Friday, December 31, 2010

கல்கி

அலை ஓசை


பேராசிரியர் கல்கி அவர்களின் 'பொன்னியின் செல்வன்','சிவகாமியின் சபதம்''பார்த்திபன் கனவு' ஆகிய வரலாற்றுப் புதினங்களைப் பற்றி பல பேருக்கும் தெரிந்திருக்கும். ஆசிரியரின் சமூக நாவல்களில் மிகப் பிரபலமானதும், அவருக்கு சாகித்திய அகாதமி விருது வாங்கிக் கொடுத்ததுமான 'அலை ஓசை' நாவல், எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.

தலைப்பைக் கண்டதும், பலருக்கு புகையோடிய பிம்பம் போலவும், முற்பிறவி நினைவுகள் போலவும் சில காட்சிகள் கண் முன் தோன்றியிருக்க வேண்டுமே...? ஆம்..! நீங்கள் நினைப்பது சரிதான். முன்பொரு காலத்தில், முன்னிரவு அல்லது பின்மாலை நேரங்கள் என்று சொல்லக்கூடிய நேரங்களில் மட்டும் தமிழ் பேசிக் கொண்டிருந்த தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிய தொடர் தான். கல்கி அவர்களின் புதினத்தை நாடக வடிவில் ஒளிபரப்பினார்கள்.

முதலில் புத்தகத்தை எடுத்த உடனேயே சந்தேகம் வந்தது. ' நமக்குத் தெரிந்த வரை, தலைப்பு 'அலையோசை' என்று தானே இருக்க வேண்டும். இங்கே பிரிந்து உள்ளதே' என்று தோன்றியது. ஆசிரியர் ஏதேனும் காரணத்தோடு தான் எழுதியிருக்க வேண்டும் என்று தேற்றிக் கொண்டு, புதினத்தைத் தொடர்ந்து படிக்கலானேன். கல்கி அல்லவா! தலைப்பை நியாயப் படுத்தி விட்டார். நான் சொல்லப் போவதில்லை. நீங்களே படித்து அறியுங்கள்.

கதையைப் பற்றி நான் ஒன்றும் கூறப் போவதில்லை. வழக்கமான கல்கி அவர்களின் பரபரப்பான திருப்பங்கள், தேன் சிந்தும் காதல் வர்ணனைகள், போராட்ட வசனங்கள், இயற்கை வர்ணிப்புகள் நிறைந்ததுடன் அல்லாமல், புதினம் முழுதும் ஒரு பாலாடை போல் பரவியிருக்கிறது தேசிய உணர்வு.

இயக்குனர் மணிரத்னம் அவர்கள், எவ்வாறு சமூகப் பிரச்னைகள் பற்றிய படம் என்றாலும், போராட்டக் களத்தை மட்டும் காண்பிக்காமல், ஒரு குடும்பம் அல்லது ஒரு காதல் வழியாக கதை நகர்த்திச் செல்கிறாரோ, அந்த பாணி, கல்கி அவர்களின் புதினங்களில் இருந்து தான் உருவப்பட்டு இருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான எண்ணம்.

சீதா, சொளந்தர ராகவன், தாரிணி, சூர்யா ஆகிய நான்கு பாத்திரங்கள், அவர்களைச் சுற்றியிருக்கும் உறவினர்கள், அவர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், அவர்களைப் பாதிக்கின்ற நாட்டின் அடிமை நிலை என்று இராஜம்பேட்டை என்ற சிறு கிராமத்தில் இருந்து, சென்னை, பம்பாய், தில்லி, ஆக்ரா, ரஜனிபூர், லாகூர் என்று கதை பரந்து விரிகையில் ரோலர் கோஸ்டரில் ஏறிப் பறக்கின்ற அனுபவத்திற்கு நாம் ஆளாவது திண்ணம்.

'சாலையின் இரு புறத்திலும் ஆலமரங்கள் சோலையாக வளர்ந்திருந்தன. ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளைப் போல் அந்தச் சாலை எங்கே ஆரம்பமாகிறது, எங்கே முடிவாகிறது என்று தெரிந்துகொள்ள முடியாதிருந்தது. பகவானுடைய விசுவரூபத்தின் அடியும், முடியும்போல், இரு திசையிலும் அடர்ந்த மரக்கிளைகளிடையில் அந்தச் சாலை மறைந்துவிட்டது.'என்றுதொடங்கிப் படிக்கத் துவங்குகையில், நாமும் அந்தச் சாலையிலேயே நம் பயணத்தைத் துவக்குகிறோம்.

