"எந்திரன்' படத்திற்காக எந்திரமாய் உழைத்த ரஜினி அதன் வெற்றியால் உற்சாகமாகி இருக்கிறார். நடித்தால் மட்டுல்ல... நின்றால், நடந்தால், பேசினால் கூட ஸ்டைல்தான் என்னும் அளவிற்கு ரசிகர் கூட்டத்தின் அபிமானத்தைப் பெற்ற அவருக்கு தற்போது வயது 61. சென்ற டிசம்பரில் 12ம் தேதி எந்த ஆராவாரமுமின்றி தன்னுடைய பிறந்த நாளையும், "அறுபதாம் கல்யாண'த்தையும் சிறப்பாக கொண்டாடியிருக்கிறார் ரஜினி. சமீபத்தில் அவர் ஓர் ஆங்கில இதழுக்குப் பேட்டி அளித்திருந்தார். ரஜினியைப் போலவே விறுவிறுப்பும், பரபரப்பும் நிறைந்த அந்தப் பேட்டி இதோ.
இப்போதெல்லாம் பத்திரிகைகளுக்கு பேட்டிகள் கூட கொடுக்க முடியாத அளவிற்கு நீங்கள் மாறிப் போனதன் பின்னணி என்ன?
நோ நோ... நான் மாறவில்லை. அதே ரஜினிதான். இப்பல்லாம் நான் யாருக்கும் பேட்டிகள் கொடுப்பதில்லை. ஏன்னா பேப்பர், சேனல்ஸ் அனைத்தும் எக்ஸ்க்ளூஸிவா பேட்டி வேணும்னு கேட்கிறாங்க. ஒருத்தருக்குக் கொடுத்து இன்னொருத்தருக்குக் கொடுக்கலேன்னா மத்தவங்க தப்பா நினைப்பாங்க. இதைவிட, எல்லாருக்குமே நோ சொல்லிட்டா பிரச்சினை இல்ல பாருங்க.. மத்தபடி மீடியா இன்னிக்கு ரொம்ப பவர்ஃபுல்லாயிடுச்சி...
"எந்திரன்' படத்தின் வெற்றி உங்களை ரொம்பவும் ரிலாக்ஸôக்கிடுச்சே....!
ஓ யெஸ்... ஒரு மாநில மொழிப் படத்தில் முதல் முறையா இவ்வளவு பெரிய முதலீடு செஞ்சிருக்காங்க. இது தமாஷ் இல்ல. கலாநிதி மாறன் தைரியத்துக்கு பாராட்டுக்கள். அவர் இந்தக் கதையை நம்பினார். எந்தத் தப்பும் நடக்கலை. அது ஒரு பெரிய பொறுப்பு... கடவுள் அருளால எல்லாம் நல்லபடியா நடந்தது.
இந்தப் படத்திற்கு சம்பளமாக ஆரம்பத்தில் நீங்கள் ஒரு பைசா கூட வாங்கவில்லை என்று கூறப்பட்டதே...?
சம்பளத்தை அப்புறமா கொடுங்கன்னு நான்தான் அவங்ககிட்ட சொன்னேன். அப்புறமா வாங்கிக்கிட்டேன் (சிரிப்பு). எனக்கு இப்போ பணம் வேணாம்னு அவங்ககிட்ட முதல்லயே சொல்லிட்டேன். எனக்குத் தேவைன்னா நான் நிச்சயம் கேட்டு வாங்கிக்குவேன். அப்படி ஒரு தேவை இல்லாத பட்சத்தில் எதுக்கு ச்சும்மா... படத்துக்காக ஏற்கெனவே நிறைய செலவு செய்திருக்காங்க. அதுமட்டுமில்லாம கலாநிதி மாறன் என்னோட நல்ல நண்பரும் கூட.
நீங்கள் நடிக்கும் படம் தயாராகும்போது நயா பைசா வாங்குவதில்லை என்றும் அப்புறம் படத்தின் லாபத்தில் ஒரு பகுதியை வாங்கிக் கொள்வதாகவும் சொல்கிறார்களே?
உண்மைதான்...
இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகராக உங்களை மாற்றியது எது?
(சிரிக்கிறார்)
நாங்கள் சொல்வது சரிதானா?
மத்த நடிகர்கள் எவ்வளவு வாங்குறாங்கன்னு எனக்குத் தெரியல!
(மீண்டும் சிரிக்கிறார்).
