Sunday, January 9, 2011

ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும்

"எக்ஸிமாவைக் குணப்படுத்தினால் ஆஸ்மா வருமாம். என்றபடியால் கடும் மருந்து தாராதையுங்கோ.' என்றாள் எக்ஸிமாவுடன் அல்லாடும் அந்தப் பெண்மணி.
அவள் மட்டுமல்ல பெரும்பாலான மக்கள் அவ்வாறுதான் நம்புகிறார்கள்.
அது உண்மைதானா?
இல்லை. தவறான கருத்தென்றே நான் கருதுகிறேன்.
ஆனால் பெரும்பாலானவர்கள் ஏன் அவ்வாறு கருதுகிறார்கள்? காரணம் உண்டு.
ஆஸ்மா, எக்ஸிமா, தும்மல், மூக்கால் ஓடுதல், கண்கடி, காதுக்கடி போன்ற பல நோய்களுக்கான அடிப்படைக் காரணம் ஒவ்வாமைதான். அதாவது அலர்ஜி (Alle rgy).
எனவே மேலே கூறிய அறிகுறிகள் யாவும் ஒருவருக்கே ஒருங்கே வரக்கூடும்.
அல்லது ஒன்று மட்டும் தொடர்ந்து தொல்லை கொடுக்கக் கூடும்.
அல்லது மாறி மாறி வரவும் கூடும்.
உதாரணமாக ஒருவருக்கு ஆஸ்மா தொல்லை தொடர்ந்து இருக்கக் கூடும். அல்லது ஆஸ்மாவும் எக்ஸிமாவும் சேர்ந்து வரக் கூடும். அல்லது ஒன்று மாற மற்றது வரவும் கூடும். எனவே ஒன்றைக் குணப்படுத்தினால்தான் மற்றது வரும் என்பது தவறான கருத்தாகும்.
அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட் களை ஒவ்வாமைப் பொருட்கள் (Allergans) என்பார்கள்.
அது உடலில் எங்கு தொடர்புறுகிறதோ அவ்விடத்தில் அழற்சியை ஏற்படுத்தும் அங்கு நோய் வரும். எந்தப் பொருளுக்கு உடலின் எந்தப் பாகத்தில் ஒவ்வாமை ஏற்படுகிறது என்பதைப் பொறுத்ததே நோய்.
உதாரணமாக ஒருவருக்கு பூக்களின் மகரந்தத்திற்கு ஒவ்வாமை எனில் அவர் சுவாசிக்கும் போது நாசிவழியாக உட்செல்லும் போது நாசி அரிப்பு, தும்மல், மூக்கடைப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.
அதே நேரம் சுவாசத் தொகுதியின் உட்பகுதியை அடையும்போது இருமல், இழுப்பு, நெஞ்சடைப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இதேபோல தூசிப்பபூச்சி, கரப்பொத்தான் எச்சம், நாய், பூனை போன்ற வளர்ப்பு மிருகங்களின் முடி ஆகியவையும் ஏற்படுத்தலாம். இவை சுவாசத் தொகுதியில் ஏற்படும் ஒவ்வாமையாகும்.
இறப்பர் செருப்பு, ஒட்டுப் பொட்டு போன்றவை ஒவ்வாமை காரணமாக சருமத்தில் அழற்சியை ஏற்படுத்தும். இது எக்ஸிமாவாக வெளிப்படும். முடி நிறமூட்டிகள் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.
சிலவேளைகளில் அது மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தலாம். அதாவது ஒரே பொருள் வெவ்வேறு விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.
அவ்வாறெனில் அலர்ஜிக்கான மருந்து எடுப்பதன் மூலம் ஆஸ்மாவைக் கட்டுப்படுத்த முடியுமா?


அலர்ஜிக்கான சில சிகிச்சைகள் ஆஸ்மாவைக் கட்டுப்படுத்தக் கூடும். எந்தப் பொருளுக்கு ஒவ்வாமை என அறிந்து அதற்கு உடலை பழக்கப்படுத்தும் ஊசி மருந்துகள் (immunotherapy)அத்தகையன. ஆயினும் மிகவும் பயனுள்ள சிகிச்சை எனச் சொல்ல முடியாது.
ஆயினும் ஒருவர் தனக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் பொருளைக் கண்டறிய முடிந்தால், அதனை தவிர்ப்பதன் மூலம் ஆஸ்மாவைத் தடுக்க முடியும்.
ஆஸ்மா, எக்ஸிமா, அலர்ஜி ஆகியவை ஒன் றோடொன்று தொடர்புடைய நோய்கள் எனில் ஒரே மருந்து இவை யாவற்றிற்கும் பயன்படுமா? சில மருந்துகள் அவ்வாறு பயன்படும்.
உதாரணமாக கோர்ட்டிகோ ஸ்ட்ரொயிட் (corticosteroids) வகை மருந்துகளைக் குறிப்பிடலாம்.
ஆயினும் அவை ஒரே விதமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. தும்மல், மூக்கால் ஓடுதல், மூக்கடைப்பு ஆகியவற்றிற்கு அவை Nasal spray ஆகப் பயன்படுத்தப்படும்.
ஆஸ்மாவிற்கு இன்ஹேலர் (Inhaler) ஆகவும்,
எக்ஸிமாவிற்கு ஓயின்மென்ட் (Ointment) ஆகப் பயன்படுத்தப்படும்.
மோன்டிலியுகாஸ்ட் (Montelukast) போன்ற மருந்துகள் ஆஸ்மா அலர்ஜி ஆகிய இரண்டிற்கும் பயன்படும். இருந்தபோதும் வென்டோலின், பிரிக்கானில் போன்ற சுவாசக் குழாய்களை விரிவிக்கும் மருந்துகள் (Bronchodilator)ஆஸ்மாவிற்கு மட்டுமே பயன்படும்.
யாருக்கு ஆஸ்மா வருவதற்கான வாய்ப்பு அதிகம்? பரம்பரையில் அலர்ஜி நோயுள்ளவர்களுக்கு அதிகமாகும். அதே போல தும்மல், மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள்கள் அதிகமாக உள்ளவர்களுக்கும் அதிகமாகும்.
ஆயினும் பெரும்பாலான ஆஸ்மாவுக்கு காரணம் அலர்ஜி ஆயினும், எல்லா ஆஸ்மாவும் ஒவ்வாமையால் ஏற்படுவதல்ல.
உடற்பயிற்சியின் போது தோன்றும் ஆஸ்மா(exercise - induced asthma),
தடிமன், காய்ச்சல் போன்ற தொற்று நோய்களின் போது தோன்றும் ஆஸ்மா,
இரப்பையில் உள்ள அசிட் மேலெழுந்து வருவதால் (GERD) ஏற்படுவது,
தானாகவே ஏற்படும் (intrinsic)வகைகளும் உண்டென்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

No comments:

Post a Comment