Sunday, November 28, 2010

பொன்னியின் செல்வன்

நவீன கால தமிழ் இலக்கியத்தின் முக்கியமான மைல்கல் இந்த ‘பொன்னியின் செல்வன்’ நான் அபுதாபிக்கு போனபிறகு தான் படிக்க முடிந்தது. ஐய்யோ..! வெறும் எழுத்துக்கள் மூலமே நம் மனக்கண்ணில் இப்படி பழங்கால தமிழகத்தையும், வளமான வாழ்க்கையையும், ராஜதந்திரங்களையும் விறுவிறுப்பாக கொண்டு வந்து நிறுத்தமுடியுமா? என்று பிரமிப்பு தான் வந்தது. இந்த பிரமிப்பில் எனக்கு ‘பொன்னியின் செல்வனின்’ நிறைகுறைகள் எதையும் சீர்தூக்கி கூட பார்க்கத்தோன்றவில்லை. இன்னும் சொல்லபோனால் இந்த புத்தகம் படிக்க படிக்க என் மனத்திரையில் படமாக விரிந்து ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்தது. இன்னும் சொல்லப்போனால் நான் மீண்டும் அதிகமாக தமிழ் புத்தகங்களை படிக்க ஆரம்பித்ததற்கு அபுதாபியில் படித்த ‘பொன்னியின் செல்வனும்’ ஒரு முக்கிய காரணம். அபுதாபியில் இருந்து திரும்பி வந்தபோது நான் பெற்ற இன்பம் என் தமிழ் நண்பர்களும் பெறட்டும் என்று அங்கேயே விட்டுவிட்டு வந்தேன். மீண்டும் படிக்க ஆரம்பித்தபோது 1 மாதத்திற்குள்ளாக 5 பாகங்களையும் முடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் படிக்க ஆரம்பித்தேன்.


திரும்ப படித்தபோது கூட இந்த ‘பொன்னியின் செல்வன்’ முதல் முறை படிப்பது போல ஒரு விறுவிறுப்பும், கிறக்கத்தையும் உணர்ந்தேன். இந்த கிறுகிறுப்பிலேயே கடந்த ஒரு மாதத்திற்கும் கொஞ்சம் கூடுதலாக பாடபுத்தகத்தை படிப்பது போல முழுமூச்சாக படித்து முடித்தும்விட்டேன்.கிட்டத்தட்ட இந்த ஒருமாதமும் சோழர்கள் காலத்தில் வாழ்ந்தது போன்ற ஒரு பிரமை. விறுவிறுப்பு என்றால் விறுவிறுப்பு ஆனால் கடைசி பாகத்தில் (குறிப்பாக கடைசி 20 அத்தியாயங்களில்) மட்டுமே நம் பொறுமையை சோதிக்கிறார். நான் இதன் கதையையோ இல்லை பின்புலத்தையோ விமர்சிக்கப்போவது இல்லை.... செய்யும் தகுதியும் எனக்கு இல்லை. ஆனால் ஒரு சாதாரண வாசகனாக எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எழுதுகிறேன்.


இதன் ஆரம்பமே கொஞ்சம் சுவாரசியமானது. வீராணத்து ஏரியின் கறையில் ஒரு ஆடிப்பெருக்கில் நம் கதாநாயகன் வந்தியத்தேவன் அறிமுகத்துடன் தொடங்கும் இந்த கதை பின்வரும் அத்தியாநங்களில் சுவாரசியங்களின் சிகரங்களை தொட்டபடி நகர்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அறிமுகத்துடன் கதை வெவ்வேறு திருப்பங்களை சந்திக்கிறது. கதை ஐந்து பாகங்களில் விரவிக்கிடந்தாலும் என்னை பொருத்தவரை 2 & 3 வது பாகங்கள் தான் மிக மிக சுவாரசியமானவை. முதல் பாகத்தில் தஞ்சை மற்றும் பழையாறையில் மையம் கொள்ளும் கதை இரண்டாவது பாகத்தில் கோடிக்கரையிலும் இலங்கையிலும் இடம் மாறி, அங்கே நடைபெறும் சம்பவங்களில் நாம் நமது சமயம் போவதை அறியமுடியாதபடி மூழ்கிப்போகலாம். இலங்கையின் பசுமைகளையும், கோடிக்கரையின் கடற்கரை மணல்மேடுகளையும், கொந்தளிக்கும் கடலையும் நேரில் அனுபவப்படுவது போலவே உணரவைக்கிறார். உண்மையில் தமிழகம் இவ்வளவு அழகாக இருந்ததா என்ற ஆதங்கமும் கூடவே வருகிறது.


4 & 5 வது பாகங்கள் ராஜ தந்திரங்களிலும், சூழ்ச்சிகளிலும் திளைத்து பல சிறிய ஆனால் முக்கியமான பாத்திரங்கள் மூலம் தமிழ் சரித்திரத்தில் மிகப்பெரும் மாற்றங்கள் விளைவித்த நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகிறார் கல்கி. கதாபாத்திரங்களின் மனமாற்றங்களை இயல்பாக அதே சமயத்தில் practical-ஆக கொண்டு செல்கிறார் கல்கி. படகுக்காரியான பூங்குழலி இளவரசர் அருள்மொழியிடம் காதல் கொல்கிறாள், அதே சமயம் இளவரசரும் பூங்குழலியிடம் மையல் கொள்கிறார். ஆனால் இது இருவரும் வெளிப்படுத்திக்கொள்ளாத காதல். எனினும் அந்தஸ்து வித்தியாசம் காரணமாகவும், தன் தோழிக்கு கொடுத்த வாக்குக்காகவும், political re-alignment-க்காகவும் குந்தவை அருள்மொழிவர்மனின் இந்த ஆசையை அவர் அக்கா குந்தவை நிராகரிக்கிறார். இருப்பினும் வாசகர்களுக்கு குந்தவை ஒரு கதாநாயகியாக தான் இருக்கிறாள். அது போலவே இளவரசர் மதுராந்தகர் பாத்திரமும் ஆரம்பத்தில் ஒரு மென்மையான இளவரனில் இருந்து கடைசியில் (வில்லன்) வீரனாக மாறுவது.


