Saturday, January 8, 2011

இந்தியாவில் தொலைந்த நீதி தேவதை ஆஸ்திரேலியாவில்…!

இந்தியாவில் எல்லாமே ஒழுங்காகத்தான் போய்க்கொண்டு இருந்தது. 1992 டிசம்பர்-6 வரை..! அன்றுதான்… எங்கிருந்துதான் வந்தார்களோ தெரியவில்லை… ஆயிரக்கணக்கில் ‘கரசேவகர்கள்’ என்றபெயரில் ஷைத்தான்கள்..! ஒரே நாளில் இடித்துத்தள்ளினார்கள். தரையோடு தரையாக… மண்ணோடு மண்ணாக… எதை…? ஒட்டுமொத்த இந்தியாவின் அமைதியை..!

அதன்பிறகு நாடெங்கும் எதிர்ப்பு கோஷம், கண்டன ஆர்ப்பாட்டம், அமைதி ஊர்வலம் என அடுத்தடுத்த மாதங்களில் ஜனநாயக ரீதியில் மக்கள் கொந்தளிக்க… பம்பாயிலும் அதேபோல் நடந்து கொண்டிருந்தது. பொறுக்கவில்லை சங்பரிவார சிவசேனை ஷைத்தான்களுக்கு..! அடுத்த மாதம், ஜனவரியில்… சுமார் 500 பேர் பம்பாயில் கொல்லப்பட்டார்கள். ஜனவரி… பிப்ரவரி.. மார்ச்… என கொலைகாரர்கள்-பால் தாக்கரேக்கள்- கட்சிக்கொடிகளுடன் பந்தாவாக வீதிகளில் பவனிவர… கண்டும் காணாமல் சட்டம் தூங்க (இன்றுகூட ஜஸ்டிஸ் ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் அறிக்கை 1998-ல் வந்த பிறகும் கூட விழிக்கவில்லை என்றால் அப்போது எப்படி அசந்து தூங்கி இருந்திருக்கும்…?) பலிகொடுத்தவர்களுக்கு பழிவாங்கும் எண்ணம் தலைதூக்க, அந்த சமயம் பார்த்து இதற்காகவே பல ஆண்டுகள் காத்திருந்த பாகிஸ்தானியருக்கும், பம்பாய் நிழலுலக கள்ளக்கடத்தல் தாதாக்களுக்கும் தங்கள் நீண்ட நாள் எண்ணங்களை ஈடேற்ற கிடைத்த அரிய பொக்கிஷமான சந்தர்ப்பமாயிற்று. (பின்னே…! கலவரத்தில் மக்களை கொன்ற ஷைத்தான்கள் எல்லாரும் பங்குச்சந்தை வர்த்தக கட்டிடத்திலா பணிபுரிந்தார்கள்?)

இவர்களுக்கு… கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களும், தாதாக்களின் எலும்புத்துண்டுகளுக்கு வாலாட்டும் சில நடிகர்கள், சில சுங்க அதிகாரிகள், சில காவல்துறையினர்களும் உதவி செய்ய, 1993ம் ஆண்டு மார்ச் 12-ல், பம்பாயில் அடுத்தடுத்து பதினைந்து குண்டுகள் வெடித்தன. பின்னர் நூற்றுக்கணக்கானோர் (…இப்படித்தான் அனைத்து தேடுபோறிகளும் சொல்கின்றன… கணக்கெல்லாம் கிடையாதாம்…) தடாவில் கைது செய்யப்பட்டனர். (தடா: – விசாரனைக்கைதியாக எத்தனை வருஷமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஜாமீனும் கிடையாது.)


