Tuesday, December 6, 2011

ஐஞ்சு எலியை அலையவிடும் செல்போன் கடை !

விளம்பரத்தில் நடித்துக் கொடுத்ததற்கான பணத்தை கொடுக்காமல் நடிகை அஞ்சலியை பிரபல செல்போன் கடையொன்று இழுத்தடித்து, அலைய விட்டுக் கொண்டிருக்கிறது. பொறுத்துப் பொறுத்து பார்த்த அஞ்சலி, தனது சம்பளத்தை பெற்றுத்தரும்படி கோர்ட் உதவியை நாடியிருக்கிறார். 
தம்பி வெட்டோத்தி சுந்தரம் படம் லாபகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் சந்தோஷத்தில் இருக்கும் அஞ்சலியை பழைய பாக்கி ஒன்று பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. பாக்கி வைத்தவர்கள் மீது சட்டையை பிடித்து உலுக்காத குறையாக ஆத்திரப்பட்டிருக்கிறார்.

அஞ்சலி நடிக்க வந்த ஆரம்பத்தில், ஒரு மொபைல் ஷாப் விளம்பரத்தில் நடித்துக் கொடுத்தார். இதற்காக ஐந்து லட்சம் சம்பளம் பேசிய கம்பெனி, அதில் 46 ஆயிரம் ரூபாயை மட்டும்தான் கொடுத்திருந்ததாம். 
அதன்பின் தர வேண்டிய மீதி தொகையை தராமல் இத்தனை காலம் இழுத்ததடித்ததோடு அல்லாமல், விளம்பரத்தையும் கடந்த ஐந்து வருடங்களாக பயன்படுததி வருகிறது. பொறுத்து பொறுத்து பார்த்த அஞ்சலி, அவர்களிடமிருந்து 20 லட்ச ரூபாயை பெற்றுத் தரும்படி கோர்ட் உதவியை நாடியிருக்கிறார்.

ரயில்வேயின் கவனத்துக்கு..! -


நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு செல்ல ரயிலில் முன்பதிவு செய்திருந்தோம். பயண நாளன்று, ஸ்டேஷனுக்குச் சென்றபோது, 'அந்த வண்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. டி.வி., பேப்பர்களில் அறிவித்துள்ளோம்' என்று சொல்லி, கட்டணத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டனர்.

உடனடியாக மணியாச்சி அல்லது மதுரை சென்றாலும், முன்பதிவு இல்லாமல் வேறு ரயில்களில் பயணிப்பது சிரமமான விஷயம். வயதானவர்கள், குழந்தைகளை வைத்துக் கொண்டு, ரொம்பவே சிரமப்பட்டோம்.

முன்பதிவு விண்ணப்பத்தில் முகவரி, தொலைபேசி எண் எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்திருக்கும் இக்காலத்தில், எஸ்.எம்.எஸ். மூலமாகவாவது தகவலை அனுப்பி இருக்கலாம் அல்லது மாற்று ஏற்பாடு செய்து இருக்கலாமே ரயில்வே நிர்வாகம்!

பின்குறிப்பு: நாமும் பயணத் தேதிக்கு சில தினங்களுக்கு முன்பாகவே, இதுபோன்ற விஷயங்களை உறுதி செய்துகொள்வது அவசியம்!

கொலைவெறி பாடல் வெளிவராத சுவாரஸ்யமான தகவல்கள்!!

தனுஷ் நடிப்பில், அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்குநராக அவதரித்து இருக்கும் படம் 3. தனுஷ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். புதுமுகம் அனிருத் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தின் சூட்டிங் நடந்து வரும் வேளையில், சில வாரத்திற்கு முன்னர் இப்படத்தில் இருந்து சிங்கள் டிராக் ஆடியோவை ரிலீஸ் செய்தனர். வொய் திஸ் கொலைவெறி, கொலைவெறி... என ஆரம்பிக்கும் இப்பாடலை ஆங்கிலம் கலந்த தமிழில் தனுஷே எழுதி பாடியிருக்கிறார். 
ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 10லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தபாடலை கேட்டு ரசித்துள்ளனர். மகளிர் அமைப்பினர் உள்ளிட்ட சிலர் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பலரையும் இந்த பாடல் ரொம்பவே கவர்ந்துள்ளது. லட்சக்கணக்கான பேர் விரும்பி, ரசித்து பார்த்த கொலைவெறி பாடலுக்கு பின்னால் பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. அது என்னவென்று படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தே கூறியுள்ளார். இதோ...

21வயது நிரம்பிய அனிருத்தின் கனவு, ஏக்கம் எல்லாமே இசை தானாம். சென்னை லயோலா கல்லூரியில் இந்தாண்டு தான் பி.காம் முடித்துள்ளார். இந்த இளம்வயதில் எப்படி உங்களுக்குள் இசை, ஆர்வமும், ரசிகர்களின் ரசனையும் புரிந்தது என்று கேட்டால், சிறு வயது முதலே எனக்கு இசை ஆர்வம் அதிகம். சந்தியா என்ற டீச்சரிடம் வெஸ்டன் மியூசிக் கற்றுக்கொள்ள தொடங்கினேன். அப்படியே தொடர்ந்து பியானோ உள்ளிட்ட பல்வேறு இசை கருவிகளையும் கற்றுக்கொண்டேன். படித்து கொண்டு இருக்கும்போதே பல விளம்பர படங்களுக்கு இசை சேர்ப்பு செய்திருக்கிறேன். இது எனக்குள் உள்ள இசை ஆர்வத்தை மேலும் தூண்டியது.

சரி, ஐஸ்வர்யா தனுஷின் முதல்படமான 3 படத்தில் எப்படி உங்களுக்கு வாய்ப்பு வந்தது என்று கேட்டால், நான், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் மூவருமே நன்கு அறிமுகமானவர்கள் தான். அவர்களுடன் நிறைய குறும்படங்களில் வேலை பார்த்துள்ளேன். அதன் அடிப்படையில் என்னை இந்தபடத்திற்கு இசையமைக்க தேர்வு செய்தனர். அது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. எங்க மூவரின் கூட்டணி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஜாலியான மூடில் தான் எப்பவும் ‌ஒர்க் பண்ணுவோம் என்றவரிடம், கொலைவெறி பாட்டு எப்படி கம்போஸ் பண்ணினுங்கே, தனுஷ் எப்படி டியூன் கேட்டு பாடல் வரிகள் எழுதி பாடினார் என்று கேட்டதற்கு, சொன்னா நம்பமாட்டிங்க சும்மா மியூசிக் கம்போஸ் பண்ணிகிட்டு இருந்தேன். அப்போ தனுஷ் திடீர்னு மைக் முன்னாடி வந்து நின்று பாடல் வரி கூட எதுவும் எழுதாமல் மியூசிக் கேட்டு பாட ஆரம்பச்சுட்டாரு. எல்லாமே தனுஷ் போட்ட வரிகள் தான். அதில் தமிழ், ஆங்கிலம் மிக்ஸ் பண்ணி எழுதி, பாடி இருக்கிறார். ஐஸ்வர்யாவுக்கும் இந்தபாட்டு ரொம்ப பிடிச்சுபோக இந்தபாட்டை உருவாக்கினோம். ஆனா அப்போ எங்களுக்கு தெரியாது. இந்தபாட்டு இவ்வளோ பெரிய ஹிட்டாகும் என்று. இளைஞர்கள் விரும்பி கேட்பாங்கனு நினைச்சோம். ஆனா எல்லா வயசுக்காறங்களும் இந்தபாட்டு ரசிக்கிறாங்க. தமிழ்நாட்டுல மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இந்தபாடல் ஹிட்டாகியுள்ளது. இதனால் எங்க டீமே ரொம்ப சந்தோஷமா இருக்கோம் என்றார்.

3 படத்தில் மொத்தம் 10 பாட்டு இருக்காம். அதில் ஒரு பாடல் ரீ-மிக்ஸ் பாடலாம். முதல்முறையாக தனுஷ், ஸ்ருதியுடன் சேர்ந்து ஒரு டூயட் பாட்டு பாடியிருக்கிறாரம். இதுதவிர கிளப் சாங்கை அனிருத்தும், மற்றொரு பாடலை முன்னணி பிரபல பாடகர்களும் பாடியிருக்கிறார்களாம். அதுமட்டுமல்ல ஏர்டெல் சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்ற இருவருக்கு இந்த படத்தில் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார்களாம். இளம் நடிகர், நடிகை, டைரக்டர், இசையமைப்பாளர், பாடகர்கள் என படம்முழுக்க மொத்தமும் சிறு வயது ஆட்‌களே.

முதல்படத்தின் பாடல்களே வெளிவராத நிலையில் படத்தில் உள்ள ஒரு பாடல் மட்டும் சூப்பர் ஹிட்டாகியிருப்பது அனிருத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவரைத்தேடி பாலிவுட் அழைப்புகளும் வந்துள்ளன. பாலிவுட்டின் பெரிய சினிமா கம்பெனிகள் இரண்டு தங்களின் படத்திற்கு இசையமைக்க இவரை அணுகியுள்ளது. ஆனால் இப்போது 3 படத்தில் அனிருத் பிஸியாக இருப்பதால், அதை முடித்த பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார். 

கொலைவெறியின் வெற்றி, அனிருத்துக்கு உலக அளவில் ஒரு பெரிய திருப்பத்தை உண்டு பண்ணியிருக்கிறது என்றால் அது மிகையல்ல!!

ஐஐடி மாணவர்களின் தொடர் தற்கொலைகள்-கவர் ஸ்டோரி

உயர்கல்வி தனியார்மயமாக்கலின் விளைவும், கடோட்கர் குழு அறிக்கையும் !

தொடர்ச்சியாக​ கடந்த​ சில​ மாதங்களில் ஐஐடிக்களில், குறிப்பாக​ பார்ப்பன​ மேலாண்மை தலைவிரித்தாடும் ஐஐடி கான்பூரிலும் சென்னையிலும் நடக்கும் மாணவர் தற்கொலைகள், செய்தி ஊடகங்களையும், பொதுமக்களையும், ஏன் விட்டேத்தியான இந்த​ அரசையும் கூட மாணவர் தற்கொலைக்கான​ காரணங்களை நோக்கி சற்று தலை திருப்ப​​ வைத்துள்ளது. 2011 மே மாதம் 4-ஆம் தேதி, ஐஐடி சென்னையில் எம்டெக் மாணவன் நிதின் குமார் ரெட்டி விடுதியில் தற்கொலை செய்துகொண்டதும், அதன்பின் இதுகுறித்து நடந்த​ போராட்டங்களும், விவாதங்களும் அனைத்து முதலாளித்துவ​ ஊடகங்களாலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இரண்டாமாண்டின் இறுதியில் முடிக்கப்படவேண்டிய​ பிராஜெக்ட்டை அடுத்த​ ஆறு மாதங்களுக்கு நீட்டித்ததால் ஏற்பட்ட​ மன​ உளைச்சலே இந்த​ தற்கொலைக்கு காரணமாக​ ஊடகங்களால் பேசப்பட்டது. கடந்த​ ஒருவருடத்தில் இதே காரணத்தால் 2010 மே மாதம் சந்தீபும், 2011 பிப்ரவரியில் அனூப் வலப்பாரியாவும் தற்கொலை செய்தபோதும், நிதின் குமாரின் தற்கொலைக்கு மட்டும் இவ்வளவு ஊடகக் கவனஈர்ப்பு கிடைத்தது யதேச்சையாக​ நடந்துவிடவில்லை. ஏழை மாணவனான சந்தீபின் தற்கொலையை காவல்துறையின் உதவியுடன் ஒரு பத்தி செய்தியாக​ மறைத்தது போல், DRDO இயக்குனரின் மகனான​ நிதினின் தற்கொலையை மூடிமறைக்க​ ஐஐடி நிர்வாகத்தால் முடியவில்லை.
2008-ல் சிஃபி வெளியிட்ட​ செய்தியில் 2005-2008 ஆம் ஆண்டிற்குள் ‘கல்விசார் நிர்பந்தத்தால்’ ஐஐடி கான்பூரில் மட்டுமே ஏழு தற்கொலைகள் நடந்ததாகக் கூறுகிறது. 2008-ல் நடந்த​ ரித்திகா தோய​ சாட்டர்ஜி என்ற எம்டெக் மாணவியின் தற்கொலையின் போதே ஐஐடி நிர்வாகத்தின் ரகசியத் தன்மை வாய்ந்த​ மாணவர் தர​ மதிப்பீட்டு முறை (grading system) மற்றும் மாணவர் குறை தீர்க்கும் அமைப்பின் (grievance forum) கேவலமான​ நிலை குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது.

கல்விசார் நிர்பந்தங்களினால் நடக்கும் தற்கொலைகளுக்கு இணையாக ஐஐடிக்களில் நடக்கும் சாதிய​ ஒடுக்குமுறையாலும் ஏழை தலித் மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள். பிப்ரவரி 2011-ல் நடந்த​ ஐஐடி ரூர்க்கி மாணவன் மனீஷ் குமாரின் தற்கொலை இதற்கு மிக​ சமீபத்திய​ உதாரணம். ஐஐடி நிர்வாகம் மாணவர்களின் உணர்ச்சிவயப்படும் தன்மையும் மன​ அழுத்தமுமே தற்கொலைக்கான​ காரணமாகக் கூறுகிறது. ஐஐடி சென்னையின் மாணவர்களுக்கான​ நிர்வாக​ முதல்வர் (Dean of Students) கோவர்த்தன், தற்கொலை செய்த​ நிதினைப்பற்றிக் கூறும்போது, அவர் பள்ளிப்பருவத்திலிருந்தே மன அழுத்ததால் பாதிக்கப்பட்டவர் என​ சேறடித்தார்.

இதற்கு முன்னும் 2010-ல் ஐஐடி கான்பூரில் ஸ்நேஹல் என்ற​ பிடெக் மாணவி தற்கொலை முயற்சி செய்ததற்கு அம்மாணவியின் மனநிலையை காரணங்காட்டினார் அதன் பதிவாளர் கஷேல்கர். டெக்கான் குரோனிக்கிளில் வந்த​ நிதின் குமாரின் தற்கொலை செய்திக்கு பின்னூட்டமிட்டிருந்த​ நிதின் குப்தா என்பவன் இதற்கெல்லாம் ஒருபடி மேலேபோய், ஒரு நடைபாதைப் பயணி மேல் கார் ஏற்றிச் சென்றால் அதெப்படி டிரைவரின் குற்றமாகாதோ அது போலவே நிதின் குமாரின் தற்கொலைக்கும் ஐஐடி நிர்வாகம் பொறுப்பல்ல​ என்கிறான். இதற்கு டார்வினின் “தக்கன பிழைத்து வாழ்தலை” (survival of the fittest) உதாரணம் காட்டுகிறான்.

இன்னொரு பக்கம் ஐஐடி நிர்வாகமோ மாணவர்களை குஷிப்படுத்தி தற்கொலை எண்ணத்தைப் போக்க​ ஒரு தலைமை மகிழ்ச்சி அதிகாரியை (Chief Happiness Officer!?!?!?) முழுநேரமாக​ நியமித்துள்ளது. இச்சூழலில், கடந்த​ ஐந்து வருடங்களில் மட்டும் ஐஐடிகளில் நடந்த​ மொத்த​ மாணவர் தற்கொலைகளின் எண்ணிக்கை 15-ஐத் தாண்டும் போது, இதன் பின்னணியை தனிநபர் பிரச்சினையாகவன்றி சமூகப்பொருளாதார​ நோக்கில் ஆராய​ வேண்டியுள்ளது.
தற்கொலைக்கு தூண்டும் சமூகப் பொருளாதாரக் காரணிகள்

காட்ஸ் (GATT) மற்றும் டப்ளியூடிஓ (WTO)-ன் பரிந்துரைப்படி, உயர்கல்வியை பண்டமயமாக்கும் முகமாகவும் உலகசந்தையின் மனிதவளத் தேவையை பூர்த்தி செய்யவும், இந்திய​ அரசு உயர்கல்வியில் உட்கட்டுமான​ சீர்த்திருத்தங்களை கொண்டுவருகிறது. இச்சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தி சோதனை செய்வதன் முதற்கட்டமாக​, ஐஐடிக்களை அரசு-தனியார் கூட்டு (Public-Private Partnership) கல்வி நிறுவன​ மாதிரிகளாகவும் அதேநேரம் NIT, ISER, பல்கலைக்கழகங்கள் போன்ற​ உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளில் வட்டார​ அளவில் ஆதிக்கம் செலுத்தும் அமைப்பாகவும் ஆக்கும் பொருட்டு, கடந்த​ பத்தாண்டுகளில் மனிதவள​ மேம்பாட்டுத்துறையின் கீழியங்கும் 15 ஐஐடிகளிலும், நிதிசார் (financial autonomy) தன்னாட்சியை பகுதியளவிலும், கல்விசார் தன்னாட்சியை (academic autonomy) முழுவதுமாகவும் அமுல்படுத்தப்பட்டுவருகிறது.