இதில் மிகவும் நுணுக்கமாக, இயல்பாக படைக்கப்பட்டு இருப்பது என்று பார்த்தால் அது வந்தியத்தேவனின் பாத்திரம் தான். முனுக்கென்று கோபம் வரும் முன்கோபக்காரனாக, அதே சமயம் சமாளித்துவிடும் வீரனாக, ஒரு இளவரசன் என்றபோதும் தன் பழைய வரலாற்று நினைவுகளிலேயே மூழ்கிவிடாமல் தன் நிலை அறிந்தவனாக என பலவிதமான பரிமாணங்களை வெளிப்படுத்துகிறான். ‘பொன்னியின் செல்வன்’ என்று பெயர் வைத்திருந்தாலும் வந்தியத்தேவனே முதல் கதாநாயகன். அவனுக்கு அடுத்து நம் மனசை ஆக்ரமிப்பது ஓடக்காரியான பூங்குழலி. துறுதுறுவென்று மான்போல துள்ளிக்கொண்டு, அதே சமயம் தைரியசாலியாண பெண்ணாக நம்மை கவர்பவள் இந்த பூங்குழலி. மெதுவாகவே கதைக்குள் வந்தாலும் நம் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிடுகிறார் அருள்மொழி வர்மர். பரிதாபம், கோபம், அன்பு என வாசகர்களிடம் இருந்து பலவகை உண்ர்ச்சிகளை பெற்றுக்கொள்கிறாள் ந்ந்தினி.


எனினும் எனக்கு கொஞ்சம் உறுத்தலாக இருந்தவை சில சம்பவங்கள் - குறிப்பாக மந்தாகினி மற்றும் வாணி ஆகிய இரு ஊமைச்சிகளை கொண்ட நிகழ்ச்சிகள். ஒட்டு மொத்த கதையுமே இந்த இரு பெண்களை சுற்றித்தான் நடக்கிறது. இதில் மந்தாகினி சுந்தர சோழரை காதலித்ததும், பின்பு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பிரிந்து பிச்சியாக அலைவதாகவும், அவர் மீது கொண்ட காதலை அவர் மகனான அருள்மொழி வர்மரிடம் தாய்ப்பாசமாக பொழிவதாகவும் கூறுகிறார். நந்தினியை சுந்தரசோழர் - மந்தாகினிக்கு பிறந்த பெண்ணாக தான் கடைசி வரை கதையில் கொண்டுபோகிறார். அதே போல வீரபாண்டியனை காதலியாகவும், பாண்டிய நாட்டின் பட்ட மகிஷியாகவும் கொண்டுபோய்விட்டு அவளை பாண்டியன் - மந்தாகினியின் மகள் என்று சொல்வது குழப்பத்தின் உச்சக்கட்டம்.

நான் மீண்டும் மீண்டும் இந்த நாவலை படிப்பேன் என்றே தோன்றுகிறது. நம் தமிழர்களின் கலாச்சாரத்தை, மன்னர் கால அரசியலை பல இடங்களில் ஆதாரபூர்வமாக விளக்குகிறார். இந்த parameters-களோடு கற்பனையையும் கலந்து காலத்தையும் தாண்டி நிற்கும் ஒரு நவீன இலக்கியத்தை படைத்த கல்கி போற்றி புகழப்படவேண்டியவர். அடுத்த முறை தஞ்சாவூருக்கும், கும்பகோணத்துக்கும் போகும்போது இந்த பொன்னியின் செல்வன் என் நினைவிலேயே பயணிக்கும் என்று நம்புகிறேன்.

சுஜாதா எழுதிய ஆ


சுஜாதா எழுதிய இந்த ‘’ நாவல் இதனை படிப்பவர்களை நிச்சயம்’ என்று வாயை பிளக்க வைக்கும்.. கொட்டாவி விடுவதற்குஅல்ல... பிரமிப்பில்... பயத்தில்.... ஆச்சரியத்தில்... 1992-இல்குமுதத்தில் தொடராக எழுதப்பட்ட இந்த கதை முற்பிறவி / Split personality / பேய் என்று பல விஷயங்களை உள்ளடக்கியதுஇதுபேய்க்கதையா இல்லை விஞ்ஞானபூர்வமான கதையை என்றுபடித்து முடித்த பின்பு தான் நமக்கு குழப்பம் ஏற்படுகிறதுஆனால்படிக்கும்போது ஒவ்வொரு பக்கத்திலும்ஒவ்வொருவாக்கியத்திலும்ஒவ்வொரு எழுத்திலும் போதை போல /விஷத்தை போல விறுவிறு என்று நம் மண்டைக்குள்ளே பரபரப்புஏறுவதை உணரலாம்முடிவில் இது அறிவியல் ரீதியாகஅலசப்படுவதும் சுவாரசியமாக தான் இருக்கிறதுஇதுதொடர்கதையாக வந்த காலத்தில் படித்த பல வாசகர்கள்தங்களுக்கும் அது போன்ற அமானுஷ்ய குரல்கள் கேட்பதாக சுஜாதாவுக்குஎழுதினார்களாம்அதற்கு சுஜாதா ஒரு கற்பனை கதையை நம்பும்படியாக எழுதுவதால்வரும் பின்விளைவுகள் என்று பதிலளித்திருக்கிறார்.


