சென்ற வாரம் தனிப்பட்ட முறையில் எனக்கு அதி சிறப்பானது. விகடனின் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் பயிற்சி முகாமுக்கு என்னைப் பேச அழைத்தனர். சில பல வருடங்களுக்கு முன், இதே பயிற்சித் திட்டத்தில் மாணவனாக இருந்தவன் நான். பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவப் பத்திரிகையாளர் கள்போலவே, என் திட்டக் காலத்தில் சிறப்புரைகளுக்கு வந்திருந்த பிரமுகர்களிடமும் நிபுணர்களிடமும் குறுகுறு பார்வையுடன் பல கேள்விகளைக் கேட்ட நினைவு இருக்கிறது. வருடங்கள் பல கடந்த பின்னர், அதேபோன்ற கேள்விகள் நம்மிடம் கேட்கப்படும்போது, அவற்றுக்குப் பதில் சொல்வது எளிது அல்ல என்ற உண்மை புலப்பட்டது. நான் மாணவப் பத்திரிகையாளனாக இருந்தபோது, பெரும்பாலும் பயன்படுத்தியது சைக்கிள். கட்டுரையை பேப்பரில் எழுதி, கூரியரில் அனுப்ப வேண்டும். இந்த வருடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் 56 புதிய பத்திரிகையாளர்களிடம் எனது பேச்சின்போது, தொழில் நுட்பப் பயனீடுபற்றிச் சில கேள்விகள் கேட்டேன்.

இது இணையப் பயனீட்டாளர்களின் ஒரு குறுக்குவெட்டு சாம்ப்ளிங் என்று சொல்லலாம். இவர்களில் சிலர், சில வருடங்களுக்குப் பின்னர் என்னைப்போலவே பேச அழைக்கப்படலாம். அப்போது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி என்னவாகும் என்பதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.
அது இருக்கட்டும்... டெக் உலகில் சமீபத்தில் வெளிவந்து கலக்கிக்கொண்டு இருக்கும் தளங்கள், சேவைகள், சாதனங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
'கடைசி நேரத் தேவைகள்’ என்பது நல்ல லாபம் ஈட்ட முடிகிற சந்தை. ஏர்லைன் நிறுவனங்கள் கடைசி
நிமிடங்களில் மலிவான விலையில் பிசினஸ் கிளாஸுக்கு upgrade செய்யத் தூண்டுவதை சர்வதேசப் பயணங்களில் சாதாரணமாகப் பார்க்கலாம். காலியாகப் போகும் இருக்கைகளை, குறைவான விலையில் விற்றால் லாபம்தானே!