முன்பு ஒரு முறை, "நான் நடிகனாகாமல் இருந்திருந்தால் பணத்துக்காகக் கடத்தல்காரனாக மாறியிருப்பேன்' என்றீர்களே... நினைவிருக்கிறதா?
ஆமாம்... உண்மைதான்... நான் ஒரு நடிகனாக ஆகியிராவிட்டால் "தாதா'வாக மாறியிருப்பேன். ஆனால் அந்தக் கட்டத்தைக் கடந்து விட்டேன். இப்போது என்னிடம் தேவையான அளவு பணம் இருக்கு.
"எந்திரன்' ரிலீஸூக்குப் பிறகு இமயமலை சென்றுவிட்டீர்களே?
ஒவ்வொரு படத்தின் ரிலீஸýக்குப் பிறகும் நான் இமயமலைக்குப் போவது வழக்கம். தனியாகத்தான் செல்வேன். துணைக்கு யாரையும் அழைத்துச் செல்வதில்லை.
அங்கே உங்களைக் காணக் கூட்டம் கூடிவிடாதா?
இல்லை. நான் ரொம்ப உள்ளே இருக்கிற இமயமலை கிராமங்களுக்குப் போவேன். அங்கே இருப்பதே ஒரு தியானம் மாதிரிதான். அந்த கங்கை, புனிதமான மலை, அதனுடைய அழகு, அங்குள்ள கள்ளங்கபடமற்ற மனிதர்கள் எல்லாம் வித்தியாசமானது. நான் அங்கே பல முறை போயிருக்கேன். 1995ஆம் ஆண்டு தொடங்கி 15 வருடங்களாக போய்க்கொண்டிருக்கிறேன்.
மகன் இல்லையே என்று நீங்கள் எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா?
நோ...நோ... கடவுள் ஆசீர்வாதத்தால நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இன்னிக்கு 21-ம் நூற்றாண்டில் இருக்கோம். ஆண், பெண் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. இன்னிக்கு என்னோட ரெண்டு பேரன்கள் யாத்ரா, லிங்காவைப் பாருங்க. (பேரன்களுடன் ரஜினி இருக்கும் ஃபிரேம் செய்து மாட்டப்பட்ட படத்தைக் காட்டுகிறார்)
நீங்க நல்ல தாத்தாவா?
யா.. வெரி லவ்விங்..
மற்ற எந்த நட்சத்திரங்களும் செய்யாததை நீங்க செய்றீங்க. குர்தா போடாம, டை கூட அடிக்காம, இதே வழுக்கைத் தலையோட வெளியில வர்றீங்க. உங்க ரசிகர்கள் இதை எப்படி எடுத்துக்கிறாங்க?
ஸ்க்ரீன்ல நான் எப்படியிருக்கேன்கிறதுதான் அவங்களுக்கு முக்கியம். அதுக்குதான் அவங்க பணம் செலவு பண்ணி பாக்கறாங்க. அவங்களுக்கு தங்களோட ஹீரோ பக்கா ஹீரோவா இருக்கணும். வெளியில எப்படி இருந்தாலும் கவலைப்பட மாட்டாங்க. மக்கள் புத்திசாலிகள். அவங்களுக்கு எல்லாம் தெரியும். எதுக்குத் தேவையில்லாம நம்மை நாமே சங்கடப்படுத்திக்கணும்?
நீங்க நீங்களாவே இருக்கிறதை அவங்க பாராட்டுறாங்க இல்லையா?
அது இயல்புதானே... ஆனா சினிமாவுல இப்படியே வந்தா அவங்க விரும்ப மாட்டாங்க. நிஜத்துல ஓ.கே. சினிமாவுல அவங்களுக்கு ஹீரோதான் தேவை.
இன்னும் உங்களை ஆக்டிவ்வா வைச்சிருக்கிறதுக்கு என்ன காரணம்?
நான் யோகா, எக்ஸர்சைஸ் பண்றேன். இதுதான் என் மூலதனம். ஒரு ஆர்டிஸ்ட்டுக்கு இந்த மூலதனம் ரொம்ப முக்கியம். ஆனா மனசை ஃபிட்டா வச்சிக்க நல்ல எழுத்தாளர்கள், இயக்குநர்கள் இருக்காங்க.
"எந்திர'னில் நீங்கள் எல்லாம் செய்தீர்கள். ஒரு இளம் நாயகியுடன் காதல் காட்சிகளில் நடித்தீர்கள் என்றாலும் வயதாகிறதே என்ற மன அழுத்தத்தை உணர்கிறீர்களா?
