என் கல்லூரியில் ஒரு வழக்கம் இருந்தது. யாருக்காவது பிறந்த நாள் என்றால் ஒரு பெரிய வாழ்த்து மடலை வாங்கி, எல்லோருமே அதில் கையெழுத்திட்டு தருவார்கள். எனக்கு அப்படி ஒரு அட்டை தரப்பட, அது ஏதோ ஒரு பரணையில் தலைமறைவாய் கிடந்து வந்தது. ஒரு நாள் வேறு எதையோ தேடி பரணைக்கு ஒரு சாப விமோட்சனம் தந்து சுத்தம் செய்யும் போது தற்செயலாய் கையில் சிக்கியது. மஞ்சலும் பழுப்புமாய் மங்கிபோயிருந்த அந்த வாழ்த்து அட்டையை எடுத்து அசட்டையாய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் இனிய கல்லூரிக் கிறுக்குகள் எல்லாம் கிறுக்கியிருந்ததைப் படித்து சிரித்துக்கொண்டிருந்தேன். அந்தக் கிறுக்கல்களில் ஒன்றில், "அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு - கிலோ எவ்வளவு? பெண்ணின் பெருமையைக் கெடுக்காதே..." என்று என்னைத் திட்டித் தீர்த்திருந்தான் கையெழுத்துப்போடாத ஒரு தைரியசாலி.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு.
எல்லோரையும் போல நானும் பெண்களின் இந்த நான்கு உயரிய குணங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்த அச்சம், நாணம், மடம், பயிற்ப்பு என்றால் என்ன என்று எனக்கு தெளிவாக தெரியவில்லை. அதை தெரிந்துக்கொள்வது அவ்வளவு முக்கியம் என்று தோன்றாததால் நான் பாட்டிற்கு என் வேலைகளின் மும்முரமாய் இருந்தேன். இப்படி வேலை நிமித்தமாக தான் டாக்டர் ரெஜீனா பாப்பாவை சந்திக்க நேர்ந்தது. டாக்டர் ரெஜீனா மகளிரியல் வித்தகர். தமிழகத்தில் மகளிரியலுக்காகத் தனியாக கல்லூரிப் படிப்புகளை உருவாக்கிய முன்னோடி. சதா சர்வகாலமும் அவர் பேச்சு, மூச்சு, சிந்தனை எல்லாம் பெண்களின் நிலை பற்றியேதான். என்னைப் பார்க்கும்போதெல்லாம், "பெண் என்ற பிரக்ஞையே இல்லாமல் இருக்கியே! பெண்ணினத்தோடு ஒன்ற மாட்டேங்கிறியே!" என்று கண்டிப்பார்.
நான் என்ன செய்வது - என் தொழில் அப்படி! வெறும் ஒரு மருத்துவருக்கே ஆண்-பெண் பேதம் கிடையாது என்கிறபோது நானோ உளநலவியல் மருத்துவர். அன்றாடம் பெண்களால் அவதிப்படும் ஆண்கள், ஆண்களால் அவதிப்படும் பெண்கள்... என்று சமுதாயத்தின் நேரெதிர் துருவங்களுக்கு ஆறுதல் அளித்து, சிகிச்சை தருவது என் வேலையான பிறகு... எனக்கென்று ஒரு பாலினப் பற்றுதல் ஏற்படுத்திக்கொள்ளும் சொகுசுக்கு இடமே இல்லாமல் போய்விட்டது. ஆண், பெண் என்ற பாகுபாட்டைக் கடந்து, என் சொந்த விருப்பு வெறுப்புகள், என் தனிப்பட்ட அபிப்பிராயங்கள் ஆகியவற்றை மறந்து, பாலினமற்ற ஒருவகை பிறவியாக இயங்குவது என் தொழில் தேவையாகிவிட்டது. இதனாலேயோ என்னவோ, உண்மையிலேயே, அச்சம், நாணம், மடம், பயிர்ப்பா, அதெல்லாம் கிலோ எவ்வளவு? என்று கேட்கும் அளவில் தான் அடியேளுக்கு அவற்றோடு பரிச்சயம்!
எப்படியோ, நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது இந்த அச்சம் நாணம் இத்யாதி இத்யாதியை பற்றி பேச நேர்ந்த்து. "இந்த அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு எல்லாம் என்ன மேடம்?" டாக்டர் ரெஜீனாவைக் கேட்டேன்.
"உக்கும்!" என்று சலித்துக்கொண்டார் ரெஜீனா. "நால்வகைப் பெண்டிர் குணம் என்பார்கள். எல்லாப் பெண்களுக்கும் இருக்க வேண்டியதாகக் கருதப்படும் குணங்கள்."
"ஆமாமா, நிறைய பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன், ஆனா மேடம், எனக்கு ஒண்ணு மட்டும் புரியல... அச்சம்னா பயந்தாங்கொளித்தனம், மடம்னா மடத்தனம்... ஏன் நம்ம சமுதாயம் தாய்க் குலத்துக்கிட்ட இந்த மாதிரி வெட்டி விஷயங்களை எதிர்பார்க்குது?"
