Monday, June 13, 2011

வெளிநாடுகளில் இந்திய சினிமாவுக்கு இந்த நிலைமையா?

ரிலையன்ஸ் நிறுவனம் வெளிநாடுகளில் இயக்கிவரும் ‘BIG Cinemas’ தியேட்டர்கள், முன்பைவிட அதிக எண்ணிக்கையில் தமது கதவுகளைத் திறந்துள்ளன. வெளிநாடுகளில் இந்திய திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதால், இது சாத்தியமாகியுள்ளது என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

“இந்தியத் திரைப்படங்களுக்கு முன்பைவிட அதிக வரவேற்பு வெளிநாடுகளில் இருக்கின்றது” என்று தெரிவித்துள்ள ரிலையன்ஸ் மீடியா வேர்க்ஸ் பிரிவின் தலைமை அதிகாரி அனில் அர்ஜூன், “இதனால்தான், அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் தியேட்டர்களை வெற்றிகரமாக இயக்க எம்மால் முடிகின்றது” என்கிறார்.

‘BIG Cinemas’ தியேட்டர்கள், 2008ம் ஆண்டில் அமெரிக்காவில் நியூ ஜேர்சியிலும், ஜோர்ஜியாவிலும் முதன்முதலாகத் தமது தியேட்டர்களைத் திறந்தது. தற்போது ‘BIG Cinemas’ தியேட்டர்கள், Illinois, California, Florida, Georgia, Kansas, Kentucky, Nevada, New Jersey, New York, North Carolina, Ohio, Tennessee, Virginia ஆகிய மாநிலங்களில் திறக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் மொத்தம் 24 நகரங்களில், 250 தியேட்டர்களை நடாத்துகின்றது ரிலையன்ஸ். அமெரிக்காவில் திரையிடப்படும் 20-30% ஹிந்திப் படங்களும், 70% தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களும் தமது நிறுவனத்தாலேயே வெளியிடப்படுவதாகக் கூறுகின்றது ரிலையன்ஸ்.

“எமது தியேட்டர்களில் வெளியிடப்படும் திரைப்படங்கள், வெளிநாட்டுவாழ் இந்தியர்களாலேயே அதிகம் பார்க்கப்படுகின்றன என்றும் கூறியுள்ள அனில் அர்ஜூன், ஸ்டார் வேல்யூ உடைய திரைப்படங்களான Dabangg, 3 Idiots, My Name is Khan, Robot போன்றவை, தியேட்டரின் 100% சீட்கள் நிரம்பிய நிலையில் காண்பிக்கப்படுவது சகஜம்” என்கிறார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் இருக்கும் காரணத்தால், மலேசியா, மற்றும் நெதர்லாந்து ஆகிய இரு நாடுகளிலும் தற்போது தியேட்டர்களைத் திறந்துள்ளது ரிலையன்ஸ். மலேசியாவில் இவர்களால் 72 தியேட்டர்கள் நடாத்தப்படுகின்றன.

சமீப காலமாக இந்தியத் திரைப்படங்கள் இன்டர்நேஷனல் பேனர்களில் தயாரிக்கப்படத் தொடங்கியுள்ளன. My Name is Khan, Kites ஆகிய திரைப்படங்கள் இப்படித் தயாரிக்கப்பட்டு வெற்றியடைந்த திரைப்படங்கள். ஹாலிவூட் திரைப்பட பாக்ஸ் ஆபீஸ் வரிசைகளிலும் இந்தத் திரைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆரம்ப நாட்களில் குறைந்தளவு காப்பிகள், மற்றும் தியேட்டர்களிலேயே வெளியிடப்பட்ட இந்தியத் திரைப்படங்களை, அமெரிக்காவில் தற்போதுள்ள நிலைக்குக் கொண்டுவந்தது 3 Idiots திரைப்படம்தான் என்கிறார் அனில் அர்ஜூன். “தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்துத் திரைப்படங்களும், வெளிநாட்டு மார்க்கெட்டையும் மனதில் வைத்தே தயாரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது” எனவும் கூறுகிறார் அவர்.

