Wednesday, December 21, 2011

“அடிங் ஙொய்யாலே…விளம்பரத்தப் பாரு”

அடிக்கடி டி.வி.ல பாத்திருப்பீங்களே..ஒரு சோப்பு விளம்பரம். அம்மா த‌ன்னோட மகளக் கூப்பிட்டு சோப்பு வாங்கியாரச் சொல்லுவா. மகளும் போறா. கொஞ்ச நேரத்துல‌ திடீர்னு அம்மாக்காரி பதட்டமாயிடுவா. பயங்கர டென்ஷ்ன். என்ன சோப்பு வாங்கனும்னு சொல்லி உடலியாம்.

தெருவெல்லாம் தேடி அலைஞ்சு வீட்டுக்குத் திரும்பி வந்து பாத்தா, பொண்ணு பாத்ரூம்ல குளிச்சிக்கிட்டிருப்பா. “பவித்திரா” ன்னு சத்தமா கூப்புடுவா. ஹமாம் சோப்போட பவித்திராவோட கையும் முகமும் மட்டும் பாத்ரூம் கதவுக்கு வெளிய தெரியுது. அப்பத்தான் அம்மாகாரி வயித்தில பால் வார்த்த மாதிரி இருக்குது. வேற சோப்பு யூஸ் பண்ணினா பொண்ணோட எதிகாலமே போயிடுமாம்.

அந்த அம்மாகாரிய நான் பாக்கனும், ஒரு முக்கியமான விஷயம் கேக்கனும். “அடிங் கொய்யாலே, அந்தப் பவித்திரா கிட்ட குளிக்கிற சோப்பா தொவைக்கிற சோப்பான்னு மொதல்ல சொல்லி உட்டியா? அதையே சொல்லாம, உனக்கு எதுக்குடி இந்த பில்டப்பு? அலம்பல்? இனிமேலாவது பவித்திராவுக்கு என்னென்ன யூஸ் பண்ணனும், எப்படி எப்படிப் பண்ணனும்னு ஒழுங்கா சொல்லிக்கொடு. பாவம் அந்தப் புள்ள.
********************************************************

=> ஒரு fairness cream விளம்பரம் (Ponds?)

ஒரு கல்லூரி மாணவிக்கு ஒரு மாணவன் கைரேகையைப் பார்த்து “நீ அக்கவுண்ட்ஸ் பரீட்சையில் கோட்டை விட்டுவிடுவாய்” என்கிறான். “நோ டென்ஷன்” என்கிறாள் அந்தப் பெண்.

அடுத்து அவன், “உன் சருமத்திற்கு ஏதாவது ஆபத்து வந்துவிடும்” என்கிறான். உடனே அவள் பயந்து போய் “ஐயோ! என் சருமத்திற்கு என்ன ஆகிவிடும்?” என்று பதறிப்போகிறாள்.

இங்கே ஒரு பெண்ணுக்கு படிப்பை விட அழகுதான் முக்கியம் என்கிற செய்தி வலியுறுத்தப் படுவதை உங்களால் உணர முடிகிறதா? ஹமாம் சோப்பு அல்லாத வேறு சோப்பை உபயோகித்துவிட்டால் தன் பெண்ணுக்குத் திருமணமே நடக்காதே என்று பயப்படும் தாய்.Fairness cream உபயோகித்து விமானப் பணிப் பெண்ணாகவெண்டும் என்ற தன் கனவை நிறைவேற்றிக் கொள்ளும் பெண் -

இப்படி எதற்கெடுத்தாலும் அழகு…அழகு…அழகுதானா? ஒரு பெண்ணிடமிருந்து எதிர்ப்பார்க்க வேறு எதுவுமே இல்லையா?

********************************************************

=> Mint-O-Fresh விளம்பரம்.

சிரிப்பே அறியாத ஒரு வயதான சிடுமூஞ்சிக்கு வாழ்க்கைப் பட்டு, வாழ்க்கையே வெறுத்துப் போய் இருக்கிறாள் ஒரு அழகான இளம் பெண். Minto-O-Fresh ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு அந்தப் பக்கம் வரும் ஒரு இளைஞனைப் பார்த்து அவனுடன் ஓடிப் போய்விடுகிறாள்.

கேவலம் ஒரு Minto-O-Fresh க்காக ஒருவனுடன் ஓடிப் போகும் அளவு பெண்கள் தரம் தாழ்ந்து போய்விட்டார்களா?

அதேபோல இன்னொரு ஷேவிங் க்ரீம் விளம்பரம். ஒரு அழகான இளம் பெண் ஒரு அழகான இளைஞனுடன் நடனம் ஆடிக்கொண்டிருக்கிறாள். அவனுடைய தாடை சரியாக ஷேவ் செய்யப் படாமல் சொர சொரப்பாக இருப்பதை கவனித்தவுடன் அவள் முகம் வாடுகிறது. அந்த சமயத்தில் சுத்தமாக ஷேவ் செய்யப்பட்டு மழ மழப்பான தாடையுடன் ஒரு இளைஞன் அந்த அறையில் நுழைகிறான்.

அந்த இளம் பெண் உடனே சொர சொர இளைஞ்சனைப் புறக்கனித்துவிட்டு மழ மழ இளைஞ்சனுடன் நடனமாடப் போய்விடுகிறாள்! கேவ‌லம் ஒரு ஷேவிங் க்ரீமுக்காகவா???

அடப்பாவிகளா…இப்படியுமா?

