சில பெற்றோரே ‘எடே தம்பி இங்கை பக்கத்து வீட்டு பையன் மோட்டார் சைக்கிள் வாங்கி ஓட்டுறான் இங்கை உன்ரைதம்பியும் நெடுக கேட்ட படி அடுத்த முறை காசு அனுப்பேக்க கூட அனுப்பிறியே? இது ஒரு அம்மா கேட்கும் கேள்வி.
இங்கு இருப்பவனை ஒரு வேலைக்கு அனுப்பி சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் போது தம்பிக்கு மோட்டார் சைக்கிள் இல்லை என்றால் மரியாதை இல்லை என்று சிந்திப்பவர்கள் தான் அதிகம். இதனால் வேலை பற்றியோ தாம் உழைக்க வேண்டும் என்ற சிந்தனையே அவர்களுக்கு எவ்வாறு ஏற்படும்.
தமது பிள்ளைகள் தம் காலத்தை வீணாக்குவதற்கு சில பெற்றோர்களே காரணமாகின்றனர். அவனுக்கு அண்ணை இருக்கிறான் தானே என்று சிந்திப்பவர்கள் அவனது எதிர்காலத்திற்க்கு ஒரு தொழில் வேண்டும் அதற்காக அவனுக்கு ஒரு சுய தொழிலையாவது உருவாக்கிக் கொடுக்போம் என்று சிந்திப்பதாய் இல்லை.
வேலை இன்றி இருப்பவனிடம் பல பெறுமதியான கான்போன் கைவசம். வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தெருவிலை நின்று போவோர் வருவோரை படம் எடுக்கும் அந்த கான்போனில். இப்படி இருந்தால் எம் நாடு எப்படி உருப்படும்.
அடுத்து அன்று ஒரு இணையத்தளத்திலப் பார்த்தேன் பக்கத்து வீட்டுப்பிள்ளை மோட்டார் சைக்கிள் வாங்கியதைப் பார்த்து இந்த வீட்டு அம்மா தன் மகனிடம் கேட்கிறா உன்ர தங்கச்சிக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் எடுத்துக் கொடு.
பக்கத்து வீட்டுப்பிள்ளை பல்கலைக்கழகம் போகிறாள் மோட்டார் சைக்கிளில் இந்த வீட்டுப்பிள்ளை 8ம் வகுப்பே தாண்டவில்லை. இங்கு தன் பிள்ளைக்கு தானே மோட்டார் சைக்கிள் எடுத்துக் கொடுத்து ஊர் சுத்த அனுப்பும் இந்தத் தாய் தம் பிள்ளையையும் மற்றவர்கள் மாதிரி இருக்க வேண்டும் என்று சிந்திக்கிறார்கள். நல்ல நிலையிலே வாழ்வதற்கு வழிகாட்டுபவையைத் தெரிவு செய்து அதனை உதாரணமாக காட்ட முற்படவேண்டும்.
இன்று பாடசாலையில் கல்வி கற்பவர்களிடம் கான்போன் இருக்கிறது. 8 முதல் 80 வரை கான்போன் கையில் வைத்து பாவிக்கின்றனர். தமது சொந்த பாவனையில் வைத்திருக்கிறார்கள். சிறுவர் கூட கான்போனை கையாளத் தெரிந்தவர்களாகவே இருக்கின்றார்கள். ஒரு வீட்டிலே கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று கான்போன் இருக்கும்.
அதனால் சேவைகள் இலகுவாக்கப்பட்டு வந்தன. அன்று பக்கத்து வீட்டு பரிமளம் அக்காவுக்கு இந்த வீட்டு அம்மா போன் எடுக்கிறா, என்ன விசயம் என்று பார்த்தால் பருப்பு அவியலை அதற்கு என்ன செய்யலாம் என்று கேட்பதற்கு கான் போனில் செய்தி செல்கிறது. நம்ம நாட்டு தொழில்நுட்ப வளர்ச்சி இவ்வாறெல்லாம் முன்னேறியுள்ளது.