தமிழ் திரைப்படங்களைப் பொறுத்தவரை ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில், அதிக சதவீதமான ரசிகர்கள் ஈழத் தமிழர்கள் என்பதே நிலை. இதனால், வெளிநாட்டு மார்க்கெட்டிங்கில் கவனம் செலுத்தும் தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள், ஈழத் தமிழர்களை மனதில் வைத்தும் சில காட்சிகளைச் சேர்ப்பது நடைபெறுகின்றது.

இனி இந்தியாவுக்கும் வருகிறது

வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட் செயின்கள் இந்திய அரசிடம் நீண்டகாலமாக கேட்டுக் கொண்டிருந்ததைக் கொடுக்க முன்வந்துள்ளது மத்திய அரசு. வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட்கள் இந்தியாவில் சில்லரை வியாபாரம் செய்ய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

Wal-Mart Stores , Carrefour , Tesco, Metro AG ஆகிய வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட் செயின்கள், இந்தியாவில் சில்லரை வியாபாரத்தில் ஈடுபட விண்ணப்பித்திருந்தன. ஆனால், இந்தியாவின் சில்லரை வர்த்தகச் சட்டம் அதற்கு இதுவரை இடம்கொடுக்கவில்லை.

தற்போது சட்டம் மாற்றப்படவுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய சில்லரை வர்த்தகம் ஒன்றில் 51% முதலீட்டைச் செய்யலாம் என்பதே புதிய சட்ட மாற்றம். நிதி அமைச்சின் பிரதான பொருளாதார ஆலோசகர் கௌசிக் பாசு, இதற்கான பரிந்துரையை அங்கீகரித்துள்ளார்.

அடுத்துவரும் சில மாதங்களில், வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட் செயின்களால் 450 பில்லியன் டாலர் முதலீடு இந்தியாவில் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவின் பிரதான நகரங்களில், வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட்கள் தமது கதவுகளைத் திறக்கப் போகின்றன!

வியக்க வைக்கும் அறிவியல் உண்மைகள்


மரத்தின் கீழ் ஏன் தூங்கக் கூடாது?
பகல் நேரங்களில் மரத்தினடியில் படுத்துறங்குவதால் தவறில்லை. ஆனால், இரவு நேரங்களில் மரத்தடியில் படுப்பது பெரிதும் தீங்கானது. பகல் நேரத்தில் தாவரங்கள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகின்றன. அதனால் மரத்தடியில் படுப்பவருக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால், இரவில் மரங்களும் காற்றிலுள்ள பிராண வாயுவை உட்கொண்டு, கரியமில வாயுவை வெளியிடுகின்றன. அதனால் மரத்தடியில் படுப்பவருக்கு, சுவாசிக்கத் தேவையான அளவுக்கு வேண்டிய பிராண வாயு கிடைக்காது. கரியமில வாயுவையே சுவாசிக்க நேரும். அதனால், இரவில் மரத்தடியில் படுப்பவரின் உடல்நலம் பாதிக்கப்படும்.

