உடல் சூடு ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி விட்டால் பால் சுரப்பு நின்று விடும். ஆகவே அதை கொட்டகையில் நிழலில் வைத்து அதன் மேல் நீரை ஊற்றியோ, அல்லது ஏ/சி செய்யப்பட்ட ‘குளுகுளு’ இடத்தில் வைத்தோ பராமரிக்க வேண்டும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. பலநாட்கள் வெயிலிலேயே நின்றாலும் கூட பால் கொடுக்கும்..! பசுவிற்கு நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒன்று பால் நின்றுவிடும் அல்லது பாலில் கொழுப்பு 30% அதிகரித்து, பால் குடிக்க முடியாத நிலைமைக்கு மாறிவிடும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. கடுமையான கோடையில் கூட குறைந்த அளவு நீரை குடித்துவிட்டு தன் குட்டிக்கும் பாலை கொடுத்துவிட்டு 15லிருந்து 20 லிட்டர்வரை நமக்கும் பால் கொடுக்கும்..! மேலும் பத்து நாட்கள் வரை நீர் கிடைக்காவிட்டால் கூட அதே தரத்தில் அதே அளவு பாலை கொடுக்கும்..! ஒட்டகப் பாலில் பசும்பாலை விட மூன்று மடங்கு வைட்டமின் ‘C’ அதிகம் உள்ளது..! இது காய்கறிகள், பழங்கள் போன்றவை அரிதாக கிடைக்கும் பாலைவன மக்களுக்கு மிக்க அவசியமான உணவு..!
சரி… பாலைவனத்தின் கடும் குளிரையும் கடும் கோடை வெப்பத்தையும் ஒட்டகம் எப்படி தாங்குகிறது?.
ஒட்டகத்தின் ரோமமும், தோலும் அப்படி ஒரு தடிமனானது மட்டுமின்றி அதற்கு சிறந்த வெப்ப தடுப்பானாக பயன்படுகிறது..! அது மட்டுமல்ல. கடும் குளிருக்கும் வெயிலுக்கும் ஏற்ப ஒட்டகம் தன் உடலின் வெப்பநிலையை 34°C லிருந்து 41.7°C வரை (93°F-107°F.) சுயமாக மாற்றிக்கொள்ளும்..! இப்படி தன் உடல் வெப்பத்தை அதுவாகவே குளிரில் 34° செல்சியஸ் வரை குறைத்துக்கொள்வதால், வெளியில் உறைபனி நிலையில் கடுங்குளிர் காற்று அடித்தாலும் தாக்குப்பிடிக்கிறது..! அதேநேரம், கடும் கோடை வெப்பக்காலங்களில் வெளியில் 55° செல்சியஸ் என்று கொளுத்தும்போது, வெப்பம்கடத்தா தன் தடிமனான தோலினாலும், தன் உடல்வெப்பநிலையை 41° செல்சியஸ் வரை கூட்டிக்கொண்டும், தன் உடல் வியர்வையை வெளியிடாமலேயே கடும் வெப்பத்திலும் தாக்குப்பிடிக்கிறது..! இதனால் உடல்நீர் வியர்வை மூலம் விரயமாவதும் தடுக்கப்படுகின்றது..! இந்நிலையிலேயே, ஒட்டகம் ஒன்று ஏறத்தாழ 200 கிலோ கிராம் எடையைச் சுமந்துகொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவு நடக்கவும் செய்யும்..! சிறுதொலைவு ஓட்டப்பந்தயம் வைத்தால் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடவும் செய்யும்..!
நம்முடைய மூச்சை ஒரு கண்ணாடியின் மேல் விட்டுவிட்டு கண்ணாடியை நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம். நாம் 1-லிட்டர் காற்றை சுவாசித்து வெளியேற்றினோம் என்றால் 16 மில்லி கிராம் நீரை இழந்திருப்போம். கடும் வெப்பக்காற்றை சுவாசிக்கும் ஒட்டகம் அக்காற்றை ஈரப்படுத்துகிறது..! ஆனால், அதேநேரம், ஒட்டகத்தின் வெளிவிடும் மூச்சில் ஈரம் மனிதனைவிட பல மடங்கு குறைவாக இருக்கும்..! ஏனென்றால் மற்ற எதற்குமில்லாத விசேட மூக்கமைப்பு தான் இதன் காரணம்..! அது சுவாசித்து வெளியேற்றும் காற்றில் உள்ள ஈரத்தில், மூன்றில் இரண்டு பகுதியை வெளியேறி விடாமல் தடுத்து விடுகிறது..! மேலும், பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை கூட மோப்ப சத்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது அதன் மூக்கு..!
ஒட்டகத்தின் பாத அமைப்பு வித்தியாசமானது..! வெடித்த இரு குளம்புகளையும் சேர்த்து மிக அகன்ற வட்ட வடிவினாலான தட்டையான பாதத்தை கொண்டது. முன்புறம் அதன் இரு குளம்புகளும் விரிந்து கொள்ளும் காரணத்தால் 500 கிலோ வரை எடையுள்ள ஒட்டகம் 450 கிலோ வரை சுமையை சுமந்து கொண்டு மணலில் கால்கள் புதைந்து விடாமல் நிலைதடுமாறி கீழே விழுந்துவிடாமல் கொதிக்கும் மணலிலும் ஓட முடிகிறது..! அப்போது, அதன் பாத குளம்புத்தோல் மிகத்தடிமனானதால் கடும் வெப்பத்தினாலும் பாதிக்கப்படாது..!
மனிதர்கள் விலங்குகள் ஆகிய அனைத்திற்கும் கால்களில் இரண்டு மடக்கும் மூட்டு இணைப்புகளை மட்டுமே பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்று மடக்கும் இணைப்புகள் இருக்கும்..! அதனால் தான் ஒட்டகத்தால் எளிதாக பாலைவன மணலின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்க முடிகிறது..! மனிதர்கள் அதன்மீது ஏறி இறங்க விரும்பினால், உடன் எவ்வளவு சூடாக கொதிக்கும் மணலிலும் உடனே முட்டிபோட்டு மண்டி இடும்..!
அப்படி மண்டி இடும்போது அதன் முட்டுக்காலிலும், கால் குளம்புத்தொளைப்போன்றே தடிமனான வெப்பத்தினால் பாதிக்கபடாத தோல் அங்கும் அமைந்துள்ளது..! ஒட்டகத்தின் கால்கள் நல்ல உயரமானதாக இருப்பது ஏனென்றால், கடும் கோடையில் பாலைவனத்தில் ஒட்டகம் நடக்கும்போது கொதிக்கும் மணலின் அனல் உக்கிரம் அதன் வயிற்றுப்பகுதி உடம்பில் தாக்காமல் இருக்கத்தான்..! மேலும் உயரமான கால்கள் அதிக எடை சுமக்கவும் அவசியமாகிறது..!
அடுத்து பாலைவனம் என்றாலே புழுதிக்காற்று… மணற்புயல்… பிரசித்தம். அப்படி, மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது ஒட்டகம் (நாம் நம் வீட்டு ஜன்னலை மூடுவது போல்) மூக்கை மூடிக்கொள்ளும்..! தன் ‘கை’யால் இல்லைங்க.. அதன் மூக்காலேயே..! அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும் முடிகள் மணலோ தூசியோ காதுகளுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது..! அதன் இரண்டடுக்கு கண் இமையில் உள்ள  நீண்ட சீப்பு போன்ற தடித்த நெருக்கமான முடிகள் ஒன்றன் உள் ஒன்றாக கோர்த்துக்கொண்டு மணற்புயலிலிருந்து கண்ணிற்கு முழுப்பாதுகாப்பு அளிக்கிறது..! கண்களுக்கு கீழே உள்ள இமை போன்ற திரை அமைப்பு வாகனத்தின் வைப்பர் போல செயல்பட்டு கண் பரப்பை சுத்தப்படுத்தி கூடுதலாய் கண்களுக்கு பாதுக்காப்பை அளிக்கிறது..! கண்ணிலும் அதன் கண்ணிற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பும், புருவமும் பாலைவனத்து சூரியனின் பிரகாசமான வெளிச்சம் கண்களைதாக்கி விடாமல் வெளிச்சத்தை பாதியாக தடுத்து விடுகிறது..! அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்து இருப்பதால் தலையை திருப்பாமல் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்..! பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்து விடாமல் இருப்பதாற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்..!
பாலைவனம் என்றாலே சப்பாத்திக்கள்ளி, கற்றாழை போன்ற முட்செடிகள் தான் அதிகமாக கிடைக்கும. அதை மேய்வதற்காக அழுத்தமான ரப்பர் போன்ற உதடுகள் கொண்டது ஒட்டகம்..! அதன் உதட்டில் குத்தும் முட்களே உடைந்து விடும் அளவுக்கு தடிமனானது அதன் உதடு..!
அந்த விசேஷ உதட்டமைப்பு நாக்கை நீட்டாமல் மேய உதவுகிறது..! புழுதிக்காற்றில் கண்ணைமூடிக்கொண்டு சகட்டுமேனிக்கு பிளாஸ்டிக், தகரம், ஒயர், மண்ணாங்கட்டி என்று கண்டதையும் திண்ணும்..! அதையெல்லாம் தனித்தனியே பிரித்து செரிக்கும் வேலையை அதன் நான்கு அரை கொண்ட விசேஷ இரைப்பை பார்த்துக்கொள்கிறது..! அவசரமாக சாப்பிட்டதை ஆரஅமர நிதானமாய் மீண்டும் வாய்க்கு கொண்டுவந்து அசைபோட்டு உள்ளே தள்ளும்..!
மேலும், இந்த அதிசயப் பிராணி உணவும், நீரும் கிடைக்கும் பொழுது அவை தேவைக்கதிகமாக உண்ணப்பட்டு கொழுப்பாக மாற்றப்பட்டு அதன் முதுகில் திமில் அல்லது திமில்களாக சேமித்துக்கொள்கிறது..! சுமார் 45 கிலோ எடை இருக்கும் அந்த திமிலில் அதிகமாக கொழுப்பு இருக்கும்..! உணவோ, நீரோ கிடைக்காத காலத்தில் அதன் திமிலின் கொழுப்பில் உள்ள ஹைட்ரஜனோடு அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கலந்து நீராகவும், உணவாகவும் அவ்வப்போது தேவைக்கேற்ப ஆக்சிகரணம் செய்து மாற்றிக் கொள்கிறது..! ஒரு திமில் அல்லது இரு திமில் கொண்ட இருவகையான ஒட்டகங்கள் உள்ளன..! அவற்றில் இரு திமில் ஒட்டகங்கள் அதிக சக்தி பெற்றவை என்று தனியாகவேறு சொல்ல வேண்டுமா?
“அதிலிருந்து இது தோன்றியது, இதிலிருந்து அது தோன்றியது” என்று மற்ற மிருகங்களைப் பற்றியெல்லாம் ஏதாவது ஒரு காமடி விளக்கமாவது கொடுக்கும் ‘பரிணாம உலகம்’, ‘ஒட்டகம் எந்த மிருகத்திலிருந்து பரிணாமம் பெற்றது’ என்று கதை புனையவோ அல்லது புனைவை கதைக்கவோ இல்லையே, ஏன்?
இறைவனின் படைப்பாற்றலை புரிந்துகொள்ள இந்த ஒட்டகம் ஒன்று போதவில்லையா?
மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு நாளைக்கு சுமார் 50 கீ.மீ பயணம் செய்யும் ஒட்டகம்…, நீரும், உணவும், நல்ல சீதொஷ்ணமும் தாரளமாக கிடைக்கும் ஐரோப்பாவை நோக்கியோ, தெற்கு ஆப்ரிக்காவை நோக்கியோ முறையே, அரேபிய பாலைவனத்திலும், சஹாரா பாலைவனத்திலும் முட்டாள் ஒட்டகம் எப்போதோ ஓடிபோயிருக்கலாமே..! இப்படி பாலைவனத்தில் கஷ்டப்பட வேண்டிய அவசியம் என்ன? இதை சிந்தித்தாலாவது, ‘இது பாலைவாழ் மக்களுக்கு என்றே பிரத்தியேகமாய் இறைவன் படைத்து அளித்த அருட்கொடை’ என்று உணரமுடியும்..!
அதனால்தான் இப்படி ஓர் அதிசய மிருகத்தை மானிடருக்கு படைத்தளித்த அல்லாஹ், முஹம்மத் நபி(ஸல்…) அவர்களிடம் இறை நிராகரிப்பாளர்களை சுட்டிகாட்டி தன் திருமறை குர்ஆனில்..
“(நபியே) ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் பார்க்கவேண்டாமா?” (88:17) என்று கேட்கிறான்.
சகோதரர்களே…! எது அறிவுப்பூர்வமானது என்று உங்கள் அறிவை கேட்டுப்பாருங்கள். இறை மறுப்பாளர்களின் போலி வார்த்தைகள் பொலபொலத்து உதிர்ந்து விழுவதை எளிதில் உணராலாம்.