நிதிசார் தன்னாட்சியென்பது மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் போன்றவற்றை நிர்ணயித்தல், மாணவர்களுக்கான விடுதி, ​ உணவகங்கள் மற்றும் அங்காடிகளின் நிர்வாகம், உட்கட்டுமானம், பிற​ நிறுவனங்களிடம் பெற்றுக் கொள்ளும் நன்கொடை போன்றவற்றில் அரசின் தலையீடின்றி நிர்வாகக் குழுமத்தின் (Board of governance) நேரடியாட்சிக்குட்பட்டிருப்பது போன்றவற்றைக் கூறலாம். ஆனால் ஆசிரியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் காப்பீடு, மாணவர்களுக்கான​ கல்வி உதவித் தொகை, உட்கட்டுமானத்திற்கான​ நிதி ஒதுக்கீடு, நிறுவன உபரிநிதியை முதலீடு செய்வது போன்றவற்றில் மைய அரசின் பங்களிப்பு மற்றும் தலையீடு, முதன்மை தணிக்கை ஆய்வாளரின் தணிக்கைக்கு உட்பட்ட​ நிறுவன​ வரவுசெலவுகள் போன்றவை நிதிசார் ஆட்சியின் ஒருபகுதியை இன்னும் மைய​ அரசின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.

கல்விசார் தன்னாட்சியென்பது, பாடத் திட்டங்களை வடிவமைப்பது, புதிய​ பாடப்பிரிவுகளை அறிகமுகப்படுத்துவது, மாணவர் சேர்க்கைக்கான​ தகுதிகளை நிர்ணயிப்பது, ஆசிரியர் நியமனம் மற்றும் பதவி உயர்விற்கான​ தகுதிகளை தீர்மானிப்பது போன்றவற்றில் அரசின் தலையீட்டை முழுவதுமாக​ நீக்கி, முழுக்க​ முழுக்க​ நிர்வாகக் குழுமத்தின் நேரடி ஆட்சிக்கு ஒப்படைப்பதாகும். இக்குழுமத்தின் உறுப்பினர்களாக​ இருந்து ஆட்சிசெய்வது, கல்வியாளர்களான ஐஐடிக்களின் ​ மூத்த​ பேராசிரியர்களே. இந்த தன்னாட்சி அமைப்பு கல்விசார் புலத்தில் பேராசிரியர்களுக்கு வரைமுறையற்ற​ அதிகாரத்தை வழங்கியுள்ளது.

இதனால் ஒரு மாணவனின் எதிர்காலம் பட்டப்படிப்பின் இறுதியாண்டில் ஆய்வு வழிகாட்டியாக​ (project guide) இருக்கும் குறிப்பிட்ட பேராசிரியரை மட்டுமே சார்ந்துள்ளது. அதுபோல​ ஐஐடிக்களை பொறுத்தவரை பாடத்திட்டம் பற்றிய​ மையப்படுத்தப்பட்ட​ விதிமுறைகளில்லை. உதாரணமாக​ பல​ துறைகளிலும் கடைசி செமஸ்டரில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வேட்டையும் (thesis) வாய்மொழித்தேர்வையும் (viva voce) பொறுத்தே மாணவனுக்கு கிரேடு (grade) வழங்கப்படுகிறது. ஆனால் ஒருசில​ துறைகளில் ஒரு எம்டெக் மாணவன் ஆய்வு முடிவுகளை ஏதாவது ஆய்விதழில் (journal) வெளியிட்டாலன்றி அம்மாணவனுக்கு வாய்மொழித்தேர்வு நடத்தமாட்டார்கள். வாய்மொழித்தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு மட்டுமே எஸ் (S) அல்லது ஏ (A) கிரேடு வழங்கப்படும். மற்ற​ மாணவர்களுக்கு பி (B), சி (C) கிரேடுகள் வழங்கப்பட்டு பட்டமளிக்கப்படும்.

ஒரு மாணவன் எடுக்கும் உயர்ந்த​ கிரேடைப் பொறுத்தே கார்ப்பரேட் நிறுவனங்கள் அவனுக்கு வேலை வாய்ப்பளிக்கின்றது. இந்த​ மாதிரி துறை சார்ந்த​ மையப்படுத்தப்படாத விதிமுறைகளினால், ஒரு மாணவனை குறிப்பிட்ட​ ஆய்வுவழிகாட்டி அறிவு சுரண்டல் செய்யும் போது அதை புரிந்து கொள்வதற்கோ, புரிந்தாலும் அச்சுரண்டலை எதிர்த்து அம்மாணவன் கேள்வி கேட்கவோ முடியாத​ சூழலே இங்கு நிலவுகிறது. இதையெல்லாம் தாண்டி ஒரு மாணவன் தனது பாடம் சார்ந்த​ காரணங்களுக்காகவோ அன்றி மாணவர்கள் அன்றாடம் அனுபவிக்கும் விடுதி அல்லது நிறுவனம் சார்ந்த​ பிரச்சனைகளுக்காகவோ​ நிர்வாகத்திடம் முறையீடு செய்தால் அவனது ஆய்வுவழிகாட்டியாலே மிரட்டப்படுவான். இது அவனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் கிரேடில் கைவைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

ஐஐடி போன்ற​ உயர்கல்வி நிறுவனங்கள் இன்னும் பார்ப்பனர்களின் கோட்டையாக​ உள்ள நிலையில், ஆசிரியர் நியமனத்தில் நிகழும் பார்ப்பன​ மேலாண்மை காரணமாக,​ மெரிட்டிலோ, இட​ஒதுக்கீட்டிலோ படிக்க​ வரும் பார்ப்பனரல்லாத​ மாணவனின் கிரேடைத் தீர்மானிப்பதில் அவனது சாதியும் முக்கிய​ பங்களிக்கிறது. (டாக்டர் உதய் சந்த் என்பவர் மனிதவள மேம்பாட்டுத் துறையிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவலடிப்படையில் உயர்கல்வித்துறை ஆசிரியர் நியமனத்தில் மைய அரசால் எஸ்டி எஸ்சிக்கு வழங்கப்பட்டுள்ள​ 22.5% இடஒதுக்கீட்டில் இதுநாள்வரை வெறும் 5.03% மட்டுமே அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழக​ மானியக்குழு வலியுறுத்தும் எஸ்டி எஸ்சிக்கான பிரதிநிதித்துவம் எந்த​ ஐஐடி நிர்வாகத்திலும் வழங்கப்படவில்லை.) இதனால் ஒரு மாணவன் தான் சந்திக்கும் பிரச்சனைகளுக்காக​ தனது பேராசிரியர்களையோ நிர்வாகத்தையோ அணுகுவது குதிரைக் கொம்பாகிறது.

பொதுவாக​ ஐஐடியில் நுழைவதே கௌரவமாகவும் அதற்குமேல் வேலைக்கான உத்தரவாதமாகவும் பெற்றோர்களாலும் பொதுமக்களாலும் பார்க்கப்படுகிறது. இந்த​ பொதுப்புத்தி, பட்டப்படிப்பு முடித்ததும் கார்ப்பரேட் கம்பெனிகளில் கிடைக்கப்போகும் வேலை உத்தரவாதத்தைப் பற்றியும் வெளிநாட்டு சொகுசு வாழ்க்கை பற்றியும் கனவுகளை மாணவனுக்குள் உருவாக்கிறது. ஐஐடி மாணவர்களில் 80%ற்கும் மேலானோர் வங்கிக்கடனை நம்பி படிக்கும் நடுத்தர​ வர்க்கத்தினர். பட்டப்படிப்பை முடித்ததும் இக்கடனை திருப்பி செலுத்த​ வேண்டிய​ நிர்பந்தமும் அம்மாணவனுடைய​ உடனடி வேலைத் தேவைக்கு காரணமாகிறது. ஒரு மாணவன் பட்டப்படிப்பை முடிப்பதில் தாமதம் ஏற்படும் போதும் அல்லது குறைந்த​ கிரேடுகளுடன் பட்டம் பெறும்போதும் கார்ப்பரேட் கம்பெனிகளில் கிடைக்கப்போகும் வேலை பற்றிய​ அவனது ஆகாயக்கோட்டை தகர்கிறது. வங்கிக்கடனின் சுமைவேறு அழுத்துகிறது.

இந்த​ கல்விமுறை மாணவனுக்கு சமூகம் சார்ந்த​ எந்த​ புரிதலையும் உருவாக்கிக் கொடுக்காமல் இருப்பதும், சமூக​ யதார்த்தங்களிலிருந்து அன்னியப்பட்ட​ நடுத்தர​ வர்க்கப் பின்னணியும், அம்மாணவன் பட்டப்படிப்பை முடிப்பதில் சிக்கல் ஏற்படும் போது அதை தனக்கு மட்டுமே உரிய​ பிரச்சனையாகப்பார்ப்பதும், அவனது சமூகப்பொருளாதார​ நிலைமைகளுமே அவனை தற்கொலைக்குத் தூண்டுகிறது.
ஆய்வுமாணவர்களின் பரிதாபநிலை

இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களின் நிலையே இப்படியென்றால் ஆய்வுமாணவர்களின் நிலை மிகப் பரிதாபத்துக்குரியதாக​ இருக்கிறது. ஐஐடியில் பொறியியல் துறைகளில் முனைவர் பட்டம் மேற்கொள்ள​ ஐஐடி நுழைவுத் தேர்வு மற்றும் நேரடித் தேர்விலும், அடிப்படை அறிவியல் துறைகளில் சேர​ நெட் (NET), கேட் (GATE) போன்ற​ தேர்வுகளில் தகுதியடைந்திருப்பதுடன் ஐஐடித் தேர்வுகளிலும் வெற்றி பெறவேண்டும். இந்தியாவில் உயர்கல்வித் துறையில் இருக்கும் பலஅடுக்கான​ கல்விமுறையும், மையப்படுத்தப்படாத​ பாடத் திட்டங்களும் காரணமாக​ முதுநிலை பட்டம் பெற்ற​ மாணவன் மேலும் இரண்டு முதல் மூன்று வருடங்கள் தீவிரமாகப் பயிற்சியெடுத்தால் மட்டுமே இத்தேர்வுகளில் தகுதியடைந்து ஐஐடிக்குள் நுழையமுடியும்.

தனது வயதையொத்த​ நண்பர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களில் கை நிறைய​ சம்பாதிக்கும் போது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின்பாலுள்ள அதீத​ ஈடுபாடும் தன் சுதந்திர சிந்தனைகளுக்கு ​ஆய்வுலகு ஏற்படுத்திக் கொடுக்கப்போகும் வாய்ப்புக​ளையும் பற்றியுள்ள ஏராளமான​ கற்பனைகளினாலே பொதுவாக​ மாணவர்கள் இத்துறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆனால் இந்திய​ தத்துவ​ மரபில் காலங்காலமாக​ ஆதிக்கம் செலுத்திவரும் அதீதக் கருத்துமுதல்வாதத்தின் (இதற்கு மிகச் சிறிய​ உதாரணமாக​ நம்ம​ கணிதமேதை ராமானுஜத்திற்கு கணித சூத்திரங்களெல்லாம் சொந்த​ புத்தியிலிருந்தன்றி திருவுடைநாயகியம்மாளின் திருவருளால் வந்ததைக் கூறலாம்) தொடர்ச்சியாக​ பார்ப்பனர்கள் கேள்விக்கே இடமற்ற வகையில் உயர்கல்வியில் முக்கிய​ இடத்தைக் கைப்பற்றினர்.​ காலனிய​ காலத்திலிருந்து சாதி சமூகமுறையின் அடிப்படையான​ கருத்துநிலைச் சட்டத்தை உடைத்தெறிவதற்கான விருப்பமில்லாமலேயே அவர்க​ளுடன் முதலாளித்துவம் சமரசம் செய்த காரணத்தால், இந்திய அறிவுத்துறையில் இன்று வரை மந்தமும் தேக்கமும் நிலவிவருகிறது.

பி.சி ராய் 1902-ல் எழுதிய ‘இந்து வேதியியலின் வரலாறு’ என்ற நூலில் “இந்தியாவில் அறிவியல் மனப்பாங்கின் வீழ்ச்சிக்கான முதன்மைக் காரணி சாதி சமூக முறையின் கோட்டைக் கொத்தளங்களும், அவை தொழில்நுட்ப வல்லுநர், கைவினைஞர் உள்ளிட்ட உடல் உழைப்பாளிகளின் சமூக மதிப்பை மிக மோசமான வகையில் கீழிறக்கியதுமுமே” என்கிறார். இதை நூறு சதவீதம் நிரூபிப்பது போலவே ஐஐடிக்களின் இன்றைய​ கல்வி மற்றும் ஆய்வுமுறை உள்ளது.

உதாரணமாக​ ஐஐடி சென்னையைப் பொறுத்தவரை இங்கு நிலவிவரும் ஐயர் – ஐயங்கார் மேலதிக்கத்தின் பிரதிபலிப்பாக​, கோட்பாட்டு (theoretical) மற்றும் கணிப்பிய (computational)​ ஆய்வுகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், சோதனைவழி (experimental) மற்றும் தொழிற்நுட்ப​ (technological) ஆய்வுகளுக்கு கொடுக்காமல் ‘மூளை உழைப்பை உடல் உழைப்பிலிருந்து பிரித்து’ அதை கேவலப்படுத்தும் போக்கு இருக்கிறது. ஒரு சில​ துறைகளில் சோதனை வழி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை இறக்குமதி செய்யப்பட்ட​ பல​ கோடி ரூபாய் மதிப்பிலான​ சோதனைக்கருவிகளையும், வணிக நோக்கம் மட்டுமே கொண்ட​ பன்னாட்டு பதிப்பகங்களையும் மட்டுமே நம்பியுள்ளதால், மாணவர்கள் தங்கள் சொந்த​ மூளையை உபயோகித்து ஒரு விளக்குமாறு செய்யும் தொழில் நுட்பத்தைக்கூட​ உருவாக்க​ முடியாத​ ஒட்டுண்ணிச் சூழல் தான் இந்திய​ தொழில்நுட்பத்துறையில் நிலவுகிறது.

ஆனால் உலகளாவிய​ ரீதியில் அடிப்படை அறிவியலும் தொழில்நுட்பமும் ஒத்தியங்கும் ஆய்வு முறையே அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கியக் கூறாக​ இருக்கும் போது, இந்த​ சாதிய சமூக அமைப்பின் வெற்றி, இந்திய​ அறிவியலின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய​ முட்டுக்கட்டையாக​ இன்றளவும் இருந்து வருகிறது. இது ஒரு ஆய்வுமாணவனின் அறிவுத் தேடலுக்கான​ தாகத்தை முளையிலே கிள்ளிவிடுவதோடு, அம்மாணவனது கருத்தை வறளச்செய்து (brain drain) ஆய்வில் எப்போதும் பெருவளர்ச்சியற்றதொரு மந்தநிலையை உருவாக்குகிறது.

சராசரியாக​ இருபத்தைந்தாவது வயதில் முனைவர் பட்ட​ ஆய்வில் நுழையும் ஆய்வுமாணவர், தன் வாழ்க்கையின் மிக​ நல்ல​ நாட்களான​ ஐந்திலிருந்து ஏழு வருடங்களை ஆய்வுவழிகாட்டியான​ பேராசிரியருக்கு அடிமைசாசனம் எழுதிக்கொடுத்து விடுகின்றார். பேராசிரியரின் அறிவு மற்றும் சாதியச் சுரண்டலுக்குள்ளாகி, ஆய்வில் பெருவளர்ச்சியெதுவுமில்லாமல் கல்வி உதவித்தொகைக்காக​ நித்தம் போராடி, சமூகரீதியான​ உறவுகளையும் நட்புகளையும் இழந்து உள்நோக்கியாகி (introvert), குடும்பத்தினரால் ‘சம்பாதிக்கத் துப்பில்லாதவன்’ என்று முத்திரைகுத்தப்பட்டு, நிரந்தர​ வருமானமில்லாததால் திருமணம் என்ற​ கனவே கானல் நீராகி, எதிர்காலம் பற்றிய​ எந்த​ நம்பிக்கையுமற்று மனச்சிக்கலுக்கும் உள்ளாகி, செயல் வீரியமிழந்த​ நடைபிணங்களாகவே ஐஐடி ஆய்வுமாணவர்கள் வாழ்கின்றனர்.

இதற்கிடையில் வழிகாட்டிக்கு செய்யும் சேவையில் ஏதேனும் குறையேற்பட்டாலோ ஆய்வில் பெரிய முன்னேற்றமில்லாமலிருந்தாலோ, ஆய்வின் எந்த​ கட்டத்தில் வேண்டுமென்றாலும் அம்மாணவரை எவ்வித​ நட்டஈடுமின்றி, கேட்பாரும் கேள்வியுமற்ற​ கையறு நிலையில் வெளியேற்ற​ இவ்வமைப்பு வழிவகை செய்துள்ளது. இந்நிரந்திரமற்ற​ தன்மை, ஆய்வு மாணவர்களுக்கு தற்கொலையெண்ணத்தைக்கூட​ உருவாக்குவதில்லை! இப்படி இந்திய​ உயர்கல்வித் துறையைப் பொறுத்தவரை, பேராசிரியர்கள் சுரண்டுபவர்களாகவும்,மாணவர்கள் அறிவுத்தளத்திலும், பொருளாதார​ரீதியாகவும், கலாச்சாரத்தளத்திலும் ஒட்டச்சுரண்டப்படுபவர்களாகவும் எதிரெதிர் திசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

ஐஐடிக்களின் நிலைமை இப்படியிருக்க​, இவ்வமைப்பை அம்பலப்படுத்தி, நிதின் குமார் உட்பட​ ஐஐடி சென்னையில் நடந்த​ அனைத்து தற்கொலைகளுக்கும் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டுமென்றும், தற்கொலைகளுக்கு காரணமான​ டீன் மற்றும் ஆய்வுவழிகாட்டி ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கவேண்டுமென்றும் கோரிக்கைகளுடன் மாணவர்களை ஒருங்கிணைந்து போராட​ வலியுறுத்தி புரட்சிகர​ மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. ஐஐடி மாணவர்கள் ஓரணியில் திரண்டு இதற்கெதிராகப் போராடவில்லையென்றால் தற்கொலைகள் வரும் காலங்களிலும் தொடரத்தான் செய்யும்.