திமிங்கிலங்கள் அடிக்கடி தம் தலைப்பகுதியிலிருந்து நீரை ஊற்று போல் பீய்ச்சிடுவது ஏன்?
திமிங்கிலங்கள் தம் தலைப் பகுதியிலிருந்து நீரை பீய்ச்சிடுவதைக் கொண்டே கடலில் செல்லும். மாலுமிகள், தூரத்தில் திமிங்கிலங்கள் செல்வதைத் தீர்மானிக்கின்றனர். ஆனால், உண்மையில் திமிங்கிலம் பீய்ச்சிடுவது தண்ணீர் அல்ல! சுடு நீரும் வாயுக்களும் ஆகும். கடலினுள் நீண்ட நேரம் இருக்கும் திமிங்கிலத்தின் நுரையீரலில் இருந்து வெளிப்படும் காற்று (மூச்சு - வெளியிடும் காற்று - முக்கியமாக கரியமில வாயு) மற்றும் நீர்ச்சத்து மிகவும் சூடாகின்றது. இந்நிலையில் கடலின் மேற்பரப்புக்கு வரும் திமிங்கிலம் தன் தலைப்பகுதியில் உள்ள ஓர் நாசித் துவாரத்தைத் திறந்து நுரையீரலில் தேங்கிய கழிவுப் பொருளான கரியமில வாயு மற்றும் வெப்பம் மிகுந்த நீர்ச்சத்தினை வேகமாகக் கடலின் குளிர்ந்த நீர் வழியே பீய்ச்சி அடித்து வெளியேற்றுகின்றது. இதுதான் கடலில் வெகுதூரம் வரை தெரிகின்றது.
மின் விசிறியின் இறகுகள் பின்பக்கமாகச் சுற்றுவதுபோல் தோன்றக் காரணம் என்ன? 
சின்ன உதாரணம் மூலம் பார்க்கலாம். இன்றைய நவீன குழல் விளக்குகள் தொடர்ந்து பிரகாசிப்பதில்லை. அவை விட்டு விட்டு ஒரு நொடிக்கு 50 தடவை வீதம் பிரகாசிக்கின்றன. ஆனாலும், நமது கண்களின் பார்வை நிலைப்புத் தன்மையால் நமது பார்க்கும் உருவத்தின் பிம்பம் நமது பார்வையில் பத்தில் ஒரு பங்கு விநாடி வரையில் தங்கும் காரணத்தினால் நாம் தொடர்ந்து பார்க்க முடிகிறது. இந்த இயல்பைத்தான் காற்றாடியின் இறகுகள் உணர்த்துகின்றன. காற்றாடியின் இறகுகள் பூரணச் சுற்றுகள் பிரதிபலிப்பதில் அடர்வு எண்ணுடன் ஒத்துப் போகுமேயானால் இறகுகளை அத்துடன் ஒன்றிய நிலையில் பார்க்கிறோம். அறிவியல் அறிஞர்கள் இந்த நிலையை ‘ஸ்ட்ரோயோஸ்கோபிக் தன்மை’ என்று கூறுவர். ஆனால், எப்பொழுது இந்தச் சமநிலை மாறுபடுகிறதோ அப்பொழுதெல்லாம் மின் விசிறியின் இறகுகள் முன்புறமோ அல்லது பின்புறமோ சுழல்வது போன்று தெரியும்.

மாறன குடும்ப சொத்தில் மாயம் 2130 கோடி

கடந்த பத்தே நாட்களில் இவ்வளவு பெரிய தொகை, மாறன் சகோதரர்களின் சொத்திலிருந்து மாயமாகியிருக்கின்றது!

மும்பை, இந்தியா: மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அவரை சிறைக்கு அனுப்புமா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்தக் குற்றச்சாட்டுகள் மாறன் சகோதரர்களின் சொத்துக்களில் கிட்டத்தட்ட 2000 கோடி ருபாவை மாயமாக மறைய வைத்திருக்கின்றது!

அதாவது, கடந்த 10 நாட்களுக்குள் அவர்களது சொத்து மதிப்பில் 2000 கோடி ரூபா குறைந்திருக்கின்றது.

மாறன் சகோதரர்களின் நிகர வர்த்தகச் சொத்து மதிப்பில் முக்கிய பங்கு வகிப்பவை இரண்டு நிறுவனங்கள். ஒன்று, சன் டீ.வி. நெட்வேர்க். மற்றையது, ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ். இந்த இரு நிறுவனங்களின் மொத்த பங்குகளிலும், மாறன் சகோதரர்களின் வசமிருப்பவை எவ்வளவு?

சன் டீ.வி. நெட்வேர்க் – 77%. ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் – 38.61%.
இவ்விரு நிறுவனங்களின் பங்குகளும், முன்பு பங்குச் சந்தையில் நல்ல கிராக்கியுடன் இருந்தன. அதற்குக் காரணம், தயாநிதி மாறன் மத்திய அமைச்சர், அவரது தாத்தா தமிழக முதல்வர். இதனால், போட்டி நிறுவனங்களை வியாபார ரீதியாக வீழ்த்தக்கூடிய அரசியல் செல்வாக்கு.

முதலில் தமிழக ஆட்சி கைவிட்டுப் போயிற்று.