அடுத்த தலைமுறை ஜி.பி.எஸ். சாதனங்கள்



ஜி.பி.எஸ். (Global Positioning System) என்றழைக்கபடும் சாதனங்கள், சாட்டலைட்டின் உதவியுடன், நம்மை வழி நடத்தும் சாதனங்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது அவை தொழில் நுட்பத்தில் புதியதொரு புரட்சியையும், சாதனையையும் ஏற்படுத்தியதாக அறியப்பட்டன.
அதன் பின்னர், பெரிய பளிச் என்ற திரைகளுடன், ஸ்மார்ட் போன்கள் வந்தன. ஜி.பி.எஸ். சாதன வசதிகளைக் குறைந்த விலையில் தரும் சாதனங்களாக இவை அமைந்தன. இவை இயக்குவதற்கு எளிதானதாகவும், ஜி.பி.எஸ். சாதனங்களைக் காட்டிலும் விலை குறைவாகவும் இருந்தமையால், மக்கள் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட் போன்களையே அதிகம் நாடினார்கள்.இதனாலேயே, ஜிபிஎஸ் சாதனங்களை வடிவமைத்த நிறுவனங்கள், நவீன தொழில் நுட்ப அடிப்படையில், கூடுதல் வசதிகளுடன் புதிய சாதனங்களைத் தரத் தொடங்கி உள்ளனர். அவற்றை இங்கு பார்க்கலாம்.
இணைப்பின்றி கூகுள் மேப்ஸ் :
ஸ்மார்ட் போனில் ஜிபிஎஸ் வசதிகளைப் பெற மொபைல் இணைப்பு பெற்றிருக்க வேண்டும். ஆனால் அண்மையில் கூகுள் அறிவித்தபடி, கூகுள் மேப்ஸ் டேட்டாவினை ஸ்டோர் செய்து வைத்துப் பயன்படுத்தும். இதனால் எந்த இடத்திலும் இணைப்பு எதுவுமின்றி நாம் ஜிபிஎஸ் வசதிகளைப் பெறலாம்.
ஜிபிஎஸ் வசதியுடன் கேம்கார்டர்:
ஜி.பி.எஸ். மூலம் ஜியோடேக்கிங் வசதி, அதாவது எந்த இடத்தில் நீங்கள் படம் எடுக்கிறீர்கள் என்ற தகவலைப் பதியும் வசதி, கிடைக்கிறது. இப்போது வந்திருக்கும் தொழில் நுட்ப வசதி மூலம், ஜிபிஎஸ் வசதி கொண்ட கேமராவினை ஹெல்மெட் அல்லது உங்கள் சைக்கிளில் இணைத்து, படம் எடுத்து, பின்னர் அதனை கம்ப்யூட்டரில் இணைத்து, இடத்தைக் குறிப்பிட்டு இணைக்கலாம்.
காருக்கான பிளாக் பாக்ஸ்:
தனியாகச் செயல்படும் ஜிபிஎஸ் சாதனங்கள், இனி அது இணைக்கப்பட்டுள்ள வாகனம், எங்கெல்லாம் செல்கிறது என்பதைப் பதிவு செய்து வைத்திடும். இதன் மூலம் ஒரு வாகனம் தற்போது எங்கிருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம்.
ஜிபிஎஸ் ஜாம்மர்:
உங்களுடைய வாகனம் ஒரு ஜிபிஎஸ் சாதனத்தால் அறியப்படுவதனைத் தடுக்கும் ஜிபிஎஸ் ஜாம்மர்கள் சந்தைக்கு வர இருக்கின்றன. இதனை உங்கள் காரில் இணைத்துவிட்டால், எந்த சாட்டலைட்டும் உங்கள் கார் நடமாட்டத்தினைக் கண்டறிய முடியாது.
மிகச் சிறிய ஜிபிஎஸ் சாதனம்:
வரும் காலத்தில், ஜிபிஎஸ் சாதனத்தை வைத்திட, அதிக இடம் ஒரு வாகனத்தில் தேவைப்படாது. பின்னால் உள்ளதைக் காட்டும் கண்ணாடியில் நான்கு அங்குலம் இருந்தால் போதும்; இதனைப் பொருத்திவிடலாம். உங்கள் மொபைல் போனுக்கான புளுடூத் இணைப்பும் இதில் கிடைக்கும்.
ஜி.பி.எஸ். தரும் வசதிகள் அடுத்த ஆண்டில் இன்னும் பலவாறாய் அதிகரிக்க இருக்கின்றன. இதனால், நம் நண்பர்கள் உலகம் இன்னும் சிறியதாக மாறி, அனைவரும் ஒருவருக்கொருவர் இணைப்பில் இருக்க இந்த சாதனங்கள் உதவும்.

பணத்தின் அருமையை உணர்வது, உணர்த்துவது எப்படி?


தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும்.

