Tuesday, December 6, 2011

"நிறுத்துடா கேசட்டை"

அவன் ஒரு பெண் பித்தன். எங்கேயாவது போவான். யாரையாவது தேடுவான். ஒவ்வோர் இரவையும் கழிப்பதற்கு அவனுக்கு ஒரு பெண் துணை தேவை. ஓரளவு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவனுக்கு இதற்குத் தாக்குபிடிக்க நிறைய பணம் வேண்டுமே...

ஆரம்பத்தில் தன் தந்தையிடம் பிறகு தாயிடம்... ஏதாவது சொல்லி பணத்தை கறந்து வந்தவனுக்கு... இவனது நிலைமை புரிந்த பிறகு அவர்கள் யாரும் உதவிட மறுக்கவே, தன் தவறுகளுக்குத் தீனி போடுவதற்காகத் திருடவும் ஆரம்பித்தான். திருட்டு என்றால் பாமரத்தனமான திருட்டு அல்ல. பணக்காரத் திருட்டு.

இவன் தான் திருடினான் என்று புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு உறவினர் வீடுகளில் கைவரிசைக் காட்டினான். எப்படியோ தினம் தினம் புத்தம் புது முகங்களை தரிசிக்க தவறுவதில்லை. நானும் அவனது நண்பன் தான். எனினும், நான் பெண் பித்தனோ திருடனோ அல்ல.

இப்படியாகச் சில காலம் சென்றபோது ஒரு நாள் அவனிடமிருந்து ஃபோன் வந்தது. "நண்பா உடனே வண்டியை எடுத்துக் கொண்டு வா... நான் ஏர்போர்ட் போக வேண்டும்." அவன் எதற்காகப் போவான் என்பது எனக்குத் தெரியும். எப்போதும் போல் நான் அவனிடம் போய்ச்சேர்ந்தால் இந்தத் தடவை அவனது தோற்றமே மாறிப் போயிருந்தது. "இன்று என்னப்பா ஏகப்பட்ட அலங்காரமும், ஆடம்பரமாகவும் இருக்கிறது? பெரிய இடமோ?" என்று கேலியாகக் கேட்டேன்.

"என்ன அப்படிக் கேட்டுவிட்டாய்? அவள் யாரென்று தெரியுமா? பிரபல சினிமா ஸ்டார்! எனக்கு சான்ஸ் கெடச்சிருக்கு... மிஸ் பண்ணலாமா? அதுதான்..." என்று சொல்ல, என் காதுகளைப் பொத்திக்கொண்டேன்.



"அவூதுபில்லாஹ்" என் வாய் என்னையறியாமல் கத்தியது!

"என்னடா இந்த வயசிலே பெரிய ஸூஃபியாகப் போறியோ...? உணக்கு அவளைப் பற்றித் தெரியாதுடா…!" இவ்வாறு அவன் சொன்ன பிறகு நான் ஏதும் பேசவில்லை.

இவனுடன் என்ன பேச்சு. நான் பழகியதே தவறு இப்போது ஒரு மா பாவத்தை அவன் செய்யப் போகிறான். அதற்கு நான் கார் கொண்டு போக வேண்டிய துர்பாக்கியத்துக்கு ஆளாகிவிட்டேனே என்று வேதனைப்பட்டவனாக வண்டியில் ஒரு கேசட்டைத் தட்டி விட்டேன். அதிலே ஒரு ஆலிம் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். "தவ்பா" (பாவ மன்னிப்பு) எனும் தலைப்பில் உணர்ச்சிகரமான பேச்சு.

"டேய் ஏண்டா இதைப் போட்டாய்? எந்த நேரத்தில் எதைப் போடுறது என்ற விவஸ்தையே கிடையாதா? நிறுத்துடா!" என்று கத்தினான்.

"ஏண்டா கத்துறே! உன்னுடைய பயணத்தில் எந்த மாற்றமுமே வராது. நீ கற்பனை செய்து, இன்பமான உணர்வில் மிதந்து கொண்டிரு. நான் தடை சொல்ல மாட்டேன். எனக்குத் துக்கம் வராமலிருக்க இதைப் போட்டிருக்கேன். இது ஓடினால் தான் நான் தூங்காமல் வண்டி ஓட்ட முடியும். ஒழுங்காக நீயும் ஏர்போர்ட் போகலாம்....!" இப்படி நான் சொன்னதும் அவன் மவுனமாகிப் போனான்.

இப்போது அந்த கேசட்டிலிருந்து உள்ளங்களை உருக்கும் உன்னதமான உபதேசங்கள். பாவம் செய்வது பற்றிய பயங்கரமான எச்சரிக்கைகள். குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் அடுக்கடுக்காக ஆணித்தரமாக வந்து கொண்டே இருந்தன.