இந்நிலையில் ஐஐடிக்களின் தரத்தை உயர்த்தும் பொருட்டு அவற்றை தனியார் மயமாக்கப் பரிந்துரைக்கும் கடோட்கர் குழு அறிக்கையை அமுல்படுத்தப்போவதாக​ மனிதவள​ மேம்பாட்டுத்துறை கடந்த​ மாதம் அனைத்து செய்திதாள்களிலும் செய்தி வெளியிட்டு, அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்கு இணையத்திலும் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில் சுற்றுசூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ், ரிலையன்ஸின் கடல்சார் ஆய்வு நிறுவனத்துடன் கூட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததை நியாயப்படுத்திப் பேசும் போது, ‘இந்தியாவில் ஐஐடி, ஐஐஎம் உட்பட​ எந்த​ அரசுசார் கல்விநிறுவனங்களும் உலகத்தரம் வாய்ந்ததாக​ இல்லை. உயர்கல்வித் துறையில் தனியாரின் பங்களிப்பு ஒன்றே இந்திய​ உயர்கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்தும்’ என்றார். இதற்கு பதிலளித்த​ மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல், ‘கடோட்கர் குழுப் பரிந்துரைகளை அமுல்படுத்தினாலே உயர்கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்த முடியும்’ என்றார். உடனே அனைத்து செய்தி நாளேடுகளும் ஐஐடியின் தரத்தைச் சொல்லி மத்திய​ அமைச்சரவையே இரண்டுபட்டு குடுமிப்பிடி சண்டைபோடுகிறது என்றெல்லாம் பரபரப்பு செய்தி வெளியிட்டது.

ஆனால் மைய அமைச்சரவையும் நாளேடுகளும் அரங்கேற்றிய​ இந்த​ நாடகத்தில் மைய​ இழை ஒன்றுள்ளது. இவர்களின் கூற்றுகளை கூர்ந்து கவனிக்கும் எவருக்கும் அது புரியும். அதாவது, அரசு-தனியார் கூட்டில் மட்டுமே உயர்கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்த​ முடியும் என்றும் இதற்கு கடோட்கர் குழு பரிந்துரைக்கும் ஐஐடி தனியார்மயமாக்கலே ஒரேவழி என்பதை மக்களை ஏற்க​ வைப்பதே இந்நாடகத்தின் நோக்கம்.

‘அரசு-தனியார் கூட்டு’ என்ற​ வண்ணத்தாளில் பொதியப்பட்டுள்ள​ இந்த​ நஞ்சின் உண்மையான​ தன்மை நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு காத்துக் கிடக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய​ உயர்கல்வித் துறையை லட்டு மாதிரி அப்படி அலேக்காக​ தூக்கி கொடுப்பதே!. இதனை முழுமையாக​ உணர்ந்தும் எந்த​ ஐஐடி பேராசிரியர்களும் இதற்கெதிராக​ வாயைத் திறக்காமல் இருப்பதன் ரகசியம் தங்களுக்கும் ‘பிராஜக்ட்’ என்ற​ பேரில் சில​ எச்சில் எலும்புகள் வீசப்படும், மாணவர்களின் உழைப்பை ஒட்டச் சுரண்டி ரிப்போட் எழுதி பிழைத்துக் கொள்ளலாம் என்ற​ நப்பாசை தான்.

இன்றைக்கு உயர்கல்வித்துறை தனியார்மயமாக்கலின் முதல் பலிகடாக்களாக​ மாணவர்கள் இருந்தாலும் அது தன் ஆக்டொபஸ் கரங்களால் பேராசிரியர்களையும் அழுத்தி திணறடிக்கும் காலம் வெகு தூரமில்லை. இலவசக் கல்வியை அமல்படுத்து, தனியார் கொள்ளையை தடுத்து நிறுத்து, என்ற கோரிக்கையின் கீழ் மாணவர்கள் அணிதிரண்டு போராடாத வரை ஐஐடி மட்டுமல்ல ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கும் விமோச்சனமில்லை.

ஆனால் சாதாரண அரசு கல்லூரிகளில் இருக்கும் மாணவர்களின் அரசியல் விழிப்புணர்வு ஐஐடி போன்ற உயர்கல்வி மாணவர்களுக்கு இல்லை என்பதை அவர்கள் உணரும் வரை, உணர்ந்து போராடாத வரை விடிவில்லை. அந்த விடியலுக்கான விதையை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி விதைத்துள்ளது. அறுவடைக்கான ஆதரவை மாணவர்கள் தரவேண்டும்.

நிற்கவைத்து தலைக்கு பின்னால் சுடும் மரண தண்டனைக்கு முதல் நாளிரவு சீனப்பெண் கைதிகளின் வாழ்க்கை!(படங்கள் இணைப்பு )


சீனாவின் சிறைச்சாலை ஒன்றில் கடந்த 2003ம் வருடம், ஜூலை 24ம் திகதி படம்பிடிக்கப்பட்ட இப்புகைப்படங்கள், மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பெண் சிறை கைதிகளை பற்றியது. 

போதைவஸ்துக்கள் கடத்திய குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட இப்பெண்களுக்கு, குறித்த நாளின் மறுதினம் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்னதாக அவர்களது இறுதி இரவை எப்படி கழித்தார்கள் என இப்புகைப்படங்கள் காண்பிக்கின்றன. 

காவற்துறையினருடன் சிரித்து உரையாடுதல், காட்ஸ் விளையாடுதல், இறுதி உணவு அருந்தல், தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக தமக்கு விருப்பமான ஆடையை தெரிவு செய்தல், மறுநாள் அதிகாலை தண்டனை நிறைவேற்றப்படும் இடத்திற்கு கொண்டு செல்லப்படுதல் என இப்புகைப்படங்கள் ஒவ்வொன்றும் மரணதண்டனை பற்றிய உணர்வுகளை கண் முன் நிறுத்துகின்றன. 

டாக்குமெண்டரி ஒன்றுக்காக பொதுமகன் ஒருவரால் சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட இப்புகைப்படங்கள், சீனாவில் பெண் சிறைகைதிகள் நடத்டப்படும் விதம் குறித்து அனுதாப அலைகள் எழுந்து விடும் என்ற காரணத்தினால், இதுவரை வெளியிட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. 

எனினும் கடந்த வாரம், ஹாங்காங்கின் ஒளிபரப்பு சேவையான Phonix தொலைக்காட்சி இப்புகங்களை வெளியிட்டது. பின்னர் மெயில் ஆன்லைன் இணையத்தளமும் பிரசுரித்திருந்தது. இவர்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை விஷ ஊசி ஏற்றி கொல்வதோ, தூக்குத்தண்டனை மூலம் நிறைவேற்றப்படுதலோ அல்ல. 

நிற்கவைத்து, பின்னாலிருந்து தலைக்கு பின்புறமாக சுடுதல். ஒருவர் பின் ஒருவராக இவ்வாறே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. உலகின் அதிகமாக மரணதண்டனை நிறைவேற்றப்படும் நாடுகளில் ஒன்றான சீனாவில் மரணதண்டனை நிறைவேற்றப்படும் முறைக்கும் கடுமையான எதிர்ப்பிருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 








எத்தனை பேர் அடையாளம் கண்டு கொள்வார்கள்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பப்பாசி) புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்தியை படித்தேன். அவர்களுக்கு என் வாழ்த்துகள். அச்செய்திகள் 37 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை புத்தகக் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்திவரும் சங்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதைப் படித்ததும் என் மனதில் புத்தகக் கண்காட்சி குறித்துத் தோன்றிய சில எண்ணங்களைப் பதிவு செய்யும் முயற்சியே இது. 
முதலாவதாக, புத்தகக் கண்காட்சியை ஏன் ஜனவரியில் நடத்த வேண்டும்? அந்த மாதத்தில்தான் சென்னையில் இசை விழா, நாட்டிய விழா, சுற்றுலா தொழில் பொருள்காட்சி, சென்னை சங்கமம், தமிழ் சங்கமம், சர்வதேச திரைப்பட விழா, புத்தாண்டு பொங்கல் தள்ளுபடி விற்பனை, பொங்கல், காணும் பொங்கல் கொண்டாட்டங்கள், திருவள்ளுவர் தின நிகழ்ச்சிகள், புதிய திரைப்படங்கள் வெளியீடு, தொலைக்காட்சிகளில் பொங்கல் அல்லது விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் என்று ஏராளமான நிகழ்ச்சிகள் வந்து சென்னை மக்களை பிஸியாக ஆக்கி வைக்கிறது. 

மேலும் இக் கண்காட்சியை ஏன் 14 நாள்கள் மட்டும் நடத்த வேண்டும்? முதல் நாள் மாலையில் தொடக்க விழா நடைபெறும். எனவே அன்றைய நாளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. இறுதி நாளன்று பெரும்பாலான அரங்கங்கள் பிரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். அன்றைய நாளையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள முடியாது. ஆக முழுதாக 12 நாள்கள்தான். அதுவும் கண்காட்சி நேரம் என்பது தினசரி மதியம் 2 மணி முதல் இரவு 8.30 வரை. (விடுமுறை நாள்களில் காலை 11 மணிக்கு தொடங்கும்) ஏன் இத்தனை கெடுபிடி? காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை (உணவு இடைவேளை தவிர) கண்காட்சிக்கு பொதுமக்களை அனுமதிப்பதில் என்ன சிரமம்? 

புத்தகக் கண்காட்சி வாசலில் டிக்கெட் கொடுப்பதற்காக நான்கைந்து கவுண்டர்கள் இருக்கும். நாம் ஒரு கவுண்டரில் நின்று கொண்டேயிருக்கும்போது திடீரென்று அந்தக் கவுண்டரை மூடிவிட்டு மற்றொரு கவுண்டருக்குப் போகச் சொல்கின்றார்கள். அங்குபோய் வரிசையில் நின்று 10 ரூபாய் கொடுத்து ஒரு டிக்கெட் கேட்டால் சில்லறை இல்லை என்று திருப்பி அனுப்பி விடுகிறார்கள். இதை நடைமுறைச் சிக்கல் என்று கூற முடியாது. ஒரு சினிமா தியேட்டர் டிக்கெட் விற்பனையாளரைப் போலவோ கிரிக்கெட் ஸ்டேடிய டிக்கெட் விற்பனையாளர் போலவோ புத்தகக் கண்காட்சி விற்பனையாளர் நடந்துகொள்ளக் கூடாது. 

மேலும் ஏன் டிக்கெட் வைக்க வேண்டும்? இது வெறும் கண்காட்சிதானே? அந்த டிக்கெட்டில் நம் அட்ரûஸ எழுதிப் பெட்டியில் போட்டால் அதிர்ஷ்டக் குலுக்கலில் பரிசு (புத்தகங்கள்?) கிடைக்குமாம். அறிவின் சுடர் எரியும் வளாகத்தில் அதிர்ஷ்டத்துக்கு என்ன வேலை? அப்படியே வாசகர்களை ஈர்க்கும் ஓர் உத்தியாக இது இருந்தாலும் அந்த டிக்கெட்டில் இரண்டு அல்லது மூன்று கேள்விகளைக் கேட்டுச் சரியாகப் பதில் எழுதுகிறவர்களைத் தேர்ந்தெடுத்து அதன்பின் அதிர்ஷ்டக் குலுக்கலுக்குப் போகலாம். தமிழ் வாசக உலகம் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய படைப்பாளிகள் பற்றியும் படைப்புகள் பற்றியும் அக் கேள்விகள் இருக்கலாமே. 

அடுத்து, பல பதிப்பகங்களின் புத்தக விவரம் அடங்கிய பட்டியலை (கேட்லாக்) வாங்கிப் பார்த்த பின்புதான் ஒரு வாசகன் தனக்குத் தேவையான நூல்களை வாங்க முடியும். ஒரு மூல நூலுக்கு பல உரையாசிரியர்கள் உரையெழுதியிருக்கின்றனர். ஒரே படைப்பாளியின் ஒரு படைப்பு ஒன்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன. எது சிறந்த உரை, எது சிறந்த பதிப்பு என்று தேர்வு செய்வது வாசகனின் கடமையாகிறது. மேலும் ஒவ்வொரு பதிப்பகத்தின் விலையையும் அவன் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. 



ஆனால், துரதிருஷ்டவசமாக கண்காட்சியின் பெரும்பாலான கடைகளில் முதல் நான்கு நாள்கள் "கேட்லாக்' வரவில்லை என்று கூறுகிறார்கள். கடைசி நான்கு நாள்கள் தீர்ந்துவிட்டது என்று கூறுகின்றனர். எனவே, வாசகனுக்குத் தேர்வு செய்யும் வசதியில்லை. கிடைத்ததை வாங்க வேண்டியதுதான். 



மற்றொன்று, நாட்டுடைமை ஆக்கப்பட்ட படைப்புகளுக்கு மேலும் சில விழுக்காடுகள் கழிவு என்று அறிவிக்கலாம். ஏனெனில் படைப்பாளிக்குத் தரவேண்டிய ராயல்டி எனப்படும் உரிமைத் தொகை இந்நூல்களுக்காக எவருக்கும் கொடுக்கப்படுவதில்லைதானே? 



அடுத்ததாக, பதிப்பக அரங்கங்களில் இருக்கும் பலருக்கும் படைப்பு பற்றியோ பதிப்பு பற்றியோ எதுவும் தெரிந்திருப்பதில்லை. ஏனெனில், பதிப்புத் துறைக்குத் தொடர்பில்லாத ஒருவர் அங்கு இருக்கிறார். அவருக்குத் தெரிந்ததெல்லாம் மொத்த பில் தொகையில் பத்து சதவீதம் கழித்து பணம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான். குறிப்பிட்ட எழுத்தாளரின் வேறு புத்தகம் என்ன வந்திருக்கிறது? - தெரியாது. குறிப்பிட்ட நூலின் அடுத்த பதிப்பு எப்போது வெளிவரும்? - தெரியாது. குறிப்பிட்ட புத்தகத்தை எந்தப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது? - தெரியாது. இந்தப் பதில்களைக் கேட்டால், ஒரு தீவிர வாசகனுக்கு மனச்சோர்வு ஏற்படத்தானே செய்யும். 



மேலும் அவர்களுக்கு எந்தப் படைப்பாளியையும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எவ்வளவு சிறந்த எழுத்தாளர் அந்த அரங்கினுள் வந்தாலும் அவர்களுக்குத் தெரியாது. யாராவது அறிமுகம் செய்தாலும் ஒரு புன்னகையோடு சரி. அந்த எழுத்தாளர் ஏதாவது கேட்டால் மறுபடியும் தெரியாது பாட்டுதான். ஒருமுறை எழுத்தாளர் சிட்டி கண்காட்சிக்கு வந்தபோது பெரும்பாலான அரங்கத்தில் இருந்தவர்களுக்கு அவரைத் தெரியவில்லை. இன்றும் ஆ. மாதவன், தோப்பில் முகமது மீரான், கு. சின்னப்ப பாரதி, கே.பி. நீலமணி போன்று தனது படைப்புகளால் மட்டுமே அறியப்பட்ட பொது நிகழ்ச்சிகளிலோ ஊடகங்களிலோ அதிகம் தலைகாட்டாத - படைப்பாளிகளைப் பார்த்தால் எத்தனை பேர் அவர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள் என்பது கேள்விக்குறியே. ஆனால், ஒரு சிறிய அரசியல் பிரமுகரோ சினிமா நடிகரோ வந்துவிட்டால் பலரும் சூழ்ந்து நின்று செல்போனில் படம்பிடித்துக் கொள்கின்றனர். 



பெரும்பாலான ஸ்டால்களில் நாம் வாங்கிய புத்தகங்களைப் போட்டு வைத்துக்கொள்ள கவர் கொடுப்பதில்லை. கைகளிலே வைத்துக்கொண்டு அலைய வேண்டியதாக இருக்கிறது. அழகான காகித உறைகளைத் தயாரித்து வைத்துக் கொள்ளலாம். அதற்கென ஒரு சிறு தொகையைத் தர வாசகர்கள் நிச்சயம் தயாராக இருப்பார்கள். 



அங்கு நடத்தப்படுகிற உணவகம் மற்றும் காபி, டீ போன்றவற்றின் தரத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும். தரத்துக்குப் பெயர்பெற்ற ஓர் உணவகத்தோடு ஏன் இவர்கள் ஒப்பந்தம் போடக்கூடாது? எல்லோரும் காசு கொடுத்துத்தானே வருகிறார்கள். 