அப்படியிருந்தும், தயாநிதி மாறன் மத்திய அரசில் செல்வாக்கான அமைச்சராக இருந்ததால், பங்குகள் நல்ல விதமாகத்தான் ட்ரேட் பண்ணிக்கொண்டிருந்தன.

இப்படியான நேரத்தில்தான் தயாநிதி மீதான பகீர் குற்றச்சாட்டுகள் வெளியாகின. வெளியான குற்றச்சாட்டுகள் இறுகவும் தொடங்கின. தயாநிதிமீது சி.பி.ஐ விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எல்லாத் திசையிலுமிருந்து வரத்தொடங்கின.

அடுத்த கட்டமாக, தயாநிதி மாறனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. தயாநிதி தீகார்வரை போகக்கூடும் என்ற வதந்திகளும் எழுந்தன.

இந்த நிலையில் இரு நிறுவனங்களின் பங்குகளும் சரியத் தொடங்கின. அதில் முதலீடு செய்திருந்தவர்கள், தமது முதலீட்டை மாற்றத் தொடங்கினார்கள்.

இம் மாதம் (ஜூன்) 1ம் தேதி, பங்குச் சந்தை மூடப்பட்டபோது, சன் டீ.வி. நெட்வேர்க் பங்குகள் ரூபா 377.40க்கு ட்ரேட் பண்ணின. ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் பங்குகளின் பெறுமதி ரூபா 41.10.

இதன் பின்னர்தான் தயாநிதி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் சூடு பிடிக்கத் தொடங்கின. இந்த வாரத்துக்கான பங்குச் சந்தை நேற்று (10ம் தேதி) மாலை மூடப்பட்டபோது, சன் டீ.வி. நெட்வேர்க் பங்குகள் ரூபா 307.15க்கு ட்ரேட் பண்ணின. ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் பங்குகளின் பெறுமதி ரூபா 34.05!

இதன் அர்த்தம் என்னவென்றால், மேற்படி இரு நிறுவனங்களின் புக்-வேல்யூவும் முறையே 19, 17 சதவீதங்கள் குறைந்துள்ளன. அவற்றில் மாறன் சகோதரர்களின் பங்குகள் முறையே 77, 38.61 சதவீதங்கள்.

மாறன் சகோதரர்கள், கடந்த 10 நாட்களில், தமது வர்த்தகச் சொத்தில் 2130 கோடி ரூபா தொகையை இழந்திருக்கின்றனர்.

இவ்விரு நிறுவனத்தின் பங்குகளும், பங்குச் சந்தை புரோக்கர்களிடையே ‘ஹாட்-பிக்” என்ற வகையில் கடந்த மாதத்தில் இருந்தன. இந்த மாதம் ‘எபவுட் கோல்ட்-ரேட்டட்” நிலைக்குச் சென்றிருக்கின்றன.

ஏதாவது அதிசயம் நடந்தால்தான், இவை பழைய நிலையை எட்டிப் பிடிக்க முடியும்!

பிரிட்டிஷ் கல்வி விசா- அதிரவைக்கும் உண்மை

லண்டன், பிரிட்டன்: பிரிட்டனில் கல்வி கற்பதற்கான விசா வழங்கலில் மிகப்பெரிய அளவு எண்ணிக்கைச் சரிவு ஏற்படவுள்ளது. இதுவரை வழங்கப்பட்டுவந்த கல்வி விசா எண்ணிக்கையிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, இரண்டு லட்சத்து முப்பதாயிரம் எண்ணிக்கை குறையவுள்ளது.

பிரிட்டிஷ் ஹோம் மினிஸ்ட்ரியின் புதிய கொள்கையின்படி, ஒவ்வொரு வருடமும் அதிகபட்ச எண்ணிக்கையாக ஒரு லட்சம் புதியவர்களே பிரிட்டனுக்குள் அனுமதிக்கப்படவுள்ளனர். இந்த எண்ணிக்கையில் புதிதாக பிரிட்டனுக்குள் வரும் சகலரும் அடங்குகின்றனர்!