14 வருஷங்கள் நிதா……..னமாய் விசாரித்துவிட்டு, மே 27, 2007-ல், மொத்தம் 100 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள். மற்றவர்களில் நடிகர் சஞ்சய் தத்தும் ஒருவர். (இவர் தான் பொடா சட்டம் வர காரணமானவர். ஏனெனில், தடாவில் உள்ள அத்தனை ஓட்டைகளிலும் நன்றாக படம் காட்டினார்… பொடா வந்தது. ஆனால், பொடா சட்டம் தூக்கப்பட காரணம் ஜெயலலிதா என்று தெரியுமா? – பாராளுமன்ற உறுப்பினர் வைகோவை உள்ளே வைத்து பொடா என்றால் என்ன என்று கொண்டுவந்தவர்களுக்கே புரியவைத்து பின்னர் அதை தூக்கவும் வைத்தார்..!)
பம்பாய் குண்டுவெடிப்பு வழக்கில் இரண்டு மாதம் பிட்டு பிட்டாய் வந்த தீர்ப்பில் கடைசியில் ஜூலை 31, 2007 அன்று சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் உட்பட (இதிலும் கூட இன்று வரை படம் தான் காட்டுகிறார்), மும்பை தொடர் குண்டுவெடிப்பில் 12 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டது. சுங்க அதிகாரிகள், காவல் துறையினர் என மற்றவர்களுக்கு குறைந்தது 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில், 24 பேர்கள் ஜூலை 31, 2007 அன்று -அதாவது, 14-வருடங்கள் கழித்து, குற்ற மற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டனர். சரி… மீதம் உள்ள "நூற்றுக்கணக்கானோர்"(!?) அதற்கு கொஞ்சம் ஆண்டுகள் முன் சிறுக சிறுக விடுவிக்கப்பட்டு இருப்பார்கள் என்று(!?) நம்புகிறேன்… இதெல்லாம் செய்தி அல்ல. கைதாவது மட்டும்தான் செய்தி.

கோவையில் ஒரு காவலர் படுகொலையை தொடர்ந்து மூன்று பேர்(முஸ்லிம்கள்) சரணடைந்து விட்ட பின்னும், 1997 – நவம்பர் 30, டிசம்பர் 1-ல், அதனை ஒரு மதக்கலவரமாக்கி ஷைத்தான்களும் காவல்துறையினரும் கைகோர்த்து திட்டமிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டு பலர் காயமுற்று, முஸ்லிம்களின் வணிக நிலையங்கள் மட்டும் சூறையாடப்பட்டு பின்னர் அவை தீயிட்டு கொளுத்தப்பட்டு… என எல்லாம் சாட்சிகளுடன் நடந்து முடிந்த பின்னரும் நடவடிக்கை எடுக்காமல் சட்டம் தூங்க…(இன்றுவரை கூட ஜஸ்டிஸ் கோகுலகிருஷ்ணா கமிஷன் அறிக்கை 2000-ல் வந்த பிறகும்கூட விழிக்கவில்லை என்றால் அப்போது எப்படி அசந்து தூங்கி இருந்திருக்கும்…?)

அதனை தொடர்ந்த, 1998 பிப்ரவரி 14-ம் தேதி கோவையில் 17 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.​ இதில்,​​ 58 பேர் இறந்தனர்.​ 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக,​​ பாஷா,​​ மதானி உள்ளிட்ட 167 பேர் தடாவில் கைது செய்யப்பட்டு சாவகாசமாய் கடந்த 2001ம் ஆண்டுதான் குற்றப்பத்திரிக்கை நகல்கள் அனைவரிடமும் வழங்கப்பட்டது. அதன்பிறகு இவ்வழக்கை விசா…………ரித்த கோவை சிறப்பு நீதிமன்றம் 2007-ல்.. அதாவது 10-ஆண்டுகள் கழித்து பாஷா உள்ளிட்ட 44 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்தது.​ 64 பேருக்கு 3 ஆண்டுகள் முதல் 13 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.​ மதானி உள்பட மீதி 59 பேர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டனர்–10 வருடங்கள் கழித்து..! இதெல்லாம் செய்தி அல்ல. கைதாவது மட்டும்தான் செய்தி.