அடுத்து கண்காட்சி அரங்கின் வாயிலில் தினசரி நடக்கும் மாலை நேரக் கூட்டங்கள், சொற்பொழிவுகள். அவை சொல்லும் தரமன்று. இது தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் கண்காட்சிதானே. நம் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களிலுள்ள சிறந்த படைப்பாளிகளை - குறிப்பாக, தங்களது தகுதியால் ஞானபீடம், சாகித்ய அகாதெமி, பாரதீய பாட்சா பரீஷத், சரஸ்வதி சம்மான், குமாரன் ஆசான் போன்ற விருதுகளை வென்றெடுத்தவர்களை அல்லது அத்தகைய விருதுகளைப் பெறத் தகுதியுடையவர்களை அழைத்துவந்து உரையாற்றவோ அல்லது கட்டுரை வாசிக்கவோ சொல்லக் கூடாதா? அது படைப்புப் பற்றியும் இலக்கியம் பற்றியும் அவர்களின் பார்வையை நாம் அறிந்துகொள்ள உதவியாக இருக்காதா? அல்லது குறைந்தபட்சம் சென்னைக்கு வெளியே இருக்கும் சிறந்த எழுத்தாளர்களை வரவழைத்து அவர்களை உரையாற்ற வைக்கக்கூடாதா? பட்டிமன்றத்தில் கேட்டு கேட்டு புளித்துப்போன அசட்டு ஜோக்குகளையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் சங்கப்பாடல்களையும் எத்தனை முறைதான் கேட்பது? ஒரு தேர்ந்த வாசகனுக்கு இது ஓர் அவமானமல்லவா? 



கடைசியாக ஒரு வார்த்தை. முடிந்தால் வரும் ஆண்டு புத்தகக் கண்காட்சியைப் பழையபடி காயிதே மில்லத் கல்லூரி வளாகத்துக்கே மாற்றுங்கள். சென்னையின் இதயமாக இருக்கும் அண்ணாசாலையிலிருந்து எந்தப் பகுதிக்கும் பேருந்து வசதி இருக்கிறது. ஆட்டோவும் எளிதில் கிடைக்கும். அத்தகைய உத்தரவாதம் தற்போது புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடத்துக்குக் கிடையாது.

வன்முறையில் ஈடுபடாதீர்: கேரள மக்களுக்கு ஜெ. கோரிக்கை

முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்பது கற்பனையான பிரசாரம் என்று விவரித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, 'வன்முறையில் ஈடுபட வேண்டாம்' என்று கேரள மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மேலும், இரு மாநில மக்களுக்கு இடையே இருக்கும் இதயபூர்வமான உறவுகளை உடைக்கும் வகையில், உணர்ச்சிகளை தூண்டும் பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வாகனம் கேரள சகோதரர்களால் தாக்கப்பட்டு வருகிறது என்ற செய்தி எனக்கு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட நம்பர் பிளேட்டுகளை கொண்ட வாகனங்கள் வேண்டுமென்றே தாக்கப்படுகின்றன.

அதுமட்டுமல்ல கேரளாவில் உள்ள தமிழ் நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள், வர்த்தகர்கள் ஆகியோரும் அச்சத்தில் உள்ளனர். இதற்கு காரணம் தமிழகத்துக்கும், கேரள அரசுகளுக்கும் இடையே உள்ள முல்லைப் பெரியாறு பிரச்னைதான்.

இதுபோன்ற ஒரு குறுகிய மனப்பான்மையில் பிரிவு உணர்ச்சியில், சமூக விரோதிகளின் செயல்பாட்டுக்கு யாரும் இரையாக வேண்டாம் என்று படித்த மற்றும் அறிவுள்ள இந்த நாட்டைச் சேர்ந்த ஒவ்வொருவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

அரசியல் காரணங்களுக்காக கற்பனையான மற்றும் அச்சுறுத்தும் நோக்கத்தில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதுபோன்ற பிரச்னைகள் உள்ள சூழ்நிலையில் மக்கள் உணர்ச்சி வசப்படுவார்கள். அவர்களை சமுதாயத்தின் முக்கியஸ்தர்கள் சரியான வழியில் நடத்துவது அவசியம்.

முல்லை பெரியாறு அணை பலவீனமானது என்றும், பாதுகாப்பற்றது என்றும், அது உடைந்து இடுக்கி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் அழிவை ஏற்படுத்தும் என்றும் கூறுவதை நம்ப முடியாது. அந்த அணை சரியாக பராமரிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட காலங்களில் பலப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அணையின் பாதுகாப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்ல உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப வல்லுநர்கள், உயர்ந்த தகுதியைக் கொண்ட நிபுணர்கள் அதை சோதித்து, அந்த அணை முழுக்க, முழுக்க பாதுகாப்பாக இருக்கிறது என்று திரும்ப திரும்ப கூறியிருக்கின்றனர். 116 ஆண்டுகள் பழமை கொண்டது என்பதற்காக அந்த அணை பாதுகாப்பற்றது என்று சந்தேகிக்கக்கூடாது. தமிழகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கரிகாலசோழன் கட்டிய கல்லணைதான் உலகத்திலேயே அதிக வயதான அணையாகும். அது இன்னும் நிலைத்து நின்று பாதுகாப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

கிறிஸ்துவின் இறப்புக்கு பின் கட்டப்பட்ட அந்த அணை 1900 ஆண்டுகளை கடந்து முழு பாதுகாப்போடு விளங்குகிறது. கல்லணை எந்த கல்லால் (சுண்ணாம்பு கல்) கட்டப்பட்டதோ அதே கல்லால்தான் முல்லைப் பெரியாறு அணையும் கட்டப்பட்டு உள்ளது. எனவே, முல்லைப் பெரியாறு அணை தரமான கட்டுமானத்துடன் இல்லை என்றும், அதிக பழமையாகி விட்டதால் அதன்மூலம் அச்சங்கள் ஏற்படுகின்றன என்பதும் தேவையற்ற ஒன்று.

இந்த அணை நீண்ட நாட்களாக நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கையில் அடிப்படையில்தான் சென்னை மாகாணத்துக்கும், திருவாங்கூர் மாகாணத்துக்கும் இடையே அப்போது இருந்த ஆங்கிலேயர் அரசு 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த அணை நில அதிர்ச்சி ஏற்படக்கூடிய பகுதியில் இருக்கிறது என்று சமீபத்தில் புரளி மூலம் பரவலாக பீதியை கிளப்பி உள்ளனர்.

இந்திய நில அதிர்வு வரைபடத்தை வைத்து பார்க்கும்போது, கேரளா முழுமையும் மற்றும் இந்தியாவின் பெரும்பாலான பாகங்களும், சென்னையும் நில அதிர்வு 3-ம் மண்டலத்துக்குள் வருகின்றன. இங்கு மிதமான நிலை நீடிக்கும் என்று தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. இந்த வரைபடத்தை வலைதளங்களில் எளிதாக டவுன்லோடு செய்து பார்க்க முடியும்.

அப்படி ஒரு நில அதிர்வு ஏற்பட்டால் கூட அதன் அளவு 3 ரிக்டரை தாண்டாது. 2-ல் இருந்து 2.9 வரையிலான ரிக்டர் நில அதிர்வை பொதுவாக உணரவே முடியாது. ஆனால் அதை பதிவு செய்யலாம். இப்படிப்பட்ட அதிர்வுகள் ஒவ்வொரு நிமிடமும் உலகம் முழுவதும் ஏற்படுகின்றன. இவையெல்லாம் வானிலை ஆய்வுத் துறைக்குதான் தேவையான அளவுகளாகும்.

அதுபோல் 3-ல் இருந்து 3.9 வரையிலான ரிக்டர் நில அதிர்வு சில நேரங்களில் உணரப்படும். அந்த அளவின்படி மிக அரிதாகத்தான் பாதிப்புகள் ஏற்படும். அந்த அதிர்வுகளும் பரவலாக உள்ளன. ஆனால், அவை கவலைக்குரியது அல்ல. இப்படி இருக்கும் நிலையில், ஒரு பெரிய நில அதிர்ச்சி ஏற்பட்டு முல்லைப் பெரியாறு அணையை உடைத்து, பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று உருவாக்கப்படும் கற்பனையான அச்சம் அடிப்படை ஆதாரமற்றது.

இது கேரளாவைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரியும். ஆனாலும், சில உள்நோக்கங்களுக்காக மக்கள் மத்தியில் இப்படி ஒரு அச்ச உணர்வை உருவாக்கி முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று கூறி வருகிறார்கள். தமிழகத்தின் மிக நெருங்கிய மாநிலம் கேரளா. உண்மையிலேயே 1950-ம் ஆண்டுக்கு முன்பாக 2 மாநிலங்களும் ஒன்றாக இருந்தவை. கலாச்சாரம் மற்றும் மொழி, பாரம்பரியத்தில் மலையாளிகளுக்கும், தமிழர்களுக்கும் பங்கு உண்டு.

கேரளாவில் ஏராளமான தமிழ் மக்கள் உள்ளனர். அதேப் போலவே தமிழகத்திலும் ஏராளமான மலையாளிகள் உள்ளனர். தமிழர்களும், மலையாளிகளும் எத்தனையோ ஆண்டாண்டு காலமாக சகோதரத்துவத்துடனும், ஒத்துழைப்புடனும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். கேரள மக்களுக்கு எதிராக அழிவை உருவாக்கும் எண்ணம் தமிழக அரசுக்கோ, தமிழக மக்களுக்கோ கிடையவே கிடையாது.

அந்த அணை முழு பாதுகாப்போடு இருக்கிறது என்ற உறுதியும், ஆதாரமும் இருப்பதால்தான் அப்படி சொல்கிறோமே தவிர பாதுகாப்பற்ற அணையை பாதுகாப்பான அணையாக நாங்கள் நிச்சயம் சொல்லமாட்டோம். பத்திரிகையாளர்களும், பத்திரிகைகளும் இந்த செய்தியை பொறுப்புணர்வோடும், கட்டுப்பாட்டுடனும் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நான் கேரள மக்களை மிகுந்த அக்கரையுடன் கேட்டுக் கொள்வது என்னவென்றால், தேவையில்லாத பிரச்சினைகளை கிளப்பும் பண்பாடற்ற, நாகரீகமற்ற, நல்லெண்ணம் இல்லாதவர்களின் செயல்பாட்டுக்கு இரையாக வேண்டாம் என்பதுதான்.

காரணமே இல்லாமல் கற்பனையாக எதையோ சிந்தித்துக் கொண்டு, பழிவாங்கும் உணர்ச்சியோடு தேவையில்லாத வன்முறையில் தயவு செய்து ஈடுபடவேண்டாம். இரண்டு மாநில மக்களுக்கு இடையேயும் பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்டு, வலுவோடு உள்ள நல்லெண்ணம், நல்ல நம்பிக்கை போன்றவற்றை தயவு செய்து அழித்து விடாதீர்கள். இதுதான் நான் மிகவும் மரியாதையோடும், உயர்ந்த எண்ணத்தோடும், அறிவாளிகளாகவும், கல்வியாளர்களாகவும், கடின உழைப்பாளிகளாகவும் பார்க்கும் மக்களுக்கு முன்பு வைக்கும் வேண்டுகோளாகும்.

இரு மாநில மக்களுக்கு இடையே இருக்கும் இதயபூர்வமான உறவுகளை உடைக்கும் வகையில், உணர்ச்சிகளை தூண்டும் பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறேன்," என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

பிரசவத்தின் போது கூடவே இருந்த இரண்டு கணவர்கள்!(படங்கள் இணைப்பு )

பெண்ணொருவருக்கு குழந்தை பிறக்கும் போது இரண்டு கணவர்கள் கூட இருந்த சம்பவம் ஒன்று உலகெங்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


34 வயதான Jaiya Ma என்ற பெண் Jon Hanauera என்ற 49 வயதானஆண் நண்பருடன் ஆறு வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார். அதன் பின்னர் குறித்த பெண் 44 வயதான Ferguson என்ற மரத்தளபாட வடிவமைப்பாளருடன் நாட்டிய வகுப்பு ஒன்றில் சந்தித்து பழகி வந்துள்ளார்.

ஒரு வருடம் கழித்து புதிய காதலன் மூலம் குழந்தை பிறந்துள்ளது. ஆனாலும் Jaiya இன் முதல் கணவரான Jon உம் இந்த காதலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார். Jaiya இன் புதிய காதலனான Ferguson ஐ தனது வீட்டில் தங்க அனுமதித்துள்ளார்.

இதில் கிளைமேக்ஸ் என்ன வென்றால் குறித்த பெண்ணுக்கு தண்ணீர் தொட்டி முறை மூலம் குழந்தை பிறக்கும் போது இரண்டு காதலர்களும் உடன் இருந்துள்ளனர். தற்போது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு அழகிய வீட்டில் மூன்று பேரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.

தான் ஒரு அதிஷ்டக்காரப் பெண் எனவும், இரண்டுபேரும் ஒரு குறையும் வைக்காமல் தன்னை அன்பாக கவனித்துக் கொள்வதாக மனம் திறந்த வாக்கு மூலம் அளித்துள்ளார் Jaiya. இதுதான் முக்கோணக் காதலோ?




F.I.R பதிவு செய்வது எப்படி?

F.I.R பதிவு செய்வது எப்படி?
First Information Report - என்பது F.I.R-ன் விரிவாக்கம். தமிழில் 'முதல் தகவல் அறிக்கை'. குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸாரால் பதியப் படும் வழக்கு ஆவணம்.

"இந்திய தண்டனைச் சட்டத்தில், அனைத்து வகைக் குற்றங்களையும் இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம். அதாவது, புகார் அளித்ததும் குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்ய வேண்டிய குற்றங்கள், உடலில் ரத்தக் காயங்களை ஏற்படுத்தும் குற்றங்கள் மற்றும் சிறிய, பெரிய அளவிலான பண மோசடிகள் ஆகியவை உடனடி கைது நடவடிக்கை வேண்டுபவை. இவற்றுக்கு உடனடியாக F.I.R பதிய வேண்டும்.

உடலில் காயம் ஏற்படாத மன உளைச்சலை உண்டாக்கும் வகையிலான குற்றங்கள் இரண்டாவது பிரிவில் அடங்குபவை. இந்தக் குற்றங்களில் பாதிக்கப் பட்டோரின் புகாரை அந்த எல்லைக்கு உட் பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி, மாஜிஸ்ட்ரேட் டின் ஒப்புதல் பெற்ற பிறகுதான், F.I.R பதிவு செய்ய முடியும்.
சம்பவம் நடந்த இடத்தை நிர்வகிக்கும் காவல் நிலையத்தில்தான் புகார் அளிக்க வேண்டும். ஆனால், அவசர காலம் என்றால், அருகில் இருக்கும் எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம். பொதுவாக, F.I.R பதிவு செய்யும் நபர், முதல் நிலை காவலர் அந்தஸ்துக்கு (பக்கவாட்டில் இரு வெள்ளைக் கோடு இருக் கும் காக்கி யூனிஃபார்ம் அணிந்து இருக்கும் காவலர்கள்) குறையாத நபராக இருக்க வேண்டும்.



அவருக்கும் மேல் உள்ள அதிகாரி களான டி.எஸ்.பி., எஸ்.பி., என எவரிடமும் புகாரைப் பதிவு செய்யலாம். பாதிக்கப்பட்டவர் வாய்மொழி வாக்குமூலமாகக்கூட புகார் அளிக்கலாம். ஆனால், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி அந்த வாக்குமூலத்தைப் புகாராக எழுதி, புகார்தாரரின் கையப்பத்தையோ கை ரேகையையோ அதில் இடம் பெறச் செய்ய வேண்டும். பிறகு, குற்றம் நடந்து இருப்பதை உறுதிசெய்து, உடனடியாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு, இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 511 பிரிவுகளில் புகார்தாரரின் பாதிப்புக்கு தக்க பிரிவுகளில் வழக்கினைப் பதிவுசெய்ய வேண்டும்.

பிறகு, தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அந்த F.I.R-ஐ நேரிலோ, தபாலிலோ அனுப்பிவிட வேண்டும். அந்த F.I.R நீதிபதிக்குக் கிடைத்துவிட்டதை உறுதிப் படுத்திக்கொண்டு, விசாரணை நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். இந்த நடைமுறைகளைச் சரிவர மேற்கொள்ளாத சமயத்தில்தான், வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது, 'குற்றம் நடந்த நேரம், F.I.R பதிவு செய்யப்பட்ட நேரம், அது நீதிமன்றத்துக்குக் கிடைத்த நேரம்' ஆகியவற்றில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டி, குற்றவாளிகள் தப்பித்துவிடுவார்கள்.

ஒரு F.I.R என்பது மொத்தம் ஆறு நகல்களைக் கொண்டது. காவல் அதிகாரி எழுதும் அசல் F.I.R அந்த நோட்டிலேயே இருக்கும். அதைக் கிழிக்கக் கூடாது. கார்பன் தாள் வைத்து எழுதப்படும் மீதி ஐந்து நகல்களைத்தான் புகார் தாரர், நீதிமன்றம் என விநியோகிக்க வேண்டும். புகார்தாரருக்கு F.I.R நகல் அளிக்க வேண்டியது அவசியம். அப்படித் தராமல் இருப்பதுகூட ஒரு குற்றம்.



