பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று இன்றைய பதின் வயதினரை ஒழுங்காகத் தூங்குங்கள் என எச்சரிக்கிறது
தூங்காதே தம்பி தூங்காதே என பாடியதெல்லாம் பழைய கதை. இப்போது இளைஞர்களையும், பதின் வயதினரையும் பார்த்து தூங்குங்கள், தூங்குங்கள் என துரத்தும் காலம். அவர்களைத் தூங்காமல் இருக்க வைப்பதற்காக ஊடகங்கள் பயனற்ற அரைகுறைக் கலாச்சார நிகழ்ச்சிகளை நிதமும் அரங்கேற்றிக் கொண்டே இருக்கின்றன.
நள்ளிரவுக்கு மேலும் விழித்திருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும், கணினியில் விளையாடுவதும், செல்போனில் அளவளாவுவதும் என இன்றைய இளசுகளுக்கு தூக்கத்தைத் தவிர்க்கும் வழிகள் ஏராளமாய் இருக்கின்றன.
இவையெல்லாம் உடல்நலத்துக்கு பெரிதும் தீங்கானது, போய் தூங்குங்கள் என பெரியவர்கள் சொன்னாலும் இந்த பதின் வயதினர் அவற்றைக் காதுகொடுத்துக் கேட்பதில்லை. அப்படிப் பட்டவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாய் வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.
பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த இந்த ஆய்வின் முடிவு ஒழுங்கான தூக்கம் இல்லாத பதின் வயதினருக்கு உயர் குருதி அழுத்த நோய் வரும் என அதிர்ச்சிச் செய்தியை அறிவித்திருக்கிறது.
ஒழுங்கான தூக்கம் இல்லாதவர்கள் அதிக எடையுடையவர்களாய் மாறும் அபாயம் இருப்பதாக முன்பு ஒரு ஆராய்ச்சி முடிவு வெளியிட்டிருந்தது. இப்போது அதைவிட அச்சுறுத்தல் தரும் இந்த ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது.
உயர் குருதி அழுத்தம் என்பது இதய நோய் உட்பட பல்வேறு பெரிய நோய்கள் வருவதற்கான காரணமாகி விடக் கூடும் என்பதால் இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகில் முக்கியத்துவம் பெறுகிறது.
முழுக்க முழுக்க பதின் வயதினரின் உடல் நலம் தொடர்பாய் நிகழ்த்தப்பட்ட இந்த சோதனையில் கலந்து கொண்ட அனைவரும் 13 க்கும் 19க்கும் இடைப்பட்ட வயதினர் என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களில் சுமார் நாற்பது விழுக்காடு பேர் குறைந்த தூக்கம், அல்லது நிம்மதியற்ற தூக்கத்தையே கொண்டிருப்பதாக தெரிய வந்திருப்பது கவலைக்குரியதாகும்.
பல்கலைக்கழக தூக்கம் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவு இயக்குனர் சூசன் ரெட்லைன் இது பற்றிக் குறிப்பிடுகையில், இதுவே முழுக்க முழுக்க பதின் வயதினரை வைத்து நிகழ்த்தப்படும் தூக்கம் தொடர்பான முதல் ஆராய்ச்சி என தெரிவித்தார். இதன் முடிவு தூக்கம் தொடர்பான மற்ற ஆராய்ச்சி முடிவுகளை விட அச்சுறுத்தக் கூடியது என அவர் கவலை தெரிவித்தார்.
தற்போதைய வாழ்க்கை முறை பதின் வயதினரை பல்வேறு விதமான கேளிக்கைகளுக்குள் இழுத்துச் சென்று அவர்களுடைய நேரத்தையும், உடலையும் வீணடிக்கிறது. கிடைக்கும் ஓய்வு நேரத்தில் உடலுழைப்பு தேவைப்படும் விளையாட்டுகளில் ஈடுபடுவது இரவில் நல்ல தூக்கத்துக்கு உத்தரவாதம் தரும். அதை விடுத்து வெறுமனே தொலைக்காட்சி எனும் தூக்குக் கயிற்றில் தொங்கினால் வாழ்க்கை நலமிழக்கும், அர்த்தமிழக்கும்.
|
No comments:
Post a Comment