பணத்தை மதியுங்கள். பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது?
சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.
அந்தப் பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை
எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார். ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.
மறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான்.
அவனுடைய அப்பா அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கில் காட்டி பணத்தை எரிய விட்டார். போய் சாப்பிடு என்றார். மறுநாளும் உள்ளே நுழையும்போது அவன் கொடுத்த நூறு ரூபாயை விளக்கில் எரியவிட்டார். மூன்றாவது நாள் பணத்தை விளக்கில் காட்டி எரிய விடும் போது மகன் தாவி அதை அணைத்தான். அப்பா என்ன செய்கிறீர்கள் என்று அலறினான்.
அவர் சொன்னார், ‘இன்றுதான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு வந்திருக்கிறாய்’ ஆச்சரியமடைந்த அவன் எப்படி கண்டு பிடித்தீர்கள் என்றான்.
‘நீ உழைத்து சம்பாதிக்காத பணம் என்பதால் அது கரியானபோது நீ கவலைப் படவில்லை. அதுவே உன் உழைப்பு என்கிறபோது நீ துடித்துவிட்டாய். போய் சாப்பிடு. உழைப்பின் அருமையும் பணத்தின் அருமையும் தெரிந்ததால் இன்று நீ சாப்பிடுகிற சாப்பாடு கூடுதல் சுவையாக இருக்கும்’ என்றார் மலர்ந்த முகத்தோடு.
இன்றைய நம் குழந்தைகள் பலரின் நிலைமையும் இதுதான்.
உலகின் எந்த மூலையில் கார் வெளியானாலும் அந்த நொடியே குழந்தைகள் அதைப் பற்றி பேசுகிறார்கள். புள்ளி விபரங்கள் தருகிறார்கள். ப்ளஸ் மைனஸ் சொல்கிறார்கள்.
விற்பனைக்கே வராத செல்போன்கள் பற்றி விலை உட்பட எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எளிமையாக சொல்வ தென்றால் செலவு செய்வதற்கான வழிகள் தெரிந்த அளவிற்கு வருமானத்திற்கான வழிகள் நம் குழந்தைகளுக்கு தெரியவில்லை.
ஆயிரம் ரூபாய் தாளைக் கையில் கொடுத்து இதை செலவழிக்க 20 வழிகளை எழுதச் சொல்லுங்கள். இப்பொழுது அதை சம்பாதிக்கும் வழிகளை எழுதச்சொல்லுங்கள். வேலை பார்த்து சம்பாதிக்கலாம். பிஸினஸ் செய்து சம்பாதிக்கலாம் என்று பொதுவாக இல்லாமல் எப்படிப்பட்ட வேலை பார்த்து என்று விரிவாக எழுதச் சொல்லுங்கள்.
ஏனெனில் சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.
இப்படியெல்லாம் சொல்வதன் நோக்கம் இப்போதே அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் அதற்கான ஆற்றலை இப்போதிலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும்.
போட்டியில் ஜெயித்தால்தான் கோப்பை கிடைக்கும் என்றால்தான் வேடிக்கை பார்க்கும் குழந்தைகள் நாளை நாமும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று நினைப்பார்கள். குழந்தை கோப்பை கேட்கிறதே என்று நாம் கடையிலிருந்து வாங்கிக் கொடுத்துவிட்டால் ஒரு விளையாட்டு வீரன் உருவாகாமல் தடுத்து விட்டோம் என்று அர்த்தம்.
படிப்பை பற்றி தினமும் பேசுகிறோம்.
வாழ்க்கையின ஆதாரமான பணத்தை பற்றி மாதம் ஒரு முறையாவது பேசுகிறோமா ? பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது? என்று விவாதித்திருக்கிறீர்களா ?
இதையெல்லாம் ஒருமுறை சொல்வதால் மட்டும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. பொறுப்புணர்வுடனும் பொறுமை உணர்வுடனும் அன்றாட நடவடிக்கைகளோடு இணைத்து இவற்றை கற்றுத்தர வேண்டும்.
அப்பா சம்பாதிப்பதே தான் செலவு செய்யத்தான் என்றுதான் பல குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை மாற்ற சில எளிய டிப்ஸ்கள் :
பணத்தை மதியுங்கள்.
100 ரூபாய் கேட்டால் இது ஒரு தொகையே அல்ல என்று ரீதியில் அலட்சியமாக எடுத்து நீட்டாதீர்கள். மாறாக 100 ரூபாயா எதற்கு என்று கேட்டுவிட்டு யோசித்துவிட்டு கொடுங்கள்.
கேட்டபொதெல்லாம் தூக்கி நீட்டாதீர்கள். பணம் இருக்கு. ஆனால் அது வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. உனக்கு இரண்டு நாளில் தருகிறேன் என்று சொல்லுங்கள். காத்திருக்க பழக்குங்கள்.
பணத்தை வீட்டிற்குள் கண் கண்ட இடத்தில் எல்லாம் வைக்காதீர்கள். சட்டைப் பையில் வைத்து அப்படியே தொங்க விடாதீர்கள். பீரோவில்தான் பணம் வைப்பீர்கள் என்றால் வீட்டிற்குள் வந்ததும் அதில் வைத்து பூட்டுங்கள்.
பணத்தை மதிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்த இதெல்லாம் உதவும்.
உங்கள் வீட்டில் உள்ள தொகைக்கு அல்லது பர்ஸில் உள்ள தொகைக்கு எப்போதும் கணக்கு வைத்திருங்கள். கணக்கில்லை என்றால் (யார் எடுத்தாலும் தெரியாது. இதன்மூலம் யாரோ தைரியமாக தப்பு செய்யத் தூண்டுகிறீர்கள் என்று அர்த்தம்) உங்களுக்கே பணத்தின் அருமை தெரியவில்லை என்று அர்த்தம்.
காசோட அருமை தெரிஞ்சவங்கதான் நாங்கெல்லாம் என்றெல்லாம் பேசாதீர்கள். இதெல்லாம் அவர்களுக்கு உண்மையில் புரிவதில்லை.
ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அநாதை இல்லங்கள் உடல் ஊனமுற்றோர் இல்லங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்லுங்கள். நல்ல சாப்பாடு என்பது யாராவது கொடுக்கும் நன்கொடையில்தான் என்பதை புரிய வையுங்கள்.
பணத்தின் அருமையை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.
உங்கள் குழந்தையின் அறையில் பெரிய கவர் ஒன்றை தொங்கவிடுங்கள். அன்றாடம் அவர்கள் செலவு செய்த தொகைக்கான கணக்கு மற்றும் பில்களை அதில் சேகரிக்கச் சொல்லுங்கள்.
மாதம் ஒருமுறை கணக்கு பாருங்கள். தினமும் பத்து ரூபாய்க்கு ஸ்நாக்ஸ் வாங்குவது பெரிதாகத் தெரியாது. ஆனால் மாதம் 300 ருபாய் ஸ்நாக்ஸுக்கே செலவு செய்திருக்கிறோம் என்கிற போது குழந்தைகள் தங்கள் செலவுகளை சீரமைக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.
தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும் என்ற பாடத்தை அமெரிக்கா உலகத்திற்கே தன்னுடைய பொருளாதார சரிவின் மூலம் கற்றுக் கொடுத்துவிட்டது. தொட்டதெற்கெல்லாம் அமெரிக்காவை பாரு என்று சொன்னவர்களுக்கும் கூட இந்தியாவைப் பாரு என்ற பாடத்தையும் கூடவே கற்றுக் கொடுத்திருக்கிறது.
எனவே எதை வாங்குவது? எப்படி வாங்குவது? எப்போது வாங்குவது? இதெல்லாம் பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுத்தர நாம் கட்டாயம் சொல்லித்தர வேண்டிய பால பாடங்கள்.
ரெசிடென்சியல் பள்ளியில் படித்த அந்த பணக்காரப்பையனுக்கு பணத்தின் அருமை கொஞ்சம்கூட தெரியவில்லை என்று அவனைப்பற்றி குறையான குறை சொல்லி என்னிடம் அழைத்து வந்தார்கள். என்னைப் பொறுத்தவரை இது பெற்றோரின் குறைதான். அவன் வளர்ந்த விதத்தில்தான் அவன் வாழ்க்கை முறையில்தான் பிரச்சனை.
பல வீடுகளில் பையன்கள் பெற்றோர்களை கெஞ்சி டென்னீஸ் பேட் வாங்குவதே பெரிய அதிசயம் அப்படியிருக்க நெட் கிழிந்து விட்டால் புது பேட் வாங்கித்தரமாட்டார்கள் என்பதால் கஷ்டப்பட்டு பையன்களாகவே காசு சேர்த்து நெட்டை தைத்துக்கொண்டு வருவார்கள்.
ஆனால் இந்த ரெசிடென்சியல் ஸ்கூலில் படிக்கிற பிள்ளைக்கு இதைப்பற்றியெல்லாம் தெரியாது. நெட் கிழிந்து விட்டால் ஸ்டோர் ரூமுக்கு டென்னீஸ் பேட் என்று எழுதி கையெழுத்து போட்டு அனுப்புவார். புது டென்னீஸ் பேட் வந்துவிடும். பில் அப்பாவிற்கு அனுப்பப்பட்டுவிடும். பில்லை பார்க்க வாய்ப்பே இல்லாததால் அந்த பொருளின் மதிப்பு தெரியாது. மதிப்பு தெரியாத பொருளுக்கு சரியான பராமரிப்பு இருக்காது.