குறிப்பிட்ட மென்பொருள் எழுதுவதில் இந்தியாவில் உள்ள 9 பொறியாளர்களில் ஒருவனாக விளங்கும் தினேஷுக்கு பொருளாதார ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் நல்ல சந்தோஷமாக வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருக்கும் போது திடீர் திடீரென்று மண்டைக்குள் ஏதோ குரல் கேட்கிறது. அந்தக் குரல் தினேஷை தற்கொலை செய்துக்கொள்ள தூண்டுகிறது. தன் கட்டுப்பாட்டை மீறி பலமுறை தற்கொலைக்கும் முயற்சிக்கிறான் தினேஷ். அதை தொடர்ந்து சர்மா, பண்டரி, ஜெயலட்சுமி, கோபாலன் என பல பெயர்களும், அவர்களுடைய சம்பாஷனைகளும், தான் முன் பின் பார்த்திராத திருச்சிராப்பள்ளியின் பூகோளமும் அவ்வப்போது தினேஷுக்கு நினைவுக்கு வந்து, கண் முன்னே காட்சிகளாக வந்து குழப்ப, கதை அடுத்த தளத்துக்கு மேலேறி சூடு பிடிக்கிறது. நான் மேலே எதுவும் கதையை பற்றி சொல்லபோவதில்லை.

இந்த நாவலின் மிகச்சிறந்த அம்சம் என்னவென்று பார்த்தால் அதன் திரைக்கதையும் எழுத்து நடையும். கதை கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் இடையே ஊசலாடும்போது படிக்கும் நமக்கே காட்சிகள் தானாக கறுப்பு வெள்ளைக்கும், கலருக்கும் மாறிக்கொள்வது போன்ற பிரமை. எழுத்து மூலமே விஷுவல் மீடியத்தின் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் சுஜாதா. ’ஆ’ - வின் சிறப்பு என்னவென்றால் படிக்கும் போது எது கடந்தகாலம்... எது நிகழ்காலம் என்று தானாகவே படிப்பவர்களுக்கு புரியும்படியாக, இன்னும் ஒரு படி மேலே போய் நம் மனக்கண் முன்னாடி ஷாட் வாரியாக விரிவது போல அற்புதமாக எழுதியிருக்கிறார். நான அதிகம் நாகா-வின் மர்மதேசம் தொடர்களை பார்த்திருந்த காரணத்தால் அதன் பலனாக இந்த கதையும் படிக்கும் போது வித்தியாசமான கோணங்களுடனும், ஒரு வித spook-ஆன ஷாட்டுகள், வண்ண சேர்க்கைகள் என என் மனதுக்குள்ளேயே ஒரு திரைப்படமாகவே பார்த்துவிட்டேன். ஒரு பரவசமான அனுபவம்...

அதனினும் சிறப்பு என்னவென்றால் படிப்பவர்களுக்கு இது வெறும் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் அறிவியல் ரீதியாக பல சுவாரசியமான தகவல்களையும், உண்மைகளையும் சொல்லிக்கொடுத்து இருக்கிறார். பொழுதுபோக்குக்கு பொழுதுபோக்காகவும், நல்ல தகவல் களஞ்சியமாகவும் விளங்குகிறது இந்த ‘ஆ’. மென்பொருள் புரோகிராமிங், ஃப்யூச்சராலஜி, நியூராலஜி, மனநல மருத்துவம், ஆன்மீகம், வழக்கு என பலதரப்பட்ட தகவல்கள் கொட்டிகிடக்கின்றன இந்த புத்தகத்தில். இத்துடன் ஒரு குட்டி சுவாரசியமான விஷயம் என்னவென்றால் - இதன் எல்லா அத்தியாயங்களும் “ஆ” என்ற எழுத்தில் முடிவது தான். பொதுவாக சுஜாதாவின் கதைகளில் கணேஷ் - வசந்த் நுழைந்த பிறகு தான் கதை இன்னும் சுவாரசியம் கூடும். ஆனால் கொஞ்சம் விதிவிலக்காக இதில் கணேஷ் - வசந்த் நுழையும் வரை இருந்த பரபரப்பு, அவர்களின் நுழைவுக்கு பிறகு கொஞ்சம் குறைவு தான். ஆனால் அந்த வழக்கு இந்த குறையை நிறைவு செய்துவிடுகிறது.

சுஜாதா ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் 1950-களின் திருச்சிராப்பள்ளி பற்றிய அவருடைய விவரிப்புகள் கிட்டத்தட்ட ஒரு பழங்காலத்தின் அருமையான வரலாற்றுப் பதிவு. 1992-ல் விகடனில் தொடர்கதையாக வந்தபோது இருந்த தாக்கம் இன்று படிக்கும் போது கூட குறையவில்லை. வழக்கமான பல்லவி தான் என்ற போதும் சொல்லாமல் இருக்க முடியவில்லை - “சுஜாதாவின் எழுத்துக்களும் subject-களும் காலம் கடந்து evergreen-ஆக, பசுமையாக நிற்பவை”. இந்த புத்தகமும் அப்படியே.

