Friday, December 31, 2010

Of Human Bondage - W Somerset Maugham

Of Human Bondage, நான் முதல் முதலில் படித்த ஆங்கில classic. 1991ல் சென்னையில் அமெரிக்க தூதரக நூலகத்தில் உறுப்பினாரவுடன் படித்த புத்தகங்களில் ஒன்று என்று நினைக்கிறேன். பள்ளியில் படிக்கும் போது ஆங்கில நூல்கள் எதுவும் படிக்க முடிந்ததில்லை. சென்னைக்கு வந்து கல்லூரியில் படிக்க ஆரம்பித்த பிறகுதான் ஆங்கிலத்தில் சரளமாக படிக்க முடிந்திருந்தது. அப்படிப் பார்க்கும் போது, ஆங்கிலத்தில் முழுமையாகப் படித்த முதல் நூல்களில் ஒன்று இந்த Of Human Bondage.

'எந்தப் புத்தகத்தையும் படிக்க ஆரம்பித்து விட்டால் ஒரு வரி விடாமல் படித்து விட வேண்டும், கடைசிப் பக்கம் வரை படித்து விட வேண்டும்' என்று எழுதாத கோட்பாடு ஒன்று என் மனதில் உண்டு. தாங்கவே முடியாத அளவு போரடித்த ஓரிரண்டு நூல்களைத் தவிர எல்லாவற்றையும் அப்படித்தான் படித்திருக்கிறேன்.

Of Human Bondage முழுவதுமே அழுத்தமான நிகழ்வுகளாக இருக்கும். கதையின் நாயகனுக்கு, பிறவியிலேயே ஒரு பாதம் ஊனம். கதையின் முதல் பக்கங்களில் அவனது தாய் இறந்து விடுகிறாள். கதை ஆரம்பிக்கும் முன்பே தந்தை இறந்து விடுகிறார். பள்ளியிலும், கல்லூரியிலும் கால் ஊனத்தினால் மற்ற சிறுவர்களைப் போல இயல்பான வாழ்க்கை இல்லாமல் போகிறது.

அவனை வளர்க்கும் அங்கிள் (அப்பாவின் சகோதரர்) கொடுக்கும் அல்லது கொடுக்க முடியாத வழிகாட்டல்களை தாண்டி, மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடிக்காமலேயே பல்கலைக்கழகம் போவதை கைவிட்டு, ஜெர்மனி போகிறான். ஒரு ஆண்டுக்குப் பிறகு திரும்பி வந்து, கணக்காளர் வேலை பயிற்சியில் அமர்கிறான். ஒரே ஆண்டில் அது ஒத்து வராது என்று தெரிந்து பாரிசுக்கு ஓவியம் பயில போகிறான். ஓரிரு ஆண்டுகளில் அதுவும் தனக்கு வசப்படாது என்று புரிந்து லண்டன் திரும்பி தனது தந்தையைப் போல மருத்துவப் படிப்பில் நுழைகிறான்.

தன்னைக் காதலிக்காத ஒரு பெண்ணை பைத்தியமாக காதலிக்க ஆரம்பிக்கிறான். அவளுக்காக நிறைய செலவழிக்கிறான். அவள் இவனை கைவிரலில் ஆட்டி, தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்கிறாள். அவள் தன்னை சீரழித்துக் கொண்டே போக, அந்தப் பெண்ணின் மீதான ஆசை, படிப்படியாக வடிந்து போகிறது.

தந்தை விட்டுப் போன பணத்தை படிப்பு முடியும் முன்பு கரைத்து விடுகிறான். பட்டினி, வறுமை, கடையில் வேலை பார்த்தல், அன்பான குடும்பம் ஒன்றின் நட்பு. வயதான அங்கிள் இறந்ததும் கொஞ்சம் காசு கிடைக்க, மருத்துவப் படிப்பை முடிக்கிறான். இனிமேல் உலகமெல்லாம் சுற்ற வேண்டும் என்று கனவு காண்கிறான். நட்பான குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்க கிராமப்புறம் போகும் போது, அவன் மீது அன்பைப் பொழியும் குடும்பத்தின் மூத்த பெண்ணிடம் மனதை பறி கொடுத்து விட்டதை உணர்கிறான்.

அவளைத் திருமணம் செய்து கொண்டு, கடலோரக் கிராமத்தில் மருத்துவப் பணி செய்து வாழ முடிவு செய்கிறான்.

கதையின் போக்கில் மகிழ்ச்சியோ உற்சாகமோ கிடையாது. மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது நட்பு கொள்ளும் குடும்பத்துடன் உறவாட ஆரம்பித்த பிறகுதான், மனதை வருடிக் கொடுக்கும் நிகழ்வுகள் படிக்கக் கிடைக்கிறது.

பொதுவாக பிடித்த கதைகளை பல தடவை படித்துக் கரைத்துக் குடித்து விடுவது எனது வழக்கமாக இருந்தாலும், சில ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகத்தை சொந்தமாக வாங்கி வைத்திருந்தாலும், படிப்பதற்கு மனமே வரவில்லை. என்றாவது ஒரு நாள் படிக்கலாம் என்று அடுக்கி வைத்திருந்த புத்தகங்களில் ஒன்றாக இருந்தது.

புத்தாண்டு + வார இறுதி விடுமுறைகளில் மாலை வேளைகளில் இந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்து முடித்தேன்

No comments:

Post a Comment