பணத்தின் அருமை உணரப்படாததிற்கு வளர்ப்பு முறைதான் காரணம் என்பதற்கு இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.
20000 ரூபாய் செல்போனை தண்ணீரில் போட்டுவிட்டாள் என்று அவளது பொறுப்புணர்ச்சியை எப்படியாவது உடனடியாக வளர்த்து விடவேண்டும் என்று 11 ஆம் வகுப்பு படிக்கிற பெண்ணோடு பொறுப்பான பெற்றோர்கள் என்னை வந்து சந்தித்தார்கள். அந்த பெண்ணிற்கு பொறுப்பு உணர்வு வருவதற்கு வாய்ப்பேயில்லை என்றேன்.
அவர்கள் கோபமாய் கேட்ட ஏன் என்பதற்கு எனது பதில் இதுதான்.
11ஆம் வகுப்பு படிக்கிற பெண்ணிற்கு என்ன காரணத்திற்காக செல்போன்? அவளுடைய கிளாஸில் எல்லோரும் வைத்திருக்கிறார்கள் என்று ஒரே அடம் என்றார்கள். சரி அதற்காக இவ்வளவு விலை உயர்ந்த செல் ஏன்? ஒரே அழுகை. ஆர்ப்பாட்டம் என்று பதில்.
அழுகை ஆர்ப்பாட்டம் இதெல்லாம் இந்த இளம் போராளிகளின் எளிய ஏமாற்று உத்திகள். என்ன அழுதாலும் என்ன புரண்டாலும் ஒரு பொருள் கிடைக்கவே கிடைக்காது என்கிற போதுதான் அது மதிப்பாய் தெரியும்.
கட்டளையையும் 20000 ரூபாய்க்கு கேட்டவுடன் வாங்கித்தந்த செல்போன் எந்த விதத்திலும் மதிப்பாய் தெரியாது. அந்த அலட்சியம் ஏற்படுத்திய அஜாக்கிரதையால்தான் செல்போன் தண்ணீரில் விழுந்தது.
சரி. எப்படித்தான் பணத்தின் அருமையை ஏற்படுத்துவது? முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயம் உங்களால் உங்கள் குழந்தைகளுக்கு இதைச் சொல்லிக் கொடுக்க வேண்டாம். குழந்தைகளாகவே கற்றுக்கொள்ள உதவுங்கள் போதும்.
சரி. விசயத்திற்கு வருவோம். 100 ரூபாய் விலையில் ஒரு பொருளை குழந்தை கேட்கிறதென்றால் உடனே வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள்.
அதற்கு பதில் தினம் ஒரு ரூபாய் கொடுங்கள். அதை சேர்த்துக்கொண்டே வந்து 100 வது நாளில் அதை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துங்கள். (கேட்கிற பொருளின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் பொறுத்து தினம் 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் என்று அதிகரிக்கலாம்).
இதனால் என்ன என்ன பயன்?
தினம் கிடைக்கிற அந்த ரூபாயை வேறு எதற்கும் செலவழித்து விடாமல் சேர்த்து வைப்பதால் மன உறுதி, சுயக்கட்டுப்பாடு வளரும். பொருளை வாங்க காத்திருந்த நாட்கள் அந்த பொருளின் மதிப்பை உணர்த்திக்கொண்டே இருக்கும்.
டீன் பட்ஜெட்
இதே டீன் ஏஜ் வயது பையன் என்றால் குடும்ப வருமானத்திற்கு வரவு செலவு பட்ஜெட் தயாரிக்கச் சொல்லி உற்சாகம் கொடுங்கள். அதிலுள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டுங்கள். வரவு செலவுகளை அவர்களை விட்டே செய்யச் சொல்லுங்கள். பேங்குக்கு அனுப்புங்கள். இதனால் பொறுப்புணர்வு, திட்டமிடும் திறன் ஆகியவை வளர்வதோடு சுயமதிப்பு உயரும்.
பார்த்தவுடன் ஒன்றை வாங்க வேண்டும் என்று தோன்றும் வயதிலேயே அது அவசியமா எனின் அதை எப்படி வாங்குவது? என்பதை கற்றுக்கொடுத்துவிடவேண்டும். ஒரு பொருளை வாங்கவேண்டும் என்றால் குறைந்த பட்சம் நான்கு கடைக்காவது சென்று விசாரிக்கும்போது விலை, தர வித்தியாசத்தை உணர வேண்டும் என்ற பாடம் கிடைக்கும். இது சரியான பொருளை வாங்க அவசரப்படக்கூடாது என்பதையும் விசாரித்து வாங்கவேண்டும் என்ற மனோநிலையையும் இளம் வயதிலேயே ஏற்படுத்திவிடும்.
எதை வாங்கச் சென்றாலும் அல்லது விற்பனைக்கு என்று வைக்கப்பட்டுள்ள எந்தப்பொருளை நீங்கள் கண்டாலும், அதற்கு மதிப்பு போடுங்கள். அதாவது அப்பொருளின் அடக்கவிலை என்னவாக இருக்கும் என்று மதிப்பு போடுங்கள். உதாரணத்திற்கு ஒரு பேனாவை பார்க்கிறீர்கள். அதில் விலை 50 ரூபாய் என்று போட்டிருக்கிறது.
அதைப்பற்றி கவலைப்படாமல் நீங்களாக அதற்கு மதிப்பு போடுங்கள். அதன் பிளாஸ்டிக் பாடியின் விலை என்ன என்று நீங்களாக ஒரு மதிப்பு போடுங்கள். அதன் ரீபிள் விலை என்ன என்று மதிப்பு போடுங்கள். இப்படி நீங்கள் பார்க்கும் எல்லா பொருட்களுக்கும் மதிப்பு போடுங்கள்.
இது சரியான விலைதானா என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். உங்கள் மனதில் தோன்றிய விலையை போடுங்கள். இதே முறையை உங்கள் குழந்தைகளையும் கடைப்பிடிக்கச் செய்யுங்கள். சில நாள் பயிற்சியிலேயே ஒரு பொருளின் சரியான விலையை அறியும் ஆற்றல் வந்துவிடும்.
ஒரு நண்பர், தன் 6வது படிக்கும் தன் பெண்ணின், பிறந்த நாளுக்கு 1500 ரூபாய்க்கு டிரஸ் கேட்டதாகவும் அந்த விஷயத்தை நம் கட்டுரையில் கூறப்பட்டுள்ளபடி சிறப்பாக கையாண்டதாவும் எழுதியிருந்தார்.
1500 ரூபாய் என்பது அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனின் ஒரு வருட படிப்பு செலவு. ஒரு ஏழைக்குடும்பத்தின் இருபது நாள் உணவு என்று எடுத்துச் சொன்னதாகவும் அதை யோசித்து புரிந்துகொண்ட அவர் பெண் ஆடம்பர ஆடையை தவிர்த்து எளிய விலையில் ஒன்றை வாங்கிக் கொண்டதாக மகிழ்ந்து போய் எழுதியிருந்தார்.
எனக்கு பகீர் என்றிருந்தது. உண்மையிலேயே நண்பர் சொன்னது ஒரு சிறப்பான முறைதான். ஆனால், குழந்தை அதே அர்த்தத்தில் புரிந்து கொண்டதா என்பதுதான் முக்கியம். இல்லையா?
உங்கள் குழந்தைகள் பணத்தைப் பற்றி என்ன புரிந்து வைத்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா ?
நாம் என்ன கற்றுத்தருகிறோம் என்பதை விட அதிலிருந்து அவர்கள் என்ன புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
கீழ்க்கண்ட கேள்விகளை கொடுத்து உங்கள் குழந்தைகளுக்கு ஒரு டெஸ்ட் வையுங்கள்.
பணம் சம்பாதிப்பது சுலபமா? கஷ்டமா? என விளக்கு? உன் பெற்றோர்கள் பணம் சம்பாதிக்க படும் கஷ்டங்கள் என்ன? பணம் இல்லாதவர்கள் என்ன கஷ்டம் அனுபவிக்கிறார்கள்? தெரியாத ஊரில் பர்ஸை பறி கொடுத்தவர்கள் நிலை என்ன ?
அன்றைக்கு வருமானம் வந்தால்தான் அன்றைக்கு சாப்பிட முடியும் என்ற நிலையில் உள்ள தினக்கூலி நிலையில் உள்ள ஒருவருக்கு ஒரு நாள் வருமானம் வரவில்லை என்றால் அவர் நிலை என்ன?
தன் குடும்ப நிலை மறந்து நண்பர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக விலை அதிகம் உள்ள பொருளை வாங்குவது சரியா?
ஒரு மாத இடைவெளியில் மறுபடி இந்தக் கேள்விகளைக் கொடுத்து பதில் எழுதச் சொல்லுங்கள். பணத்தின் அருமை உணர்த்திய அருமை நினைத்து நீங்கள் காலரை தூக்கிவிட்டு கொள்ளலாம்.
உங்கள் குழந்தைகளிடம் நூறு ரூபாய் கொடுத்து நூறு பொருள் வாங்கச் சொல்லுங்கள். ஒரே பொருளை இரண்டு முறை வாங்கக்கூடாது என்பது முக்கிய கண்டிஷன்.
விலை உயர்ந்தவைகளையே பார்த்து பழகிய பல குழந்தைகளுக்கு இதன் மூலம் குறைந்த விலையில் உள்ள பொருட்கள் அறிமுகமாகும். மேலும் நான்கு கடை ஏறி பேரம் பேசி நூறு பொருள் வாங்கிய உடன் அவர்கள் முகத்தில் தோன்றும் வெற்றிக்களிப்பு இனி எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.
பணத்தின் அருமை தெரியாமல் பலரும் பணத்தை வீணாக்கும் தருணங்களை பட்டியலிடச் சொல்லுங்கள்ஸ
உங்கள் சிந்தனையைத் தூண்ட, இங்கே சில உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.உதாரணங்கள் மூன்று.
ஹோட்டலில் தேவைக்கும் அதிக உணவு வாங்கி வீணடிப்பது.
புதிதாக வாங்கிய விலை உயர்ந்த செல்போன், அலட்சியமாக கையாண்டதால் கீழே விழுந்து உடைவது…