நன்றி: விகடன்

பேருந்துக்கு நோ டிக்கெட்! சென்னையைக் கலக்கும் பு.மா.இ.மு!

இயலாமையுடன் பேருந்து கட்டண உயர்வை ஏற்க வேண்டுமா அல்லது போராட வேண்டுமா? போராடுவதென்றால் எப்படி போராடுவது, அரசுக்கு எப்படி எதிர்ப்பை தெரியப்படுத்துவது; அரசை எப்படி பணியவைப்பது?

தமிழக உழைக்கும் மக்களிடம் எழுந்திருக்கும் இந்தத் தலையாய கேள்விக்கு சென்னை ’புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி’யின் போராட்ட வழிமுறை விடையளித்திருக்கிறது. நவம்பர் 24ம் தேதி சென்னை ஆவடியில் சிறு பொறியாக கிளம்பிய அந்தப் போராட்டம், இன்று சென்னை மாநகர பேருந்தில் அன்றாடம் பயணம் செய்யும் மக்களின் போராட்டமாக உருவெடுத்திருக்கிறது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகளை விட விரைவாக இந்தப் போராட்ட வழிமுறை பரவி வர என்ன காரணம்? அப்படி எந்த முறையில் போராடச் சொல்லி சென்னை ’புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி’(புமாஇமு – RSYF) மக்களுக்கு வழிகாட்டியிருக்கிறது? அப்படி போராடினால் காவல்துறை மூர்க்கத்துடன் பாயாதா? அனைத்தையும் விட, அப்படியென்ன சிறப்பான போராட்டத்தை புமாஇமு கண்டுபிடித்துவிட்டது?

அடுக்கடுக்காக எழும் இந்த அனைத்து வினாக்களுக்கும் பதிலை தெரிந்து கொள்ள சற்றே காலத்தை பின்நோக்கி நகர்த்துவோம்.


(படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்)

நவம்பர் 24 அன்று ஆவடி பேருந்து நிலையத்தில் பயணிகள் குழுமியிருந்தார்கள். அனைவரது நாடி, நரம்புகளிலும் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மடங்காகிவிட்ட பேருந்து கட்டணம். சல்லிசாக பணத்தை எடுத்து வைத்தால்தான் அலுவலகம் அல்லது கல்லூரி அல்லது வியாபாரத்துக்கு செல்ல முடியும். மாத இறுதி. ஒருவேளை உணவை தியாகம் செய்து பேருந்துக்காக எடுத்து வைத்தப் பணம், இன்னும் இரண்டு நாட்களில் தீர்ந்துவிடும். ஆனால், மாதம் முடிய இன்னும் 6 நாட்கள் இருக்கின்றன. என்ன செய்வது… யாரிடம் கடன் கேட்பது… எதை அடகு வைப்பது…

என மக்கள் யோசித்தபடியே தாங்கள் செல்ல வேண்டிய பேருந்துக்காக மக்கள் காத்திருந்தபோது -

15 மாணவ, மாணவிகள் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்தார்கள். சட்டென அனைவரது கவனமும் அவர்கள் மீது திரும்பியது. காரணம், 13 பேர் சிவப்பு உடையில் இருந்தார்கள். இருவர் மட்டும் ’வேறொரு’ உடையையும் கூடவே தங்கள் முகத்தை மறைக்க ’இன்னொருவரின்’ முகம் வரைந்த முகமூடியையும் அணிந்திருந்தார்கள். அந்த உடையையும், முகத்தை மறைக்கும் முகமூடியையும் பார்த்ததுமே கோபம், வெறுப்பு, சிரிப்பு, ஆச்சர்யம்… என அனைத்தும் கலந்த உணர்வு மக்களிடம் பூத்தது. தற்காலிகமாக தங்கள் கவலையை மறந்துவிட்டு, அவர்களை கவனிக்க ஆரம்பித்தார்கள்.

ஒருவர், தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா போல் ஆடை அணிந்து, ஜெவின் முகம் வரைந்த முகமூடியை, தன் முகத்தில் ஒட்ட வைத்திருந்தார். அடுத்தவரின் தோற்றம், அச்சு அசலாக, உடன்பிறவா சகோதரியான சசிகலாவை பிரதிபலித்தது.

அந்த 15 பேரும், நின்றுக் கொண்டிருந்த ஒவ்வொரு பேருந்திலும் ஏறினார்கள். இருக்கையில் அமர்ந்திருந்தவர்களின் கவனம், தங்கள் மீது திரும்பியதும், ஜெ போல் தோற்றம் அளித்தவர் தொண்டையை கனைத்துக் கொண்டு, தன் கையில் இருந்த அறிக்கையை படிக்க ஆரம்பித்தார். அதாவது, ’தவிர்க்க இயலாத காரணத்தால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக’ அறிவித்தார். பிறகு தனக்கு பக்கபலமாக அருகில் நின்றுக் கொண்டிருந்த சசிகலா போல் இருந்தவரை பார்த்து சிரித்தார்.

அவ்வளவுதான். சிவப்பு உடை அணிந்திருந்த மற்ற 13 பேரும், அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டு அடித்தார்கள்! ’’மக்களோட வாழ்க்கைத் தரத்தை பத்தி எதுவுமே தெரியாம, கட்டணத்தை எப்படி நீ இஷ்டத்துக்கு உயர்த்தலாம்? நியாயமா பார்த்தா, பேருந்து கட்டணத்த முந்தையதை விட நீ குறைக்கணும்…’’ என நையப்புடைந்தார்கள்.

ஜெயலலிதாவை நேருக்கு நேர் சந்தித்து கண்டபடி திட்ட வேண்டும் என நினைத்திருந்த மக்களும் ஒன்று சேர்ந்து அவர்கள் இருவரையும், ஜெ – சசி ஆகவே நினைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடித்தார்கள்.

அப்போதுதான் ’’அன்பார்ந்த உழைக்கும் மக்களே…’’என கணீரென்று ஒரு குரல் ஒலித்தது. சட்டென்று மக்கள் அமைதியானார்கள். குரலுக்கு உரியவர், அந்த 13 பேரில் ஒருவர்தான். அந்தக் குரலில் இருந்த அழுத்தம், அவர் என்னதான் சொல்கிறார் என காது கொடுத்து கேட்க வைத்தது.

பிசிறில்லாமல், அந்தக் குரலுக்குரியவர் பேச ஆரம்பித்தார். ’’’புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி’என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் நாங்கள். உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ஆகியவற்றையே நோக்கமாகக் கொண்டிருக்கும் மறுகாலனியாதிக்க சூழலில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். பன்னாட்டு முதலாளிகளுக்கும், அதிகார வர்க்க மற்றும் தரகு முதலாளிகளுக்கும் சேவகம் செய்யும் ஊழியர்களாகவே மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. இவர்களுக்கு பெரும்பான்மையினராக இருக்கும் ஏழை, எளிய மக்கள் குறித்து எந்தக் கவலையும் இல்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய முதலாளிகளின் நலன்கள்தான் முக்கியம்.

உலகின் முதல் 5 விஸ்கி வியாபாரிகளில் ஒருவனான விஜய் மல்லையா, இதுவரை ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் அரசு வங்கிகளிடமிருந்து கடன் வாங்கியிருக்கிறான். ஆனால், அதை திருப்பி செலுத்தவில்லை. பதிலாக தனது ’கிங் ஃபிஷர்’ஏர்லைன்ஸ் நிறுவனம், நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லி, தனக்கு மேலும் பண உதவி செய்யும்படி அரசாங்கத்திடம் மடிப்பிச்சை கேட்கிறான்.

நம்மிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப்பணத்திலிருந்து அவனை காப்பாற்ற அரசு முயல்கிறது.

இது ஓர் உதாரணம் மட்டுமே. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் நலன்களை பேணுவதில் மத்திய, மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படுகின்றன. ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் அனைத்தும் விதிவிலக்கின்றி ’நலத்திட்டங்கள்’ என்னும் பெயரில் அறிவிப்பதற்கு பின்னால், முதலாளிகளின் நலன்கள்தான் இருக்கின்றன.

சாராயக் கடைகளை அரசே நடத்துகிறது. அதிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப் ஆகியவற்றை மக்களுக்கு இலவசமாக வழங்குகின்றன. ஆனால், மக்களின் அன்றாடத் தேவையான – உயிர் வாழ்க்கைக்கு அவசியமான – அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை பன்மடங்கு உயர்த்துகின்றன.

இந்த பாசிச நடவடிக்கையை மக்களாகிய நாம் எதிர்க்க வேண்டும். ஏனெனில், இதனால் முழுக்க முழுக்க பாதிக்கப்படுவது உழைக்கும் மக்களாகிய நாம்தான். அடுத்தடுத்து நம்மீது திணிக்கப்படும் இந்த விலைவாசி உயர்வுக்கு நாம் முடிவு கட்ட வேண்டும்.

அது நம்மால் முடியும்.

பேருந்து கட்டணத்தை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்த்தியிருக்கிறார்கள். இதை மவுனமாக நாம் ஏற்றுக் கொண்டால், இந்த வருவாய் விஜய் மல்லையா போன்ற தரகு முதலாளிக்கும், சிறப்பு பொருளாதார மண்டலம் என்னும் பெயரில் நம்மை சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உதவவே பயன்படும்.

எனவே டிக்கெட் வாங்காமல் பயணம் செய்வோம். ஒட்டுமொத்த மக்களும் டிக்கெட் வாங்க மாட்டோம் என்று சொன்னால், இந்த அரசால் என்ன செய்ய முடியும்? நிமிர்ந்து நிற்போம். நமது உரிமைகளை நிலை நாட்டுவோம். மக்களுக்கான அரசை நிறுவுவோம்.

அதற்கு முதல் படியாக, இன்று முதல் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்வோம்…’’

அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த மக்களை நோக்கி அவர் பேசி முடித்த பிறகும், மவுனமே நிலவியது. ஆனால், அது சில விநாடிகள்தான்.

அதன் பிறகு, அந்தப் பேருந்தே குலுங்கும் அளவுக்கு அதிலிருந்த மக்கள் அனைவரும் ஒரே குரலில் கர்ஜித்தார்கள். ’’ஆம்.டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோம்…’’

மக்களுக்கு புரட்சிகர நல்வாழ்த்துகளை சொல்லிவிட்டு, அந்த 15 பேரும், அந்தப் பேருந்தை விட்டு இறங்கினார்கள். அடுத்த பேருந்தில் ஏறினார்கள். முந்தைய பேருந்தில் என்ன நடந்ததோ, அதுவே இங்கும் நடந்தது. அடுத்தடுத்த பேருந்துகளிலும் நிகழ்ந்தது.

என்ன செய்வது, பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான கண்டனங்களை எப்படி தெரிவிப்பது, எந்த வகையில் போராடுவது என தெரியாமல் தடுமாறிய மக்களுக்கு இப்போது புதிய விடியலை கண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்தப் போராட்ட வழிமுறை நிச்சயம் பயனளிக்கும் என அவர்களுக்கு புரிந்தது. உடனே அந்த 15 பேரையும், நேசத்துடன் ’தோழர்’, ’தோழர்’ என அழைக்க ஆரம்பித்தார்கள். அப்படித்தானே ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்கிறார்கள்?

காலையில் ஆரம்பித்த பிரச்சாரம், மாலை வரை தொடர்ந்தது. மக்களும் உற்சாகத்துடன் பங்கேற்றார்கள். அதுமட்டுமல்ல, ஒரு கட்டத்துக்கு பிறகு, மக்களும் உடன் இறங்கி சக பயணிகளிடம் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்…
டிக்கெட் வாங்காமல் பயணம் செய்வோம்…

அன்றைய பொழுது முடிந்ததும் புமாஇமு தோழர்கள், ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதை மறுநாள் செயல்படுத்தவும் முடிவு செய்தார்கள். அந்த முடிவு, போராட்டத்தை மறுகட்டத்துக்கு நகர்த்துவது தொடர்பானது.

அதன்படி, மறுநாள், நவம்பர் 25 அன்று அதே 15 புமாஇமு தோழர்கள், காலையில் சென்னை அண்ணாநகர் ஆர்ச் அருகில் ஒன்று சேர்ந்தார்கள். முந்தைய தினம் போலவே இன்றும் இரு தோழர்கள் ஜெ – சசி போல உடை, முகமூடியை அணிந்துக் கொண்டார்கள். சென்ட்ரல் இரயில்நிலையம் நோக்கி செல்லவிருந்த பேருந்தில் ஏறினார்கள்.

முந்தைய தின நிகழ்வுகளே இன்றும் அரங்கேறின, ஒரேயொரு திருத்தத்துடன். ’’நாங்கள் டிக்கெட் இல்லாமல்தான் பயணம் செய்யப் போகிறோம். எங்களுடன் இந்தப் போராட்டத்தில் நீங்களும் பங்கேற்க வேண்டும். வாருங்கள், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோம்…’’ என முழங்கினார்கள்.

நல்ல பலன் கிடைத்தது. அந்தப் பேருந்தில் இருந்த கணிசமான மக்கள், இதற்கு ஆதரவு தெரிவித்தார்கள். பலரும் டிக்கெட் வாங்கவில்லை. டிக்கெட் வாங்கச் சொல்லி வற்புறுத்திய நடத்துனர், ஒரு கட்டத்துக்கு பிறகு, தோழர்களின் தோளில் ஆதரவாக தட்டிக் கொடுத்துவிட்டு அமைதியாகிவிட்டார்.

சென்ட்ரல் இரயில்நிலையத்தில் பேருந்து நின்றதும், தோழர்கள் இறங்கினார்கள். சாலையை கடந்து எதிர்பக்கம் வந்தவர்கள், தேனாம்பேட்டை செல்லும் பேருந்தில் ஏறினார்கள்.

அண்ணாநகரிலிருந்து தோழர்களை கவனித்து வந்த சிலர், இம்முறையும் தேனாம்பேட்டை செல்லும் பேருந்தில், தோழர்களுடன் சேர்ந்து ஏறினார்கள். அதில் ஒரு மூதாட்டியும் இருந்தார்.

அதே தீவிரத்துடன் பிரச்சாரம் தொடர்ந்தது. இங்கும் கணிசமான மக்கள் டிக்கெட் வாங்க மறுத்துவிட்டு தோழர்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். ’’ஆடு, மாடு, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, டிவி எல்லாம் யார் கேட்டாங்க? பால், பேருந்து கட்டணத்தை எல்லாம் எப்படி ஏத்தலாம்?’’என குரல் எழுப்பினார்கள். பாசிச ஜெயாவின் இந்த நடவடிக்கையை ஆதரித்து எழுதும் பத்திரிகைகளை திட்டித் தீர்த்தார்கள். இங்கும் நடத்துனரும், ஓட்டுநரும் தோழர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேனாம்பேட்டையில் இறங்கிய தோழர்கள், சேத்துப்பட்டு செல்லும் பேருந்தில் ஏறினார்கள். அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.

தோழர்கள் ஏறிய பேருந்தின் நடத்துனர், தோழர்களின் போராட்டத்தை ஆதரித்தாலும் சற்றே பயந்துவிட்டார். எனவே காமராஜர் அரங்கத்துக்கு பக்கத்தில் இருந்த காவல்நிலைய வாசலில் பேருந்தை ஓட்டுநரின் ஒத்துழைப்புடன் நிறுத்திவிட்டார்.

தோழர்களின் போராட்ட வழிமுறைகளை ஆதரித்து வந்த மக்களுக்கு இந்தச் செய்கை பிடிக்கவில்லை. ’’நியாயமான போராட்டத்தை ஏன் இப்படி ஒடுக்க வேண்டும்? நாங்கள் தோழர்கள் பக்கம் நிற்கிறோம்…’’ என அறிவித்தார்கள்.

அவர்களை அமைத்திப்படுத்திய சென்னை புமாஇமு-வின் இணைச் செயலாளரும், 15பேரில் ஒருவருமான தோழர் நெடுஞ்செழியன், நடத்துனருடன் இறங்கி காவல்நிலையத்துக்குள் சென்றார். அங்கிருந்த உயரதிகாரியிடம் ஒளிவுமறைவின்றி நடந்ததை, நடந்தவாறே சொன்னதுடன், ’’எங்களை சிறையில் அடைத்தாலும் எங்கள் போராட்டம் தொடரும்…’’ என்றார்.

தோழர் பேசியதை காது கொடுத்து கேட்ட அந்த காவல்துறை அதிகாரி, சட்டென நடத்துனரிடம் பாய்ந்தார். ஆம், தோழரை அவர் கண்டிக்கவில்லை!

’’இங்க எதுக்குயா பஸ்ஸை நிறுத்தின..?’’