In fact எனக்கு இந்த புத்தகத்தை படிக்கும் போது ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது. நான் +2 படிக்கும் போது “ஜெண்டில்மேன்” படம் ரிலீஸாகி இருந்தது. நான் மதுபாலா மற்றும் ஏ.ஆர் ரகுமானின் தீவிர ரசிகன் என்பதால் அந்த படத்தை வந்தவுடனேயே பார்த்துவிட்டேன். ஒரு ஞாயிற்றுக்கிழமையில் என் நண்பன் ராஜா வீட்டுக்கு Group Study செய்ய போனபோது அவர்களுடைய வீட்டில் அன்று அந்த படத்துக்கு போகலாம் என்றார்கள். நண்பர்களோடு ஒன்றாக போவது நல்ல அனுபவம் என்பதால் நான் அவர்களோடு “ஜெண்டில்மேன்” படத்தை மீண்டும் பார்த்தேன். படம் முடிந்த அவர்களை அவர்களுடைய வீட்டில் விட்டுவிட்டு காபி சாப்பிடும் போது என் நண்பனின் அம்மா என்னிடம் “என்ன மகேஷ்... ரெண்டாவது தடவை இந்த படத்தை பார்த்து இருக்கே. நல்லா அப்பளம் போட கத்துக்கிட்டியா?” என்று கேட்டார். எனக்கு திக்கென்று தூக்கி வாரிப்போட்டது. அந்த கணம் ஏற்கனவே என் வாழ்வில் நிகழ்ந்தது போல இருந்தது. இதை அவரிடம் சொன்னபோது ”உனக்கு இது அடிக்கடி நடக்கிறது என்றால் நல்ல சைக்கியாட்ரிஸ்ட்டை போய் பார்” என்றார். எனக்கு அரிதாக சில சம்பவங்கள் ஒரு "sense of Dejavu" / முன்பே நடந்தது போன்ற உணர்வை கொடுத்த போதும், எதுவும் பெரிதாக நடக்கவில்லை.

அடுத்த விஷயம்.... இந்த புத்தகம் எனக்கு எனது மறைந்த நண்பர் வைத்தியை நினைபடுத்துகிறது. 2004-ல் முதல் முறையாக அபுதாபி-க்கு போனபோது, அந்த ஊர் பற்றி தெரியாததால், பொழுதுபோக்கிற்கு தயாராக எதுவும் எடுத்துச் செல்லவில்லை. அப்போது வைத்தி இந்த புத்தகத்தை கொடுத்தார். பாலைவனத்தில் தாகத்தில் சாகிறவனுக்கு ஒரு குவளை தண்ணீர் கிடைத்தால் எப்படி நிம்மதியாக இருக்குமோ, அதுபோல பயங்கர relief-ஆக இருந்தது. அந்த புத்தகத்தை கஷ்டப்பட்டு (???) முழுமூச்சாக முடிக்காமல் ஒரு நாளுக்கு 25 - 30 பக்கங்கள் என நிதானமாக 1 வாரம் வைத்து படித்து முடித்தேன். கஷ்டப்பட்டு என்றால் ”இந்த நாவலை முழுமூச்சாக படித்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தை அடக்கிக்கொள்ள கஷ்டப்பட்டதை சொல்கிறேன். அன்றிலிருந்து தான் நான் மீண்டும் புத்தகங்கள் படிப்பதை ஆரம்பித்தேன். இப்போது மீண்டும் படித்தேன். ஒரு வகையில் என்னுடைய பொழுதுபோக்கில் ஒரு நிறைவான திருப்பத்துக்கு அடிகோலியது இந்த புத்தகம். அன்று தொடங்கிய பழக்கம் இன்னும் தொடர்கிறது ஆனால் அதை தொடங்கி வைத்த வைத்தி இன்று இந்த உலகத்தில் இல்லை... ஆ!

சில நேரங்களில் சில மனிதர்கள்

'சில நேரங்களில் சில மனிதர்கள்' - எழுத்தாளர் ஜெயகாந்தனின் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவல். Anti-Brahminism நாவல் என்று சர்ச்சைக்கும் உள்ளானது. அதே பெயரில் படமாக்கப்பட்டு தேசிய விருதும் பெற்றது. இதை முதலில் நான திரைப்படமாகத்தான் பார்த்தேன். எனது 13ஆம் வயதில், DD-1இன் மாநில மொழி திரைப்பட வரிசையில் ஒரு ஞாயிற்றுகிழமை மதியம் பார்த்தேன். அந்த சமயம் நான் ராமாயணம், மகாபாரதம் என இதிகாசங்களை படித்து முடித்திருந்த சமயம். அதில் வந்த chauvinistic கருத்துக்களால் கற்பு, கலாச்சாரம் குறித்து ஒரு மாதிரியான அபிப்பிராயம் தோன்ற ஆரம்பித்திருந்த formative years-இல் இருந்தேன். அந்த படத்தில் லக்ஷ்மிக்கு (அதாவது கங்காவுக்கு) இழைக்கப்பட்டது கொடுமை என்று மட்டும் புரிந்தது. வேறு எதுவும் புரியவில்லை. காலப்போக்கில் எனக்கு அந்த படத்தை பற்றி நிறைய மறந்து போய்விட்டது. கடந்த வாரம் வேறு சில புத்தகங்கள் வாங்கப்போன போது இந்த நாவல் கண்ணில்பட்டு வாங்க நேர்ந்தது.

கங்கா - 17 வயதான இந்த இளம்பெண் ஒரு மழைக்கால முன்னிரவில், காலேஜ் வாசலில் ஒர் கார்-காரனால் Lift கொடுக்கப்படுகிறாள். ஆனால் அவன் அவளை island ground-க்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துவிடுகின்றான். அழுகையும் ஓட்டமுமாக வீட்டுக்கு வரும் கங்கா தன் தாயிடம் நடந்ததை கூற அவள் அதிர்ச்சியில் ஓலமிட்டு ஊரை கூட்டிவிடுகிறாள். கங்காவின் அண்ணன் அவளை அடித்து, கொட்டும் மழையில் வீதியில் வீசிவிடுகிறான். நிராதரவாக ஊராரின் கேலிப்பேச்சுக்கு ஆளாகி இரண்டு நாட்கள் தெருவில் கிடந்த கங்காவுக்கு அவள் மாமா மூலமாக ஆதரவு கிடைக்கிறது. கங்கா நன்றாக படித்து ஆபீசர் ஆகிவிடுகிறாள். காலம் அவளை இறுக்கமாக, ஆண்களை வெறுக்கும் misanthropist-ஆக மாற்றிவிடுகிறது.