(மனம் விட்டு சிரிக்கிறார்) சில நேரங்கள்ல சண்டைக் காட்சிகளில் நடிக்கும்போது, டான்ஸ் பண்ணும்போது வயசான ஃபீல் வரும். வயசாகிறது நிஜம்தானே...? ஆனா டெக்னீஷியன்கள், டைரக்டர்களுக்கும் தெரியும். அவங்க மேனேஜ் பண்ணிடறாங்க. காதல் காட்சிகள்ல நடிக்கும்போது எனக்கே கொஞ்சம் சங்கடமாத்தான் இருக்கு. நடிப்புதானேன்னு சொன்னாலும் கொஞ்சம் சங்கடமா இருக்கு.
"எந்திரனு'க்கு அப்புறம் என்ன?
ஒரு அனிமேஷன் படம். "ஹரா'ன்னு தலைப்பு. ஒரு பாதி அனிமேஷன், மீதி பாதி லைவ். "அவதார்' மாதிரி. ஆனா முழுசா ஒரு ரஜினிகாந்த் படம் கொடுப்பது பற்றி இன்னும் முடிவெடுக்கல.
யாஷ் சோப்ரா உங்களை "தூம் 3' படத்தில் நடிக்கக் கூப்பிட்டதா சொல்றாங்களே?
அது முழுக்க முழுக்க வதந்திதான். என்னை அவங்க அப்ரோச் பண்ணல. எனிவே... "ஹரா' முடிஞ்ச பிறகு 6 மாசமாவது எனக்கு இடைவெளி தேவை. எனக்குப் பொருத்தமான நல்ல கேரக்டர், ரோல் கிடைச்சா... நல்ல தயாரிப்பாளர், இயக்குநர்கள் அமைந்தால்... நிச்சயம் அடுத்த படம் பண்ணுவேன். இல்லேன்னா போதும்... இப்ப எனக்கு 61 வயசு ஆயிடுச்சு!''
அமிதாப் இப்பவும் நடிக்கிறாரே?
அவர்தான் எனக்கு முன்னுதாரணம்... ஆக்சுவலா திலீப்குமார்தான் எங்களுக்கெல்லாம் மையப் புள்ளி. அமித்ஜி, நான், ஷாரூக், அமீருக்கெல்லாம் திலீப்குமார்தான் இன்ஸ்பிரேஷன்!
உங்களுக்கு மும்பை காற்று மீது அலாதியான காதல் இருக்கிறது. அதை இப்போது கொஞ்சம் இழந்துவிட்டதாக உணர்கிறீர்களா?
அமிதாப் போன்றவர்களோடு நெருக்கமாகப் பழகிப் பேசும் வாய்ப்பு எத்தனைப் பேருக்குக் கிடைக்கும்? நான் ரொம்ப அதிர்ஷ்டக்காரன். நானும் அமிதாப்பும், "அந்தா கானூன்', "கிராஃப்தார்', "ஹம்னு' என்று மூன்று படங்களில் சேர்ந்து நடித்தோம். மூணுமே சூப்பர் டூப்பர் ஹிட்ஸ்! சில நேரங்கள்ல மும்பைக்கு போய் நண்பர்களைப் பார்க்கணும்னு தோணும். அங்கே சுபாஷ் கய், சன்னி தியோல், ரிஷி கபூர், ஜித்தேந்திரா என்று எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்.
ஏன் ஹிந்திப் படங்களில் நடிப்பதை விட்டுட்டீங்க?
அதை நானாகத்தான் குறைச்சிக்கிட்டேன். இங்கே ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம்தான் பண்றேன். ரெண்டு குதிரைல ஒரே நேரத்துல சவாரி பண்றது கஷ்டம். ஹிந்திப் படங்களில் வேலை பாக்குறதுக்கும், தெற்கில் பணியாற்றுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அங்கே போதுமான அளவு செஞ்சிட்டேன். ஹிந்தியில கிட்டத்தட்ட 25-27 படங்கள் பண்ணிட்டேன். அங்கே 10 வருஷம் வொர்க் பண்ணியிருக்கேன். அந்த வாழ்க்கையை அனுபவிச்சேன்.
