Friday, December 9, 2011

சீனாவும் இந்தியாவின் பகை நாடுதான்

'பாகிஸ்தான் போல சீனாவும் இந்தியாவின் பகை நாடுதான்' என்கிற வாதம், '7ஆம் அறிவு' படத்துக்குப் பிறகு, தமிழகத்தில் இன்னும் வலுப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், ''என்னைப் பொறுத்த வரை அப்படியெல்லாம் எதையும் நான் உணரல... என் னோட சீன ட்ரிப்ல'' என்கிறார், அனுஷா!

சென்னையிலுள்ள 'மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்' கல்லூரியில், சோஷியல் வொர்க்கை முதுநிலை பாடமாக (MSW) எடுத்துப் படித்துக் கொண்டிருக்கும் அனுஷா, சமீபத்தில் 'இயர் ஆஃப் இந்தியா - சீனா யூத் எக்சேஞ்ச் 2011’ புரோகிராமுக்காக சீனா சென்று... கலாசாரம், அன்பு, பண்பாடு, ஆலோசனைகள் என்று அந்த மக்களுடன் பகிர்ந்து வந்திருக்கும் கோவைப் பெண். கொங்குத் தமிழில் வெளிப்படும் செறிவான பேச்சு... ரசிக்க வைக்கிறது அனுஷாவை.

''ஒவ்வொரு பாராட்டும், வாய்ப்பும் கிடைக்கறதுக்குப் பின்ன... நம்மோட உழைப்பு, நம்பிக்கை, உந்துசக்தினு நிறைய இருக்கும். சீன வாய்ப்பும் அப்படித்தான். என்.எஸ்.எஸ். ஸ்டூடன்ட்டா... கருத்தாவும், செயலாவும் வெளிப்படுத்தின என்னோட சமூக அக்கறைக்குக் கிடைச்ச பரிசு இது!'' என்று பளிச்சென ஆரம்பித்த அனுஷா,

''பி.காம். வரைக்கும் கோயம்புத்தூர்லதான் படிச்சேன். மாஸ்டர் டிகிரிக்காக மூணு மாசமா சென்னைவாசம் பழகிட்டு இருக்கேன். கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் காலேஜில் பி.காம். படிச்சப்போ சமூக விழிப்பு உணர்வுக்காக நேரம் செலவிடுறது நான் ஆர்வமாகும் விஷயம்.
என்.எஸ்.எஸ். ஸ்டூடன்ட்டா இருந்ததால, ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து வீட்டிலிருந்து 60, 70 கிலோ மீட்டர் தூரத்துல இருக்கிற ஊர்களுக்குப் போய், விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவோம். குழந்தைகள், பெண்களுக்கு பல விஷயங்களிலும் விழிப்பு உணர்வும், ஆலோசனைகளும் நிறைய தேவைங்கறதால, அவங்களையே இலக்காக்கினோம்.

ஒரு ஊரைத் தேர்ந்தெடுத்து, வீதி, பள்ளிக்கூடத்தைச் சுத்தப்படுத்துறது, காடுகளை வெட்டி சீராக்குறதைவிட, ஊர் மக்களை நேரடியா அணுகணும். நம்ம கேம்ப்புக்கு பிறகு, அவங்க தங்களோட இயல்பு வாழ்க்கையில் இருந்து ஒரு படியாவது முன்னேறி இருக்கணும். அதுதான் கேம்ப் நடத்தினதால விளைஞ்ச பயன்னு நினைக்கறவ நான்!'' - இத்தகைய அக்கறைதான் பெங்களூருவில் நடந்த 'சௌத் ஸோன் ப்ரீ ரிபப்ளிக் டே கேம்ப்'-க்கு அனுஷாவை அழைத்துச் சென்று இருக்கிறது. அதில் சிறந்த மாணவியாகத் தேர்வாகி, டெல்லி, குடியரசு தின விழா பரேட் கேம்ப் சென்ற அனுஷா, 'பெஸ்ட் ஹீரோயின் ஆஃப் தி கேம்ப்’ பட்டத்தை வென்றதன் மூலம் சீன வாய்ப்பையும் பெற்றிருக்கிறார்!

''கைத்தொழில் சார்ந்த கலைகளை கிராமப் பெண்களுக்கு கத்துக் கொடுப்போம். சுகாதார விழிப்புஉணர்வு பற்றியும் நிறைய பேசுவோம். குழந்தைகளோட படிப்பு, எதிர்காலத் தேவைகளுக்கான சேமிப்பு, வேலைவாய்ப்புனு நிறைய ஆலோசனை தருவோம்.

சீனப் பயணத்துலயும், அங்க உள்ள கிராமங்கள்ல இதையெல்லாம் பேசினேன். கடமைக்காக செய்யாம, ஒவ்வொருத்தர்கிட்டயும் கைப்பிடிச்சு பேசினதால், அவங்க எல்லாரும் என்னைக் கொண்டாடினாங்க... கேம்ப் ஆபீசர்ஸ், சக ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் பாராட்டினாங்க.

சீனாக்காரங்ககிட்ட இருந்தும் பெண்களுக்குத் தேவையான தைரியம், ஒரு தனிப் பெண்ணா பிரச்னைகளை எதிர்கொள்ளும் லாகவம்னு நிறைய கத்துக்க முடிஞ்சது. அவங்கள்லாம் ரொம்ப அன்பானவங்களா இருந்தாங்க. இந்தியாவுல பலரும் நினைக்கிற மாதிரியான 'எதிரி’ங்கிற கட்டத்துக்குள்ள வெச்சு என்னால அவங்கள பார்க்க முடியலை. மக்கள், எல்லா நாட்டிலும் மக்களாதான் இருக்காங்க. அரசியல்வாதிகளும், ஆள்பவர்களும்தான் அவங்களை வெச்சு கேம் விளையாடுறாங்க!''

- தேசங்கள் கடந்த நேசம் யாசிக்கிறார் அனுஷா.

தேசிய அளவில் என்.எஸ்.எஸ்-ஸில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் 'இந்திராகாந்தி என்.எஸ்.எஸ். அவார்ட்' இந்த வருடம் மிக சமீபத்தில் வந்து சேர்ந்திருக்கின்றது அனுஷா வுக்கு.

''ஹிந்தியில் மட்டுமே இருக்கிற என்.எஸ்.எஸ். கீதத்தை, தமிழ்ல மொழிபெயர்த்திருக்கேன். அரசாங்கத்தோட அனுமதிக்காக அதன் துறை சார்ந்த அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பி யிருக்கேன். அங்கீகாரம் கிடைச்சுடுச்சுனா, அதைவிட பெரிய சந்தோஷம் வேறெதுவும் இல்ல!''

- பனி படர்வதைப்போல் முகமெல்லாம் சந்தோஷம் படர்ந்திருந்தது அனுஷாவுக்கு!

No comments:

Post a Comment