Friday, December 9, 2011

வருங்காலத் தொழில்நுட்பம் பாகம் 10

இன்றைய தேதியில் தொழில்நுட்ப உலகில் வண்ண அணிவகுப்பு நடத்துவது Tablet Computer எனப்படும் குளிகைக் கணினிகள் தான். சுமார் 15 மாதங்களுக்கு முன்னால், ஆப்பிளின் ஐ-பேடில் ஆரம்பித்தது இந்த அணிவகுப்பு.

இதுவரை 25 மில்லியன் ஐ-பேட் குளிகை களை விற்றுச் சாதனை படைத்து இருக்கிறது ஆப்பிள். இதன் விளைவால், 9% இருந்த மேஜை மற்றும் மடிக்கணினிகளின் விற்பனை வளர்ச்சி 4% ஆகச் சரிந்திருக்கிறது. இந்தக் கணினிகளை உற்பத்தி செய்யும் Dell, HP போன்ற நிறுவனங்களின் லாபம் கணிச மாகக் குறையப்போவதாக முதலீட்டு அறிவுரை கொடுக்கும் நிறுவனங்கள், முதலீட் டாளர்களுக்கு எச்சரிக்கை கொடுக்க ஆரம்பித்து இருக்கின்றன. கணினி தயாரிப்பு நிறுவனங்களுக்கு இது பெரிய அதிர்ச்சி கொடுக்கவில்லை. காரணம், இந்த மாற்றம் இரவோடு இரவாக நடந்துவிடவில்லை. ஐ -பேடின் வெளியீடு தங்களை மிகப் பெரிதா கப் பாதிக்கும் என்பதை உணர்ந்து, தத்தம் குளிகைகளைத் தயாரிக்க முற்பட்டன. உதாரணத்துக்கு, Dell நிறுவனம் Streak என்ற பெயரில் குளிகையை வெளியிட, ஏன் நோக்கியா போன்ற அலைபேசிச் சாதன நிறுவனங்களும் குளிகைகள் வெளியிட முற்பட்டன.
ஆனால், ஆப்பிளுக்கும் இன்ன பிற தயாரிப்பு நிறுவனங்களுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம், குளிகையின் இயங்கு மென்பொருள் (Tablet Operating System). இசைப் பேழை சாதனமான ஐ -பேடை வெளியிட்டபோதே ஆப்பிள் அதற்கான இயங்கு மென்பொருளை எழுதிவிட்டது. ஐ-பேடில் அலைபேசும் வசதியைக் கொண்டுவந்து, ஐ-போன் ஆக்கியபோது மென்பொருளை மெருகுபடுத்தியது. ஐ-பேட் வெளியிட்டபோது ஆப்பிளின் இயங்கு மென்பொருள் iOS தரம் மிகுந்த ஒன்றாக மாறி இருந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. இதோடு, ஆப்பிளின் சாதனங்களை இயக்க மட்டுமேஇந்த மென்பொருள் தேவை என்பதால், இதை எளிதாக மேம்படுத்த முடிந்தது. நளினமான சாதன வடிவமைப்பு என்பதுடன், எவரும் எளிதாகப் பயன்படுத்தும்படி ஆப்பிளின் சாதனங்கள் இருந்ததை / இருப்பதை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

Dell, HP போன்ற வன்பொருள் (Hardware) நிறுவனங்களின் மிகப் பெரிய குறை, அவர்களுக்கு இயங்கு மென்பொருள் தயாரித்துக்கொடுக்க வேறு யாராவது வேண்டும் என்ற சார்புநிலை. மைக்ரோசாஃப்டின் விண்டோஸ், நவீன மொபைல் சாதனங்களை இயக்கும் அளவுக்கு முன்னேறிய தாக இல்லை என்பதுடன், மைக்ரோசாஃப்ட் டுக்கு லைசென்ஸ் கப்பம் கட்ட வேண்டும் என்பதால், இந்த நிறுவனங்களால் குளிகைக் கணினியை லாபமாக நடத்த முடியாது என்ற நிதர்சனம். தாங்களாகவே மென்பொருள் எழுதி, அதைத் தரம் உள்ளதாக மாற்ற அதிக காலம் எடுக்கும்.

இந்த இடத்தில் ஆபத்பாந்தவனாக வந்தது கூகுள். நாங்கள் இயங்கு மென்பொருளைத் தயாரிக்கிறோம் என்றது. அது ஓப்பன் சோர்ஸ்; அதனால், எந்த லைசென்ஸும் வாங்கத் தேவை இல்லை. உங்கள் சாதனங்களை இயக்க இலவச மாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றது. இன்று குளிகைக் கணினி சந்தையைப் பார்த்தால், ஆப்பிள் தவிர்த்து கிட்டத்தட்ட அனைத்துக் குளிகைகளுமே கூகுளின் ஆண்ட்ராயிட் இயங்கு மென்பொருளைப் பயன்படுத்துவது தெரிய வரும். (இதற்கு ஒரு விதிவிலக்கு RIM என்ற Research In Motion. பிரபலமான Blackberry அலை பேசித் தொழில்நுட்பத்தைத் தயாரிக்கும் இந்த நிறுவனம், Playbook என்ற பெயரில் தனது குளிகைக் கணினியை இந்த வருடம் வெளியிட்டது. இந்தக் குளிகைக் கணினி அவர்களது மென்பொருளாலேயே இயங்குகிறது. இது அவ்வளவு சிறப்பான வெற்றியைப் பயனீட்டாளர் களிடம் அடையவில்லை.)