’’சார்…’’ அதிர்ந்த நடத்துனர், ’’நீங்களே இப்படி சொன்னா எப்படி சார்? இவர் சொன்னதை கேட்டீங்கல? போராடறாங்க சார்…’’

’’அதுக்கென்ன இப்ப? பஸ்ஸுக்குள்ளதான போராடறாங்க, ஏன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த? உங்க டிப்போவுக்கு போய் பஞ்சாயத்துனா பேசிக்க, இல்ல சமரசம்னா பண்ணிக்க… போ… போ…’’

அதற்கு மேல் அங்கிருப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்த நடத்துனர், தோழருடன் பேருந்தின் அருகில் வந்தார். அதற்குள் மற்ற தோழர்களும், பயணிகளில் சிலரும் இறங்கியிருந்தனர்.

கண்ணாடி வழியே வாடிய முகத்துடன் வந்த நடத்துனரை கண்டதும், ஓட்டுநருக்கு விஷயம் புரிந்துவிட்டது. உடனடியாக வண்டியை கிளப்பி, பயணிகள் ஏறினார்களா இல்லையா என்றுக் கூட பார்க்காமல் வேகமாக சென்றுவிட்டார்! ஓடிப் போயந்தப் பேருந்தில் ஏறினார் நடத்துனர்.

வாசல் வரை வந்த காவல்துறை அதிகாரி, தோழர் நெடுஞ்செழியனை அழைத்து, ’’பர்மிஷன் வாங்கி போராடினா இதுமாதிரி சிக்கல் வராதே…’’ என்றார்.

’’யார்கிட்ட பர்மிஷன் வாங்கணும்னு சொல்றீங்க?’’ விலைவாசி உயர்வுக்கு எங்களிடம் பர்மிஷன் வாங்கித்தான் வெளியிட்டார்களா? அது சரின்னா இதுவும் சரிதான் என கறாராக கேட்டார் தோழர் நெடுஞ்செழியன்.

’’உங்க அமைப்புகிட்டயே இதுதாங்க ப்ரச்னை. பதில் பேச முடியாதபடி மடக்கிடறீங்க…’’ என்று அலுத்துக் கொண்டவர், ’’தயவு செஞ்சு அண்ணா மேம்பாலத்துக்கு அந்தப் பக்கம் போய், ஏதாவது செஞ்சுக்குங்க… இங்க வேண்டாம்?’’

’’ஏன்?’’

’’அந்தப் பக்கம்னா என் லிமிட்ல வராதுங்க… புரிஞ்சுக்குங்க…’’ என்றார் பரிதாபமாக.

ஆனால், தோழர்கள், உறுதியுடன் டி.எம்.எஸ். நிறுத்தத்துக்கு சென்று சேத்துப்பட்டு பேருந்தில் ஏறினார்கள். பிறகு சேத்துப்பட்டிலிருந்து மதுரவாயில் வரை பேருந்தில் பிரச்ச்சாரம் செய்தபடியே சென்றார்கள்.

எங்குமே தோழர்கள் மட்டுமல்ல, கணிசமான மக்களும் டிக்கெட் வாங்கவில்லை. வாங்க மறுத்துவிட்டார்கள். பாசிச ஜெயாவின் காட்டு தர்பாரை விமர்சித்தார்கள். நடத்துனர்களும், ஓட்டுநர்களும் கொடுத்த ஒத்துழைப்பு மகத்தானது.

மதுரவாயிலில் தோழர்கள் இறங்கியபோது, யாரோ அழைக்கும் குரல் கேட்டது. திரும்பினால், மூதாட்டி.

’’நீங்க பேசினது, போராடினது எல்லாம் சரி… இனிமே எங்க போனாலும் டிக்கெட் எடுக்கறதில்லைனு உறுதியா இருக்கேன்…’’

’’நன்றி பாட்டி… நாங்க உங்களுக்கு துணையா இருப்போம்…’’

’’அதைதான் போலீஸ் ஸ்டேஷன்லயே பார்த்தனே…’’ என புன்னகைத்தார் அந்த மூதாட்டி.

’’என்ன பாட்டி சொல்றீங்க..?’’

’’அட, ஆமா பசங்களா… இல்ல இல்ல தோழர்களா… அண்ணாநகர்லேந்து நீங்க என்னதான் செய்யறீங்கனு பார்க்க உங்க கூடதான் நான் வந்துகிட்டு இருக்கேன்… உங்கள மாதிரி எந்தக் கட்சிக்காரனும் எங்க கஷ்டம் புரிஞ்சு போராடினதில்ல… வூட்டுக்கு போய் அக்கம்பக்கமெல்லாம் ’எங்க போனாலும் டிக்கெட் வாங்காதீங்க’னு சொல்லப் போறேன்…’’

’’செய்ங்க பாட்டி… நாங்க வர்றோம்… ஏதாவதுனா எங்களுக்கு தகவல் கொடுங்க…’’ என்றபடி தங்கள் தொடர்பு எண்ணை அளித்துவிட்டு தோழர்கள், ’’வர்றோம் பாட்டி’’ என கிளம்பினார்கள்.

’’கொஞ்சம் நில்லுங்க… வந்து… நான் வயசுல பெரியவ. உங்களவிட எனக்கு அனுபவம் ஜாஸ்தி. அதனால நான் ஒண்ணு சொல்றேன்… அதை தட்டாம நீங்க செய்யணும்…’’

தோழர்கள் அமைதியாக பாட்டியை பார்த்தார்கள்.

’’இது மட்டும் வேண்டாம். எங்க நானே கோபம் தாங்காம இந்த பாப்பாவ, அந்த ….னு நினைச்சு கொன்னுடுவனோனு அப்பத்துலேந்து பயந்துட்டு இருக்கேன். எல்லாரும் என்னை மாதிரியே கோபத்தை அடக்குவாங்கனு சொல்ல முடியாது. ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிட போகுது… அதனால அந்த ராட்சசிய காட்டாம பேசுங்க… சரியா? பத்திரமா போயிட்டு வாங்க…’’

என்றபடி அந்தப் பாட்டி சென்றார்.

அந்தப் பாட்டி சுட்டிக் காட்டி, ’இதை அணியாதீர்கள்… அந்த அரக்கியை நினைவுப்படுத்தாதீர்கள்’ என்று சொன்னது ஜெயலலிதாவின் முகம் பொறித்த முகமூடியை!!!

"நிறுத்துடா கேசட்டை"

அவன் ஒரு பெண் பித்தன். எங்கேயாவது போவான். யாரையாவது தேடுவான். ஒவ்வோர் இரவையும் கழிப்பதற்கு அவனுக்கு ஒரு பெண் துணை தேவை. ஓரளவு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவனுக்கு இதற்குத் தாக்குபிடிக்க நிறைய பணம் வேண்டுமே...

ஆரம்பத்தில் தன் தந்தையிடம் பிறகு தாயிடம்... ஏதாவது சொல்லி பணத்தை கறந்து வந்தவனுக்கு... இவனது நிலைமை புரிந்த பிறகு அவர்கள் யாரும் உதவிட மறுக்கவே, தன் தவறுகளுக்குத் தீனி போடுவதற்காகத் திருடவும் ஆரம்பித்தான். திருட்டு என்றால் பாமரத்தனமான திருட்டு அல்ல. பணக்காரத் திருட்டு.

இவன் தான் திருடினான் என்று புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு உறவினர் வீடுகளில் கைவரிசைக் காட்டினான். எப்படியோ தினம் தினம் புத்தம் புது முகங்களை தரிசிக்க தவறுவதில்லை. நானும் அவனது நண்பன் தான். எனினும், நான் பெண் பித்தனோ திருடனோ அல்ல.

இப்படியாகச் சில காலம் சென்றபோது ஒரு நாள் அவனிடமிருந்து ஃபோன் வந்தது. "நண்பா உடனே வண்டியை எடுத்துக் கொண்டு வா... நான் ஏர்போர்ட் போக வேண்டும்." அவன் எதற்காகப் போவான் என்பது எனக்குத் தெரியும். எப்போதும் போல் நான் அவனிடம் போய்ச்சேர்ந்தால் இந்தத் தடவை அவனது தோற்றமே மாறிப் போயிருந்தது. "இன்று என்னப்பா ஏகப்பட்ட அலங்காரமும், ஆடம்பரமாகவும் இருக்கிறது? பெரிய இடமோ?" என்று கேலியாகக் கேட்டேன்.

"என்ன அப்படிக் கேட்டுவிட்டாய்? அவள் யாரென்று தெரியுமா? பிரபல சினிமா ஸ்டார்! எனக்கு சான்ஸ் கெடச்சிருக்கு... மிஸ் பண்ணலாமா? அதுதான்..." என்று சொல்ல, என் காதுகளைப் பொத்திக்கொண்டேன்.



"அவூதுபில்லாஹ்" என் வாய் என்னையறியாமல் கத்தியது!

"என்னடா இந்த வயசிலே பெரிய ஸூஃபியாகப் போறியோ...? உணக்கு அவளைப் பற்றித் தெரியாதுடா…!" இவ்வாறு அவன் சொன்ன பிறகு நான் ஏதும் பேசவில்லை.

இவனுடன் என்ன பேச்சு. நான் பழகியதே தவறு இப்போது ஒரு மா பாவத்தை அவன் செய்யப் போகிறான். அதற்கு நான் கார் கொண்டு போக வேண்டிய துர்பாக்கியத்துக்கு ஆளாகிவிட்டேனே என்று வேதனைப்பட்டவனாக வண்டியில் ஒரு கேசட்டைத் தட்டி விட்டேன். அதிலே ஒரு ஆலிம் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். "தவ்பா" (பாவ மன்னிப்பு) எனும் தலைப்பில் உணர்ச்சிகரமான பேச்சு.

"டேய் ஏண்டா இதைப் போட்டாய்? எந்த நேரத்தில் எதைப் போடுறது என்ற விவஸ்தையே கிடையாதா? நிறுத்துடா!" என்று கத்தினான்.

"ஏண்டா கத்துறே! உன்னுடைய பயணத்தில் எந்த மாற்றமுமே வராது. நீ கற்பனை செய்து, இன்பமான உணர்வில் மிதந்து கொண்டிரு. நான் தடை சொல்ல மாட்டேன். எனக்குத் துக்கம் வராமலிருக்க இதைப் போட்டிருக்கேன். இது ஓடினால் தான் நான் தூங்காமல் வண்டி ஓட்ட முடியும். ஒழுங்காக நீயும் ஏர்போர்ட் போகலாம்....!" இப்படி நான் சொன்னதும் அவன் மவுனமாகிப் போனான்.

இப்போது அந்த கேசட்டிலிருந்து உள்ளங்களை உருக்கும் உன்னதமான உபதேசங்கள். பாவம் செய்வது பற்றிய பயங்கரமான எச்சரிக்கைகள். குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் அடுக்கடுக்காக ஆணித்தரமாக வந்து கொண்டே இருந்தன.

"ஓ இளைஞர்களே! எத்தனை நாட்களுக்குத்தான் இப்படியே பாவத்தில் மூழ்கிக்கிடப்பீர்கள்? "அலம் யஃனிலில்லதீ ஆமனூ" – "அல்லாஹ்வின் நினைவால் உள்ளங்கள் அஞ்சி நடுங்குவதற்கு இன்னும் நேரம் வரவில்லையா?" இந்த இறை வசனத்தைக் கேட்டதுதான் தாமதம்...

அவனது வாயிலிருந்து முதன் முறையாக வந்தது "அஸ்தஃபிருல்லாஹ், அஸ்தஃபிருல்லாஹ்.

தொடர்ந்து தவ்பாவைப் பற்றி ஆலிம் சாகிப் அற்புதமான சில சம்பவங்களைச் சொல்லச் சொல்ல... அவன் கேவிக் கேவி அழ ஆரம்பித்துவிட்டான்.

திடீரென அவன், அல்ல அல்ல அவர் "நண்பா! வண்டியை நிறுத்து" என்றார். திரும்பிப் பார்த்தேன்; கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

"என்னப்பா?" என்றேன்.

"ஏர்போர்ட் போக வேண்டாம். வண்டியை வீட்டுக்குத் திருப்பு!" என்றார்.விமான டிக்கெட்டை கிழித்தெறிந்தார். இதற்காகத் தானே நான் அந்த கேசட்டையே போட்டேன். அல்ஹம்துலில்லாஹ்.

வீட்டுக்குப் போய் இறக்கி விட்டேன். "நண்பனே! நான் திருந்தி விட்டேன். இனி நான் தப்பு செய்ய மாட்டேன்" என்று கூறியபடி கீழே இறங்கினார். அவரது கையைப் பிடித்து ஆறுதல் சொல்லி "நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பான்" என்றபடி விடை கொடுத்து விட்டு வந்தேன். "பை பை" என்றே எப்போதும் விடை கொடுக்கும் நண்பர் அன்று முதல் முதலாக "அஸ்ஸலாமு அலைக்கும்!" என்றார்.

சில நாட்கள் கழிந்தன. "நண்பா! நான் புனித மக்கா செல்ல வேண்டும். உம்ராச் செய்து என் பாவங்களுக்காகப் படைத்தவனிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாட வேண்டும். வருகிறாயா?" என்று கேட்டார்.

மகிழ்ச்சியில் மிதந்தவனாக நான் புறப்பட்டேன். உம்ராவை மிகவும் உணர்வுடன் முறையாகச் செய்து மனிதப் புனிதனாக மாறியவர் அதன்பின் எப்போது பார்த்தாலும் தொழுகை - திலாவத் - தர்மம் என்று நல்ல முஸ்லிமாக மாறினார். எனக்கு அடிக்கடி உபதேசம்கூட செய்வார்.

திடீரென அவரது சகோதரருக்கு உடல் நலம் சரியில்லையென செய்தி வந்தது. ரியாத்திலிருந்து அல்கசீமுக்குப் பயணமானார். அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்து தம் அண்ணனுக்குப் பணிவிடை புரிந்து வந்தார். அண்ணனுக்கு அல்லாஹ் நற்சுகத்தைக் கொடுது விட்டான். இப்போது நன்றாக இருக்கிறார் என்ற செய்தியைச் சொன்னார். பேசும்போதெல்லாம் தவ்பாச் செய்யுமாறும் மார்க்கத்தில் நிலைத்திருக்குமாறும் நல்லுபதேசம் செய்வார்.

ஒருநாள் அவரது அண்ணன் எனக்கு ஃபோன் செய்தார். என் தம்பி, உம் நண்பர் இன்று ம்ஃரிப் தொழுகைக்காகப் மஸ்ஜிதுக்குச் சென்றவர் தொழுது முடித்த பிறகு ஒரு தூணில் சாய்ந்தவராக திக்ரில் ஈடுபட்டிருந்தார். நாங்கள் இஷாத் தொழுகைக்காகச் சென்றபோது தான் தெரிந்தது அந்தத் தூணில் சாய்ந்தவாறே அவர் அல்லாஹ்விடம் சென்றுவிட்டார் என்பது! (இன்னாலில்லாஹி...)

எப்படிப்பட்ட பாவியை அந்த கேசட் மாற்றிவிட்டது பார்த்தீர்களா? நம்முடைய கேசட்டுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? சிந்திப்போமா?

சில்லறை வணிகத்தில் வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!


அமெரிக்காவின் பென்ட்டன்விள்ளே, அர்கன்சாஸ் மாகாணத்தில் 1967-ல் சாம் வால்டன் என்பவரால் தொடங்கப்பட்டது வால்மார்ட். இப்போது 15 நாடுகளில் 8,500 ஸ்டோர்களுக்கு மேல் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் வால்மார்ட், மெக்சிகோவில் வால்மெக்ஸ், இங்கிலாந்தில் அஸ்டா, ஜப்பானில் செய்யூ என்று ஊருக்கு ஒரு பேர் வைத்துக்கொள்ளும் வால்மார்ட்டின் இந்தியப் பெயர் 'பெஸ்ட் ப்ரைஸ்'!

அமெரிக்காவில் அதிக அளவு வேலை வாய்ப்புகளை உருவாக்கிய வால்மார்ட், 'நெய்பர்ஹுட் மார்க்கெட்' என்ற கான்செப்ட்டை பிடித்துதான் ஹிட்டடித்தது. அதாவது, பெரிய ஸ்டோர்களுக்குச் சென்று ஷாப்பிங் செய்ய முடியாதவர்களுக்காக ஒவ்வொரு பகுதியிலும் சிறுசிறு கடைகளைத் திறந்தார்கள். மெகா வால்மார்ட் ஷோ ரூமைக் காட்டிலும் அங்கு விலை கொஞ்சம் கம்மி. ஆனால் தரத்தில் தள்ளுபடி இல்லை.


இதனாலேயே இந்த ஃபார்முலா ஹிட்டானது. சாம் வால்டன், இளமையில் 18 மாதங்கள் ஒரு ரீடெய்ல் ஸ்டோரில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு எப்படி வியாபாரம் செய்தால் மக்கள் வருவார்கள் என்ற சூட்சமத்தை அறிந்திருந்தார். 19 வருடங்களாக 'தினமும் குறைந்த விலை' என்ற ஸ்லோகனைக் கொண்டிருந்த வால்மார்ட், 2007-ல் 'சேவ் மணி, லிவ் பெட்டர்' என்று அதை மாற்றியது.

