வருங்காலத் தொழில்நுட்பம் 90 : கூகுள் - கதாநாயகனும் வில்லனும்!
இந்த வாரக் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அது... கூகுள்!
12.5 பில்லியன் டாலர்களை பர்ஸில் இருந்து எடுத்து மோட்டரோலா நிறுவனத்தை வாங்கியிருக்கிறது கூகுள். மென்பொருள் நிறுவனமாக மட்டுமே இதுவரை இருந்து வந்த கூகுள், இப்போது நுகர்வோர் மின்பொருள் ( Consumer Electronics ) நிறுவனமாகவும் மாறி இருக்கிறது.
ஆறு மாதங்களுக்கு முன்னால், கூகுளின் நிறுவனர்களில் ஒருவரான லேரி பேஜ் CEO-வாகப் பதவியேற்ற போது, புதுமையாகச் சில வற்றைச் செய்யப்போகி றார் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். சமூக வலை சேவையான கூகுள் ப்ளஸ் இரண்டு மாதங்களுக்கு முன் வெளியானபோது, அதுதான்
லேரியின் மிகப் பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. (கலக்கிக் கொண்டு இருக்கும்கூகுள் ப்ளஸ் பற்றி அடுத்த சில வாரங்களில் பேசியாக வேண்டும்). அதை எல்லாம் ஜுஜுபி ஆக்கிவிட்டு, மோட்டரோலாவை வளைத்துப் போட்டு இருக்கிறார் லேரி. இதன் பின்னணியையும் எதிர்கால விளைவு களையும் பார்க்கலாம்.

ஆப்பிள் தன் கையில் சாதனங்களின் வன்பொருளையும் (Hardware),அவற்றை இயக்கும் மென்பொருளையும் (Operating System) ஒருசேர வைத்திருப்பதால் தான், அவர்களது சாதனங்களின் பயனீட்டு அனுபவத்தை எளிதாகவும் விரும்பும்படியாகவும் செய்ய முடிகிறது. கூகுளிடம் இதுவரை மொபைல் சாதனங்களை இயக்கும் ஆன்ட்ராயிட் மென்பொருள் மட்டுமே இருந்தது. Samsung, HTC போன்ற சாதனத் தயாரிப்பாளர்களிடம் ஆன்ட்ராயிடைக் கொடுத்து, அவர் களது சாதனங்களில் இயக்கிக் கொள்ளும்படி கொடுத்துவந்திருக்கிறது கூகுள். இந்த சாதனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, தங்கள் சாதனங்களை அதிகமாக விற்க ஆன்ட் ராயிட் உதவினாலும், பயனீட்டு அனுபவத்தை முன்னேற்றும் வகையில் தங்களது சாதனங்களில் விரைவாக மாற்றம் கொண்டுவர முடியாதது மிகப் பெரிய குறை. அதோடு, பல நிறுவனங்களின் சாதனங்களில் ஆன்ட்ராயிட் இயங்குவதால், எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற குழப்பமும் தொடர்ந்து இருந்தது. இதை நிவர்த்தி செய்கிறேன் என்று Nexus என்ற பெயரில் தானாக அலைபேசி சாதனம் ஒன்றைச் சோதனை முயற்சியாகச் செய்து பார்த்தது. அதுவும்தோல்வி யில் முடிய, சாதனத் தயாரிப்பில் முதிர்ச்சி பெற்ற நிறுவனம் ஒன்றை வாங்கி, அதன் மூலம் தனக்கே சொந்தமான வன்பொருள் மண்டலத்தை அழுத்தமாக உருவாக்க முற்பட்டு இருக்கிறது கூகுள். இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், ஆப்பிளின் மாடலை அப்படியே காப்பி அடித்திருக்கிறது. ஒரு சின்ன வித்தியாசம்: ஆப்பிளின் இயங்கு மென்பொருளான iOS போல் அல்லாமல், ஆன்ட்ராயிட் இலவச மாக வழங்கப்படுகிறது. இதுவரை ஆன்ட்ராயி டில் இருந்து லாபம் எதையும் பார்க்கவில்லை கூகுள். இப்போது மோட்டரோலாவை வாங்கியதன் மூலம் கூகுளுக்கு உடனடியாக லாபம் எதுவும் கிடைக் கப்போவது இல்லை. பின்னர் எதற்காகஇப்படி ஒரு சூதாட்டத்தில் இறங்கியிருக்கிறது கூகுள்?

காரணம் சிம்பிள்... நீங்களும் நானும்தான்! ஆன்ட்ராயிட் மூலம் இயங்கும் அலைபேசி யையோ, குளிகையையோ மில்லியன் கணக்கில் மக்களைப் பயன்படுத்தவைத்துவிட்டால்,அந்தப் பயன்பாட்டில் இருந்து லாபத்தைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம். இதற்கு சமீபத்திய உதாரணம்: சமூக விளையாட்டுகளைத் தயாரிக்கும் Zynga. சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத் தின் தொடக்க கால நோக்கம் முடிந்த வரை பயனீட்டாளர்களைத் திரட்டுவது. Farmville போன்ற விளையாட்டுகளில் முதலில் எப்பாடுபட்டாவது பயனீட்டாளர் களைக் கவர்ந்திழுத்து, அவர்களது நண்பர் களை, அவர்களைவைத்தே இழுத்து வர வைப்பதிலேயே கவனம் செலுத்தியது ஸிங்கா.

புதிதாக வாங்கியிருக்கும் இந்த மோட்ட ரோலா பொம்மையைவைத்து அலைபேசி, குளிகை போன்ற சாதனங்களுடன் விளை யாடுவதோடு கூகுள் நிறுத்திக்கொள்ளாது என்பது எனது அனுமானம். தொலைக்காட்சியில் இருந்து, டோஸ்டர் வரை எதற்கெல்லாம் இயங்கு மென்பொருள் தேவைப்படுகிறதோ, அவற்றில் ஆன்ட் ராயிடை ஏற்றம் செய்து இயக்க கூகுள் முயற்சி செய்யும்.
டெக் வரலாற்றில் இந்த வாரத்தை ஒரு மைல்கல் நிறுவப்பட்ட வாரமாக கருதலாம். அந்த மைல்கல் கடந்த 20 ஆண்டுகளாகக் கோலோச்சி வந்த கணினிகளின் காலங்கள் முடிந்து மொபைல் யுகங்கள் ஆரம்பித்தது. மைக்ரோ சாஃப்ட்டின் விண்டோஸ், ஆப்பிளின் மேக் இயங்கு மென்பொருள்கள் கடந்த 20 ஆண்டுகளில் கணினிகளில் ஆதிக்கம் செய்ததுபோல, இரண்டே இரண்டு மொபைல் மென்பொருள்களே அடுத்த பல ஆண்டுகளில் உயிருடன் இருக்கப்போகின்றன: அவை, ஆப்பிளின் iOS மற்றும் கூகுளின் Android.
|
No comments:
Post a Comment