கூகுள் தானாக மொபைல் சாதனங்களைத் தயாரிக்கவில்லை. மட்டுமல்லாமல், தான் தயாரிக்கும் மொபைல் இயங்கு மென்பொருளை இலவசமாக மொபைல் சாதனத் தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கொடுக்கிறது. ஏன்? தான் பெறும் பில்லியன்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்ற எண்ணமா? அதெல்லாம் இல்லை! லாபநோக்கம்தான் அவர்களது திட்டத்துக்குப் பின் இருக்கும் அடிப்படைக் காரணம்.

தேடல் இயந்திரத்தை மட்டும் வைத்தே அதிக நாள் இணைய உலகில் முடிசூடா மன்ன னாக இருக்க முடியாது என்பது கூகுளுக்கு நன்றாகவே தெரியும். தேடலையும் தாண்டி, அவர்கள் பல்வேறு சேவைக்கூறுகளை இ- மெயில் (www.gmail.com), கோப்புகள் (docs.google.com), மேப்ஸ் (maps.google.com), வாய்ஸ் (voice.google.com) எனத் தொடர்ந்து வெளியிட்டபடி இருப்பது பயனீட்டாளர்களின் தேவைகள் அனைத்தையும் சந்திப்பதன் மூலம் அவர்கள் கூகுளின் தளங்களுக்குள்ளேயே போய்வந்தபடி இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு. மொபைல் தொழில்நுட்பம்மேஜை /மடிக்கணினிகளை விட முக்கியமானதாகமாறிக்கொண்டுஇருக்கும் சூழலில், இதில் அழுத்தமாகக் கால் பதிக்காமல் இருப்பது கூகுளுக்கு நல்லதல்ல.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், மொபைல் சாதனத் தயாரிப்பாளர்களுக்கு கூகுளின்ஆண்ட்ராயிட் தேவை; கூகுளுக்கு ஆண்ட்ராயிடை ஏற்றுக்கொள்ளும் மொபைல் சாதனங்கள் தேவை. ஆக, பொருத்தமான தம்பதியாக இணைந்து, ஆண்ட்ராயிடில் இயங்கும் பல குளிகைக்குழந்தைகளை Xoom, Galaxy, Stream, eeePad என்று பல பெயர்களில் வெளியிட ஆரம்பித்தனர்.

பயனீட்டாளர்களின் அனுபவத்தை ஆப்பிளுக்கு நிகராகவோ, அல்லது அதிக மாகவோ கொண்டுவந்தாக வேண்டும். இதற் காக ரொம்பவே எடுத்துக்கொண்ட முயற்சி களில் ஒன்று இந்த முழுத் திட்டத்துக்கும் வேட்டு வைக்கும் விதத்தில் நடந்திருக்கிறது இந்த வாரத்தில். என்னதான் நடந்தது?

Asus என்ற Hardware தயாரிப்பு நிறுவனம் eeePad Transformer என்ற பெயரில் குளிகைக் கணினிகளைச் சில வாரங்களுக்கு முன்னால் வெளியிட்டது.

ஆண்ட்ராயிடால் இயங்கும் இந்தக் குளிகையை வாங்கிய பதிவர் ஒருவர், இந்தக் குளிகையில் இயங்கும் ஆண்ட்ராயிட் மென் பொருள், நீங்கள் இந்தக் குளிகையை எடுத்துச் செல்லும் இடங்களில் இருக்கும் வயர்லெஸ் இணைப்புகளின் தகவல்களை அதற்குத் தேவைப்படும் கடவுச் சொல்லுடன் சேர்த்து சேமித்து வைத்துக்கொள்வதைப் பார்த்து அதிர்ந்துபோய், பதிவு ஒன்றை எழுத... டெக் உலகமே கலகலத்துக்கிடக்கிறது.

இப்படி சேமித்து வைக்கப்படும் கடவுச் சொற்களை கூகுள் தனது மேகக் கணினிய சேமிப்பில் சேமித்து வைத்துக்கொள்ளும் சாத்தியக்கூறுகளின் மூலம் விளையும் ப்ரைவஸி மற்றும் செக்யூரிட்டி அத்துமீறல்கள் மோசமானதாக இருக்கும். இந்த வரி எழுதப்படும் நிமிடம் வரை கூகுள் இதற்கு எந்தப் பதிலும் கொடுக்கவில்லை.

No comments:

Post a Comment