ஆன்லைன் மோசடிக்கும்பல்


இணையதளத்தில் நீங்கள் எவ்வாறெல்லாம் சுரண்டப்படலாமென்றும், உங்களின் க்ரெடிட் கார்ட் மற்றும் வங்கி விவரங்களை அறிந்து கொள்வதற்காக கழுகு போன்று உங்களை வட்டமிடும் ஆன்லைன் மோசடிக் கும்பல் பற்றியும், அவர்களிடமிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் விளக்கும் விதமான விழிப்புணர்ச்சிக் கட்டுரையொன்று இம்மாத (Sep 2010)  ”ரீடர்ஸ் டைஜஸ்ட்” இல் வெளியாகியிருந்தது. கட்டுரை மிகவும் பெரிதாக இருந்த காரணத்தால், கூடியவரை அதன் விஷயம் குன்றாமல் சுருக்கித் தந்திருக்கிறேன்.

“டாம் ஃபார்மர்”, என்ற 50 வயதாகும் கம்யூனிகேஷன்ஸ் கன்ஸல்டண்ட் ஃபேஸ்புக்கின் (Facebook) மூலம் தனக்கு கிடைக்கும் செளகர்யங்களைப் பெரிதும் விரும்புகிறார். பல ஆண்டுகளுக்கு முன் இவருடன் பணிபுரிந்த எலிஸா என்ற பெண்ணுடைய தொடர்பு மறுபடியும் கிடைத்ததில் இவருக்கு அளவற்ற மகிழ்ச்சி. அவருடன் இணையத்தில் நேரடி சம்பாஷணைகள், ஈ-மெயில் பரிமாற்றங்கள் என ஃபேஸ்புக்கின் அனைத்து அம்சங்களும் அவரைக் கவர்ந்தன. இந்நிலையில் எலிஸா திடீரென அவசர நிலைப் பிரகடனம் ஒன்றைச் செய்தார். அவரும், அவருடைய தோழர் ஒருவரும் லண்டன் நகரில் பெரும் சிக்கல் ஒன்றில் சிக்கியிருப்பதாக.
” அதாவது அதற்கு முந்தைய இரவு, துப்பாக்கி முனையில் எலிஸாவும், அவருடைய தோழரும் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், தம் வசமிருந்த பணம், க்ரெடிட் கார்ட் மற்றும் செல்போன் என அனைத்துமே பறிபோனதாகவும் எலிஸா தெரிவித்தார்.”
” அமெரிக்காவின் சியாட்டில் நகரில் வசிக்கும் டாம் ஃபார்மர் பதறிப் போனார். நான் இங்கிருந்து உனக்கு எவ்வகையிலாவது உதவ முடியுமா? எனக் கேட்டார்.”
” இதற்காகவே காத்திருந்தாற்போல், எலிஸா, ஹோட்டல் பில், ஏர்போர்ட் வரையிலான டாக்ஸி வாடகை போன்ற செலவுகளுக்காக ஒரு தோராயமான தொகையை ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யுமாறும், அதனை தான் ஊர் திரும்பியதும் திருப்பித் தந்து விடுவதாகவும் தெரிவித்தார்.”
” தான் அந்த குறிப்பிட்ட ஹோட்டலைத் தொடர்பு கொண்டு க்ரெடிட் கார்ட் மூலமாக ஹோட்டல் பில்லை செட்டில் செய்து விடுவதாக டாம் ஃபார்மர் தெரிவித்த போதிலும், பணமாக ஆன்லைனில் தனது வங்கிக் கணக்கிற்கு பரிவர்த்தனை செய்து விடுமாறு பார்மரை எலிஸா தொடர்ந்து வற்புறுத்தியது பார்மருக்கு சிறிதே சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே முன்பு தாம் இருவரும் எந்த நிறுவனத்திற்காகப் பணி புரிந்தோமென்றும், தாம் முதலில் எங்கு சந்தித்தோமென்றும் ஃபார்மர் எலிஸாவிடம் கேட்டார்.”
” நீண்ட மெளனத்திற்குப் பிறகு சரியான பதில் கிடைத்தது.இவ்விவரம் தனது ஃபேஸ்புக் ப்ரொபைலில் இருந்து பெறப்பட்டிருக்கலாம் என்று யூகித்த பார்மர், தாங்கள் முன்பு பணிபுரிந்த நிறுவனத்தின் நிறுவனர் பெயரைக் கேட்டார். ஆனால் பதில் இல்லை. ”
” விஷயம் மிகவும் தெளிவு. இணையத்தில் புதிதாக உதித்திருக்கும் மோசடிக் கும்பலின் ஓர் அங்கம்தான் இந்த எலிஸா போன்றவர்கள். மிகவும் நம்பகமானவர்கள் போல் நடித்து நமது க்ரெடிட் கார்ட் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைக் கவர்ந்து நம்மைச் சுரண்டும் இணையத் திருடர்கள். நமது கணினியைச் சிதைப்பது அவர்களது நோக்கமல்ல. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் நம்முடைய பணம், அவ்வளவே! மாதா மாதம் மில்லியன் டாலர் அளவில் இவர்கள் இம்மாதிரியான மோசடி வேலைகள் மூலம் பணமீட்டுகிறார்கள்.”
” அமெரிக்காவின், இணையக் குற்றவியல் புகார் மையத்தின் விவரங்களின்படி, சென்ற ஆண்டு மட்டும் சுமார் 560 மில்லியன் டாலர்கள் இவ்வாறான இணைய மோசடியின் மூலம் இழக்கப்பட்டிருக்கிறது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் ஏதாவது ஒரு சோஷியல் நெட்வொர்க்கில் அங்கம் வகிப்பவர்களாக இருக்கின்றனர். இணைய மோசடியாளர்கள் இம்மாதிரியான சோஷியல் நெட்வொர்க் மூலம் அதன் பயனாளர்களுக்கு “ஸ்பைவேர்” அடங்கிய ஒரு சுட்டியை அனுப்புகின்றனர். பெரும்பாலும் ஏதேனும் கவர்ச்சி விளம்பரம் போல் தோற்றமளிக்கும் அந்த சுட்டியை அணுகுவதன் மூலம், அந்த ஸ்பைவேர் நமது கணினிக்குத் தரவிறக்கம் செய்யப்பட்டு, நமது கணினியில் இருக்கும் பாஸ்வேர்ட் போன்ற விவரங்களை மோசடியாளர்களுக்குத் தெரிவிக்கிறது. இதில் பெரும்பாலும் பாதிப்பிற்குள்ளாவது இணையத்தை அதிகம் பயன்படுத்தும் இளம் வயதினரே.”
” இங்கே நீங்கள் எவ்வாறெல்லாம் மோசடி செய்யப்படலாமென்றும், அதை தவிர்ப்பது எவ்வாறு என்றும் பார்க்கலாம்.”
“ஃப்ரீ ட்ரையல் ஆஃபர்”
நீங்கள் பெரும்பாலும் இணையத்தில் இவ்வாறான ஒரு விளம்பரத்தைப் பார்க்கலாம். குறைந்த செலவில் பற்களை வெண்மையாக்குவது அல்லது ஒரே மாதத்தில் எடையைக் குறைப்பது என்பன போன்ற விளம்பரங்கள். தபாற் செலவீனங்களுக்காக வெறும் ஆறு டாலர்கள் மட்டுமே என்றெல்லாம்.
ஆனால் அதே விளம்பரத்தில் பொடியான, மற்றும் கண்களுக்குப் புலப்படாத நிறத்தில் உங்களை மேலும் 80 முதல் 100 டாலர்கள் வரை செலுத்துமாறு கேட்கப்பட்டிருக்கும். ஆனால் பெரும்பாலும் இவ்வாறான விளம்பரங்களை ஆர்வமுடன் அணுகுபவர்கள் அவ்விளம்பர வாசகங்கள், மற்றும் நிபந்தனைகள் எவற்றையுமே முழுமையாகப் படிப்பதில்லை. இவ்வாறானவர்களுக்குத்தான் மோசடி வலை விரிக்கின்றனர் இணையக் கொள்ளையர்கள்.
“ஹாட் ஸ்பாட் ஏமாற்று வித்தைகள்”
