Friday, November 25, 2011

கத்திரிக்காய்,மீன்,கருவாடு இதெல்லாம் சாப்பிடக்கூடாதா?

இந்திய மருத்துவத்தில் பத்திய முறை என்று உண்டு.மருந்து தரும்போது இதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்று சிலவற்றை சொல்வார்கள்.ஆங்கில மருத்துவத்தில் அப்படியொன்றும் சொல்லமாட்டார்கள்.இப்போது சில மருத்துவர்கள் தலைப்பில் சொல்லப்பட்ட பொருட்களை சாப்பிட வேண்டாம் என்று சொல்வதை கேட்டிருக்கிறேன்.

தொண்ணூறு வயதையும் தாண்டி ஏர் உழுது கொண்டிருந்த ஒருவரைக் காட்டி சொன்னார்கள்.”அவர் உணவு விஷயத்தில் ரொம்ப கறார் பேர்வழி! கத்திரிக்காய்,மீன்,முட்டை,கருவாடு என்றால் தொடவே மாட்டார்” நீண்ட ஆயுளுக்கு இவையெல்லாம் தவிர்க்க வேண்டுமா? சாப்பிடவே கூடாதா?
மரபணு மாற்றப்பட்ட கத்திரியை சென்ற ஆண்டுதான் இந்தியாவில் அனுமதித்த்தாக நினைவு.இந்தியாவில் சாம்பார்களில் முதலிடம் பிடிப்பது கத்திரிக்காயாகத்தான் இருக்கும்.என் பெரியம்மா கத்திரிக்காய்களை சுட்டு சட்னி செய்வார்.அவ்வளவு அருமையாக இருக்கும்.பல நேரங்களில் விலை மலிவாகவும் கிடைக்கும்.ஏழைகளுக்கு மிக வசதியானது.

ஏழை இந்தியப்பெண்கள் உணவுத்தேவையை சமாளிக்கும் விதம் அலாதியானது.உடனே தயாரிக்க வேண்டும் என்ற சூழலில் கை கொடுப்பது கருவாடு.குடிகார கணவனாக் இருந்தால் அவனுடைய நன்மதிப்பையும் பெற்று விடும்.கிராமங்களில்,கள்,சாராயக்கடை அருகில் கருவாடு விற்பனை சக்கைப்போடு போடும்.ஆனால் நெடுஞ்சாலையில் கருவாடு லாரி போனால் நாற்றம் குடலைப் பிடுங்கும்.

முட்டை நல்லது.மீன் இதயத்துக்கு நன்மையைத் தரும்.இதெல்லாம் நமக்கு தெரிந்த விஷயம்.பெரும்பாலானவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இவற்றை ஏன் தவிர்க்குமாறு சொல்கிறார்கள்? கத்திரிக்காய் சிலருக்கு அலர்ஜியைத் தருகிறது என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.கடல் உணவுகளும் சிலருக்கு அலர்ஜியைத் தருகின்றன.

அலர்ஜியைத் தரும் ஹிஸ்டமின் கத்திரிக்காயில் உள்ளது.அலர்ஜி,ஜலதோஷம் போன்றவற்றிற்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளை ஆண்டி ஹிஸ்டமின் என்று சொல்வார்கள்.சிட்ரிசின்,குளோர்ஃபெனிரமின் ஆகிய மருந்துகள் இந்த வகை.இவை தூக்கத்தையும் தரும்.ஆனால் இவை மட்டும்தான் அலர்ஜியைத் தருமா?
என்னிடம் கேட்பவர்களுக்கு நான் சொல்வது,’’ உங்களுக்கு எந்த உணவுப்பொருள் ஒத்துக்கொள்ளவில்லையோ அதை சாப்பிடவேண்டாம்”.ஒவ்வொருவருக்கும் இதில் மாறுபடும்.சிலருக்கு தக்காளி,வேறு சிலருக்கு எலுமிச்சை என்று பட்டியல் நீளும்.தவிர்த்துவிடுவதே நல்ல வைத்தியம்.

நோய்வாய்ப் பட்டிருக்கும்போது உடலில் உடலில் நோய் எதிர்ப்புத்திறனும் குறைந்திருக்கும்.ஹிஸ்டமின் மருந்தின் செயல்பாட்டையும்,தூக்கத்தையும் கூட குறைக்கலாம்.அதனால் நோயுற்ற சமயங்களில் அலர்ஜி உண்டாக்கும் பொருட்களை தவிர்த்து விடுவதே சரி.

No comments:

Post a Comment