கங்காவின் மாமாவும் சமூகமும் அவள் கெட்டுபோனவளாதலால் திருமணம் செய்துக்கொள்ள முடியாது என்று போதிக்கின்றனர். 'You can be a concubine to somebody but not a wife to anybody' (நீ ஒரு வைப்பாட்டி ஆகலாம், மனைவியாக தகுதியில்லாதவள்) என்று அடிக்கடி குத்திகாட்டப்பட்டு ஆண் சமூகத்தையே ஒரு வெறுப்புடன் பார்க்கிறாள். தன் மாமாவின் பேச்சுக்களால் (அவளுக்கு சாமர்த்தியம் இருந்தால் அவளை கெடுத்தவனையே கண்டுபிடித்து கல்யாணம் பண்ணி காட்டட்டும்') கடுப்படையும் கங்கா தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவனை 12 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கிறாள். அவன் இப்போது 'பிரபு இண்டஸ்ட்ரீஸ்' முதலாளி - பிரபு என்கிற பிரபாகர். தன்னை கெடுத்ததால் வந்த குற்றவுணர்ச்சி, மற்றும் தாழ்வு மனப்பான்மையுடன் தவிக்கும் பிரபுவுக்கு நல்ல தோழியாக மாறுகிறாள் கங்கா. மெல்ல மெல்ல அவன் மீது காதலும் கொள்கிறாள்.

தன்னுடைய இந்த விரக்தியான வாழ்க்கைக்கு காரணம் பிரபு அல்ல, மாறாக தன்னை சுற்றியிருந்த மனிதர்களும், தன்னுடைய கட்டுப்பெட்டி தனமான வளர்ப்பும் தான் என்ற முடிவுக்கு வருகிறாள் கங்கா. அசடான பிரபுவிடமே கசங்கி தன் வாழ்க்கையை கோட்டைவிட்ட தான் எவ்வளவு அசடு, பலாத்காரம் செய்தால் இணங்கிவிடுவேன் என்பதை உணர்ந்து தன்னை வளைக்க விரும்பிய மாமா, அரதபழசான கட்டுபெட்டித்தனமான கொள்கைகளால் பாழாகிப்போன தன் வாழ்க்கையை நினைத்து, இனியேனும் தைரியமாக தன்னம்பிக்கையுடன் இருக்கவேண்டும் என்று முடிக்கிறாள் கங்கா. ஆனால் நினைப்பதெல்லாம் நடக்கிறதா என்ன? பிரபு கங்காவின் எதிர்காலத்தை கருதி கனத்த மனதுடன் பிரிகிறான். படிப்பவர்களை அதிர்ச்சியடைய செய்யும் எதிர்பாராத முடிவு.

இந்த நாவலை பற்றி ஒரு வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் - mindblowing. தனக்கு இழைக்கப்பட்ட ஒரு சில நிமிட கொடுமைக்காக காலம் முழுவதும் அவஸ்தைப்பட்ட கங்காவின் பரிதாப கதை. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல சமூகத்தின் வக்கிரங்களை சாடுகிறார் ஜெயகாந்தன். கிட்டத்தட்ட 448 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை சம்பவங்கள் வாரியாக குறுக்கினால் 2-3 நிமிடங்களில் முடித்துவிடலாம். சற்று மிகைப்படுத்த பட்ட statement என்றாலும் - இது ஒரு matured-ஆன காதல் கதை என்றும் சொல்லலாம். ஆனால் அதை கங்காவின் பார்வையில், அவள் எண்ணங்களுடன் நிறைய விளக்கங்களுடன், தன்னை சூழ்ந்த மனிதர்களை குறித்த புரிதல்களுடன் கதையை நகர்த்திக் கொண்டு போயிருக்கிறார்.

குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் கங்கா இந்த நாவலில் முதன்முதலாக 'விபத்தை' பற்றி நினைப்பது. கொட்டும் மழையில் நனைந்து ஜுரத்தில் சாகும் தருவாயில் கிடக்கும் போது, அவளோடு வந்துவிட்ட அவள் அம்மாவின் தவிப்பும், பதைபதைப்பும். படித்து ஒரு வாரம் ஆனபின்பும் கண்ணை மூடினாலே அந்த நிகழ்ச்சி கண்முன் தோன்றி மனதை பிசைகிறது. அதே போல இதன் முடிவும் பின் கதையும். கனவிலும் கற்பனை பண்ணி கூட பார்க்க முடியாதது.

நம் நாட்டில் நடுத்தர வர்கத்தின் chauvanist (ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயம் என்னும் இரட்டை நிலை) அல்லது voyeuristic (மீண்டும் மீண்டும் பலாத்காரத்தை பற்றி பேசி, மனதுக்குள் உருவகபடுத்தி பார்த்து இன்பம் காணும் வக்கிர குணம்) கண்ணோட்டமும், அதனாலேயே பாதிக்கப்படும் பெண்களின் நிலையும், நினைக்கும் போதே... just disgusting. இன்றும் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு தினசரிகளில் வெளிவருவது 'அழகி'கள் படமும், பெயரும் மட்டுமே. உடன் படுத்த 'அழகன்'கள் உலகத்துக்கு வெளிப்படுத்த படுவதில்லையே? பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணை 'கற்பிழந்தவள்' என்ற பெயரிடுவதே மிகப்பெரிய அபாண்டம், அநீதி etc.. etc.. 'கற்பு' என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம், கற்பிழப்பது என்பது சுயபுத்தியுடன் எல்லை தாண்டி தவறான உறவு கொள்வது. ஆனால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பரிதாபப்பட்ட ஜீவன்களை 'கற்பிழந்தவள்' என்று பட்டம் கட்டி, காலத்துக்கும் அந்த கொடுமையில் வாழவைப்பதை படம்போட்டு காட்டுகிறார். உதாரணத்துக்கு காயப்பட்ட கங்காவுக்கு ஆறுதல் சொல்லி நடந்த கொடுமையிலிருந்து மீள வழிசெய்யாமல், for no fault of hers அவளை அடித்து, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, கொட்டும் மழையில் வீதியில் வீசும் அவள் அண்ணனின் செய்கை. இங்கு பலாத்காரம் செய்தவனை விட அவள் அண்ணனுக்கு தான் தண்டனை அதிகம் தரவேண்டும்.

