நினைக்கவே சந்தோஷமாக இருக்கிறது.ரொம்ப நாள் ஆகிவிட்டது போலவும் தோன்றுகிறது.மகாராணி என்று சொல்லவேண்டும்.இன்னும் மேலாக ஏதாவது சொல்லலாம்.எப்படித்திரும்பினாலும் ஆனந்தம்.அந்த நாட்களிலேயே ஒருவரால் வாழ முடிந்தால் எப்படி இருக்கும்?

காதல் அது இது என்று என்னென்னவோ சொல்கிறார்கள்.அப்படித்தானா என்று நிச்சயமாக தெரியவில்லை.பிடித்திருந்தது.வீட்டைக் கடக்கும்போது சைக்கிளில் மணி அடிக்கும் சத்தம் கேட்கும்.மனம் இருப்புக் கொள்ளாமல் துள்ளும்.ஆனால் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.
ஒருநாள் வெளியே வந்து பக்கத்து வீட்டு அண்ணியை அழைத்தாள்.அவரது குழந்தையை தூக்கி முத்தமிட்டாள்.அண்ணி முகத்தை சுளித்து சொன்னது ஒரே வார்த்தைதான்.அதெல்லாம் நமக்கு ஒத்துவராது! அதே நொடியில் மனம் விழுந்து விட்டது.அதற்குப்பிறகு சைக்கிள் மணியைக் கேட்டால் குறுகுறுவென்று இருக்கும்.சில சமயம் வெறுப்பாக இருக்கும்.

பல பேர் பார்த்துவிட்டு போய்விட்டார்கள்.எதிர்பார்த்த மாதிரி இல்லாவிட்டாலும் சுமார்தான்.ஒரு வழியாக கல்யாணம் ஆகிவிட்டது.மகிழ்ச்சியான நாட்கள் முடிந்து போய்விட்டது போல தோன்றுகிறது.இப்போதெல்லாம் அவருக்கு பிடிக்கவில்லையோ என்ற எண்ணம் அடிக்கடி வருகிறது.
நீ தனியாக எங்கும் போகவேண்டாம் என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.காலையில் கடைக்கு போகவேண்டும் என்றால் "ஏன் உன்னால் தனியாக போக முடியாதா? என்று கேட்கிறார்.அம்மாவிடம் பேச வேண்டும் என்று தோன்றியது.திரும்ப திரும்ப குழந்தை பற்றியே கேட்கிறாள்.எரிச்சல்தான் மிச்சம்.

|
No comments:
Post a Comment