அதாவது, இமிகிரன்ட் விசா, கல்வி விசா, அகதிக் கோரிக்கை என சகல பிரிவுகளையும் இந்த ஒரு லட்சம் எண்ணிக்கைக்குள் அடக்கிவிட நினைக்கின்றது பிரிட்டிஷ் ஹோம் மினிஸ்ட்ரி.

தற்போதைய அரசு பதவியிலிருக்கும்வரை (2011-2015) இந்த நடைமுறையை கடுமையாகப் பின்பற்றுவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்தே அடுத்த ஐந்து ஆண்டுகளில் 230,000 குறைவான கல்வி விசாக்கள் வழங்கப்படும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பிரிட்டனின் கல்வி விசாவுக்கான நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டன. அவற்றில் முக்கியமான மாற்றங்கள்-

• தனியார் கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு மாணவரை ஸ்பான்சர் செய்யும் நடைமுறைகளில் வெட்டுக்கள் வீழ்ந்துள்ளன.

• மாணவர்கள் பகுதிநேர வேலை செய்யும் சட்டங்கள் இறுக்கப்பட்டுள்ளன.

• மாணவர்கள் தமது குடும்பத்தினரைத் தம்முடன் பிரிட்டனுக்கு அழைத்துவரும் நடைமுறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டிலிருந்து, வெளிநாட்டு மாணவரின் அபிமானத்துக்குரிய இடமாக பிரிட்டன் இருக்கப்போவதில்லை என்பது நிச்சயம். அதற்குத்தான், வேறு பல நாடுகள் சுலபமான கல்வி விசா நடைமுறைகளை வைத்திருக்கின்றனவே!

ஒரு நிமிடத் தாமதத்தால் விசா நிராகரிப்பு!

அந்தப் பெண் வழக்கில் வெற்றியடையும் கட்டத்தில், அவருக்குப் பாதகமாக வந்து சேர்ந்தது ஒரு ஆதாரம்!

மெல்போர்ன், ஆஸ்திரேலியா: Skilled migration visa விண்ணப்பம் தமது அலுவலகத்தை ஒரு நிமிடம் தாமதமாக வந்தடைந்த காரணத்தால் நிராகரிக்கப்பட்டது என ஆஸ்திரேலிய இமிகிரேஷன் திணைக்களம் தெரிவித்துள்ளது! அத்துடன் குறிப்பிட்ட அந்த விண்ணப்பம் சரியான முறையில் வந்து சேரவில்லை எனவும் கூறியுள்ளது.

Skilled migration visa விண்ணப்பங்கள் இ-மெயில் மூலம், அல்லது கூரியர் மூலம் அனுப்பப்பட வேண்டும் என ஆஸ்திரேலிய இமிகிரேஷன் தெரிவித்திருந்தது. குறிப்பிட்ட இந்த விண்ணப்பம் பேக்ஸ் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

டடென்டா முராட்சி என்ற 25 வயதுப் பெண்ணின் விண்ணப்பமே இந்தக் காரணங்களால் ஆஸ்திரேலிய இமிகிரேஷனால் நிராகரிக்கப்பட்டுள்ளது. டடென்டா, ஆஸ்திரேலிய இமிகிரேஷனுக்கு எதிராகத் தொடுத்திருந்த வழக்கில், தீர்ப்பு அவருக்குச் சாதகமாக அமையவில்லை.
மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் கல்வி விசாவில் படித்துவந்த டடென்டா, ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகத் தங்குவதற்கு Skilled migration விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார். அதற்கான சகல தகுதிகளும் அவருக்கு இருந்தது. விண்ணப்பம் சரியான முறையில் நிரப்பப்பட்டிருந்தது. விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டிய சகல ஆவணங்களும் இணைக்கப்பட்டிருந்தன.

டடென்டா முராட்சி

அப்படியிருந்தும் விசா நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து அவர், ஆஸ்திரேலிய இமிகிரேஷன் இலாகாவுக்கு எதிராக வழக்குத் தொடுத்திருந்தார்.