இப்படிப் பல பெருமைகள் இருந்தாலும் 2002-ல்தான் முதன் முறையாக 'ஃபார்ச்சூன் 500' பட்டியலில் இடம் பிடித்தது. போட்டி நிறுவனங்களின் கண்படும் அளவுக்கு அதிவேக வளர்ச்சி கண்ட வால்மார்ட், 2005-ல் காத்ரீனா புயலால் பாதிப்படைந்தவர்களுக்கு 20 மில்லியன் டாலர்களை நிவாரண நிதியாக அள்ளித் தந்தது. அத்துடன் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பையும் வழங்கியது.



2006 நவம்பரில் பாரதி என்டர் பிரைசஸ் நிறுவனத்துடன் கைகோத்து இந்திய சில்லறை வணிகத் துறையில் காலூன்றப் போவதாக அறிவித்தது. ஆனால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாக சில்லறை வணிகத்தில் நுழைய அனுமதி இல்லை என்பதால் ஃபிரான்ச்சைஸ் மூலம் இயங்கி வருகிறது. சுமார் 40% பொருட்கள் வால்மார்ட் நிறுவனத் தின் பிராண்ட் ஆகவே விற்பனை செய்யப்படுகின்றன.

ஜூலை 2009-ல் வால்மார்ட் 'கனடா வங்கி' என்று தனியார் வங்கி ஒன்றை ஆரம்பித்தது. மாஸ்டர் கார்ட் தரும் அளவுக்கு வளர்ந்திருக்கும் இந்நிறுவனம் ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறது. இதன் முக்கியப் போட்டியாளர்கள் பிரான்ஸ் நாட்டின் கேர்ஃபோர் நிறுவனமும், இங்கிலாந்தின் டெஸ்கோ நிறுவனமும்தான்.



ஒவ்வொரு வாரமும் உலகம் முழுவதும் சுமார் 100 மில்லியன் மக்கள் வால்மார்ட்டுக்கு வருகை தருகிறார்கள். இது அமெரிக்க மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு. குறைவான விலைக்கு நல்ல தரமான பொருளை எதிர்பார்ப்பவர்கள், விலையைப் பற்றிக் கவலையின்றி பொருட்களை வாங்குபவர்கள், விலைக்கு ஏற்ற தரமான பொருளை நாடுபவர்கள் என நுகர்வோர்களை மூன்றாகப் பிரித்து அவர்களுக்கு ஏற்றவாறு விற்பனையில் மாற்றங்களைக் கொண்டு வந்ததுதான் வால்மார்ட்டின் வெற்றிக்கு முக்கியக் காரணம். தன்னுடைய பணியாளர்களை ஊழியர்களாகக் கருதாமல் 'அசோஸி யேட்ஸ்' என்றுதான் அழைக்கிறது வால்மார்ட்.


ஒரு வால்மார்ட் சூப்பர் சென்டரின் உள்ளே....

சில்லறை வணிகத்தில் வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!

[ சில்லறை வர்த்தகத்தில் தனி வர்த்தக பொருள் சில்லரை வணிகத்திற்கு 100 சதவீத அன்னிய முதலீட்டையும், பன்முக வர்த்தக பொருட்கள் சில்லரை வணீகத்திற்கு 51 சதவீத அன்னிய முதலீட்டையும் அனுமதி அளித்து இந்திய பாரளுமன்றத்தில் காங்கிரஸ் கூட்டணி மசோதா தாக்கல் செய்துள்ளது. சில்லறை வணிகத்தில் அன்னய முதலீட்டை அனுமதிக்கும் காங்கிரசு அரசின் முடிவை எதிர்த்து 1.12.2011 அன்று இந்தியா முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு செய்து எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகளில் காங்கிரசு மட்டும்தான் இந்த முடிவை ஆதரிக்கிறது என்பதல்ல. எதிர்ப்பது போல தோன்றும் மற்ற சில கட்சிகள் உண்மையில் இந்த முடிவை மறைமுகமாக ஆதரிக்கின்றன என்பது ரிலையன்ஸ் பிரஷ் விசயத்திலேயே நிரூபிக்கப்பட்டிருக்கிறது.



இனி வால்மார்ட் இந்தியாவுக்கு வருவதற்கு எந்த தடையுமில்லை. அப்படி வால்மார்ட் வந்தால் என்ன நடக்கும்? 2007ஆம் ஆண்டு புதிய கலாச்சாரத்தில் வந்த கட்டுரை அமெரிக்காவில் வால்மார்ட் பெற்ற ஏகபோகத்தின் விளைவுகளை விரிவாக தெரிவிக்கிறது. அதன் விலை குறைப்பு ரகசியமும், உழைப்புச் சுரண்டலும், உற்பத்தியாளர்கள் மீதான அதன் ஆதிக்கமும், உலகெங்கும் விரிந்திருக்கும் அதன் சாம்ராஜ்ஜியமும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

வால்மார்ட் நிலைபெற்றுவிட்டால் படிப்படியாக இந்தியாவில் இருக்கும் 4 கோடி வணிகர் குடும்பங்கள் முற்றிலுமாக அழிந்துவிடும். சில்லறை வணிகர்களை நம்பி வாழும் சிறு உற்பத்தியாளர்கள் அனைவரையும் அழிக்கும். இந்தியாவின் சில்லறை வணிகத்தின் பிரம்மாண்டமான சந்தை மதிப்பை கைப்பற்றத் துடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் சூழ்ச்சியை உணராமல், அதை எதிர்க்கும் வணிகர்களை ஆதரிக்க முடியாது என்பதாக நடுத்தர மக்களிடம் ஒரு கருத்து உருவாக்கப்படுகிறது. அது தவறு என்பதை இக்கட்டுரை படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும். -வினவு ]

எதிர்ப்புகளை மீறி கள்ளத்தனமாக இந்தியாவின் உள்ளே நுழைந்து விட்டது வால்மார்ட். சில்லறை வணிகத்தில் நுழைய முடியாமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாயிற்கதவைச் சாத்தியிருப்பது போல பாவ்லா காட்டிவிட்டு, கொல்லைப்புறம் வழியாக வால்மார்ட்டை உள்ளே அழைத்து வந்திருக்கிறது மன்மோகன் சிங் அரசு.

வால் மார்ட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக ஏர்டெல் நிறுவனத்தின் முதலாளி ராஜன் பாரதி மிட்டல் சென்ற மாதம் (2007) அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தின்படி பாரதி நிறுவனம் தனக்குத் தேவையான பொருட்களை வால்மார்ட்டிடமிருந்து கொள்முதல் செய்து கொள்ளும். அரிசி பருப்பு முதல் அனைத்துப் பொருட்கள் மீதும் வால் மார்ட் என்ற முத்திரை (பிராண்டு) இருக்கும். பொருள் கொள்முதல், வணிக நிர்வாகம் ஆகிய அனைத்தையும் திரைமறைவில் வால்மார்ட் நடத்தும். ஆனால், கடையின் பெயர் மட்டும் வால் மார்ட் என்று இருக்காது. கடைக்கு வேறு பெயர் வைத்துக் கொண்டு, வால்மார்ட்டின் முகவராக பாரதி நிறுவனம் இயங்கும்.

இந்தக் கள்ளத்தனமான ஏற்பாட்டுக்கு உதவும் வகையில் சில்லறை வணிகம் குறித்த தனது கொள்கையை திட்டமிட்டே வடிவமைத்திருக்கிறது காங்கிரசு அரசு.

ஏகாதிபத்தியங்கள் பல இருந்தாலும் அவற்றின் தலைவனாகவும் மேலாதிக்கச் சக்தியாகவும் அமெரிக்கா இருப்பதைப் போல, சில்லறை வணிகத்தில் பல பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தாலும், வால்மார்ட் அவை அனைத்துக்கும் மேலான ஒரு பயங்கரமான அழிவுச் சக்தி. அமெரிக்க இராணுவம் நடத்தும் ஆக்கிரமிப்புப் போருக்கும் வால்மார்ட் தொடுக்கும் வர்த்தகப் போருக்கும் பெரிய வேறுபாடு கிடையாது — துப்பாக்கி ஒன்றைத் தவிர.

அமெரிக்க மேலாதிக்கத்திற்க்கும் வால்மார்ட்டுக்கும் இடையிலான தொப்புள் கொடி உறவைப் புரிந்து கொள்ள உதவும் சமீபத்திய உதாரணம் ஒன்று இருக்கிறது. அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்றுவதற்கு மன்மோகன் சிங் நியமித்த தூதர்களில் முக்கியமானவர் வால்மார்ட்டின் இந்தியக் கூட்டாளியான மிட்டல். சில்லறை வணிகத்திற்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்திற்கும் உள்ள தொடர்புதான் வால்மார்ட்டுக்கும் மறுகாலனியாக்கத்திற்கும் உள்ள தொடர்பு.

மலிவு விலை என்பதுதான் மக்களை வீழ்த்த வால்மார்ட் ஏந்தியிருக்கும் ஆயுதம். இந்த ஆயுதத்தின் மூலம் உலக மக்களின் உணவு, உடை, பழக்க வழக்கங்கள், பண்பாடு முதல் அவர்களுடய அரசியல் கருத்துகள் வரை அனைத்தையும் மாற்றுகிற வால்மார்ட், நுகர்தலே மகிழ்ச்சி, நுகர்தலே வாழ்க்கை, நுகர்தலே இலட்சியம் என்று அமெரிக்க சமூகத்தையே வளைத்து வசப்படுத்தி வைத்திருக்கிறது வால்மார்ட். அதற்குப் பலியான அமெரிக்க மக்கள், தம் இரத்தத்தில் ஊறி சிந்தனையையும் செரித்து விட்ட வால்மார்ட் எனும் இந்த நச்சுக் கிருமியிடமிருந்து விடுபடமுடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் உடலுக்குள் நுழைந்து விட்டது அந்த நச்சுக்கிருமி. இதனை எதிர்த்த போராட்டம் நீண்டது, நெடியது. அந்தக் கிருமியின் வரலாற்றைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வது இந்த தொற்று நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் எதிர்த்துப் போராடவும் உதவும்.

இரண்டாம் உலகப்போரில் உளவுத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற சாம் வால்டன், அமெரிக்காவின் அர்கன்ஸாஸ் மாநிலத்தின் ரோஜர்ஸில் வாங்கிய தள்ளுபடி விற்பனைக் கடைதான் வால்மார்ட். துவக்க காலத்தில் மற்ற பலசரக்குக் கடைகளில் விற்கப்படாத மிக மலிவான பொருட்களும், மற்ற கடைகளில் விற்கப்படும் பொருட்களை சந்தை விலையை விட மலிவாகவும் விற்றது வால்மார்ட்.

உறுதியாக நட்டம் விளைவிக்கக் கூடிய இந்த வியாபார உத்தியை மேற்கொள்ள சாம்வால்டன் இரண்டு வழிமுறைகளைக் கையாண்டார். ஒன்று, ஊழியர்களுக்கு மிகக் குறைந்த சம்பளம், இரண்டாவது, உற்பத்தியாளர்களிடம் குறைவான விலையில் சரக்கெடுப்பது. இந்தக் கொள்கைகள் காரணமாக வால்மார்டின் வளர்ச்சி மெதுவாக இருப்பினும் 1969ம் ஆண்டுக்குள் 31 மில்லியன் டாலர் ஆண்டு வருமானத்துடன் தன் முதல் கடைக்கு 200 மைல் சுற்றளவிற்குள்ளாகவே 32 கடைகளைத் திறந்தார் சாம் வால்டன்.

இந்த வணிகமுறையினால் வருமானத்தை மீறி கடன்பட்ட சாம் வால்டன், தன் நிறுவனத்தைக் காப்பாற்ற அதிரடியாக மேலும் பல கடைகளை திறந்தால்தான் சாத்தியம் என்பதை உணர்ந்து பல வங்கிகளிடம் கடன் கோரினார். வங்கிகள் சாம் கோரியது போல் அல்லாமல் கடனுக்கு வரம்பு விதித்தனர். வங்கிகளை நம்பிப் பயனில்லை என உணர்ந்த சாம் பங்குச் சந்தையின் உதவியை நாடினார். அமெரிக்காவின் அந்நாளைய சட்டப்படி எந்த ஒரு நிறுவனமும் முதல்முறை நேரடியாக தன் பங்குகளை விற்க முடியாது, வேறொரு நிதி நிறுவனத்தின் மூலமாக மட்டுமே பங்குகளை விற்க முடியும்.

இந்தப் பணிக்கு சாம் இரண்டு பெரும் கிரிமினல் வங்கிகளை தனக்காக அமர்த்தினார். ஒன்று, அமெரிக்க உளவுத்துறையின் அடியாளாக அறியப்பட்டு, ஆயுதம் மற்றும் போதை மருந்து கடத்தலுக்காக 1990இல் தண்டிக்கப்பட்ட அர்கன்ஸாஸின் ஸ்டீபன்ஸ் வங்கி. மற்றொன்று, ஆங்கிலேய அரசுக்கு கைக்கூலியாக இருந்து, அமெரிக்கப் புரட்சிக்கு துரோகமிழத்த பாஸ்டன் தேசிய வங்கி. பின்னாளில் ஒயிட்வெல்ட் ஸ்விஸ் கடன் வங்கி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த வங்கி, போதைப் பொருள் கடத்தல் மற்றும் நிதி ஊழலுக்காகவும் 1985இல் தண்டிக்கப்பட்டது.

இந்த இரண்டு கிரிமினல் வங்கிகளும் 1970இல் 4.5 மில்லியன் டாலர் பணத்தை சாம் வால்டனுக்குப் பங்குச் சந்தை மூலமாகப் பெற்றுத் தந்தனர். இதற்குப் பிரதி உபகாரமாக கிரிமினல் பேர்வழி ஸ்டிபன்ஸை வால்மார்டின் ஒரு இயக்குனராக்கினார் சாம் வால்டன்.

70களில் பங்குச் சந்தையின் உதவியை நாடியது வால்மார்ட். 80களிலோ நாப்தா, எஃப்.டி.ஏ.ஏ போன்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் தென் அமெரிக்க நாடுகளையும் கனடாவையும் ஊடுருவ வால்மார்டின் உதவி அமெரிக்கப் பங்குச் சந்தைக்குத் தேவைப்பட்டது. வால்மார்ட் தயாராக இருந்தது.




உலகமயமாக்கம் வால்மார்ட்டின் அசுர வளர்ச்சி

2010ல் வால்மார்ட் - படத்தை அழுத்தி பெரியதாக பார்க்கவும்



தகவல் தொழில்நுட்பப் புரட்சியைத் தொடர்ந்து அத்துறையில் கொள்ளை இலாபமீட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதை உணர்ந்து கொண்ட அமெரிக்க முதலாளிகள், தம் மூலதனத்தை உற்பத்தித் துறையிலிருந்து அதற்கு மாற்றினர். அமெரிக்கச் சந்தைக்குத் தேவையான நுகர்பொருட்களை மலிவான ஊதியத்தில் உற்பத்தி செய்து தரும் ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்தது. பல அமெரிக்க உற்பத்தித் தொழில்கள் அழிந்தன. தொழிலாளர்கள் வேலையிழந்தனர். ஏழை நாடுகளின் கொத்தடிமைக் கூடாரங்களில் உருவாக்கப்படும் மலிவு விலை பொருட்களை நுகரும் சமூகமாக அமெரிக்கா மாறியது.

இத்தகைய பொருட்களை அமெரிக்காவெங்கும் விற்பனை செய்யும் ஒரு பிரம்மாண்டமான நிறுவனமாக வால்மார்ட் உருவாகியிருந்தது. அமெரிக்காவின் மற்ற உற்பத்தியாளர்களும் பெருவணிகர்களும் வால்மார்டின் குறைந்த விலை கொள்முதலுக்கு அடிபணியாவிட்டால் அழிந்து விடக்கூடிய நிலைக்கு அமெரிக்காவின் பல தொழில்களை மாற்றியிருந்தது வால்மார்ட். வால்மார்ட்டை உலகமயமாக்கலின் சிறந்த ஆயுதமாகக் கண்டு கொண்ட அமெரிக்க பங்குச் சந்தை, வால்மார்ட்டிற்கு பணத்தை வாரியிறைத்தது. வால்மார்ட் வெறித்தனமாக வளர்ந்தது.

80களின் இறுதி வரை 70,000 சதுரஅடி பரப்பிலான பிரம்மாண்டமான கடைகளை நடத்தி வந்தது. (மற்ற அமெரிக்கப் பெருவணிகக் கடைகளின் சராசரி அளவு 40,000 சதுர அடி). போட்டியாளர்களை அழிக்க ஆணி முதல் உணவு வரை 1,20,000 பொருட்களை விற்கும் 2,00,000 சதுரஅடி பரப்பிலான (4 கால்பந்து மைதானம் அளவில்) சூப்பர் சென்டர்களை 1987 முதல் வால் மார்ட் நிறுவனம் துவங்கியது.

1990ல் அமெரிக்காவில் வெறும் 5 சூப்பர் சென்டர்களை கொண்டிருந்த வால்மார்ட், அடுத்த 12 ஆண்டுகளில் 1268 சூப்பர் சென்டர்களை நிறுவி 25,000% வளர்ச்சியடைந்தது. இதே காலகட்டத்தில்தான் உலகமயமாக்கல் கொள்கையைப் பயன்படுத்தி அயல்நாடுகளிலும் கால்பதிக்கத் துவங்கியது.