"அப்படியில்ல. அச்சம்னா பயம், தயக்கம். மடம்னா மடமை, அதாவது அறியாமை. நாணம்னா வெட்கம், கூச்சம். பயிர்ப்புன்னா ஆண் தொட்டதும் மயிர்கூசிப் புல்லரிச்சுப் போறது..."
"ஓ, தொட்டால் பூ மலரும் மாதிரியா! அடடா - ரொம்ப செக்ஸியா இருக்கே!" என்று ஆச்சரியப்பட்டேன். காரணம் இந்த நால்வகைப் பெண்டிர் குணம் கலவி சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களாய் இருக்கும் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவேயில்லை.
"ஆமாமா, அந்த நால்வகைப் பெண்டிர் குணமும் முழுக்க முழுக்கப் பெண்களின் கலவியல் கவர்ச்சி, அதாவது செக்ஸ் அப்பீல் பற்றியதுதான். மிரண்ட, ஒண்ணும் தெரியாத, கூசி சிலிர்க்கிற பெண்ணைத்தான் எல்லா ஆண்களுக்கும் பிடிக்கும்ங்கிறதுனால இந்த குணங்களைத்தான் பெண்கள்கிட்ட எதிர்பார்த்தாங்க."
"ஆனா இப்படி மிரண்டு முழிச்சுக்கிட்டு இருந்தா, சொந்தமா சிந்திச்சு செயல்படுற அறிவோ ஆற்றலோ இல்லாத வடிகட்டுன பேக்குனு இல்ல அர்த்தம்! எவன் தொட்டாலும் ஊ, ஆன்னு கூசி சிணுங்குகிற தொட்டாச் சிணுங்கியா இருக்கிறதுல என்ன பிரயோஜனம் மேடம்!"
"இங்கதான் ஒரு விஷயத்தை நாம் புரிஞ்சுக்கணும் ஷாலினி. அந்தக் காலத்துப் பொம்பளைய யாரும் மனுஷியாகவே மதிக்கல. ஆணுக்கு சுகம் தர்றது, பெத்த பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குறது - இதைத் தவிர வேறு எதுக்கும் பிரயோஜனமில்லாதவர்களாகத்தான் நடத்தப்பட்டாங்க. சொன்னா ஆச்சரியப்படுவே - ஒண்ணுமே தெரியாதவளா இருக்குறதைத்தான் நல்ல பெண்ணுக்கு அழகுன்னு நெனைச்ச காலம் அது. காரணம், ஆய கலைகள் அறுபத்திநாலையும் தெரிஞ்சு வெச்சிக்குறது ஒரு பரத்தையோட தொழில் தேவை - அது நல்ல குடும்பத்துப் பொண்ணுங்களுக்கு வேண்டாத வேலைனு கருத்து இருந்தது. அதனாலதான் வீட்டுப் பெண்களுக்கு எழுதப் படிக்கக்கூடச் சொல்லித் தராம இருந்தாங்க. தப்பான வழில போகிற பொண்ணுக்குத்தான் எழுதப் படிக்க வேண்டிய அவசியமாம். தனக்குன்னு ஓர் ஆம்பிளை இருக்குற பொண்ணுக்கு எழுதப் படிக்கிறது மாதிரியான வெட்டி வேலைக்கு அவசியமே இல்லையேன்றது அந்தக் கால லாஜிக்."
"அடக் கண்றாவியே! ஜமக்காளத்துல வடிகட்டின அடிமைத்தனமா இருக்கே!"
"அதுதானே அந்தக் காலத்து நிலவரம்! உனக்குத் தெரியுமா? இந்த நூற்றாண்டுக்கு முன் வரைக்கும் நம்மூர் பொம்பளைங்க யாருக்குமே மேலாடை அணிய அனுமதியே இல்லாமதான் இருந்தது. அரச குடும்பம், புரோகிதக் குடும்பம் தவிர மற்ற எல்லாப் பொதுப் பொம்பளைக்கும் மாராப்பு சட்டவிரோதமா இருந்தது..."
"என்னது! நிஜமாவா?"
"ஆமா. ஆடை அணியுற அளவிற்கு மரியாதைக்குரிய நபர்களாகப் பெண்கள் மதிக்கப்படலை. என்ன... ஆடு, மாட்டை விடக் கொஞ்சம் மேலானவர்கள் என்கிற மாதிரி நடத்தப்பட்டதனால கீழாடை மட்டும் அணிய அனுமதிச்சாங்க. அதனாலதான் நம்ம கோயில் சிற்பங்கள்ல எல்லாம் பெண் சிலைகள் வெற்று மார்பா இருக்கு. அதனாலதான் இன்னைக்கும் நம்ம கிராமத்துப் பாட்டிகள் மேலாடை போட்டுக்குறதில்ல..."
யோசித்துப் பாருங்கள் - அத்தனை பெண்கள் - எல்லாம் நமது மூதாதையர்கள் - அரை நிர்வாணமாக வலம் வந்தார்களா! "என்ன அநியாயம். பொம்பளைங்களை இப்படியா நடத்துறது!" என்னை மறந்து ஆட்சேபித்தேன்.
