Friday, December 9, 2011

குப்பைகளுக்குள்ளிருக்கும் ரகசியங்கள்








இங்கிலாந்தில் மார்க்கெட்டிங் உள்பட பல துறைகளில் முக்கிய தகவல்களை திரட்டுவதற்காக குப்பையை பொறுக்கும் வேலையை அரசே செய்து வருகிறது. 

பொதுவாக வீடுகளில் வீசப்படும் குப்பைகள், லாரிகள் மூலம் கிடங்குகளுக்கு எடுத்து செல்லப்படும். அங்கு அழிக்கப்படும். இந்த வேலையை சற்று வித்தியாசமாக செய்கிறது இங்கிலாந்து அரசு. வீடுகளின் குப்பையில் கிடக்கும் பேப்பர், பாலிதீன் கவர், கிறுக்கிவிட்டு தூக்கி போட்ட பேப்பர், சிப்ஸ் உறை.. என ஒன்று விடாமல் எல்லாவற்றையும் பொறுக்கி எடுக்கிறார்கள். பெரும்பாலும் இந்த வேலையில் அதற்கான அதிகாரிகளே ஈடுபடுகிறார்கள். குப்பை அதிகமானால், அவுட்சோர்சிங் முறையில் ஆட்களை வரவழைத்து இந்த வேலையை முடிக்கின்றனர்.

முதலில், வீடுகளில் இருந்து கழிவுகளாக தூக்கிவீசப்படும் குப்பைகள் தெருவாரியாக சேகரிக்கப்படுகின்றன. பின்னர் இவற்றை உணவு பொருள் உறை, பழைய பேப்பர், எழுதிய பேப்பர் என்பது போல 13 வகையாக பிரிக்கின்றனர். அதை 52 இனங்களில் தரம் பிரிக்கும் பணி 2-வது கட்டமாக நடக்கிறது. எந்த வகையான உணவு வகைகள் அதிகம் விற்பனை ஆகின்றன, எதை மக்கள் அதிகம் மிச்சம் வைக்கின்றனர், எந்த வகையான பொருட்களை எங்கு வாங்குகின்றனர்.. என்பது போன்ற பல முக்கிய தகவல்கள் இந்த குப்பைகள் வாயிலாக சேகரிக்கப்படுகின்றன.

இதன்மூலம், மக்கள் எந்த பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர் என்று கணக்கிடப்பட்டு, அவை தாராளமாக சப்ளை செய்யப் படுகின்றன என்கின்றனர் அதிகாரிகள். வீடுகளில் எந்த குப்பை அதிகம் சேருகிறது என்பதை தெரிந்துகொண்டு இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்தகவல்கள் பயன்படுகின்றன என்றும் கூறுகின்றனர். கடந்த ஆண்டில் 30 ஆயிரம் வீடுகளின் குப்பைகளில் இருந்து முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இப்பணியில் 40-க்கும் அதிகமானோர் ஈடுபட்டனர். அரசு சார்பில் இயங்கும் பிரத்யேக கவுன்சில் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டத்துக்கு எதிர்ப்பும் இல்லாமல் இல்லை. இதுபற்றி ‘பிக் பிரதர் வாச்’ மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் இயக்குனர் நிக் பிக்கல்ஸ் கூறுகையில், ‘‘குப்பையில் இருந்து பயனுள்ள தகவல்கள் கிடைப்பது உண்மைதான். அதே நேரம், இந்த பணி தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதாக இருக்க கூடாது. மருந்து சீட்டு, மாத்திரைகள் சாப்பிடும் விவரம் போன்ற பேப்பர்களை ஆராய ஆரம்பித்தால், அது மனித உரிமை மீறலாகும்’’ என்றார்.

No comments:

Post a Comment