1990ல் மெக்ஸிகோவில் ஒரே ஒரு கடை மட்டும் திறந்திருந்த வால்மார்ட், இன்று அர்ஜென்டினா, பிரேசில், கனடா, கோஸ்டாரிகா, சீனா, எல்சால்வடார், ஜெர்மனி, குவாதிமாலா, ஹோன்டுராஸ், ஜப்பான், மெக்ஸிகோ, நிகராகுவா, போர்டோரிகோ மற்றும் பிரிட்டன் முதலிய நாடுகளில் 2700 கடைகளைத் திறந்திருக்கிறது. பலநாடுகளில் சில்லறை வணிகத்தில் முதல் இடத்தில் இருக்கிறது.



வளர்ச்சியின் மர்மம்



வால்மார்டின் இந்த அசுரத்தனமான வளர்ச்சிக்கும், அமெரிக்க ஏகபோகங்கள் ஏழை நாடுகளைதனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொண்டு அழித்து வருவதற்குமான உறவு தற்செயலானதல்ல. இத்தனை ஆயிரம் கடைகளைக் கட்டத் தேவையான பல லட்சம் கோடி டாலர்கள், வரிச்சலுகைகளாகவும், இன்றைய தேதியில் வால்மார்டின் கடன் எத்தனை லட்சம் கோடி என்று வெளியே தெரியாத அளவிற்கு கடன் பத்திரங்களாகவும் உலகின் முன்னணி வங்கிகள், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் காப்பீடு நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளில் மறைந்துள்ளன.

இந்த வால்மார்ட் சாம்ராஜ்ஜியம் உலகம் முழுவதிலிருந்தும் உறிஞ்சும் பல லட்சம் கோடி டாலர்களும் நிறுவனத்தின் பங்குகளில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் வைத்திருக்கும் சாம் வால்டனின் குடும்பத்தின் வயிற்றுக்குள் செல்கிறது. லாப ஈவுத்தொகை (Dividend) மூலமாக மட்டும் ஆண்டுக்கு 5 பில்லியன் டாலர்களைக் கொள்ளையடிக்கும் சாம் வால்டன் குடும்பத்தினர், அமெரிக்காவின் முதல் 10 பணக்காரர்களின் வரிசையில் 5 முதல் 9 இடம் வரை நிரம்பியுள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பைக் கூட்டினால் உலகின் நிரந்தரப் பணக்காரக் குடும்பமே இவர்கள்தான்.

உலக அரசியலின் படுபிற்போக்கு சக்திகளான புஷ், டிக் செனி வகையறாக்களுக்கு சாம் வால்டன் குடும்பம்தான் நிரந்தரப் புரவலர்கள். அமெரிக்காவில் கல்வியை முற்றிலுமாகத் தனியார்மயமாக்குவதற்குத் தீவிரமாக முயலும் கும்பல்களுக்கும் தலையாய புரவலராக இருப்பதுடன், பின்தங்கிய நாடுகளை அதன் பிடியில் வைத்திருக்கும் பல அரசுசாரா நிறுவனங்களையும் வால்டன் குடும்பம் பராமரித்து வருகிறது.

உலகமயமாக்கல் கொள்ளைக்காகத் திட்டமிட்டே வளர்க்கப்பட்ட வால்மார்ட் இன்று 6100 கடைகள், 18 லட்சம் ஊழியர்கள், ஆண்டு விற்பனை 312.4 பில்லியன், லாபம் மட்டும் 11.2 பில்லியன் என உலகத்தின் மிகப் பெரிய கம்பெனியாகியுள்ளது. 42 மணி நேரத்திற்கு ஒரு புதிய கடை என திறந்த வண்ணம் உள்ளது. வால்மார்ட் ஒரு நாடாக இருந்திருந்தால் உலகின் 21வது பணக்கார நாடாக இருந்திருக்கும். இதன் ஆண்டு வருமானம் பல ஏழை நாடுகளின் வருமானத்தை விடவும் அதிகம்.




ஒரு வால்மார்ட் சூப்பர் சென்டரின் உள்ளே....

ஏகபோகத்தின் வீச்சு



வாரத்திற்கு 10 கோடி அமெரிக்கர்கள் வால்மார்ட்டின் கடைகளில் பொருட்கள் வாங்குகின்றனர். அமெரிக்காவின் மொத்த பலசரக்கு மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனையில் 35%, மொத்த மருந்து மாத்திரை சந்தையில் 25%, வீட்டு உபயோகப் பொருட்கள், சோப்பு, ஷாம்பு போன்றவைகளில் ஏறத்தாழ 40%, ஆடியோ வீடியோ விற்பனையில் 25% என்று அமெரிக்கச் சந்தையையே தனது கோரப்பிடிக்குள் கைப்பற்றி வைத்திருக்கிறது வால்மார்ட்.

அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தித் தாள் விற்பனையாளரும் வால் மார்ட்தான். வெளிவரும் பத்திரிகைகளில் ஏறத்தாழ 20% வால்மார்ட் மூலம் விற்பனையாகிறது. அமெரிக்கச் சந்தையில் இப்படியென்றால் மெக்ஸிகோ போன்ற நாடுகளின் மொத்தச் சந்தையில் 50% வால்மார்ட்டின் கையில் இருக்கிறது.

அதேபோல பிரொக்டர் அண்ட் காம்பிள் (விக்ஸ் கம்பெனி), லீவைஸ் (ஜீன்ஸ் கம்பெனி), ரெவ்லான் (அழகு சாதனங்கள்) போன்ற பல முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் தமது பொருட்களில் 20% – 40% வரை வால்மார்ட் மூலமாகவே விற்பனை செய்கின்றன.

இத்தகைய ஏகபோகத்தின் மூலம் உற்பத்தியாளர்களைத் தன்னை அண்டிப் பழக்கும் அடிமைகளாகவே மாற்றியிருக்கிறது வால்மார்ட். தன்னுடன் வர்த்தகம் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களையே ஆட்டிப் படைக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னால் தமது பொருட்களின் விற்பனை விலை என்ன என்பதை பல பன்னாட்டு நிறுவனங்கள் வால்மார்டிற்குச் சொல்லி வந்தன. இன்றோ சந்தையைத் தன் பிடியில் வைத்திருக்கும் வால்மார்ட், தான் சொல்கிற பொருளை, கோருகிற விலையில் இந்நிறுவனங்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்று நிர்ப்பந்தம் செலுத்துகிறது.

வால்மார்டிற்குப் பிடிக்கவில்லையா, பத்திரிகையின் அட்டை வடிவமைப்பு மாற்றப்பட வேண்டும், வால்மார்ட் ஆட்சேபித்தால் காசெட்டின் பாடல் வரிகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். வால்மார்ட் கோரினால் பொருட்களின் நிறத்தை மாற்ற வேண்டும். விலையைக் குறைக்கும் பொருட்டு உற்பத்திப் பொருளின் தரத்தைக் குறைக்கச் சொன்னால் அதையும் செய்யவேண்டும். அமெரிக்க மக்களின் தலைவலி காய்ச்சலுக்கான மாத்திரையை முடிவு செய்வது கூட வால்மார்ட்தான்.

தனது ஆணைக்குக் கட்டுப்பட மறுக்கும் நிறுவனங்களின் பொருட்களை வால்மார்ட் விற்பனை செய்யாது. அதே போன்ற வேறு நிறுவனத்தின் பொருட்கள் ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும்.

ஏற்கெனவே சீனாவிலிருந்து அமெரிக்கா செய்து வரும் இறக்குமதியில் 15%க்கு மேல் வால்மார்டின் பங்குதான். பிரிட்டனும் ரஷ்யாவும் பல்வேறு வெளி நாடுகளிலிருந்து செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பைக் காட்டிலும் வால்மார்ட் செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பு அதிகம்.



உற்பத்தியைக் கட்டுப்படுத்துதல்



ஒவ்வொரு நாளும் பென்டான்வில் எனப்படும் வால்மார்ட்டின் தலைமையகத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து உற்பத்தியாளர்கள் படையெடுக்கிறார்கள். அவர்களை இனவாரியாகப் பிரித்து தனியறைகளில் அமர்த்தி வால்மார்ட் தலைகீழ் ஏலத்தைத் துவங்குகிறது.

அதாவது, யார் மிகக் குறைவான விலையைக் கூறுகிறார்களோ அவர்களுக்கே அவ்வாண்டு ஒப்பந்தம் மீண்டும் அடுத்த ஆண்டு சென்ற ஆண்டின் விலையை விடக் குறைத்துக் கொடுக்க அந்நிறுவனங்கள் நிர்பந்திக்கப்படும். கச்சாப் பொருட்களின் விலையேற்றம், ஊழியர்களின் ஊதிய உயர்வு என அந்நிறுவனங்கள் மறுத்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, புதிதாக ஏலம் துவங்கும். வால்மார்டின் மூலமாக இந்நிறுவனங்களின் வியாபாரம் பன்மடங்கு அதிகரித்தாலும், கட்டுப்படியாகாத உற்பத்திச் செலவினால் பல நிறுவனங்கள் திவாலாகின்றன. அல்லது அமெரிக்காவில் ஆலைகளை மூடிவிட்டு, உற்பத்தியை சீனா, பங்களாதேஷ், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு மாற்றியிருக்கின்றனர்.

அமெரிக்காவின் ஐந்து பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் எலக்டிரிகல்ஸ், வால்மார்டின் நிர்பந்தத்தினால் தனது உற்பத்தியை மெக்ஸிகோவிற்கும், சீனாவிற்கும் பிற ஆசிய நாடுகளுக்கும் மாற்றிவிட்டது. அமெரிக்க (IUE) யூனியனின் கூற்றுப்படி கடந்த ஏழு ஆண்டுகளில் ஜெனரல் எலக்டிரிகல்ஸில் மட்டுமே 1,00,000 தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.

பிளாஸ்டிக் கச்சா பொருள் விலை கடுமையாக உயரவே, தனது தயாரிப்புகளின் விலையைக் கூட்ட முடிவெடுத்தது அமெரிக்காவின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ‘ரப்பர் மெய்ட்’. வால்மார்ட் விலையுயர்விற்கு சம்மதிக்கவில்லை. மாறாக ரப்பர்மெய்டின் பொருட்களை விற்பதை நிறுத்தியது. அதன் விளைவாக ரப்பர்மெய்ட் நிறுவனம் திவாலாகி தனது நிறுவனத்தை போட்டிக் கம்பெனியான நியுவெல்லிடம் விற்றுவிட்டது. இன்று நியூவெல் நிறுவனம் தொடர்ந்து வால்மார்ட்டுடன் வர்த்தகம் செய்வதற்காக தனது 400 ஆலைகளில் 69ஐ மூடிவிட்டு ஆசியாவிற்கு உற்பத்தியை மாற்றியது. இதனால் இந்நிறுவனத்தில் இதுவரை வேலை இழந்தோர் 11,000 பேர்.

இதேபோன்று லீவைஸ், தாம்சன் டி.வி, உள்ளிட்டு விற்பனையில் கொடிகட்டிப் பறந்த பலப்பல அமெரிக்க நிறுவனங்களை மூடச்செய்து 15 லட்சம் அமெரிக்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையை அழித்திருக்கிறது வால்மார்ட்.



உழைப்புச் சுரண்டல்



அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களை மடக்கிப் போட்டு வியர்வைக் கடைகள் எனப்படும் கொடூரமான கொத்தடிமைக் கூடாரங்களை வால்மார்ட் இரகசியமாக நடத்துகிறது. சீனா மற்றும் இதர ஆசிய நாடுகளிலோ வெளிப்படையாகவே இவை நடத்தப்படுகின்றன. இங்கு ஆணி, பொம்மைகள், மின்விசிறிகள் போன்ற பல்லாயிரம் விதமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

நாளொன்றுக்கு 13 முதல் 16 மணி நேரம் வேலை, வார விடுமுறை கிடையாது என்று தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படும் இது போன்ற கூடாரங்களில் விழாக்கால, பண்டிகை விற்பனை சீசன்களில் 20 மணி நேரம் வரை தொழிலாளர்கள் வேலை வாங்கப்படுகிறார்கள்.

நினைத்தே பார்க்க முடியாத இந்தக் கொடூர வேலைக்கு மாதச்சம்பளம் 42 டாலர்கள். இது சீனாவின் குறைந்தபட்ச கூலியை விட 40% குறைவு. இந்த தொழிலாளர்கள் 7 அடிக்கு 7 அடி அறையில் 12 பேர் அடைக்கப்பட்டு அதற்கு வார வாடகை 2 டாலர்களும், மட்டமான உணவிற்கு வாரத்திற்கு 5.50 டாலர்களும் வசூலிக்கப்படுகிறது. இந்த வேலைக் கொடுமையினால் அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அது அவர்களுடைய சொந்தச் செலவு. சீனாவில் மட்டும் வால்மார்டிற்கு இது போன்ற 5000 கொத்தடிமைக் கூடாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏழை நாடுகளின் தொழிலாளர்களைப் போலவே தனது சொந்த ஊழியர்களையும் வால்மார்ட் ஒடுக்குகிறது. உலக அளவில் வால்மார்ட்டின் ஊழியர்கள் 15 லட்சம் பேர். ஆனால், எங்குமே பெயருக்குக் கூட ஒரு தொழிற்சங்கம் கிடையாது. முன்னர் எந்தக் காலத்திலாவது ஏதாவது ஒரு தொழிற்சங்கத்தில் ஒருவர் இருந்திருந்தால் கூட அவருக்கு வால்மார்ட்டில் வேலை வாய்ப்பு இல்லை.

அதே போல எந்தக் கடையிலாவது தொழிற்சங்கம் அமைக்கப்படும் எனச் சந்தேகித்தால் அந்தக்கடை ஊழியர்களை ரகசியக் காமிராக்கள் கொண்டு கண்காணித்து சந்தேகத்திற்கு உரிய நபர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்கிறது. தனது தலைமையகத்தில் இதற்கென்றே உருவாக்கி வைத்திருக்கும் சிறப்பு தொழிற்சங்க எதிர்ப்புப் படையை வரவழைத்து கருங்காலிகளை உருவாக்கி, சங்கம் அமைக்கும் முயற்சியை முளையிலேயே கிள்ளுகிறது.

தொழிற்சங்கங்கள் இருக்கும் மற்ற நிறுவனங்களின் ஊழியர்களை விட வால்மார்ட் ஊழியர்களின் சம்பளம் 23% குறைவு. வால்மார்ட் ஊழியர்களில் மூன்றில் இரண்டு பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். காப்பீடு செய்யவில்லையென்றால் மருத்துவமே பார்த்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் உள்ள அமெரிக்காவில், வெறும் 38% வால்மார்ட் ஊழியர்களுக்கு மட்டுமே மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.

சிறப்பு விற்பனை நாட்களில் தனது ஊழியர்களை வெளியில் செல்லக்கூட அனுமதிக்காமல், கடையில் வைத்துப் பூட்டும் வால்மார்ட், கூடுதல் பணி நேரத்திற்கு தொழிலாளிகளுக்கு ஒரு பைசா கூட ஓவர்டைம் வழங்குவதில்லை. பெண் தொழிலாளிகளுக்கு ஆண்களை விட குறைவான சம்பளம், ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க மறுப்பது, குழந்தைத் தொழிலாளர் முறை என நீண்டு கொண்டே செல்கின்றன வால்மார்டின் தொழிலாளர் விரோதக் கொள்கைகள்.

இந்தக் கொடுமைகளை எதிர்த்து கனடா நாட்டில் வால்மார்டின் இறைச்சிக்கடை ஊழியர்கள் சங்கம் அமைத்தவுடன், அந்நாடு முழுவதுமுள்ள தனது கடைகளில் இறைச்சிப்பகுதியையே இழுத்து மூடி தொழிலாளர்களுக்கு மிரட்டல் விடுத்தது. தனது தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவின் 38 மாநிலங்களில் வழக்குகளைச் சந்தித்து வருகிறது வால்மார்ட். இது தவிர அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய வழக்கான 16 லட்சம் முன்னாள், இந்நாள் வால்மார்ட் ஊழியர்கள் இணைந்து தொடுத்துள்ள வழக்கும் அதன்மேல் நிலுவையில் உள்ளது



அடுத்த குறி இந்தியா! அடுத்த குறி இந்தியா! அடுத்த குறி இந்தியா!



சமூகச் செல்வங்களான உழைப்பையும், உற்பத்தியையும் தின்று செரித்து, வேலையின்மையையும், வறுமையையும் எச்சங்களாக விட்டுச் செல்லும் பொருளாதாரப் புற்று நோய் வால்மார்ட். இதன் அடுத்த இலக்கு இந்தியா. சில்லறை வணிகத்தை நம்பி வாழும் 4 கோடி குடும்பங்கள், பல கோடி விவசாயிகள் ஆகியோருடைய வாழ்க்கையையும், 10 லட்சம் கோடி மதிப்பு கொண்ட உலகின் நான்காவது பெரிய சில்லறை விற்பனைச் சந்தையுமான இந்தியாவை விழுங்க பல்லாயிரம் கோடி முதலீட்டுடன், வருகிறது வால்மார்ட்.

மலிவு விலையில் கிடைக்கிறது என்பதால் நாம் மரணத்தை வாங்கப் போகிறோமா?