இனி, தாஜ் மகாலைப் பற்றி ஆசிரியரின் ஒரு வர்ணனையைப் பார்ப்போம்.

பாகம் : புயல் அத்தியாயம் : 11

தாஜ்மகால்




புதுமணம் புரிந்த மங்கை தன்னுடைய காதலன் அருகில் நெருங்கி வரும்போது ஆசையும் நாணமும் கலந்த தோற்றத்துடன் நிற்பதுபோலத் தங்க நிலாவில் தாஜ்மகால் என்னும் மோகினி நின்றாள். தும்பைப்பூவையொத்த வெண்மையும் மென்மையும் பொருந்தியடாக்கா மஸ்லினைக் கொண்டு மேனியை மட்டுமின்றி முகத்தையும் முக்கால் பங்கு மறைத்துக் கொண்டு அந்தப் புவன மோகினி சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். அவளை நாலு புறமும் காவல்கள் புரியும் தோழிப் பெண்களைப்போல் நெடிதுயர்ந்த ஸ்தம்பக் கோபுரங்கள் நாலு மூலையிலும் நிமிர்ந்து நின்றன.

உலகந் தோன்றிய நாள் தொட்டுக் காதலர்களுக்கு வேதனை தருவதையே தொழிலாகக் கொண்ட பூரண சந்திரன் தனது கர்ம பலனை இந்தத் தாஜ்மகால் மோகினியிடம் அனுபவித்தான். தன்னுடைய ஆயிரமாயிரம் தங்கக் கரங்களினால் அந்த இணையில்லா அழகியைத் தழுவ ஆசைகொண்டு எவ்வளவோ முயன்றான். எனினும் தூய்மையே உருவெடுத்த அந்த நங்கையின் மேனியை அவனுடைய கரங்கள் தொட முடியாமல் அப்பால் நழுவி விழுந்தன. ஒருவேளை நாணங் காரணமாகத் தன்னைப் புறக்கணிக்கிறாளோ என்று எண்ணி இருள் நிழலைத் தன் உதவிக்கு அழைத்தான். ஆனால் நிழல் அந்தக் கற்பரசியின் மேனிக்கு ஒரு கவசமாகிக் காமுகனுடைய கரங்களை அப்பால் நிற்கச் செய்தது.

சந்திரனுக்குக் காதல் வேதனை பொறுக்க முடியாமற் போயிற்று. "தாஜ்மகால் மோகினியினால் நிராகரிக்கப்பட்ட பிறகு இந்த ஜன்மம் என்னத்திற்கு?" என்று நிராசை அடைந்தான். அவள் கண்ணுக்கெதிரே தன் உயிரை விட்டுவிட எண்ணி அங்கிருந்த அழகிய நீர் ஓடையில் தலைக் குப்புற விழுந்தான். அப்போதுதான் அந்த வெண்மலர் மேனியினாளுக்கு மனதில் இரக்கம் உண்டாயிற்று. சந்திரனைக் கரையேற்றத் தானும் ஓடையில் குதித்தாள்! பளிங்குக்கல் ஓடையில் ஸ்படிகம் போலத் தெளிந்திருந்த நீரில் தங்கச் சந்திரனும் தாஜ்மகால் மோகினியும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொள்வதாகக் காதலர் உலகத்தில் மெய்மறந்து சஞ்சரித்துக் கொண்டிருந்த சீதாவின் கற்பனைக் கண்களுக்குத் தோன்றியது. ஆஹா! எத்தனை காலமாக இந்தத் தாஜ்மகாலைப் பார்ப்பதற்கு அவள் ஆவல் கொண்டிருந்தாள்! எத்தனை முறை மானசீக யாத்திரை செய்து இங்கே இவள் வந்திருக்கிறாள்! - அந்தக் கனவெல்லாம் இன்றைய தினம் உண்மையாகிவிட்டது. சீதாவின் வாழ்க்கையில் இது ஒரு மகத்தான நன்னாள் என்பதில் சந்தேகம் என்ன?

***

1930களில் வெளிவந்த ஒரு அமைதியான கறுப்பு-வெள்ளைப் படம் பார்ப்பது போல் இருக்கும், இந்தப் புதினம் படிக்கும் போதெல்லாம்..!

புத்தகம் : அலை ஓசை.

புத்தக வகை : சமூகப் புதினம்.

ஆசிரியர் : பேராசிரியர் கல்கி.

கிடைக்குமிடம் : உங்கள் அபிமான நூல் விற்பனையகங்கள்.

No comments:

Post a Comment