இதேபோல், கடைசி நேரத் தேவைகள் பலவற்றைச் சந்திக்கும் சந்தை, இணையம் வரும் முன்னர் சிறிய அளவில்தான் இருந்தது. காரணம், கடைசி நேரத் தேவையைச் சந்திக்க முடியுமா என்பதை, நீங்கள் நேரிலோ, ஏஜென்ட் ஒருவர் மூலமாக மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். இணையம் வந்த பின்னர் இந்தச் சந்தை மிகப் பெரிதாக விரிவடைந்தது. கடைசி நேரப் பயண டிக்கெட்டுகளையும், வாடகை கார்களையும், ஹோட்டல் ரூம்களையும் வாங்கித் தரும் சேவைகள் அறிமுகமாகின. இதன் அடுத்தகட்ட வளர்ச்சி, மொபைல் சார்ந்த சேவைகள். குறிப்பாக, அடிக்கடி பயணிப்பவர்கள் தங்குவதற்கான ஹோட்டல் ரூம் வசதி. திடீரெனப் பயணம் செய்யும் அவசியம் வரும்போது, தங்க இடம் கிடைக்காமல் அவதிப்படு வது உண்டு. இதைக் கருத்தில்கொண்டு வெளியிடப்பட்டு இருக்கும் முதல் சேவை Hotel Tonight என்ற மொபைல் மென்பொருள். ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களில் பதிவிறக்கி இயக்க முடிகிற இந்த மென்பொருள், Location Based Services எனப்படும் இடம் சார்ந்த சேவையை மிக அழகாகப்
பயன்படுத்துகிறது. நீங்கள் கோவைக்கு அவசரமாகச் செல்ல வேண்டி இருக்கிறது. ரயிலில் சென்று சேர்கிறீர்கள். ரயில் நிலையத்துக்கு வெளியே வந்து, அலைபேசியை எடுத்து, மென்பொருளை இயக்கி, ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் ஹோட்டல்களின் விவரங்களை யும், அதன் வாடகையையும், அதில் ஏற்கெனவே தங்கியிருந்தவர்களின் பின்னூட் டங்களையும் படித்து, அலைபேசியில் இருந்தே அறையை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என்றால், எப்படி இருக்கும்? அதைத்தான் Hotel Tonight மென் பொருள் செய்கிறது. சான்ஃபிரான்சிஸ்கோவுக்கு மட்டுமே இருந்த Hotel Tonight இப்போது அமெரிக்காவின் பல நகரங்களிலும் இயங்குகிறது. 'கடைசி நேரத் தேவை’ ஏரியாவில் தொடர்ந்து பல புதுமையான சேவைகள் விரைவில் வரும் என நம்புகிறேன். தொழில் முனையும் ஆர்வம் உள்ளவர்கள், இந்தியாவில் இது போன்ற சேவைகளை வெளியிட முன்வரலாம். நிச்சயம், வரவேற்பு சிறப்பாக இருக்கும்!

சின்ன விஷயங்களில் புதுமையைப் புகுத்தி அதை talk of the town ஆக மாற்றிவிடலாம் என்பதற்கு சமீபத்திய உதாரணம்: ஐவாட்ச் ( http://www. iwatchz.com/ ). ஐ-பாட் நானோ என்பது ஆப்பிள் ஐ-பாட் குடும்பத்தின் ஓர் உறுப்பினர். சதுர வடிவில் இருக்கும் இந்த இசைப் பேழை சாதனத்தில், மிகவும் அடிப்படையான மென்பொருட்கள் சிலவும் உண்டு. உதாரணத்துக்கு, புகைப்படங்களைச் சேமித்துப் பார்க்க முடிகிற வசதி. கடிகார மென்பொருளும் உண்டு. அந்த மென்பொருளை இயக்கினால், ஐ-பாட் நானோ பார்ப்பதற்கே கைக்கடிகாரம்போல் இருக்கும் என்பதைப் பார்த்து அதற்கு strap ஒன்றைச் செய்திருக்கிறது இந்த நிறுவனம். இதை வாங்கி, ஐ-பாட் நானோவை அதில் செருகினால் போதும், கைக்கடிகாரம் தயார்!
இதில் இருக்கும் மற்றொரு மென்பொருள் Pedometer. இதை இயக்கி நடக்க ஆரம்பித்தால், எத்தனை அடிகள் நடந்து இருக்கிறீர்கள் என்பதைக் கணக்கிட்டபடியே வரும். நானோவை கணினியில் இணைத்து உங்களது நடைத் தகவலை www.nikeplus.com என்ற தளத்துக்குப் பதிவேற்றம் செய்து, உங்களது நண்பர்களுடன் 'யார் அதிகம் நடந்தது’ என்று போட்டி போடலாம்.
இன்னும் சில மாதங்களில் iCloud வந்து விடும். அதன் பின்னர், கணினியில்
இணைத்து நடை மற்றும் ஓட்டம்பற்றிய தகவல்களைப் பதிவேற்றம் செய்யும் அவசியம் இருக்காது. உங்களது ஒரு நண்பர் மெரினா பீச்சிலும், மற்றவர் நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரிலும், நீங்கள் சிங்கப்பூரிலுமாக இருந்துகொண்டு நடை / ஓட்டப் போட்டி நடத்தலாம்!
|
No comments:
Post a Comment