"ஏதோ இந்த ஒரு நூற்றாண்டாத்தான் பொம்பளைங்களுக்குக் கொஞ்சமாவது கரிசனம் காட்டுறாங்க. இந்தக் காலத்துப் பெண்களால படிக்க முடியுது, வீட்டை விட்டு வெளியே வேலைக்குப் போக முடியுது, சொத்துரிமை இருக்கு, யாரைக் கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு சுதந்திரமா முடிவெடுக்க முடியுது... ஆனா இந்த சுதந்திரமெல்லாம் சுலபமா வந்துடல. நம்மோட பாட்டி, கொள்ளுப் பாட்டி எல்லாம் எவ்வளவோ அவமானம், அநியாயம், அக்கிரமத்தை சகிச்சுக்கிட்டாங்க... ஆனா உங்களை மாதிரி நாகரீக சிறுசுங்க, இந்த வரலாறே தெரியாத சுத்த மண்டுகளாய் இல்ல இருக்கீங்க. பெண் சுதந்திரம் என்பது என்னவோ நியூட்டனோட ஆப்பிள் மாதிரி அப்படியே தானா வந்து மடியில விழுந்தா மாதிரி இல்ல அசால்ட்டா இருக்கீங்க!"
என் பாலினப் பற்றற்ற நிலையை மீறி அவர் சொன்னது என்னைச் சிந்திக்கவைத்தது. காச் மூச் என்று கொதித்து பேசினாலும், இந்தப் பெண் விடுதலைப் போராளிகள் சொல்வதிலும் சமாச்சாரம் இருக்கத்தான் செய்கிறதோ என்று தோன்றிவிட அன்றிலிருந்து நான் ரொம்பவே சமர்த்தாய் மனிதப் பெண்களின் வரலாற்றைப் பற்றித் துப்புத் துலக்குவதில் மும்முரமாய் இறங்கிவிதட்டேனாக்கும்.
அதென்ன 'மனித'ப் பெண்கள் என்று புருவம் உயர்த்துகிறீர்களா?
ஜீவராசிகளிலேயே மனித குலம் மட்டும்தான் 'தன் மேலான பாதி'களை இவ்வளவு மோசமாய் நடத்துகிறது என்பது தெரிந்தால் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள். மற்ற மிருகங்களைப் பொறுத்த வரை பெண்தான் ஆணை விடவும் உஷாராய் இருக்கும். ஆண் புலியை விடப் பெண் புலி சிறந்த வேட்டைக்காரி. ஆண் சிலந்தியை விடப் பெண் பெரியது. ஆண் பாம்பை விடப் பெண் பாம்பு அதிக விஷமமானது. அவ்வளவு ஏன்? மழை காலம் வந்தாலே நம்மை எல்லாம் கடித்தே பாடாய் படுத்துகிறதுகளே கொசு, அதில் கூட ஆண் கொசு அப்புரானி, கடிக்காது. பெண் கொசு தான் கடித்து மலேரியா கிருமிகளை மனிதர்களுக்கு விண்ணியோகம் செய்யும்!
இப்படியாக எல்லா உயிரினங்களிலும் பெண் இவ்வளவு உஷாராக இருந்தாலும் மனித வர்கத்தில் மட்டும் பெண் ஏன் ஆணை விட வீரியம் குறைந்தே காண்ப்படுகிறாள்? வீரியம் உண்மையிலேயே குறைந்தவளா, அல்லது காரணத்தோடு தான் அப்படி காணப்படுகிறாளா?
இத்தனைக்கும் மனித வர்க்கத்திலும் கூட ஆணை விடப் பெண் பலசாலி. உடலால் மட்டுமல்ல, மரபணுவாலும். பெண்களுக்கு இருக்கும் அந்தக் கொசுறு X குரோமோசோம் அவளை சுலபமாகப் பிறக்கவும் சீக்கிரமாய் நடக்க-பேசவும், குறைவாக நோய்வாய்ப்படவும், கொஞ்சமாய் ரிஸ்க் எடுக்கவும் வைக்கிறது. பொதுவாய் ஆணை விட அதிக காலம் வாழ வைக்கிறது. அறிவியல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால், வெறும் பெண்களை வைத்தே உலக ஜீவனத்தைத் தொடரச் செய்ய முடியும்... குழந்தைகளை உருவாக்க இனி ஆணின் விந்தணு அவசியமில்லை என்கிற கருத்துக்கள் தலை தூக்க ஆரம்பித்துள்ளன.
இத்தனை சக்தி. இவ்வளவு இன்றியமையாத தன்மை. இருந்தும் ஆண்கள் பெண்களைக் கேவலமாய்த்தான் நடத்துகிறார்கள். அதை பெண்களும் அனுமதிக்கிறார்கள்....இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் கூட. ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா?
எல்லாம் காரணத்தோடுதான். சாதாரணக் காரணங்கள் அல்ல. சில சுவாரசியமான, நியாயமான காரணங்கள்...
|
No comments:
Post a Comment