மேலும் அந்த பெண்களை ஆண் சமூகம் ரகசியமாக தங்கள் காம இச்சைகளை தீர்த்துக்கொள்ளும் வடிகாலாக பயன்படுத்தும் கொடுமையும் நடப்பதுண்டு. கங்காவுகுக்கு அவள் மாமா படிக்கவைத்து வேலைக்கு போகும் அளவுக்கு ஆதரவு தந்தாலும், காந்தியின் Quote-க்கு (உன்னை பலாத்காரம் செய்யும் நேரத்தில் உனக்கு நான் அஹிம்சையை போதிக்கமாட்டேன். ஆயுதம் இல்லையென்றால் என்ன? உன் நகங்களும், விரல்களும் உன்னை பாதுகாத்துக்கொள்ளும் ஆயுதங்கள்) அவள் அடிக்கோடிட்ட அந்த சிகப்பு வரியே இவளுக்கு மாமாவிடமிருந்து லக்ஷ்மண ரேகையாக பாதுகாப்பு அளித்திருந்தது. நன்றியுணர்ச்சியே அவரின் பலமாக போய்விட்ட அவலம். கங்காவை தடவியும், கிள்ளியும் பலாத்காரத்தை பற்றி இருபொருள் பட கிளுகிளுப்பாக பேசி அவளை படிய வைக்க முயலும் அவள் மாமா, அந்த சமயத்தில் நன்றி காரணமாக ஒன்றும் பேசமுடியாமல் அவமானத்தில் புழுங்கி கண்ணீர் உகுக்கும் கங்கா. வார்த்தைக்கு வார்த்தை 'கெட்டுப்போனவள் மனைவியாக லாயக்கில்லாதவள்' என்று சொல்லி அவளை மனதளவில் demoralise செய்து மட்டம் தட்டி வைக்கும் அண்ணன் என நடுத்தர வர்கத்தின் கற்பு நிலைகளை அதன் அவலங்களை சுருக்கென்று ஏற்றுகிறார் ஜெயகாந்தன்.

அதே நேரம் பெண் பிள்ளைகளை கட்டுப்பாடு என்ற பெயரில் நடுத்தரவர்க்கம் ஆண் பிள்ளைகளிடம் பழகவிடாமல் பிரித்து வளர்ப்பதின் ஆபத்தை சித்தரிக்கிறார் ஆசிரியர். பிரபு அந்த 'சம்பவத்தை' குறித்து கூறும்போது 'நீ முதலில் தடுத்திருந்தால் நான் விலகியிருப்பேன், எனவே அது என்னை பொறுத்தவரை பலாத்காரம் இல்லை, எனவே நடந்ததற்கு நான் பொறுப்பேற்க முடியாது' என்கிறான். அந்த நிகழ்ச்சியை கங்கா மீண்டும் நினைத்து பார்க்கையில் 'ஒரு கணம் சிலிர்ப்பில் நான் தடுக்காததை இவர் சம்மதம் என்று எடுத்துகொண்டார். ஒருவேளை என் மீது கையை வைத்தவுடனேயே நான் Sorry, let me get down' என்று இறங்கியிருக்கலாமோ?' என்று தடுமாறுகிறாள். மேலும் 'எவன்கிட்டே வேண்டுமானாலும் ஒரு பெண்ணுக்கு சிலிர்ப்பு ஏற்படுவது தான் ஒழுக்கமின்மை என்று எனக்கு தோன்றுகிறது. எனக்கு யார்கிட்டே வேண்டுமானாலும் இந்த நாணமும், த்ரில்லும் ஏற்படும் என்பதை என் மாமா அந்த காலத்திலேயே புரிந்து வைத்துகொண்டது தான் என்னை பற்றி அவருக்கு அவ்வளவு கேவலமான கணிப்பு ஏற்பட்ட காரணம்' என்று நொந்துகொள்கிறாள். பின்பு மஞ்சு - ஸாம்ஜி உறவு மூலம் ஆண் - பெண் நட்பை நடுத்தர வர்க்கம் பயந்து, மிரட்டியே காதலாக்கி கனிய வைத்துவிடுவதை காண்பிக்கிறார்.

அடுத்து நம் மனதில் நிற்பது இதில் வரும் கதாபாத்திரங்களின் தனிமையும், அதன் கொடுமையும். தனிமையில் வாழ்பவர்களின் மனதில் இடைவிடாது நடைபெறும் போராட்டங்களும், அது தாண்ட தூண்டும் எல்லைகளும். பலாத்காரம் செய்தவனை காதலிக்கும் தமிழ் பட நாயகிகளிடமிருந்து ஒரு வித dignity-யுடன் மாறுபட்டு நிற்கிறாள் கங்கா.

Above all யாருடைய புரிதலுக்கும் அப்பாற்பட்ட உறவுகளும், சம்பந்தபட்டவர்களுக்கு மட்டுமே உணரகூடிய கண்ணுக்கு தெரியாத கட்டும். மிக விஸ்தாரமாக, நிதானமாக இருவரின் உறவும் பலப்படுவது சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கிறது. முடிவில் 'அவர் என்னுடையவர், நான் அவரை காதலிக்கின்றேன்' என்று கங்கா திருமண ஏற்பாட்டை மறுப்பது விகல்பமின்றி ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது.