இதுவரை இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட அனைத்து குண்டு வெடிப்பு வழக்குகளிலும், இரண்டே இரண்டுக்கு மட்டும்
குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவித்து தீர்ப்பு வந்திருக்கின்றன. மற்ற குண்டுவெடிப்புகளில் எல்லாம் முஸ்லிம்கள் நிரபராதிகள் என தொடர்ந்து விடுதலை செய்ய்பட்டுக்கொண்டே வருகின்றனர்.
அவ்விரண்டு மட்டுமல்லாது பின்னர் நடந்த அனைத்துமே //பாபர் மசூதி இடிப்பின் எதிரொலியாக..//–என்று மீண்டும் மீண்டும் ஊடகங்கள் உண்மைகளை திரித்துகொண்டே உள்ளன. எப்படி? இடித்தவர்களே… சரியாக இடிக்கவில்லை என்று அவர்கள் பங்குக்கு ஒருதடவை குண்டு வைக்கிறார்களாமா?
பாபர் மசூதி இடிப்புக்கும் மேற்படி இரண்டு குண்டு வெடிப்புகளுக்கும் துளியும் சம்பந்தமில்லை. அவரவர் சொந்தக்காரர்களை இழந்தவர்களே மேற்படி பயங்கரவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அதேநேரம், பழிவாங்குதல் என்ற பெயரில், ஏதுமறியா அப்பாவி மக்களை கொல்லுதல் இஸ்லாத்திற்கு எதிரானது. மொத்த மனித சமுதாயத்தையே கொலை புரிதலுக்கு சமமான மகா பெரிய பாவம். இச்செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதற்கு தக்க தண்டனை அளித்த நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்கிறேன். இத்தீர்ப்பு குற்றம் செய்ய நினைக்கும் தடம்புரண்ட மனங்களுக்கு தக்க படிப்பினை. பயங்கரவாதத்துக்கு என்றென்றும் நான் எதிரி என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன்.

அதேநேரம்… ஒரு சமுதாயத்திடம் மட்டும் நீதி நிலைநிறுத்தப்படுவதையும் வேறோர் சமுதாயத்தின் குற்றங்களை கண்டு கொள்ளாமல் இருப்பதையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன். (எத்தனையோ விசாரணை கமிஷன் அறிக்கைகள் கிடப்பில் கிடப்பதும், ஆதாரத்துடன் மாட்டிய காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இன்னும் தண்டிக்கபடாதிருப்பதும் என்னை இப்படி கண்டனம் தெரிவிக்க வைக்கின்றன)

Blind_Justice.svg.med.png

1993-ம் ஆண்டு சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் (இத்தாக்குதலில் 11 பேர் பலியாயினர்) அப்போதே கைது செய்யப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை, அவர்களுக்கு தவறான முறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி, கடந்தமாதம் (2010-டிசம்பரில்… அதாவது பதினேழு வருடங்கள் கழித்து…!) உச்ச நீதிமன்றம் இவர்களை நிரபராதிகள் என விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. இதெல்லாம் செய்தி அல்ல. கைதாவது மட்டும்தான் செய்தி.