பாடசாலைக்கு சிலர் கான்போன் கொண்டு செல்கின்றார்கள் தனியார் கல்வி நிலையத்திற்கும் கொண்டு செல்கன்றார்கள். பிள்ளை போனுக்கு காசு முடிந்தது என்று கேட்டவுடன் பெற்றோர் காசு வழங்குகின்றார்கள். எவ்வாறு காசு முடிந்தது என்று கேட்டதாய் இல்லை. இது கான்போனை வைத்து என்ன எல்லாம் பாடுபடுத்துமே யாரறிவார்?
தம்முடன் கல்வி கற்கும் பிள்ளைகளை படம் எடுப்பது, கான் போன் வழியில் இணையத்தளத்தில் இருந்து படங்கள் இறக்குவது ஆபாசப்படங்கள் பார்ப்பது இவ்வாறு சீரற்ற விடயங்களில் ஈடுபடுகிறார்கள். இதற்குக் காரணம் யார்?
இன்று பேஸ்புக் பாவனை அதிகரித்துக் காணப்படுகின்றது. கூடுதலான வீடுகளில் கம்பியூட்டர், லப்டொப், கான்போன் இவற்றில் பேஸ்புக்கை பார்க்கும் வசதி இருக்கிறது. அதனால் காலை முதல் மாலை வரை கூடுதலானோர் தவாறாது செய்யும் காரியம் பேஸ்புக் பாவனையாகக் காணப்படுகின்றது. வேலைக்குச் செல்லவேண்டிய அவசியம் அற்றோர் பல பேர் இருக்கின்றார்கள். அவர்கள் பொழுது இதிலேயே வீணடிக்கப்படுகின்றது.
தமக்கு தெரிந்த நண்பர்கள் தெரியாத நண்பர்கள் என்று பலரை இணைத்து அவர்களுடன் அலட்டுதல் (chatting) செய்வதற்கு காத்திருக்கும் ஒரு குழுவினர். இதன் விளைவுகள் பல. தெரியாத பலருடன் நட்புக் கொண்டு அதன் மேல் காதலாகி பின்பு அதன் இறுக்கத்தின் விளைவாக தந்தை தாய் பெயர் தெரியாத அனாதைக் குழந்தை குப்பைத் தொட்டியிலே. இது தான் இன்று காணப்படுகின்ற நாகரீக வளர்ச்சியா?
கோயில்கள் திருவிழாவின் போது செய்யும் விடயங்கள் எண்ணில் அடங்காதவை. கோயிலிலே வீடியோக்கள், போட்டோக்கள் என ஒரே அமளி. அடடா வீடியோ எடுப்பினமே அதற்கேற்றவாறு தானே நாம் உடையணிய வேண்டும் என்று உடையைத் தேடி எடுத்து அலங்காரம் செய்து வர கோயிலிலே சுவாமி வீதிவலம் வரும் காட்சியையாவது அவர்கள் பார்க்கக் கூடியதாக இருக்கும்.
இவ்வாறான விடயங்களால் பக்தியாக கோயிலுக்கு வருபவர்கள் கூட எங்கே எம்மைப் பார்த்து மற்றவர்கள் என்ன கதைப்பார்களோ என்று பகட்டான உடைகளைத் தேர்ந்தெடுத்து உடுத்தி அதில் ஏதாவது அழுக்குகள் பிரளாமல் பார்க்க நேரம் போதும் என்றாகிவிடும்.
இதில் எங்கே கடவுளைப் பார்க்க நேரம். நான் மட்டுமா? என்னை விட பார் அழகாக உடை உடுத்து வந்துள்ளார்கள் என்று அவர்களை மதிப்பீடு செய்யவே அவர்களுக்கு நேரம் போதும் என்றாகி விடும். கோயிலுக்கு வருபவர்கள் எல்லோரும் கும்பிடும் நோக்கத்துடனா வருகிறார்கள்.