நீங்கள் விமான நிலையத்திலோ அல்லது காபி ஷாப்பிலோ அமர்ந்திருக்கிறீர்கள். அங்கிருக்கும் Wi-Fi தளத்தின் உதவியுடன் இணைய இணைப்பைப் பயன்படுத்துகிறீர்கள். அது சிலவேளைகளில் இலவசமாக இருக்கலாம் அல்லது கட்டணத்துடன் கூடியதாகவும் இருக்கலாம். நீங்கள் அவ்வசதி பெற்று இணையத்தில் உலவுகிறீர்கள்…..இதுவரை எல்லாமே சரிதான்.
நீங்கள் அங்கிருந்து பயன்படுத்தும் இணைய தளங்கள் அனைத்தும் நிஜமானது போலவே தோற்றமளிக்கலாம். ஆனால் அது பல சமயங்களில் மோசடியாளர்களின் லாப் டாப்களிலிருந்து இயக்கப்படுவதாகவும் இருக்கலாம். அவர்கள் உங்களுடைய சிஸ்டமில் புகுந்து உங்களுடைய வங்கி விவரங்கள் மற்றும் க்ரெடிட் கார்ட் விவரங்களைத் திருடி வேறு மோசடியாளர்களுக்கு விற்று விடுவர். இப்போதெல்லாம் இம்மாதிரியான போலி Wi-Fi ஹாட் ஸ்பாட் தளங்கள் பெருகி வருகின்றன. உண்மையானவற்றிலிருந்து இவற்றை இனம் காண்பது சற்று சிரமமானதாகவே இருக்கிறது.
“உங்களது கணினி தாக்கப்பட்டிருக்கிறது”
உங்களது கணினித் திரையில் திடீரென ஒரு தகவல் பலகை தோன்றலாம். உங்கள் கணினி ஒரு குறிப்பிட்ட வைரஸால் தாக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு நம்பகமான ஆண்டி-வைரஸ் நிறுவனத்தின் பெயரில் அறிவிப்பு வரும். உங்களது கணினியிலிருந்து அந்த வைரஸை சுத்தப்படுத்த கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கவும் என்று அறிவிப்பு வரும். அதைச் சொடுக்கினால் ஏதோ ஸ்கேன் செய்யப்படுவது போலவும், வைரஸ் இருப்பது போலவும் உங்களுக்குத் தெரியலாம். விஷயம் இதுதான். அந்த சுட்டியைச் சொடுக்குவதன் மூலம் உங்களது கணினியில் “malware” தரவிறக்கம் செய்ய்யப்பட்டு, உங்களுடைய க்ரெடிட் கார்ட் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் களவாடப்படும். ( malware எனப்படுவது ஒரு சிறிய கணினி ப்ரோக்ராம். கணினி பயனாளருக்கே தெரியாமல் கணினியில் புகுந்து உள்விவரங்களைத் திருடி எஜமானுக்கு அனுப்பும் பணியை செவ்வனே செய்யும்.)
(வெகு சமீபத்தில் ஒரு பிரபல தமிழ் எழுத்தாளரின் இணைய தளத்தில் மேற்கண்ட பிரச்சனை எழுந்தது. அவரின் தளத்திற்குச் சென்றவுடனேயே மேற்கண்ட வைரஸ் அறிவிப்பு தோன்றி உங்களது கணினியை ஸ்கேன் செய்யுமாறு கேட்கும்.)
“செல்போன் மோசடி”
உங்களது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி ஒன்று உங்களது கிரெடிட் கார்ட் நிறுவனத்திடமிருந்து வரலாம். அதாவது உங்கள் கிரெடிட் கார்ட் தொடர்பாக கீழ்க்கண்ட எண்ணிற்குத் தொடர்பு கொண்டு உங்கள் விவரங்களைத் தெரிவியுங்கள் என்றோ அல்லது உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. கீழ்க்கண்ட எண்ணிற்குத் தொடர்பு கொண்டு அதனைப் பெற்றிடுங்கள் எனும் விதமாக.
நீங்கள் அவ்வாறான டோல் ப்ரீ எண்ணிற்குத் தொடர்பு கொண்டு உங்கள் க்ரெடிட் கார்ட் விவரங்களைத் தெரிவித்தீர்களோ, நீங்கள் தொலைந்தீர்கள். உங்கள் பரிசைப் பெற்றிட உங்களை ஏதாவது ஒரு தொகையை கட்டச் சொல்லியோ அல்லது ஏதாவது வாங்கச் சொல்லியோ அறிவுறுத்துவார்கள். இது ஒரு அக்மார்க் மோசடி.
(சமீபகாலமாக “நைஜீரியன் ஸ்கேம்” என்று மிகவும் புகழ்பெற்ற ஒன்று இவ்வாறான மோசடிதான். ஜாம்பியாவிலுள்ள வாரிசில்லாத செல்வந்தர் பல நூறு கோடி சொத்துக்களை விட்டு இறந்துவிட்டார். ராண்டமாக அந்த சொத்து முழுவதும் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதனைப் பெற்றிட 20 லட்சம் செலுத்துங்கள் என்று சமீபகாலமாக குறுஞ்செய்திகள் மூலம் பல லட்ச ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது.)
” சாரிட்டி மோசடிகள்”
உங்களுக்கு இவ்வாறான ஒரு மின்னஞ்சல் வரலாம். ஹைதி அல்லது வேறு ஏதேனும் ஒரு பிந்தங்கிய நாட்டிலுள்ள ஒரு சாரிட்டியிலிருந்து நிதி கோரி. அந்த நிதியை ஆன்லைனில் வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை செய்யுமாறும் கோரப்பட்டிருக்கும். பெரும்பாலும் நிதி கோரும் சாரிட்டி அமைப்புகள் காசோலை அல்லது க்ரெடிட் கார்ட் மூலமாக மட்டுமே நிதிகளைப் பெறும். நிச்சயமாக ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பெறப்படமாட்டாது. அப்படியே நீங்கள் சாரிட்டிகளுக்கு நிதியளிக்க விரும்பினாலும், அவற்றின் அதிகாரப் பூர்வ இணைய தளத்திற்குச் சென்று, அவர்கள் கூறியிருக்கும் வழியின்படி உங்களது நிதியை வழங்கலாம்.
மேற்கண்ட மோசடிகளிலிருந்து உங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது??
* உங்களது யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்களை உங்கள் பிறந்த தேதியாகவோ அல்லது எளிதில் கண்டறியக் கூடிய விதமாகவோ அமைக்க வேண்டாம்.
* பாஸ்வேர்ட் செக்யூரிட்டி கேள்வியை உங்களது தாயார் பெயராக இருக்கும்படியோ அல்லது உங்கள் குடும்ப நபரின் பெயராக இருக்கும்படியாகவோ அமைக்க வேண்டாம். உங்களது இளம்பிராய செல்லப் பெயராகவோ அல்லது வேறு ஏதேனும் எளிதில் அறியக் கூடியதாக விதமாக இல்லாததாக அமைய வேண்டும்.
* உங்களது பாஸ்வேர்ட்களை எளிதில் தெரியும் விதமாக டெஸ்க்டாப் திரைகளிலோ அல்லது டைரிகளிலோ பதிந்து வைத்திருக்க வேண்டாம்.
* ஒரே விதமான பாஸ்வேர்டை எல்லாவற்றிற்கும் பயன்படுத்த வேண்டாம்.
* உங்கள் பாஸ்வேர்ட்கள் எட்டு முதல் பதினாறு எழுத்துக்கள்வரையுள்ளதாகவும், எண்கள் மற்றும் ஆங்கில கேபிடல் மற்றும் ஸ்மால் எழுத்துக்கள் கலந்ததாகவும் இருக்க வேண்டும்.
* பதினைந்து நாட்களுக்கொருமுறையோ அல்லது மாதத்திற்கொரு முறையோ பாஸ்வேர்ட்களை மாற்றிக் கொண்டேயிருங்கள்.
* முன்பின் தெரியாத, சந்தேகத்திற்கிடமான இணைய சுட்டிகளை அணுகுவதற்கு முன்பு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