1997-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தன்று திருச்சியில் பாண்டியன் எக்ஸ்பிரஸ், ஈரோட்டில் சேரன் எக்ஸ்பிரஸ், கேரள மாநிலம் திருச்சூரில் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 72பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக குணங்குடி ஹனீஃபா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் 13 வருடமாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள்
மீது பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குணங்குடி ஹனீஃபா உள்ளிட்ட 8 பேரையும் நிரபராதி என விடுதலை செய்வதாக ….அதாவது 13 வருடங்கள் கழித்து…. நீதிபதி தீர்ப்பளித்தார்.
hanifa.gif
இதெல்லாம் செய்தி அல்ல. கைதாவது மட்டும்தான் செய்தி.
இதன் பின்னர், அதாவது 1998 முதல் பல குண்டு வெடிப்புகள் இந்தியாவெங்கும் நடந்தன. முக்கியமான விஷயம் இவ்வாண்டில் இருந்துதான் பாஜக நாட்டை ஆளத்துவங்கி இருந்தது. அதன் தொடர்ச்சியாக பல மாநிலங்களிலும் ஆட்சியைப்பிடித்தது. பொதுவாக பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பெரும்பாலும் குண்டுகள் வெடிக்கும். ஒவ்வொரு குண்டுவெடிப்புக்கும் பிறகு, உடனே….. ஒரு மொக்கை பதிவுக்குக்கூட ‘ஹைய்யா… முதல் வடை(!?) எனக்கு’ என்று பதிவு பொட்ட அடுத்த நிமிஷமே வரும் படுமொக்கை பின்னூட்டம் போல….. ஒரு ஈ-மெயில் எப்போதும் பறந்து வந்துவிடும். ஏதாவது ஒரு முஸ்லிம் அமைப்பு… ‘ஏதோ அனாதைகளுக்கு ஆதரவு அளிப்பது போல பெருமையுடன்’ பொறுப்பேற்கும்.(!?)
பொறுப்பேற்றவர்களின் பெயர்களை வைத்தே… தாடி, தொப்பி எல்லாம் போட்டு அடுத்த நாள் கணிணி உதவியால் சில உருவகங்கள், "குற்றவாளிகள் புகைப்படம்" என்று கொட்டை எழுத்தில் தலைப்பு செய்தியாய் அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக பலநாள் காட்டப்படும். சாலைகளில் நடக்கும் அனைத்து முஸ்லிம்களையும் ‘இவர்கள் குற்றவாளிகளா’ என்று உற்று உற்று பார்ப்பவர்களை கண்டு கோபம் கொள்வதா… இப்படிப்பட்ட நாட்டில் வசிப்பதை நினைத்து உள்ளுக்குள் புழுங்கி அழுவதா… வேதனை..! ( இதை விட பெரிய கொடுமை... என்னவெனில்…" 100 கிலோ வெடிகுண்டுடன் நடமாடும் தீவிரவாதி ஆயிஷா "…! முஸ்லிம் பெண்களின் நிலைமையை நினைத்தால் இன்றும் மனம் கொதிக்கும். போகிற வருகிற முஸ்லிம் பெண்களை எல்லாம் "எங்கே.. உங்கள் முகத்தை காட்டுங்கள்" என்பார்கள் காவலர்கள். அவர்கள் கையில் வைத்திருக்கும் ஆயிஷாவின் புகைப்படத்திலோ கண்கள் மட்டுமே இருக்கும்..!?! என்ன புத்தியோ… என்ன மூளையோ…! இது ஒரு பக்கா டார்ச்சர்தானே? பல வருஷம் கழித்து கடைசியில் கமிஷ்னரே ஒரு பேட்டியில், ‘ஆயிஷா மேட்டர் சும்மா ஜோடிச்சது’ என்ற போதுதான்… தமிழக காவல்துறை மீது எனக்கிருந்த துளி நம்பிக்கையும் மரியாதையும் காணாமல் போனது..!)
சரி.. நாம் தொடர்வோம்… அடுத்த வாரம் பரபரப்பாக சிலர் முஸ்லிம்கள் தொப்பி தாடி சகிதம் பொடாவில் கைது செய்யப்படுவார்கள். இவர்களை தொடர்ந்து… ‘தீவிரவாதிக்கு உதவினார்கள்’ என்று மேலும் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். எல்லாமே அடுத்த குண்டுவெடிப்பு நிகழும் வரைதான். பிறகு முன்னதை மறந்து இதை பற்றி பேச ஆரம்பிப்பார்கள். அந்த குண்டு வெடித்த பின் உடனே ஒரு ஈ-மெயில்…. அதே… அதே…ரிபீட்.
இப்படித்தான்… தென்காசி, சென்னை, கான்பூர், அஜ்மீர், மோடாசா, மாலேகான்-1, மாலேகான்-2, ஹைதராபாத், அஹ்மதாபாத், ஜெய்ப்பூர், நான்டேட், பானிபட்-சம்ஜோதா ரயில், தானே, கோவா, பெங்களூர், வாரனாசி என்று வரிசையாய் … அதே… ரிபீட்… ரிபீட்… ரிபீட்…
தகுந்த ஆதாரங்கள் இன்றி, சாட்சிகள் இன்றி சந்தேகத்தின் பேரில் கைதுசெய்வதையேகூட இஸ்லாம் எதிர்க்கிறது. இப்படி கைது செய்து பல்லாண்டுகள் சிறையில் அடைப்பது மனித உரிமைக்கு எதிரானது. மற்ற நாடுகளில் இது ஒரு பெரிய குற்றமாகக்கூட பார்க்கப்படுவது உண்டு. ஆனால், நம் நாட்டில் அதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல…!

