Friday, December 31, 2010

கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான்

"Memoirs of an Invisible Man"

இதுவும் ரா.கி.ரங்கராஜனின் மொழிபெயர்ப்பில் குமுதத்தில் தொடர்கதையாக வந்ததுதான். Harry F. Saint என்பவர் எழுதிய "Memoirs of an Invisible Man" இதன் மூல வடிவம். இந்த எழுத்தாளர் வேறு எதுவும் கதை எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை.

கண்ணுக்குத் தெரியாமல் இருப்பது நாம் எல்லோரும் நினைப்பது போல் அவ்வளவு எளிதானதோ இன்பமானதோ அல்ல, என்பது இந்த கதையை படிக்கும்போதுதான் எனக்கு புரிந்தது. இந்த கதையை படித்திருந்தீர்களென்றால், அது உங்களுக்கும் புரிந்திருக்கும்!!

நிக் ஒரு பொருளாதார நிபுணன். ஆன் என்ற பெண் நிருபரை காதலிக்கலாமா என்று யோசித்து கொண்டிருக்கிறான். அவளை கவர்வதற்காக, அணு ஆராய்ச்சி நடக்கும் ஒரு கட்டிடத்தில் நடக்கும் ஒரு சந்திப்புக்கு அவளை அழைத்து செல்கிறான். ஆனோ, அணு அராய்ச்சிக்கு எதிராக புரட்சி நடத்தும் மாணவர்களையும், அங்கே அழைத்து வந்து விடுகிறாள். சந்திப்பு நடக்கும்பொழுது, தலைவலி காரணமாக நிக் ஒரு அறையில் சிறிது நேரம் தூங்கி விடுகிறான். அந்த நேரத்தில் மாணவர்கள் புரட்சி செய்ய ஆரம்பிக்க, அப்பொழுது ஒரு விபத்து நேருகிறது. விபத்து நடக்கும் சிறிது நேரத்துக்கு முன் கண் விழிக்கும் நிக், விபத்தை கட்டிடத்திற்குள் இருந்தே பார்த்தவாறு மயங்கி விடுகிறான்.

மயக்கம் தெளிந்து விழித்து பார்க்கும் பொழுது, அவன் மட்டுமில்லாமல், அந்த கட்டிடமும், அதில் இருந்த அனைத்து பொருட்களும், கண்ணுக்கு தெரியாதவையாக மாறி விடுகின்றன.

ராணுவத்தின்(ராணுவம்தான் என்று நினைக்கிறேன்!!) ஒரு இரகசிய பிரிவு, மீட்பு பணியில் இறங்குகிறது. மக்களுக்கு கட்டிடம் கண்ணுக்கு தெரியாமல் மறைந்த விஷயத்தை வெளிப்படுத்தாமல் வெடி விபத்து என்று அறிவித்து விடுகின்றனர். மீட்பு பணியின் போது ஒரு மனிதன் உயிருடன் கண்ணுக்குத் தெரியாமல் இருப்பது தெரிந்தவுடன், அவனை பிடிக்க முயல்கின்றனர்.

முதலில் அவர்களிடம் உதவியை எதிர்பார்க்கும் நிக், அவர்கள் அவனை பிடிக்க முயல்கிறார்கள் என்பது தெரிந்தவுடன், அவர்களிடமிருந்து தப்பி போக முயல்கிறான். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமாய் இல்லை. இருந்தும், அந்த கட்டிடத்தில் தனக்கு உபயோகப்படும் என்று நினைக்கும் எல்லா கண்ணுக்குத் தெரியாத பொருட்களையும் எடுத்துக் கொண்டு, மிகுந்த பிரயாசையுடன், அந்த கட்டிடத்திலிருந்து தப்பிக்கிறான்.

ஒரு வழியாக தப்பித்து, தனது வீட்டை அடைந்ததும் தனக்கு உதவ ஆன் வேண்டும் என்று நினைத்து, விஷயத்தை கூறாமலே அவளை அழைக்கிறான். ஆனால் அவளோ தனது தொழிலேயே தீவிரமாக இருக்க ஏமாற்றமடைகிறான். இந்த புதிய வாழ்க்கை முறையில் உள்ள ஒவ்வொரு புதிய விஷயங்களும் அவனை முதலில் அச்சுறுத்துகின்றன.