"ஓ இளைஞர்களே! எத்தனை நாட்களுக்குத்தான் இப்படியே பாவத்தில் மூழ்கிக்கிடப்பீர்கள்? "அலம் யஃனிலில்லதீ ஆமனூ" – "அல்லாஹ்வின் நினைவால் உள்ளங்கள் அஞ்சி நடுங்குவதற்கு இன்னும் நேரம் வரவில்லையா?" இந்த இறை வசனத்தைக் கேட்டதுதான் தாமதம்...

அவனது வாயிலிருந்து முதன் முறையாக வந்தது "அஸ்தஃபிருல்லாஹ், அஸ்தஃபிருல்லாஹ்.

தொடர்ந்து தவ்பாவைப் பற்றி ஆலிம் சாகிப் அற்புதமான சில சம்பவங்களைச் சொல்லச் சொல்ல... அவன் கேவிக் கேவி அழ ஆரம்பித்துவிட்டான்.

திடீரென அவன், அல்ல அல்ல அவர் "நண்பா! வண்டியை நிறுத்து" என்றார். திரும்பிப் பார்த்தேன்; கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

"என்னப்பா?" என்றேன்.

"ஏர்போர்ட் போக வேண்டாம். வண்டியை வீட்டுக்குத் திருப்பு!" என்றார்.விமான டிக்கெட்டை கிழித்தெறிந்தார். இதற்காகத் தானே நான் அந்த கேசட்டையே போட்டேன். அல்ஹம்துலில்லாஹ்.

வீட்டுக்குப் போய் இறக்கி விட்டேன். "நண்பனே! நான் திருந்தி விட்டேன். இனி நான் தப்பு செய்ய மாட்டேன்" என்று கூறியபடி கீழே இறங்கினார். அவரது கையைப் பிடித்து ஆறுதல் சொல்லி "நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பான்" என்றபடி விடை கொடுத்து விட்டு வந்தேன். "பை பை" என்றே எப்போதும் விடை கொடுக்கும் நண்பர் அன்று முதல் முதலாக "அஸ்ஸலாமு அலைக்கும்!" என்றார்.

சில நாட்கள் கழிந்தன. "நண்பா! நான் புனித மக்கா செல்ல வேண்டும். உம்ராச் செய்து என் பாவங்களுக்காகப் படைத்தவனிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாட வேண்டும். வருகிறாயா?" என்று கேட்டார்.

மகிழ்ச்சியில் மிதந்தவனாக நான் புறப்பட்டேன். உம்ராவை மிகவும் உணர்வுடன் முறையாகச் செய்து மனிதப் புனிதனாக மாறியவர் அதன்பின் எப்போது பார்த்தாலும் தொழுகை - திலாவத் - தர்மம் என்று நல்ல முஸ்லிமாக மாறினார். எனக்கு அடிக்கடி உபதேசம்கூட செய்வார்.

திடீரென அவரது சகோதரருக்கு உடல் நலம் சரியில்லையென செய்தி வந்தது. ரியாத்திலிருந்து அல்கசீமுக்குப் பயணமானார். அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்து தம் அண்ணனுக்குப் பணிவிடை புரிந்து வந்தார். அண்ணனுக்கு அல்லாஹ் நற்சுகத்தைக் கொடுது விட்டான். இப்போது நன்றாக இருக்கிறார் என்ற செய்தியைச் சொன்னார். பேசும்போதெல்லாம் தவ்பாச் செய்யுமாறும் மார்க்கத்தில் நிலைத்திருக்குமாறும் நல்லுபதேசம் செய்வார்.

ஒருநாள் அவரது அண்ணன் எனக்கு ஃபோன் செய்தார். என் தம்பி, உம் நண்பர் இன்று ம்ஃரிப் தொழுகைக்காகப் மஸ்ஜிதுக்குச் சென்றவர் தொழுது முடித்த பிறகு ஒரு தூணில் சாய்ந்தவராக திக்ரில் ஈடுபட்டிருந்தார். நாங்கள் இஷாத் தொழுகைக்காகச் சென்றபோது தான் தெரிந்தது அந்தத் தூணில் சாய்ந்தவாறே அவர் அல்லாஹ்விடம் சென்றுவிட்டார் என்பது! (இன்னாலில்லாஹி...)

எப்படிப்பட்ட பாவியை அந்த கேசட் மாற்றிவிட்டது பார்த்தீர்களா? நம்முடைய கேசட்டுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? சிந்திப்போமா?

No comments:

Post a Comment