தற்போது பத்திரிகையில் வரும் மரண அறிவித்தல்களை எடுத்துப்பார்த்தால் ஒரு பக்கம் அதற்காக ஒதுக்கிவிடுவார்கள். ஒரு சிலர் பத்துப்பிள்ளைகளும் வெளிநாடு அவர்கள் பெயரும் அதன் பக்கத்தில் அவர்களுக்குப் பட்டம் வழங்குவது போல் அடைப்புக்குறிக்குள் அவர்களது நாடு பெயர் இவற்றையெல்லாம் போட்டு போட ஒரு பக்கம்.
இதனைப் பார்ப்பவர்கள் இது ஒரு பக்கத்தில் வந்திருக்கு பக்குவப்படுத்தி வைப்போம் என்றா சிந்திக்கப் போகிறார்கள்? ஒரு நாளும் இல்லை. பணம் இருக்கு எமது வசதியைக் காட்டுவோம் என்று எதற்கு என்னத்தை செய்வது என தலைகால் புரியாது நடந்துகொள்கிறார்கள்.
வீதியிலே போகும் போது பார்த்தேன். பெரியளவில் ஒரு பனர் கட்டப்பட்டிருந்தது. ஏதோ விழாவிற்கான அழைப்பு என்று சிந்தித்து மெதுவாக வாகனத்தைச் செலுத்தி வாசித்தபோது தான் பார்த்தேன் அது ஒரு கண்ணீர் அஞ்சலி வெளிநாட்டுப் பணம் படுத்தும் பாடு தான் என்ன?
பத்திரிகையிலே பிறந்தநாள் வாழ்த்தும் வரும். தந்தைக்கு மகள் வாழ்த்து தெரிவிப்பார். மகளுக்கு தந்தை தெரிவிப்பார். இது எல்லாம் அவர்கள் வீட்டிலே வாழ்த்தினால் போதாதா? பத்திரிகையில் போட்டால்த் தான் வாழ்த்துப் போய்ச் சேரும் என்று ஏதாவது விதிமுறை இருக்கின்றதா? தன் பிள்ளைகள் தன் குடும்பத்தினரிடையே வாழ்த்த அவர்களுக்கு பத்திரிகை தூதாக செயற்படுகின்றது.
ஒருவர் இறந்தால் அதனை துக்கவீடாக முன்னர் நடத்துவார்கள். நான் கடந்த வாரம் ஒரு மரணவீட்டிற்குச் சென்றிருந்தேன். இறந்தவரின் தலைப்பக்கத்தில் சிறிய கதிரையில் ஏதோ வைக்கப்பட்டிருந்தது. முன்னர் குத்துவிளக்கு ஏற்றித்தான் நான் கண்டிருக்கிறேன். இது என்ன ஏதோ தெரிகிறது என்று போய்ப் பார்த்தால் லப்டொப் கொம்பியூட்டர் வைக்கப்பட்டிருக்கு.
ஏன் இதை வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால், பிள்ளைகள் வெளிநாட்டிலே இங்கு வர கஷ்ரம் தானே அது தான் தாயராரின் மரணவீட்டை நேரடியாக ஸ்கைப்பில் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். சரி என்ன நடக்கிறது என்று பார்த்தால், கிரியை செய்ய ஐயர் வந்திருக்கிறார், அவருக்கு முன்னாலேயும் லப்டொப் நடனமாடுகின்றது.
ஐயருக்கும் லப்டொப்பைப் பார்த்து கிரியையைச் செய்வதற்கு தடுமாற்றம். பெற்றோருக்கான கடமையைச் செய்ய யாரும் இல்லை அதனை நேரடியாகப் பார்த்து துக்கத்தில் பங்கு கொள்கிறார்களாம். அட கோயிலில் மட்டும் தான் திருவிழாவை நேரடியாக ஒளிபரப்புச் செய்ய முடிமா?
இங்கு கூட மரண வீட்டை நேரடியாக ஒளிபரப்புச் செய்கிறார்கள். அது மட்டுமா கெட்போனில் அதில் பச்சை சீலை பக்கத்துவீட்டு பரமேஸ் அக்கா மகள் நீல சேட்டு சாமிநாதன் அந்த அக்கா இவர்கள் கதைப்பதைக் கேட்டு தன்னை அல்லவா கூப்பிடுகினம் என்று போனால் அவர்கள் வருபவர்கள் எல்லோரையும் நேரடியாக அறிமுகம் செய்கிறார்கள் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு.