மேற்கண்ட அனைத்து குண்டு வெடிப்புகளிலும் — சென்ற வருட செப்டம்பர் மாத வாரனாசி குண்டுவெடிப்பு தவிர — மேற்சொன்ன அதே ரிப்பீட் தான். வாரணாசியில் மட்டும் அப்படி என்ன மாற்றம்? சந்தேகம் ‘ஹிந்துத்துவா தீவிரவாதிகள்’ மீதாம்..! இந்திய வரலாற்றில் காவல்துறை இப்படி அறிவித்தது இதுதான் முதன்முறை. காரணம்:- கர்மவீரர் – அஞ்சாநெஞ்சர் – துப்பறியும் சிங்கம் – நேர்மைமிகு மறைந்த ATS தலைவர் ஹேமந்த் கார்கரே – அவர்களை இந்தியாவிற்கு அளித்த இறைவனுக்கே எல்லா புகழும்..!
hemant+karkare.jpg


கார்கரேவின் மாலேகான் குண்டு வெடிப்பு விசாரணையின் முடிவில் ஆதாரங்களுடனான அவரின் அதிரடி கைது நடவடிக்கைகள் மொத்த இந்தியாவிலும் பூகம்பத்தை கிளப்பியது. அதுவரை ‘இஸ்லாமிய தீவிரவாதிகள்’ என்று திரும்ப திரும்ப வாய் வலிக்கும் அளவுக்கு சொன்னவர்கள்… இப்போது ‘தீவிரவாதத்துடன் மதம் இணைக்கப்படக்கூடாது’ என்று திரும்ப திரும்ப வாய் வலிக்கும் அளவுக்கு சொல்ல ஆரம்பித்தனர்.
குண்டுகள் பாகிஸ்தானிலிருந்து வரவில்லை என்பது அதிர்ச்சி. ‘வெடிகுண்டு சப்ளையர்கள்’ மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் இந்திய ராணுவ உயரதிகாரிகள் என்பது பெரிய அதிர்ச்சி. அவற்றை பொது இடங்களில் வெடிக்க வைத்து அப்பாவி மக்களை கொன்றவர்கள் தீவிர சங்பரிவார ஹிந்துத்துவா துறவிகள் என்பது அதிர்ச்சியோ அதிர்ச்சி. மொத்த இந்தியாவையும் அது உலுக்கி எடுத்து புரட்டிப்போட்டது. இது, அதுவரை நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளையும் மீள் விசாரணை நடத்த வைத்தது. மீள் விசாரணை நடந்த அனைத்தும் காவி ஷைத்தான்களிடம் தான் போய் நிற்கிறது. வகை தொகையாக மாட்டி, இவர்கள் கைது செய்யப்படும் படலம் அடிக்கடி நடந்தேறி வருகிறது.
இப்போது அனைவருக்கும் ஒரு முக்கிய கேள்வி உதித்திருக்க வேண்டும். கேள்வி வர வேண்டும் என்பதால்தான் இப்பதிவில் ஆங்காங்கே அவ்வரிகளை மட்டும் இப்படி சிகப்பு வண்ணமிட்டு தனியாக அடையாளப்படுத்தி உள்ளேன்.
"பற்பல குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் கைது நடவடிக்கைக்கு பின்னர், இதுவரை… அதே குண்டுவெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு பிணையில் கூட வர முடியாமல் தடாவிலும் பொடாவிலும் பல வருடங்களாய் உள்ளே கிடக்கும் முஸ்லிம்கள் நிரபராதிகள்தானே..? புதிய ஹிந்துத்துவா கைதிகள் வந்தபின் பழைய முஸ்லிம் கைதிகள் வெளியே வந்துதான் இருக்க வேண்டும். முக்கியமற்ற செய்திகள் என்பதால்… அச்செய்திகளை தினசரிகளில் தேடினால் கிடைக்குமா என்று தெரியவில்லை. தமிழகம் சம்பந்தப்பட்ட செய்திகள் மட்டும் எனக்குத்தெரிந்ததை நான் முன்னரே சொல்லிவிட்டேன். அதனால்தான் மேலே சொன்னேன்… ‘இதெல்லாம் செய்தி அல்ல. கைதாவது மட்டும்தான் செய்தி’ என்று..!