நீதிமன்றத்தில் ஆஜராகிய இமிகிரேஷன் அதிகாரி, “இ-மெயில் அல்லது கூரியரில் அனுப்பப்படாத காரணத்தால், விண்ணப்பத்தை நிராகரித்தோம்” என்று முதலில் கூறிய காரணம், நீதிபதியால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

அந்தக் கட்டத்தில் வழக்கில் இமிகிரேஷன் தரப்பு தோல்வியடையும் நிலை ஏற்பட்டது.

அதன்பின், பேக்ஸில் வந்த டடென்டா முராட்சியின் விண்ணப்பத்தை ஆராய்ந்தபோது, அதில் பேக்ஸ் வந்து சேர்ந்த தேதி மற்றும் நேரம் ஆகியவை பதிவாகியிருந்தன. மார்ச் 15ம் தேதி 17.01 மணிக்கு பேக்ஸ் கிடைக்கப் பெற்றிருந்தது.

இதையடுத்து இமிகிரேஷன் இலாகா, தனது வாதத்தை மாற்றிக் கொண்டது.

“குறிப்பிட்ட விசா விண்ணப்பங்களுக்கான இறுதித் தேதி, மார்ச் மாதம் 15ம் தேதி. இமிகிரேஷன் இலாகாவின் அலுவலக நேரம் 5 மணியுடன் முடிகின்றது. இந்த விண்ணப்பம் 5.01க்கு வந்து சேர்ந்த காரணத்தால், இறுதித் தேதியைக் கடந்து விட்டது” என்பது இமிகிரேஷன் இலாகாவின் புதிய வாதம்.

இந்த வாதம் நீதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

“டடென்டா முராட்சி மீது நான் அனுதாபம் கொள்வதைத் தவிர வேறு ஏதும் செய்ய முடியாது. அவரது விண்ணப்பம் 1 நிமிடம் தாமதமாக வந்துள்ளது, விசா நிராகரிப்புக்குச் சரியான காரணமே” என்று கூறியுள்ள நீதிபதி, “மனிதாபிமான அடிப்படையில் கோர்ட் செலவுக்கான பணத்தை இமிகிரேஷன் இலாகா ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.

ஒரு நிமிடத்தை வைத்து, ஒருவருடைய எதிர்காலத்துடன் விளையாடியிருக்கிறதே இமிகிரேஷன்!

வாருங்கள். உலகத்திலுள்ள அனைத்து நாளிதள்களையும் ஒரே பக்கத்தில் படிக்கலாம்.

 உலகில் எதனை நாளிதழ்கள் உள்ளது என்பதை ஒரே பகுதியில் காண முடியுமா என்றால் முடியும் என்பதே என் பதில். உலகில் உள்ள அனைத்து நாளிதல்களையும் ஒரே இணைய பக்கத்தில் காண முடியும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒரு செய்தியை பற்றிய அணைத்து தகவல்களையும் இந்த செய்திதாள்களின் மூலம் அறிய முடிகிறது என்பதால் மக்கள் இன்னும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கிறோம். உலகில் எக்கச்சக்கமான நாளிதழ்கள் உள்ளது. நம் இந்திய நாட்டை எடுத்து கொள்ளுங்கள் இதில் நூற்றுகணக்கான நாளிதழ்கள் உள்ளது.

இந்த இணைய Newspaper Map பக்கத்தில் சென்றால் மேப் போன்று காணப்படும். வரைபடத்தில் இருந்து அந்தந்த நாடுகளில் உள்ள நாளிதழ்களை நாம் அறிந்து அந்த தளங்களுக்கு சென்று ஆன்லைனில் அந்த சித்திகளை இலவசமாக படித்து கொள்ளலாம். 

இந்த தலத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆன்லைன் தளங்கள் உள்ளன. இந்த தலத்தில் மேலும் ஒரு பயனுள்ள வசதி இதில் செய்திதாள்களின் மொழிகளை ஒரே கிளிக்கில் கன்வெர்ட் செய்யும் வசதியும் உள்ளது.மற்றும் மொழிவாரியாகவும், இடம் வாரியாகவும் பிரித்து தேடிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது இது கண்டிப்பாக அனைவர்க்கும் பயனுள்ளதாக இருக்கும்.