செல்போன் நோய்கள் தருமா?


நவீன விஞ்ஞான அற்புதங்களில் ஒன்று செல் போன் என்றழைக்கப்படும் அலை பேசி. ஒருவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு இன்னொரு இடத்தில் இருக்கும் மனிதரைத் தொடர்பு கொண்டு பேச முடிவது என்பது விஞ்ஞானத்தின் வியத்தகு முன்னேற்றமே. இங்கு இடைவெளிகள் பெரிய பிரச்னையே அல்ல. உலகத்தில் எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும் பேச முடியும், பயணம் செய்து கொண்டே பேச முடியும் என்பதெல்லாம் அவசரத் தேவைக்கு உடனடியாக பேச நினைப்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும் விஷயங்கள்.

ஏழை, செல்வந்தன் என்ற வித்தியாசம் இல்லாமல் இன்று எல்லோரும் செல் போன் வைத்திருக்கிறார்கள் சிலர் சதா நேரமும் செல் போனில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அவர்கள் கைகள் காதுகளில் ஒட்டிக் கொண்டு விட்டதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு இருக்கும். அந்த அளவு செல் போன் நம் தினசரி வாழ்க்கையில் நம்முடன் இணைந்த அம்சமாகி விட்டது.
இந்த நிலையில் செல் போன் சம்பந்தமாக உலகமெங்கும் நடந்து வரும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் நம்மை திடுக்கிட வைக்கின்றன என்றே சொல்ல வேண்டும். அந்த விஞ்ஞான ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.
ஸ்வீடனைச் சேர்ந்த கரோலின்ஸ்கா நிறுவனத்தில் நரம்பியல் பேராசிரியராக இருக்கும் டாக்டர் ஓல்லெ ஜோஜன்சன் (Dr. Olle Johansson) செல் போன் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்த ஆராய்ச்சிகளை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். அதிகமாக செல் போனை உபயோகிப்பவர்கள் மூளை சம்பந்தமான நோய்கள், மரபணுக்களுக்கு சேதாரம், உறக்க சம்பந்தமான பிரச்னைகள், மனத்தை ஒருமைப் படுத்துதல் முடியாமை போன்றவற்றால் பாதிக்கப் படுகிறார்கள் என்று ஆய்வுகளின் மூலம் கண்டறிந்திருக்கிறார்.
கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா மருத்துவக் கல்வி நிலையத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மூளை விஞ்ஞானியான ரோஸ் அடே (Ross Adey) செல் போனில் இருந்து வெளிப்படும் நுண்ணிய அலைகள் கேன்சர் உட்பட பல நோய்களை உருவாக்க வல்லது என்று கூறுகிறார்.
உலக சுகாதார நிறுவனம் (WHO) 13 நாடுகளில் நடத்திய ஒரு ஆராய்ச்சி நீண்ட காலம் அதிகமாக செல் போன் பயன்படுத்துபவர்களுக்கு மூளைக்கட்டி நோய் வர அதிகம் வாய்ப்பிருப்பதாக கூறி உள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த லென்னார்ட் ஹார்டெல் (Lennart Hardell) என்ற பேராசிரியர் கதிரியக்க ஆராய்ச்சி தொண்டு நிறுவனம் லண்டன் ராயல் சொசைட்டியில் ஏற்பாடு செய்திருந்த கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றில் பேசுகையில் 20 வயதுக்கு முன்பே செல் போனை பயன்படுத்த ஆரம்பிப்பவர்களுக்கு நரம்பு மண்டலத்தைத் தாக்கும் ஒருவித கான்சர் நோய் வர மற்றவர்களை விட ஐந்து மடங்கு அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.
இஸ்ரேல் மற்றும் டென்மார்க் நாடுகளில் நடத்தப் பட்ட ஆய்வுகளில் கருத்தரித்த பெண்கள் அதிகமாக செல் போன் உபயோகிப்பது பிறக்கும் குழந்தைகளின் மரபணுக்களில் கோளாறை ஏற்படுத்துகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
பல் வேறு நாடுகளில் இப்படி செல் போன் உபயோகப்படுத்தும் போது வெளிப்படும் கதிரியக்கத்தால் பல நோய்கள் உருவாகின்றன என்று ஆராய்ச்சிகள் கூறப்பட்டதை மறுத்து அமெரிக்காவைச் சேர்ந்த செல் போன் கம்பெனிகள் 28 மில்லியன் டாலர்கள் செலவில் டாக்டர் ஜார்ஜ் கார்லோ (Dr George Carlo) என்ற விஞ்ஞானியிடம் முழுமையான ஒரு ஆராய்ச்சி செய்யுமாறு பணித்தனர்.
துவக்கத்தில் அந்த விஞ்ஞானியும் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை என்று கூறினாலும் தொடர்ந்த ஆராய்ச்சிகளில் செல் போனில் வெளிப்படும் கதிரியக்கத்தால் பல நோய்கள் வர வாய்ப்பு இருப்பதை ஒத்துக் கொண்டு அதைக் குறித்து ஒரு புத்தகமும் எழுதினார். தங்களுக்கு எதிராக அவர் வெளியிட்ட கருத்துகளை அந்த கம்பெனிகள் எதிர்த்து அவர் மீது அவதூறுப் பிரசாரத்தை மேற்கொண்டாலும் அவர்களால் ஏற்பாடு செய்யப் பட்ட ஒரு விஞ்ஞானியே வேறுபட்ட கருத்தை வெளியிட்டது ஒரு ஆணித்தரமான உண்மையாக பலரால் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆனால் செல் போன் இன்றைய மனிதனின் அத்தியாவசியத் தேவையாகி விட்ட சூழ்நிலையில் அதை அறவே ஒதுக்கி விட முடியாத நிலையில் அனைவரும் இருக்கிறோம். அதே நேரத்தில் இந்த நோய்கள் குறித்த ஆராய்ச்சிகளும் நம்மை பயமுறுத்துவதாக இருப்பதையும் நாம் மறுக்க முடியாது. எனவே செல் போனைப் பயன்படுத்தவும் வேண்டும், நோய்களால் பாதிக்கப்படவும் கூடாது என்று நினைப்பவர்களுக்கு சில ஆலோசனைகள் –
  1. செல் போனில் மணிக்கணக்கில் பேசுவதைக் கண்டிப்பாகத் தவிருங்கள். உங்கள் பேச்சு சுருக்கமாகவும், தேவையின் பொருட்டாகவுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நேரில் பார்க்கும் போது பேசுவது போல எல்லா முக்கியமல்லாத விஷயங்களையும் செல் போனில் பேசுவதைத் தவிர்க்கவும். குறைவான செலவு தான் ஆகிறது என்ற எண்ணத்தில் அதிகமாக நீண்ட காலம் பயன்படுத்தினால் பல மடங்கு செலவை மருத்துவத்திற்கு பிற்காலத்தில் செய்ய நேரிடும். அளவாகவும், சுருக்கமாகவும், தேவையுள்ள சமயத்தில் மட்டும் செல் போனைப் பயன்படுத்துவதே மிகுந்த பாதுகாப்பும் பயன்பாடும்.
  2. குழந்தைகள் மற்றும் சிறு வயதினரை செல் போனை மிகுந்த அவசியமல்லாமல் உபயோகப் படுத்த விடாதீர்கள். அவர்கள் மண்டை ஓடு லேசாக இருப்பதால் அந்தக் கதிரியக்க பாதிப்புகள் அவர்கள் மூளையை ஆழமாக பாதிக்க முடியும் என்பது விஞ்ஞானிகள் கருத்து. எனவே அவர்கள் கையில் செல் போனைத் தராதீர்கள்.
  3. செல் போனை பேண்ட் பாக்கெட்களிலோ, பெல்டுகளிலோ வைத்துக் கொள்ளும் இளைஞர்களின் விந்து எண்ணிக்கை 30 சதவீதம் வரை குறைவதாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. மனித உடலில் கீழ் பகுதி மேல் பகுதியை விட அதிகமாக செல் போனின் கதிரியக்கத்தால் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். எனவே அணைத்து வைக்காத செல் போனை அந்த இடங்களில் இளைஞர்கள் வைப்பதை தவிர்ப்பது நல்லது.
  4. சிக்னல் குறைவாக இருக்கும் போது பேசுவது வலிமையாக கதிரியக்கம் வெளிப்படுவதால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே அந்த சமயங்களில் பேசுவதைத் தவிருங்கள்.
  5. மூடிய வாகனங்களுக்கு உள்ளே இருந்து பேசும் போதும் இணைப்பை ஏற்படுத்த செல் போன்கள் அதிக சக்தியை செலவிட வேண்டியிருக்கும் என்பதால் கூடுமான வரை அதனைத் தவிர்ப்பது நல்லது.
  6. நம் உடல் செல் போனின் கதிரியக்க சக்தியை எந்த அளவு உள்ளிழுத்துக் கொள்கிறது என்பதை அளவிட SAR என்ற அளவீடு செல் போன்களில் பயன்படுத்தப்படுகிறது. புதிய செல் போன்களின் இயக்கக் குறிப்பேடுகளிலும், கம்பெனி இணைய தளங்களில் அந்த வகை செல் போன் கருவி குறித்த குறிப்புகளிலும் அந்த SAR அளவீட்டை இப்போது தர ஆரம்பித்திருக்கிறார்கள். குறைவான SAR அளவீடு உள்ள செல் போன் சாதனங்களை வாங்கி பயன்படுத்துங்கள்.
  7. காது கேட்கும் சாதனம் அணிந்திருப்பவர்கள் செல் போனை பயன்படுத்துவது நல்லதல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அது போல மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு அறையினுள்ளும் செல் போன் உபயோகிப்பது அங்குள்ள நோயாளிகளின் உடல்நிலையை அதிகம் பாதிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கர்ப்பவதிகளும் செல் போனை கூடுமான அளவு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
  8. முடிந்த சமயங்களில் எல்லாம் தரை வழி தொலைபேசியைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை தாருங்கள்.
அளவான, குறைந்த, புத்திசாலித்தனமான பயன்பாட்டால் மட்டுமே நாம் செல் போன் மூலம் நோய்களை நீக்கிய உண்மையான பயனை அடைய முடியும் என்பதை நாம் என்றும் நினைவில் வைத்திருப்பதுடன் இந்த உண்மையை நாம் அக்கறை வைத்திருக்கும் நபர்களுக்கும் அறிவுறுத்துவோமாக!

சீக்கிரம் ஜெயிலுக்குப் போவார் கருணாநிதி! - சொல்கிறார் சுப்பிரமணிய சாமி

 ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி விரைவில் ஜெயிலுக்குப் போவார் என்று கூறினார் சுப்பிரமணிய சாமி.




டெல்லி பல்கலைக்கழகத்தில் 'ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் நடந்த மாணவர்களுடனான கலந்துரையாடலில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

தலைத் தொடர்புத் துறையில் சமீபத்தில் நடந்த ஊழலில் ஆ ராசாவுக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் சமமான பங்குள்ளது. இந்த குற்றவாளிகள் மீது சட்டம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும். இதை நீங்கள் விரைவில் பார்க்கத்தான் போகிறீர்கள்.

கருணாநிதியையும் ராஜாவையும் தாங்கிப் பிடித்தவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான். ஸ்பெக்ட்ரம் பணம் மொத்தத்தையும் இந்த மூவரும்தான் பங்கு போட்டுக் கொண்டனர்.


ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பொருத்தவரை இந்த மூவரும்தான் பெரிய திமிங்கிலங்கள். இவர்களை மவுனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர் பிரதமர் மன்மோகன்சிங். அவரது தேசப்பற்று குறித்து நான் கேள்வி எழுப்பவில்லை. ஆனால், நாட்டை சில குற்றவாளிகள் சுரண்டிக் கொண்டிருப்பதை அவர் மவுனமாக வேடிக்கைப் பார்த்ததைத்தான் கண்டிக்கிறேன்..., என்றார்.