இதற்குள், கட்டிடத்திலிருந்து தப்பித்த கண்ணுக்குத் தெரியாத மனிதனை தேடிக் கண்டுபிடிக்க, ராணுவத்தின் அந்த ரகசிய பிரிவு, அன்று அந்த கட்டிடத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் விசாரிக்க முயல்கிறது. அந்த விசாரனைக்கு நேரம் ஒதுக்க நிக் அவர்களை அலைகழிக்க, ஒரு நாள் அவன் வீட்டை சுற்றி வளைத்து விடுகின்றனர். இப்பொழுதும் கஷடப்பட்டு தப்பிவிடுகிறான். ஆனால் இருப்பதற்கு சொந்த வீடு இல்லை.

வெளிநாடு சென்றிருக்கும் நண்பர் ஒருவர் வீட்டில் போய் தங்குகிறான். அங்கும் சில நாட்களுக்குள் வேட்டை தொடர, ஆளில்லாத வீடுகள், கிளப்புகள் என்று தங்குவதற்காக ஒவ்வொரு இடமாக ஓட தொடங்குகிறான். ஆனாலும் தொடர்ந்து வேட்டை நடக்கிறது.

இடையில் ஒரு நாள் தற்செயலாக ஆலிஸ் என்ற பெண்ணை பார்க்கிறான். கண்டதும் அவள் மேல் காதல் கொள்ள, வித்தியாசமான ஒரு காதல் தொடங்குகிறது. அவளிடம் தன்னை பற்றிய விவரங்களை கூறாமலேயே, அவளிடம் நெருங்கி பழகுகிறான். அவளும் அவற்றைப் பற்றி கவலைப்படாமல், அவனை காதலிக்கிறாள். இவர்களின் காதல் சிறிது காலம், வேட்டையாடுபவர்களின் தொல்லை இல்லாமல், இன்பமாக கழிகிறது.

திடீரென்று ஒரு நாள், ஆலிஸை, ரகசியப் பிரிவு விசாரனை என்று அழைத்து சென்று கைது செய்து விடுகின்றனர். அவன் அவளோடு இருப்பதை அவள் வரைந்த ஒரு ஓவியம் காட்டி கொடுத்து விடுகிறது.

ஆனாலும் கடைசியில் அவர்களோடு புத்திசாலித்தனமாக போராடி, தனது காதலியை மீட்டு விடுகிறான். மேலும், இப்படியொரு மனிதன் இருப்பதாக காட்டி, அவனைத் தேடுவதற்கு தேவையான பணத்தை அரசாங்கத்திடமிருந்து வாங்க, அவர்கள் வைத்திருக்கும் ஆதாரங்களையெல்லாம் அழித்து விடுகிறான்.

இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாத அவன், தனது புதிய வாழ்க்கை முறையில் தனது காதலியோடு வாழத் தொடங்க முடிவெடுப்பதோடு கதை முடிகிறது.

பலமுறை படித்திருந்தாலும், இப்பொழுது சிறிது வருடங்கள் ஆகிவிட்டதால், எனக்கு கதையின் நிகழ்ச்சிகள், தொடர்ச்சியாக நினைவில் இல்லை. ஆனாலும் முடிந்தவரை நினைவிலிருந்து சுரண்டி எழுதியிருக்கிறேன்.

இந்த கதையை, ஏகப்பட்ட மாறுதல்களுடன் 1992ல் வார்னர் பிரதர்ஸ் "Memoirs of an Invisible Man" என்ற தலைப்பிலேயே திரைப்படமாக எடுத்தார்கள். ஆனால் ஏற்கனவே கதை வடிவில் படித்திருந்ததை, பல மாற்றங்களுடன் திரையில் பார்த்தபொழுது, அதை என்னால் ரசிக்க முடிய வில்லை. மேலும் கதையில் நுட்பமாக விவரிக்கப்பட்டிருக்கும் நிக்கின் உணர்வுகளை, திரைப்படத்தில் அவர்களால், வெற்றிகரமாக கொண்டுவர முடியவில்லை. இதன் DVD இணையத்தில் கிடைக்கிறது.

No comments:

Post a Comment