தனக்கு நடந்த கொடுமையை நம்பிக்கையுடன் சொன்ன தாயே அதை தம்பட்டம் அடித்து ஊருக்கு சொல்லி தன்னை சந்தி சிரிக்க வைத்து பின்பு தனக்கு துணையாக வீட்டைவிட்டு வெளியேறியதும், தனக்கு ஆதரவு தந்த 'உயர்ந்தவராம்' மாமா தன் அத்தையை கேவலமாக நடத்தியதும், தன்னை அவருடைய இச்சைக்கு பணியவைக்க முயன்றதும், தன்னை பலாத்காரம் செய்த பிரபுவே பின்பு தன்னை தன் மகள் போல பாசமாகவும், நெருக்கமாகவும் நடத்தியது என... சில நேரங்களில் சில மனிதர்களின் நடவடிக்கைகள் கங்காவை ஆச்சரியம் அடைய வைக்கிறது. இவை எல்லாவற்றையும் மீறி முடிவான 'பின் கதை'யில் நடக்கும் நிகழ்ச்சிகள்... அதுவே இந்த கதையின் தலைப்பாகவும் மாறுகிறது.

Spoiler: திரைப்படத்தின் முடிவும், புத்தகத்தின் முடிவும் வேறு வேறு. புத்தகத்தில் 'பின் கதை' என்ற அத்தியாயத்தில் ஒரு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது. அது படிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். In fact இந்த அத்தியாயத்திலே தான் இதன் தலைப்பு 'சில நேரங்களில் சில மனிதர்கள்'க்கு முழு அர்த்தமும் கிடைக்கிறது.

முதலில் இதை திரைப்படமாக பார்த்துவிட்டதாலோ என்னவோ எனக்கு படிக்கும் போது கங்காவாக 'லக்ஷ்மி'யையும், பிரபுவாக 'ஸ்ரீீகாந்த்'தையும், அம்மாவாக சுந்தரிபாயும், மாமாவாக பிரபல நாடக நடிகர் 'நீலு'வையும், மஞ்சுவாக 'இந்திரா'வையும் உருவகபடுத்திகொண்டேன்.

முதலில் ஜெயகாந்தன் 'அக்னி பிரவேசம்' என்ற பெயரில் ஒரு சிறுகதை எழுதியிருந்தாராம். அதில் மழை நாளில் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் கங்கா தன் தாயிடம் வந்து சொல்லி அழும்போது, அவர் சாமர்த்தியமாக மறைத்து அந்த பெண்ணுக்கு தைரியம் சொல்லி எண்ணை குளியல் நடத்தில் இதை அக்னிபிரவேசமாக நினைத்து சுத்தப் படுத்திக்கொள் என்று முடித்திருந்தாராம். இந்த நாவலிலும் இதே 'அக்னி பிரவேசம்' என்ற கதை ஒரு சர்ச்சைக்குறிய அம்சமாக, கங்காவின் தாய் அதை படித்துவிட்டு இப்படி செய்திருக்கலாமோ என்றும், அவள் மாமா இந்த கதை தவறான அர்த்தம் கொண்டது என்று மனு சாஸ்திர நீதியை சொல்வதாகவும், மஞ்சு படித்துவிட்டு இதுபோன்ற அசட்டு பெண்கள் இருக்கமாட்டார்கள் என்றும் பலதரப்பும் வித்தியாசமாக react செய்வதாக வருகிறது.

அந்த காலத்தில் இந்த சிறுகதை மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியதாம். அதன் எதிரொலியாக ஜெயகாந்தன் அதனை extend செய்து, முடிவு அவ்வாறாக இல்லாமல், எதிர்ப்புகள் போலவே கங்காவின் தாய் react செய்திருந்தால் / அதன் முக்கிய பாத்திரங்கள் பின்னொரு நாளில் சந்தித்தால், என்னவாகும் என்று யோசித்ததின் விளைவு தான் இந்த 'சில நேரங்களில் சில மனிதர்கள்'. இந்த நாவல் சாகித்ய அகாடெமி விருது பெற்று, இதை அடைந்த இரண்டாவது தமிழ் எழுத்தாளர் என்ற பெருமை ஜெயகாந்தனுக்கு கிட்டியது. (முதல் எழுத்தாளர் மறைந்த திரு, 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி)

இது 1976-இல் திரைப்ப்டமாக எடுக்கப்பட்டு, A. பீம்சிங் இயக்கிய 'சில நேரங்களில் சில மனிதர்கள்' வணிகரீதியாகவும் வெற்றி பெற்றதாம். அதில் கங்காவாக நடித்த லக்ஷ்மி தேசிய விருது பெற்ற முதல் தமிழ் நடிகை என்ற புகழையும் பெற்றார்.

பின் குறிப்பு: சினிமா, புத்தகம், சொந்த அனுபவங்கள் குறித்த மற்றும் மொபைல் வீடியோக்கள் அடங்கிய எனது மற்ற பதிவுகளை www.maheshwaran.com என்ற இணையதளத்தில் படிக்கலாம்.

பஹ்ரைன் நாட்கள்

இனயம் நண்பர்களின் கபடி

பெண்கள் விரும்புவது...


திருமணமான பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?' அப்படிங்கற தலைப்பைப் பார்த்த உடனே, ஆஹா! நமக்குத் தேவையானதாச்சேனு படிச்சேன். படிச்சதும் இதைக் கண்டிப்பா, ப்ளாக்ல எழுதணும்னு தோணுச்சு. 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'..இனி படித்ததிலிருந்து...



               "அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் ' பேகோ அண்டர்கில் ' என்பவர், ' திருமணமான பெண்கள் விரும்புவது என்ன? ' என்ற கேள்விக்கு, " பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்புகின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் வெறுப்படைகின்றனர். இதற்கு வெறும் 25 விஷயங்களைச் செய்துவிட்டால் போதும் அவர்கள் உற்சாகமாக இருப்பர் " என்று அந்த 25 விஷயங்களைப் பற்றிக் கூறியுள்ளார். அவை:

1. கொழுப்பு குறைய வேண்டும் : உடலில் சதை போடுவது பெண்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. கொழுப்பு, சதையைக் குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.