உங்களைப் பற்றிய மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
அவங்க எதிர்பார்ப்பு அதிகம்தான். படத்துக்குப் படம், அடுத்து வித்தியாசமா என்ன செய்யலாம்கிற பொறுப்புதான் பெரிய அழுத்தம். அடுத்து என்ன பண்றது? எப்படி பெரிசா பண்றது? அந்தப் படம் வித்தியாசமாகவும் இருக்கணும். பொழுது போக்காகவும் இருக்கணும். ரொம்ப உபதேசம் பண்ற மாதிரியோ, ஆர்ட் ஃபிலிம் மாதிரியோ இருக்கக்கூடாது. அவார்ட் படம் மாதிரி இருக்கக்கூடாது. ஆனால் நல்ல தரமான பொழுதுபோக்குப் படமா இருக்கணும். அதுக்காக ரொம்ப சீப்பா இருக்கக் கூடாது. அந்த வகையில் "எந்திரன்' நல்ல பொழுதுபோக்கு படம். வித்தியாசமான பரிமாணம்.
"எந்திரன்' படத்தில் முதலில் ஷாருக்கான் நடிக்கவிருந்தார். அது கைவிடப்பட்டு நீங்கள் நடித்தீர்கள். இதை எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?
இந்தக் கதை முதலில் கமலுக்குப் போனது. ப்ரீத்தி ஜிந்தாவை ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்து பூஜை கூடப் போட்டார்கள். ஆனால் கால்ஷீட் பிரச்சினை என்று நினைக்கிறேன். படம் ட்ராப் ஆகிவிட்டது. அப்புறம் ஷாரூக்கிடம் போனது. அங்கே பட்ஜெட் பிரச்சினையாகிவிட்டது. அதனால் அவர் நடிக்கவில்லை. பிறகுதான் நான் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
நீங்கள் நடித்த "சிவாஜி' படமும் நன்றாக ஓடியதே?
ஆமாம். முதல் முறையா 75 முதல் 80 கோடி வரை ஒரு மாநில மொழிப் படத்துக்கு செலவழித்து, அதில் 110 முதல் 120 கோடி வரை லாபம் பார்த்தாங்க. அது ரொம்ப உற்சாகம் தந்தது. என்னுடைய மார்க்கெட்டையும் விரிவுபடுத்துச்சி.
"எந்திரன்' படம் கமல், ஷாரூக்கானிடம் போய்விட்டு வந்ததே என்ற ஈகோ உங்களுக்கு இல்லையா?
"ஈஹஹய்ங் க்ஹஹய்ங் டங் ப்ண்ந்ட்ஹ ட்ர்ற்ஹ ட்ஹண் ஓட்ஹஹய்ங் ஜ்ஹப்ங் ந்ஹ ய்ஹஹம்!' (ஒவ்வொரு தானியத்திலும் அதை உண்ணப் போகிறவரின் பெயர் எழுதப்பட்டிருக்கும்). ஷங்கரை எனக்குத் தெரியும். அவரின் திறமைகள் பற்றித் தெரியும். அதனால்தான் ஒப்புக் கொண்டேன். வேறு யாராவது வந்து ரூ.200 கோடியில படம் எடுக்கறதா சொல்லியிருந்தால் நான் தொட்டிருக்கக் கூட மாட்டேன். ஷங்கர் சரியா செய்வாரு. நல்ல படம் தருவார்னு எனக்குத் தெரியும். ஹாலிவுட்டில் இருந்து வந்து கேட்டிருந்தா கூட நான் ஒத்துக்கிட்டிருக்க மாட்டேன். "சிவாஜி'யில சேர்ந்து வேலை செஞ்சதுக்கப்புறம் ஷங்கர் ஃபென்டாஸ்டிக் டைரக்டர்னு தெரிஞ்சிக்கிட்டேன்!''
நீங்கள் நடித்த "குசேலன்' படம் சரியாக ஓடவில்லையே?
அது ஒரு நாலஞ்சு நாள் வேல. கெஸ்ட் ரோலில்தான் நடித்தேன்.
ஒரு படம் சரியாக ஓடவில்லை என்றால் ரொம்பவும் வருத்தப்படுவீர்களா?
நிச்சயமாக. ரொம்பவும் கஷ்டமாக உணர்வேன். பல பேருடைய பணம், நம்பிக்கை. அது தோற்றால் என்னை ரொம்பவே பாதிக்கும். அதுல எனக்கும் பொறுப்பிருப்பதா உணர்வேன். மக்கள், ரசிகர்கள் எல்லோரும் இந்த ரஜினி மீது வைக்கும் நம்பிக்கை தோற்கும்போது ரொம்பவே பாதிக்கும்.
|
அதான் அவர் தா(த்)தா ஆயிட்டாரே.
ReplyDelete