தேர்தல் திருவிழா பர பரப்பிலும், 'சும்மா அதிருதில்ல’ பாணியில் தமிழக மக்கள் கொடுத்த தேர்தல் முடிவுகளின் அதிர்ச்சியிலும், சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் டெக் உலகை எப்படிப் பாதித்தன என்பதை எழுத இத் தொடருக் குப் பக்கங்கள் கிடைக்கவில்லை. ஒசாமா பின்லேடன், அமெரிக்கப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது சம்பந்தப்பட்ட இணைய நிகழ்வினை முதலில் பார்க்கலாம்:



20 வருடங்களுக்கு முன்னால் இதுபோன்ற நிகழ்வுகளின்போது, செய்தித்தாள்களுக்கு டிமாண்ட் இருக்கும். ஸ்பெஷல் எடிஷன் என்றெல்லாம் பரபரப்பாக விற்பனை நடக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இதுபோன்ற நிகழ்வுகளை கவர் செய்ய டி.வி. என்ற பாரம்பரிய ஊடகம் இருந்தது. பில்லியன் மக்களுக்கு மேல் மக்களை இணைத்துவைத்து இருக்கும் இணையமும் அலைபேசித் தொழில்நுட்பமும் 'Breaking News’ என்றால், அது இணையத்தின் மூலமாக நுகர முடியும் என்பதை நோக்கி நகர்ந்துகொண்டு இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
மிகப் பிரபலமான செய்தியாக இருப்பதால், இதைப் பயன்படுத்தி இணையப் பயனீட்டாளர்களை ஏமாற்றி, தங்களது வைரஸ் மென்பொருட்களை தரவிறக்கம் செய்யவைத்த சைபர் பொறுக்கித்தனம் நிறையவே நடந்தது. பின்லேடனின் சிதைக்கப்பட்ட முகத்தைக் காட்டும் புகைப்படம் தங்களிடம் இருப்பதாக வலைப்பக்கம் ஒன்று இருக்கும். ஆனால், புகைப்படம் தெரியாது. 'இதைப் பார்க்க plugin ஒன்று பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்!’ என்று வலைப் பக்கம் சொல்வதை நம்பி இந்த மென்பொருளைப் பதிவிறக்கம்
செய்தால், உங்களுக்கு ஒரு உடான்ஸ் படம் காண்பிக்கப்படும். ஆனால், திரை மறைவில் உங்களின் நடவடிக்கைகளை வேவு பார்க்கும் மென்பொருள் இயங்கிக்கொண்டு இருக்கும். இணையத் துறையில் அத்தனை பரிச்சயம் இல்லாத சாதாரணப் பயனீட்டாளர்களை ஏமாற்றுவதற்கென்றே தருணம் பார்த்தபடி இருக்கும் இந்த வைரஸ் மென்பொருள் தயாரிப்பாளர்களை வேட்டையாட, அமெரிக்கப் படைகளை அனுப்புவது நல்லது!

அடுத்த நிகழ்வு, இங்கிலாந்து அரசு குடும்ப வைபவம்.
கிட்டத்தட்ட வளர்ப்பு மகன் திருமணத்தைப்போல கோலாகலமாக நடத்தப்பட்ட இந்தத் திருமணம்பற்றிய செய்திகளும் இணையதளங்களுக்கு வரும் ட்ராஃபிக்கை அதிகரித்திருப்பது தெரியவருகிறது. 'Royal Wedding’ என்ற பதத்துடன் 10 மில்லியனுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் ஒரு நாளில் மட்டும் தங்களது பயனீட்டாளர்களால் எழுதப்பட்டன என்று
ஒருபுறம் ஃபேஸ்புக் சொல்ல, டிவிட்டரோ இந்த வைபவத்தின்போது பரிமாறிக்கொள்ளப்படும் ட்வீட்டுகளின் எண்ணிக்கையைச் சமாளிக்க அதிகப் பெருங்கணினிகளைத் தங்களது டெக் உள் கட்டமைப்பில் இணைத்ததாகச் சொன்னது.
இந்த இரண்டு நிகழ்வுகளில் எது மிகவும் பிரபலம்? கூகுள் டிரெண்ட் தளத்தை ( http://www.google.com/trends) பயன்படுத்தி அலசிப் பார்த்தேன்.
ஓசாமா கொலைதான் நம்பர் ஒன் நிகழ்வாகத் தெரிகிறது. புள்ளிவிவரப் பிரியர்கள் இந்த உரலிக்குச் செல்லலாம் http://www.google.com/trends?q=royal+wedding%2C+bin+laden&ctab=0&geo=all&date=mtd&sort=0
|
No comments:
Post a Comment