இப்படி…. மேற்படி குண்டுவெடிப்பு வழக்குகளில் தலைப்புச்செய்தியாய் கைது செய்யப்பட்டு பலவருஷம்… விசாரனைக்கதிகளாய் சிறையில் வைக்கப்பட்டு… பின்னாளில் ரகசியமாய்… ‘குற்றமற்றவர்’ என நீதி தேவதையால் விடுவிக்கப்பட்ட எந்த ஒரு முஸ்லிமும் இழப்பீடு கோரியதாகவோ, எந்த நஷ்டஈடும் இதுவரை தரப்பட்டதாகவோ செய்தி இல்லையே… ஏன்?
நாம் இப்போது ஆஸ்திரேலியாவில் நடந்த இதே போன்ற பிரச்சினை ஒன்றை பார்ப்போம்.
2007, ஜூன் 30: இங்கிலாந்தின், கிளாஸ்கோ விமான நிலையத்தின் முன் கஃபில் என்பவர் எரிவாயு சிலிண்டர் நிரப்பிய வாகனத்துடன் தன்மீதும் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு மோதியதால் வாகனம் தீப்பிடித்தது. 92% உடல் பாகங்கள் எரிந்த நிலையில் கஃபில் உயிருக்கு போராடியதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், இவர் ஆஸ்திரேலியாவில் வேலை பார்க்கும் மருத்துவர் முஹம்மது ஹனீபின் உறவினர். அதுமட்டுமா? ஹனீப் முன்பொருமுறை 2006-ல் லண்டன் சென்றிருந்த போது, தான் லண்டனில் வாங்கி உபயோகித்த புது சிம் கார்டை அதன் அடுத்த இரண்டாண்டு வேலிடிட்டி மற்றும் மிச்சம் இருந்த சில பவுண்டுகளினால் தூக்கி வீச மனசில்லாமல், உறவினர் கஃபிலிடம் கொடுத்துவிட்டு ஆஸ்திரேலியா போய்விட்டார். அந்த சிம்மைத்தான் விபத்தின் போது கபில் உபயோகித்திருந்தார். (ஊருக்கு விடுமுறைக்கு சென்றால்… அது முடிந்தவுடன் ஏர்டெல், ஏர்செல், ஐடியா, டோகொமோ, பிஎஸ்என்எல் போன்ற எந்த சிம்முகளையும் யாருக்கும் தராமல் உங்களுடனேயே எடுத்து வந்து விடுங்கள்… ஜாக்கிரதை..!)
இது போதாதா? அவ்வளவுதான், இங்கிலாந்தில் நடந்த குண்டுவெடிப்பில், சந்தேகத்தின் பேரில், ஆஸ்திரேலியாவில் இருந்து பெங்களூருக்கு தன் பிறந்து ஆறு நாள் ஆன குழந்தையை காண ஏழு நாள் லீவில் புறப்படுவதற்காக விமான நிலையம் வந்தடைந்த டாக்டர் முஹம்மது ஹனீபை ஜூலை-2, அன்று கைது செய்து, ஆஸ்திரேலிய அரசு தன் விசாரணை வளையத்தில் வைத்தது. உடனே நம் ஊடகங்களுக்கு சொல்லவா வேண்டும்..? "இந்திய முஸ்லிம்களுக்கு உலகளாவிய அளவில் பயங்கரவாத நெட்வொர்க் உள்ளது(?!)" என்று கூசாமல் பொய் புளுகின.
mohamed-haneef.jpg
அச்சமயம், ஹனீப் பதினான்கு நாட்கள் (ஜூலை-2 முதல் ஜூலை-16வரை) ஆஸ்திரேலியாவில் சிறை வாசம் அனுபவிக்க வேண்டியதாயிற்று. பின்னர் அவர் 10,000 டாலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர், 27 ஜூலை அன்று அவர் மீது போட்ட அத்தனை வழக்குகளையும் நீதிமன்றத்தில் திரும்பப்பெற்றுக்கொண்டு விட்டது ஆஸ்திரேலியா. உடனே இதற்காக இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார் ஹனீப். பின்னர் இந்தியா வந்து தங்கி துபாயில் பின்னர் வேலைக்கு சேர்ந்தார்.