2. சமையலைக் கணவர் பாராட்ட வேண்டும் : உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆஹா, ஓஹோ எனப் பாராட்ட வேண்டும். அவர்களும்  நன்றாக சமையலைக் கற்றுக்கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?

3. ஊமை அல்ல : வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக்கூடாது. சினிமாவில்தான் அப்படிப்பட்ட கதாப்பாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான் வாழ்க்கையில் மனைவியையும் சரிசமமாக நடத்த வேண்டும்.

4. ஆண்மகன் : சிறந்த ஆண்மகனாக, எல்லாராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்கவேண்டும். திறமையை வெளிப்படுத்துபவராக இருக்கவேண்டும்.

5. பொறுப்பு : காலையில் வேலைக்குச் செல்லும்போது, கண்ணாடி எங்கே? சாவி எங்கே? என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக்கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ளவேண்டும்.

6. கட்டுப்பாடு : உணவில் கட்டுப்பாடு வேண்டும். எப்போதும், ஏதாவது நொறுக்குத்  தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக்கூடாது.

7. விடுமுறை : விடுமுறை நாட்களில் விரும்பியபடி, ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக்கூடாது.

8. தொந்தரவு : எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் எனத் தொந்தரவு செய்யக்கூடாது.

9. உதவி : சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

10. பாராட்டு : 'இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது ...' எனப் பாராட்டவேண்டும்.

11. இளமை : நாம் எப்போதும் இளமையாக இருக்கமாட்டோம். அதை நினைவில் கொள்ளவேண்டும்

12. டிரைவிங் : கணவன் கார் ஓட்டும்போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும்போது கணவனோ, பின்சீட்டில் உட்காரக்கூடாது.

13. ஒத்துழைப்பு : குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால், மனைவியைத் திட்டக்கூடாது. குழந்தையைப் பராமரிக்கும்          பொறுப்பு இருவருக்கும் உண்டு.

14. நல்ல முடிவு : தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்கவேண்டும்.

15. சம உரிமை : வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை
ஆண்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

16. அவசரம்கூடாது : படுக்கைஅறையில் போர் அடிக்கும் வகையில் கணவன் நடந்து கொள்ளக்கூடாது.

17. ஆச்சர்யம் : வைரமோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண்களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளைக் கொடுத்தாலே போதும்.

18. புது டிரஸ் : ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்கமுடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை
எடுத்துக் கொடுக்கவேண்டும்.

19. குழந்தைகள் : நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்லவேண்டும். குழந்தைகளை அடிமைபோல் நடத்தக்கூடாது. இதில் கணவரின் பங்கு முக்கியம்.

20. பொருத்தம் : நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்கவேண்டும். உள்ளாடை வெளியே தெரியும்படி அவலட்சணமாக இருக்கக்கூடாது.

21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர் : ' ஐயோ... டெலிபோன் பில் அதிகமாகிவிட்டதே! ' எனக் கூச்சல் போடக்கூடாது.

22. சுற்றுலா : அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்லவேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.

23. சுத்தம் : படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும். அதேபோல், ஷெகேசில் உள்ள பொம்மைகள்,பொருட்களையும் சுத்தம் செய்யவேண்டும்.

24. சிக்கல் : பெண்களுக்கு தலைவலி வருவதே, டிரஸுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவவேண்டும்.

25. பொழுதுபோக்கு : சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் ,நண்பர் களுடன் விருந்துக்குச் செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்கவேண்டும். ' வேலை இருக்கிறது, 'டிவி' யை பார்த்துக்கொண்டு தூங்கு! ' என கணவர்கள் சொல்லக்கூடாது.

               பெண்கள் விரும்புவது இவ்வளவுதான்; இவற்றை நிறைவேற்றினாலே போதும். அந்தக் குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம்தான்" என்று சொல்லியிருக்கிறார்.
              சர்வே பண்ணி,அவர் சொல்லியிருக்கிற, இந்த இருபத்தஞ்சும் செய்ய வேண்டாம்.( அதிகமா ஆசைப் படல!!! ) இதுல இருந்து ஒரு சில விஷயங்கள மட்டும்கூட, இந்த ஹஸ்பண்ட்கள் பண்ணினாப் போதும்; நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம்..அப்படித்தான??

டெசிபல் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

டெசிபல் என்பது ஒலியின் தீவிரத்தை குறிக்கும். Sir Alfred  Decibal என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.



நிகழ்ச்சி (நிகழிடம்)
டெசிபல்
குண்டூசி விழுதல் 
2
இலைகளின் சலசலத்தல் 
5
மூச்சு விடுதல் 
10
இதயத் துடிப்பு 
15
ஒலிபரப்பு அறை
20
முணுமுணுத்தல் 
20-30
பூனை சீறுதல் 
25
கடிகார டிக் டிக் ஓட்டம் 
30
(பொறுமையாக) உரையாடல் 
35-60
வாகனப் போக்குவரத்து 
50-90
டெலிபோன் மணி 
60
ஏர் கண்டிஷன் மிஷின் 
60
உணவு விடுதி 
60-70
அலுவலகம் 
60-80
அலாரம் அடித்தல் 
70-80
குழந்தைகள் விளையாடுதல் 
60-80
நாய் குரைத்தல்
65
கார் ரேசிங் 
80-95
கத்துதல் 
90
நயாகரா நீர்வீழ்ச்சி 
90
மோட்டார் சைக்கிள்
100
சிம்ம கர்ஜனை 
105-110
இடி
110
ஜெட் 1000 அடியில் 
110
டிஸ்கோ சவுண்ட் 
110-117
சைரன் சவுண்ட்
150
ராக்கெட்
170-180