2 ஜி ஊழலை வெளிக்கொணர்ந்ததில் சுப்பிரமணிய சாமிக்கு பெரும் பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் ரூ 1.76 லட்சம் கோடி என்று சிஏஜி அறிக்கை வந்ததும், சாமிதொடர்ந்த பொது நல வழக்கின் நீட்சியாகவே தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்த ராசா ராஜினாமா செய்தார். இப்போது கைதாகி சிறையில் உள்ளார்.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் வெண்டக்காய்


வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளைக்கு போஷாக்கு என்று இந்தியர்களுக்கு தீவிர நம்பிக்கை. இது பருத்திச் செடியின் குடும்பத்தை சேர்ந்தது. தாவரவியல்படி செம்பருத்தி ஹாலிஹாக் என்னும் பூச்செடி வகை. இந்த பூக்களின் அமைப்பும் வெண்டைக்காய் பூவின் அமைப்பும் ஒரே மாதிரியானவை. வெண்டைக் காய்க்கு வெப்பம் அதிகமுள்ள நிலமும் பகல் இரவு இரண்டிலும் சூடான சூழ்நிலையும் அவசியம். இதனால் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் விளைச்சல் அதிகம்.
 வரலாறு: வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தி யோப்பியா நாடு. அங்கிருந்து அரேபியா, நைல்நதியோர நாடுகள், பிறகு இந்தியா என்று அடுத்தடுத்து அறிமுகமாகி இருக்கிறது. கி.பி 1600-களில் அடிமை வியாபாரம் தொடங்கிய காலகட்டத்தில் ஆப்ரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். ஆப்ரிக்கர்கள் கம்போ என்ற ஒரு பிரபல சூப் தயாரிக்கையில் சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். வெண்டைக் காயை பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்ரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். ஓக்ரா என்ற இன்னொரு பெயரும் உண்டு. இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும் நீளமாகவும் நுனி கூராகவும் இருப்பதால் ஆங்கிலத்தில் இதை பெண்ணின் விரல் (ladies finger) என்கிறார்கள்.
வெகுநாட்கள் வரை இதை எப்படி சமைப்பது என்று தெரியாமலே யாரும் பயன்படுத்தவில்லை. அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியிலேயே முற்ற விட்டதால் அதை பயன்படுத்திய ஒருசிலரும் முற்றிய வெண்டைக்காயின் ருசி பிடிக்காமல் அதை வெறுத்தனர்.
வகைகள்: இளம் பச்சை, கரும் பச்சை, சிவப்பு நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை வடிவங்கள் உண்டு.
விசேஷ குணம்: வெண்டையின் மிக முக்கியமான விசேஷ குணம் கொழகொழப்புதான். இதிலுள்ள acetylated, galeturomic அமிலங்கள் கொழகொழப்பை ஏற்படுத்துகின்றன. வெண்டைக்காயை நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வந்து கொழகொழக்கிறது.
வாங்குவது எப்படி?: இளசாக இருக்கும் போதே பறித்துவிட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும் வகையை சேர்ந்தது. சீக்கிரமே மரம் போல் முற்றி விடும். வாங்கியவுடன் சமைக்க வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். காம்புக்கு அருகில் ஓட்டை இல்லாததாக பார்த்து வாங்க வேண்டும். ஓட்டை
இருந்தால் புழு இருக்கும்.

பாதுகாப்பு: ஃப்ரிஜ்ஜில் வைப்பதானால் கழுவாமல், லூஸாக பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி ட்ரேயில் வைக்கவும். ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது துளி கூட ஈரம் இருக்கக் கூடாது. ஈரம் இருந்தால் வெண்டைக்காய் அழுகி கொசகொசத்து பூசணம் பூத்துவிடும். சமைப்பதற்கு முன்தான் அலம்ப வேண்டும். சில வகை வெண்டைக்காயில் மெல்லிய பூனைமுடி போல இருக்கும். நன்றாக தேய்த்துக் கழுவி பேப்பர் டவலில் துடைத்துவிட்டு நறுக்கவும். நறுக்கி தண்ணீரில் போடக்கூடாது. அதிலிருக்கும் ஒருவித சளி போன்ற கொழ கொழப்பான திரவம் வெளியேறி சமையலே கெட்டு விடும்.
சமைக்கும் போது கவனிங்க:
  • வெண்டைக்காயின் கொண்டைப்பகுதியை வெட்டி தோசை மாவு அரைக்கும்போது சேர்த்தால் தோசை மிருதுவாக வரும்.
  • வெண்டைக்காயை துண்டாக வெட்டி நறுக்கும் போது அதிலிருக்கும் கொழ கொழப்பு மொத்தையாக்கி சரியாக வதங்காது. 
  • மிக மிக பொடியாக வெட்டி நறுக்கினால் கொழ கொழப்பு அவ்வளவாக இருக்காது.
  • வெண்டைக்காயை தக்காளி, வெங்காயம், சோளம், மீன், உருளைக்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து சமைக்கும்போது அவை மிகவும் ருசியாக இருக்கும்.
  • மற்ற காய்கறிகளோடு சேர்த்து சமைக்கும் போது வெண்டைக்காயை அதன் கொழகொழப்பு வராமல் தனியாக வதக்கி கடைசியில் சேர்க்க வேண்டும்.
  • இரும்பு, அலுமினிய பாத்திரங்களில் சமைத்தால் கறுத்துவிடும். தக்காளியின் புளிப்புத் தன்மை வெண்டைக்காயின் கொழகொழப்பை முறியடிக்கும்.
  • வெளிநாட்டில் வெண்டைக்காயை மெலிதாக நறுக்கி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றோடு சேர்த்து ஸாலடாகத்தான் சாப்பிடுவார்கள். தனியாக சமைத்து சாப்பிடுவதில்லை.
  • வங்காளத்தில் முற்றிய வெண்டையை உறித்து கொட்டையை சாப்பிடுவார்கள்.
  • இளசான வெண்டைக்காயை துண்டாக்கி முட்டையில் தோய்த்து ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து சாப்பிடுவது அமெரிக்காவில் பிரபலம்.
  • முற்றிய காயை பேப்பர் செய்யவும் கயிறு செய்யவும் பயன்படுத்துகிறார்கள்.
உணவுச் சத்து: பாதி கரையும் நார்ச்சத்து, பாதி கரையாத நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. கரையும் நார்ச்சத்து உடலிலுள்ள கொலஸ்ராலை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கரையாத நார்ச்சத்து குடலுக்கு திடத்தை கொடுத்து குடல் அழற்சி, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
ஒரு கப் சமைத்த வெண்டைக்காயில் இருக்கும் உணவுச் சத்துகள்..
கலோரி 25, நார்ச்சத்து- 2 கிராம், புரோட்டின் 1.52 கிராம், கார்போஹைட்ரேட் 5.76 கிராம், விட்டமின் ஏ 460 ஐம, விட்டமின் சி 13.04 மில்லி கிராம், ஃபாலிக் ஆசிட் -36.5 மைக்ரோ கிராம், கால்சியம் 50.4 மில்லி கிராம், இரும்புச் சத்து 0.4 மில்லி கிராம், பொட்டாசியம் 256.6 மில்லி கிராம், மெக்னீசியம்-46 மில்லி கிராம்.
பதம்: வருடம் முழுவதும் கிடைப்பதால் இந்தியாவில் இதை பாதுகாத்து சேர்த்து வைப்பதில்லை. ருசிக்காக வெண்டைக்காய் வற்றல் செய்வார்கள். குளிர் பிரதேசத்தில் இதை உறைய வைத்து உபயோகிக் கிறார்கள்.
சமையல்: வெண்டை பீன்ஸ் சப்ஜி: வெண்டைக் காய் 1/2 கிலோ, எண்ணெய் 4 டேபிள் ஸ்பூன், வினிகர் 1 டீஸ்பூன், வெங்காயம் 1, பீன்ஸ் 1/2 கிலோ,பூண்டு 2 பல், தண்ணீர் 1 கப், தக்காளி பேஸ்ட் 1 கப், உப்பு, மிளகுப் பொடி தேவையான அளவு.
செய்முறை: வெண்டைக்காயை கழுவி நுனிகளை வெட்டவும். தலைப்பகுதியை வெட்ட வேண்டாம். 1/2 மணிநேரம் வினிக்கரில் ஊறவைக்கவும். இது வெண்டைக்காயின் கொழ கொழப்பை குறைக்கும். பீன்ஸ் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். தண்ணீர் தக்காளி பேஸ்ட், எண்ணெய், வெங்காயம், பூண்டு, உப்பு, மிளகுப்பொடி எல்லாம் கலந்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க விடவும். நீர் கொதித்ததும் வெண்டைக்காய் பீன்ஸ் சேர்த்து தீயைக் குறைத்து மூடி வேகவிடவும். காய்கறி வெந்ததும் இறக்கி விடவும். இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஆறியதும் ஃப்ரிஜ்ஜில் வைத்து மறுநாள் சாப்பிட நன்றாக இருக்கும்.
 சிம்பிள் வெண்டை மசாலா:
தேவையான பொருட்கள்: விரல் நீள வெண்டைக்காய் 1/2 கிலோ, 1 கட்டு கொத்தமல்லி கட்டு, 2 பச்சை மிளகாய், இஞ்சி ஒரு துண்டு, 1/2 எலுமிச்சம் பழத்தின் சாறு, உப்பு, தேவைப்பட்டால் எண்ணெய் பயன் படுத்தலாம்.
செய்முறை: வெண்டைக்காயை கழுவி துடைத்து வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி தலை, இஞ்சி, பச்சை மிளகாய், எலுமிச்சம் பழச்சாறு எல்லாவற்றையும் உப்பு சேர்த்து அரைத்துக்
கொள்ளவும். வெண்டைக்காயை லேசாக கீறி அரைத்த விழுதை அதில் திணிக்கவும். வெண்டைக்காயை இட்லி தட்டில் வேக வைத்து எடுத்து ஃபுல்கா சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டால் சுவையாக இருக்கும். டயட்டில் இல்லாதவர்கள் எண்ணெயில் வதக்கி சாப்பிடலாம். கடாயில் எண்ணெய் வைத்து அடுப்பை சிறிதாக எரிய விடவும். வெண்டைக் காயை போட்டு சுருளும் வரை வதக்கி இறக்கவும். இந்த வெண்டை மசாலா தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.
இது வரை காய் பழங்களில் ஈள்ள நன்மைகளைப் பற்றி பார்த்து வந்தோம். நிறைவாக யார் யார் சாப்பிடலாம் யார் யார் சாப்பிடக்கூடாது ஊன்ற தகவலை ஆன்ஷாஃல்லாஹ் ஃடுத்த வெளியிட்டில் பார்ப்போம். அதன் பின் வரும் முன் காப்போம் என்ற தொடரை தொகுத்து வழங்க உள்ளேன் இன்ஷா அல்லாஹ்…