சென்ற ஆண்டு டிசம்பரில் இழப்பீட்டு வழக்கு தீர்ப்பும் வந்தது. படித்திருப்பீர்கள்… /// ஆஸ்திரலிய அரசால் குற்றம் சாட்டப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு துயரம் அனுபவித்த இந்திய முஸ்லிம் இளைஞர் முஹம்மது ஹனீப் என்ற மருத்துவரிடம் கடைசியாக ஆஸ்திரேலியா மன்னிப்பு கேட்டுக்கொண்டது. அத்துடன் இந்திய நாணய மதிப்பில் நான்கரை கோடி ரூபாய் வரை இழப்பீட்டு தொகையாக வழங்க முன்வந்துள்ளது. சரியான தொகை ரகசியமாக உள்ளது. அத்துடன் மருத்துவரான ஹனீபுக்கு ஆஸ்திரேலிய அரசின் சார்பில் பணி வழங்கவும் முன்வந்துள்ளது ///…என்று..!
இது அங்கே சாத்தியம் என்றால் இதே கதைதானே இங்கும்…? சொல்லப்போனால், இங்கே அனுபவித்தவர்களின் துயரத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கேனும் அனுபவித்திருப்பாரா ஹனீப்…? இதற்கே இவ்வளவு இழப்பீடு தருகிறார்கள் என்றால்… இதுவரை விசாரணை கைதிகளாகவே சிறையில் இருந்து ஆயுள்தண்டனையையே அனுபவித்து விட்டு குற்றமற்றவர் என விடுதலையான பலர் பற்றி இந்திய அரசும், நீதித்துறையும், ஊடகமும் ஏன் கண்டுங்காணாதது போல மவுனமாய் உள்ளன?

கடந்த பதினேழு ஆண்டுகளாக முஸ்லிம்கள்- எத்தனையோ இளைய தலைமுறையினர், யாரோ வைத்த குண்டுகளுக்காக இன்றும் சிறை வாசம் அனுபவித்த வேதனையே இன்னும் அவர்களை விட்டு விலகாத நிலையில்… அவர்களுக்காக இந்திய அரசின் இழப்பீட்டினையும், மன்னிப்பையும் கேட்பது யார்? எப்போது ? எப்படி?
மேற்படி அனைத்து குண்டுவெடிப்பு வழக்குகளிலும் எப்படியும் குறைந்தது ஆயிரம் பேராவது இதுபோல பாதிக்கப்படிருப்பார்கள் அல்லவா? பலவருஷம் கழித்து வெளிவந்த எந்த ஒரு நிரபராதியும் தனக்கு நஷ்ட ஈடு கோரி ஏன் வழக்கு தொடுக்க வில்லை? தமக்கு அது நிச்சயமாக கிடைக்காது என்று 100% உணர்ந்ததால்தானா..?
ஆஸ்திரேலியா இழப்பீடு தருவதை… ‘நீதி வென்றது.’.. ‘தர்மம் ஜெயித்தது’… ஆஸ்திரேலியாவின் பெருந்தன்மை… நேர்மை… என்றெல்லாம் பெருமையாக எழுதிய-சொன்ன எல்லா ஊடகங்களும், அதே நீதியை இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏன் கேட்கவில்லை? இதுபற்றி எல்லாம் இந்திய அளவில்-தமிழக அளவில் எந்த ஒரு முஸ்லிம் அமைப்புகளும் கூட இதுவரை எந்த ஒரு போராட்டமும் செய்ய வில்லையே…! விரக்தியா? இரண்டாந்தர குடிமகனுக்கு என்ன கிடைக்கப்போகிறது என்ற அவநம்பிக்கையா? குடிமகனே இல்லாத ஹனிபே வேறொரு நாட்டில் நான்கரை கோடி ரூபாய் இழப்பீடு வாங்கும் நிலை இருக்கும்போது… சிறையில் நொந்து நூடுல்சானவர்கள் கேட்காவிட்டாலும் மற்றவர்கள் இவர்களுக்காக–இந்தியக்குடிமகன்களுக்காக கேட்கலாமே..!