முன்னர் திருமண வீடு என்றால் எழுத்து அதாவது பதிவுத் திருமணம் முதலிலே நடந்து விடும் பின்பு திருமணம். ஆனால் இப்போது அப்படியில்லை. பதிவுத்திருமணம் திருமணத்தன்றே பின்னேரம் நடைபெறும். திருமணத்தின் போது பல ஏற்பாடுகள் பின்னேரம் கூறை மாற்றி பதிவுத் திருமணத்திற்கு வேறு உடை மாற்றி அதற்கேற்ற நிறத்திலே கேக் வெட்டினார்கள். என்னடா இவ்வளவு பெரிதாய் கேக் இருக்கிறது என்று பார்த்தால் அது கேக் அல்ல வெறும் றெஜிபோம் அதற்கு அவர்கள் செலுத்தும் பணம் 6 ஆயிரத்திற்கும் மேல் பெறுமதி.
அதனை பதிவுத்திருமணம் முடிந்த உடனே திருப்பிக்கொடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் வேறு. மறுநாள் மணமகன் வீட்டிலே வரவேற்பு நிகழ்ந்தது. அங்கேயும் ஒரு கேக் (றெஜிபோம்) காத்திருக்கும் – சரி இத்துடன் முடிந்து விட்டதா என்று பார்த்தால் இல்லை. மறுநாள் மணமகள் வீட்டில் வரவேற்று நிகழ்வு அங்கேயும் அவர்கள் சேலைக்கு ஏற்ற நிறத்தில் அதில் வேறு வித கேக். ஒரு ஐந்து நிமிடம் தான் அதை வைத்து படம் எடுத்தார்கள். அதற்காக அவர்கள் செலவிடும் பணத்தை பற்றி யாரும் சிந்தித்தாய் இல்லை.
இன்று பிள்ளைகளுக்கு பெற்றோர் தாராளமாக பணத்தை வழங்குகிறார்கள். இவர்கள் இதை வைத்து என்ன செய்கிறார்கள் என கேட்க யாரும் இல்லை. தமக்குப் பணம் இருக் அதனைக் கொண்டு பார்க், பீச் என்று சுத்துகிறார்கள். பெற்றோரும் அவர்கள் எங்கு போகிறார்கள் வருகிறார்கள் என்று சிந்தித்தாய் இல்லை. இதனால் கல்வியை கைவிட்டு காதலில் ஈடுபடுகிறார்கள். தமக்காக வீட்டில் வாங்கி வைத்த நகைகளுடன் காதலனுடன் ஓடுகிறார்கள்.
அவற்றை வைத்து உண்ணுகிறார்கள். அவை முடிந்தவுடன் காதலனால் கைவிடப்பட்ட நிலையில் தற்கொலையை நாடுகிறார்கள் அல்லது தம் வயிற்றிலே பிள்ளைகளைச் சுமந்து கொண்டு தம் வாழ்க்கையை நிர்ணயிக்க முடியாது அல்லல்ப்படுகிறார்கள். வசதிகள் கூடும் போது கல்வியில் வீழ்ச்சி ஏற்படுகின்றது. நாம் படிப்பது இந்தப் பணத்திற்காகத்தானே எம்மிடம் தான் இந்தப் பணம் இருக்கின்றதே பின்பு ஏன் நாம் படிப்பான் என்ற யோசனை ஏற்படுகின்றது.
அதனால் கல்வியில் அக்கறை இல்லாமல் காணப்படுகிறார்கள். பணம் பத்தும் செய்யும் என்பார்கள் இப்போ இங்கு பணம் என்ன எல்லாம் செய்கிறது. அதனால் தான் முன்னர் கூறியிருக்கிறார்கள் போல “ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு” என்று.
|
No comments:
Post a Comment