********************************************************

=> ஆண்களின் உள்ளாடைகளுக்கான விளம்பரம் ஒன்று.

ஒரு கட்டுடல் வாலிபன் குளித்துவிட்டு வெறும் உள்ளாடையோடு வெளியே வருகிறான். அவன் வரும் அதே நேரத்தில் அதே அறைக்குள் அவனது பெண் நண்பி நுழைகிறாள். அவன் கட்டுடலைப் பார்த்து மயங்கினாளோ இல்லையோ, அவனது உள்ளாடையை கண்டு மயங்கி கண்களில் காமத்தை காட்டுகிறாள். அறைக்கதவு மூடப்படுகிறது.

சமீபத்தில் மேலும் ஒரு விளம்பரம். ஆண்களின் ஆடைக்கானது என்பதை நம்பவே முடியாதபடி பெண் ஒருத்தி உள்ளாடையுடன் இருக்கும் கவர்ச்சிப் படத்துடன் சென்னை நகரை ஆக்கிரமித்திருந்தது.

தெரியாமல்தான் கேட்கிறேன்…

பெண்களின் சாதனையே ஆண்களை வசீகரிப்பதில்தான் உள்ளது என்பதாக விளம்பரங்கள் சித்தரிக்கின்றன. குறிப்பிட்ட ஷேவிங் கிரீம், ஜட்டி, வாசனை திரவியங்கள், பற்பசை போன்றவற்றைப் பயன்படுத்தும் ஆடவர்களைப் பெண்கள் மொய்த்துக் கொள்வார்கள், விரும்புவார்கள், உடன்படுவார்கள் என்பதாக விளம்பரங்கள் சொல்கின்றன.

நமது விளம்பரங்களில் பெண்கள் எப்போதும் துணிதுவைத்து, சமைத்து, குழந்தைகளைப் பராமரித்து, நாப்கின் தேர்ந்தெடுத்து, அலங்கரித்துக் கொண்டு, கணவன் மெச்ச வாழ்கிறவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். ஆணாதிக்கச் சமூகத்தின் பார்வையில் பெண் ஒரு அழகுப்பதுமை, சுகம் தரும் கவர்ச்சிப் பொருள், மற்றொரு கோணத்தில் சேவை செய்யும் அடிமை, பணிப்பெண் என்பதாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண்ணுக்குத் தேவையான பொருளுக்கான விளம்பரம்னா சரி, ஒரு பெண் வருவது நியாயம்னு சொல்லலாம். இரு பாலரும் உபயோகிக்கும் பொருளான குளிர் பானம், உணவுன்னு ஏதாவதென்றாலும் கூட ஒத்துக்கலாம். ஆனா ஆண்களின் உள்ளாடை சமாச்சாரங்கள் தொடங்கி, சவரம் செய்யும் உருப்படிகளிலிருந்து, ஓட்டும் பைக் வரை எல்லா விளம்பரங்களிலும் சம்பந்தமே இல்லாமல் ஒரு பெண் இருந்தாக வேண்டும்னா என்னாங்கடா அர்த்தம்?

********************************************************

=> இன்னொரு விளம்பரம். எதிலோ படித்த நினைவு. 
சில ஆண்டுகளுக்கு முன்பாக பாரிஸ் நகரின் நெரிசல் மிகுந்த போக்குவரத்து சிக்னல் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பெரிய விள‌ம்பர போர்டு பலரின் கவனத்தையும் கவர்ந்தது. 

அதில் ஒரு பெண் நிற்கிறாள், அவளை பின்புறமாகப் படமெடுத்திருக்கிறார்கள். அவள் மேல்கச்சையும், கீழே ஒரு உள்ளாடையும் மட்டுமே அணிந்திருக்கிறாள். “அடுத்த வாரம் வந்து இதே இடத்தை பாருங்கள். நான் இந்த ஆடைகளையும் கூட துறந்திருப்பேன்” என்றொரு வாசகம் அச்சிடப்பட்டிருக்கிறது. 

அவ்விளம்பரத்தை கண்ட பலர் ஒருவாரம் காத்திருந்து, அடுத்த வாரம் அதே விளம்பரத்தைக் காண ஓடிவருகிறார்கள் சொன்னபடியே அந்த பெண் ஆடையில்லாமல் இருக்கிறாள். ஆனால் பின்புற அழகு மட்டுமே தெரிகிறது.மீண்டும் ஒரு வாசகம் “அடுத்த வாரம் வந்து பார்த்தீர்களென்றால் நான் திரும்பி நிற்பேன்”.


பின்புறத்தைப் பார்த்தே சூடானவர்கள் சும்மா இருப்பார்களா? முன்புறத்தைக் காண கொலைவெறியோடு ஒருவாரம் காத்திருந்து ஓடிவந்தார்கள்.
அவர்கள் எதிர்பார்த்தபடியே விளம்பரம் மாற்றப்பட்டு, அந்தப் பெண் ஆடையில்லாமல் இருப்பது போன்ற படம் அச்சிடப்பட்டு‍‍‍, கீழ்கண்டவாறு வாசகம் எழுதப்பட்டிருந்தது. “நாங்கள் உங்களுக்குக் கொடுக்கும் வாக்குறுதிகளை எப்போதும் எதிலுமே மீறுவதில்லை”. வாசகத்துக்கு கீழே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றிருந்தது.

எவ்வளவு எளிதாக இடம் பிடித்துவிட்டார்கள்?

No comments:

Post a Comment