நல்லவேளை… ஹனீப் ஆஸ்திரேலியாவிலேயே கைது செய்யப்பட்டார்..! அவர் மட்டும்… ஒரு பேச்சுக்கு… ஆஸ்திரேலிய போலீசின் சோம்பேறித்தனத்தால்… பெங்களூர் கிளம்பி வந்திருந்தாரேயானால்…? ஆஸ்திரேலியாவின் வேண்டுகோளுக்கிணங்க… அன்றே பெங்களூர் விமான நிலையத்தில் ஹனீப் பொடா-வில் கைதாகி… பல ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு… ஒருநாள் நிரபராதி என ரிலீஸ் ஆனால்… பேசாமல் வீட்டைப்பார்த்து நடையைக்கட்டி இருப்பார்..!! இழப்பீடாவது… மண்ணாங்கட்டியாவது…!!!
நஷ்ட ஈடு விஷயத்தில் நமது ‘நீதி தேவதை’ தொலைந்து போய் விட்டது போலும்…! அதனை ஆஸ்திரேலியாவில் தேடி கண்டெடுத்திருக்கிறார் டாக்டர் ஹனீப்..! வேற்று நாட்டு மனிதனுக்கே அங்கே நீதி கிடைக்கிறது. இங்கே நம் இந்திய குடிமகன்களுக்கு உரிய நீதி என்னவாயிற்று?

300px-Supreme_court_of_india.JPG
இந்திய உச்சநீதி மன்ற கணம் கோர்ட்டார் அவர்களே..!
ஆஸ்திரேலியாவில் முஹம்மது ஹனீப் கண்ட அந்த நீதி தேவதையை இந்தியாவிற்கு மீட்டு வர முயற்சி எடுப்பீர்களா? உங்களால் முடிகிற விஷயம்தானே..!

இன்னொரு அன்பு வேண்டுகோள்:-

ஒரு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி எனத்தெரிந்தால் அவரை விடுவிப்பதுடன் அதே தீர்ப்பிலேயே… அது பொய்க்குற்றச்சாட்டு என்றாகிவிடுவதால், இவருக்கு… இக்காலத்துக்குள்.. இவ்வளவு.. நஷ்ட ஈட்டுத்தொகை அரசு அல்லது குற்றம் சாட்டியவர் அளிக்க வேண்டும் என்று கூறி ஒரேயடியாய் கணக்கை பைசல் பண்ணிவிட வேண்டியதுதானே? அதற்கென எதற்கு ஒரு தனி வழக்கு? தீர்ப்புக்காக எத்தனையோ வழக்குகள் உங்கள் முன் மலைபோல தேங்கியுள்ளனவே? ஒத்தைக்கு ரெட்டையாய் இதுவேறு எதற்கு ஒவ்வோர் வழக்கிலும் தனிச்சுமை உங்களுக்கு? சிந்திப்பீர்களாக..!

No comments:

Post a Comment