2012 குளிகைகளின் வருடமாக இருக்கும். இந்த டிரெண்ட் சில வருடங்களுக்கு நீடிக்கும். எப்படிச் சொல்கிறாய் அண்டன் என்று கேட்கிறீர்களா?
இந்த வாரத்தில் நடந்திருக்கும் பல சம்ப வங்களை அடிப்படையாக வைத்துத்தான் சொல்கிறேன்.

சர்வதேசச் சந்தை தகவல் நிறுவனமான ஐ.டி.சி. (International Data Corporation) இந்த வாரத் தில் வெளியிட்டு இருக்கும் டெக் இண்டஸ்ட்ரி பற்றிய ரிப்போர்ட், கடந்த மூன்று மாதங்களில் உலகளாவிய குளிகைக் கணினி விற்பனை 90 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது என்கிறது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இது 400 சதவிகிதம் அதிகமாம்!

மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் 'விண்டோஸ் 8’ (Windows - 8) என்ற பெயரில் தங்களது இயங்கு பொருளை (Operating System) வெளியிடப்போவதாக அறிவித்து இருக்கிறது. 2012 ஜனவரி வாக்கில் நுகர்வோருக்கு விற்கத் திட்டமிடப் பட்டுள்ள இந்த இயங்குபொருள் அலைபேசி மற்றும் குளிகைக் கணினிகளை மனதில்கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது என்கிறது மைக்ரோசாஃப்ட். மொபைல் சாதனங்களின் முக்கியத் துவத்தைப் பல வருடங்களுக்கு முன்னரே உணர்ந்துதான் இருக்கிறது மைக்ரோ சாஃப்ட். ஆப்பிளின் ஐ-போன், ஆர்.ஐ.எம்மின் பிளாக்பெர்ரி (RIM Blackberry போன்றவை வருவதற்கு முன்னரே 'விண்டோஸ் சி.இ.’ (Windows CE) என்ற இயங்குபொருளை வெளியிட்டது. இந்த

மென்பொருள்தான் மைக்ரோ சாஃப்ட் தயாரிக்கும் பல்வேறு மொபைல் சாதனங்களை இயக்க இன்றும் பயன்படுகிறது. ஆனால், நுகர்வோரிடம் மைக்ரோ சாஃப்டின் மொபைல் சாதனங்கள் பிரபலம் ஆகவில்லை. கணினிகளை இயக்கும் இயங்குபொருளான விண்டோஸ் என்பதை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு தங்களது எல்லாத் திட்டங்களையும் செய்வதுதான் இதற்கு முக்கியக் காரணம்.
மேசை/மடிக்கணினி என்பது தொடர்ந்து மக்களிடம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். அவர்களது வணிக அடிநாதம் 'விண்டோஸ்’ மென்பொருள். அதைப் பல்வேறு விதங்களில் விற்பதுதான் சாமர்த்தியமானது என்ற நினைப்பில் இதுவரை இருந்து வந்த பூனைக்கு மணி கட்டியது ஆப்பிளின் ஐ-போன். அதைத் தொடர்ந்து ஐ-பேட். அது மட்டும் அல்லாமல் கூகுளின் ஆண்ட்ராயிடால் இயங்கும் குளிகைகள் சரமாரியாக வெளியிடப்பட, இவற்றின் விளைவில் கணினிகளின் சந்தை கலகலத்துப் போய் இருப்பது கணினிகளை விற்கும் நிறுவனங் களின் பங்குச்சந்தை மதிப்பு வீழ்ச்சியில் தெரிகிறது. சுதாரித்துக்கொண்ட மைக்ரோ சாஃப்ட் மொபைல் சாதனங்களை இயக் குவதே 'விண்டோஸ் 8’ மென்பொருளின் அடிப்படை வடிவமைப்பாக இருக்கும்!

ஃபிலடெல்பியா டெய்லி நியூஸ் (Philadelphia Daily News) என்ற செய்தித்தாள் நிறுவனம் மலிவான விலையில் நீண்ட கால சந்தாதாரர்களுக்கு அவர்களது நிறுவனத்தின் பெயரில் ஆண்ட்ராயிடில் இயங்கும் குளிகைக் கணினிகளை வழங்கப்போவதாக இந்த வாரம் அறிவித்து இருக்கிறது. பாரம் பரிய அச்சு ஊடகங்கள் இணையத்துக்கு நகர்ந்துகொண்டு இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எனினும், ஊடக நிறுவனம் ஒன்று தங்களது செய்திகளையும் விளம்பரங்களையும் நுகர்வதற்கு வசதியாக குளிகையையே கொடுப்பது இதுதான் முதல் முறை. இந்தப் பழக்கம் பல ஊடக நிறுவனங்களால் பின்பற்றப்படும் என்பது உறுதி.

ஆப்பிளின் ஐ-பேடுக்குப் போட்டி யாக இருக்கும் என்று பரபரப்பாகப் பேசப்படும் அமேசானின் கிண்டில் குளிகை, ஐ-பேடைவிடப் பாதி விலை என்று டெக் இண்டஸ்ட்ரி யில் தற்போது உலா வரும் வதந்தி உண்மையாக இருந்தது என்றால், அதிகமான பயனீட்டாளர்கள் குளிகைக்கு மாறி விடுவதைக் கணிக்க முடியும். இந்த வருடக் கடைசியில் கிண்டில் குளிகை வெளிவருகிறது.
டெக் உலகம் படு வேகமாக மாறி வருவதில் வசதிகளும் சிக்கல்களும் ஒருசேர வருவதைத் தடுப்பது எளிது அல்ல. உதாரணத்துக்கு, அலை பேசும் தொழில்நுட்பத்தையே எடுத்துக்கொள்ளலாம். 10 வருடங்களுக்கு முன்னால், மற்றவர்களுடன் தொடர்புகொள்ள தொலைபேசியை மட்டுமே பயன்படுத்தினோம். தொலைபேசி இருக்கும் இடத்துக்கு நாம் செல்ல வேண்டும் என்பது மாறி, நாம் இருக்கும் இடத்துக்கு எல்லாம் அலைபேசி வர முடியும் என்பது வசதியைக் கூட்டி இருப்பது உண்மை தான்.
அதே நேரத்தில், நாம் செல்லும் இடத் துக்கு எல்லாம் அலைபேசியின் பேட் டரியை சார்ஜ் செய்துகொள்ள வேண்டும் என்பது சிக்கல். பயணம் செய்கையில் அலைபேசியை சார்ஜ் செய்ய அவதிப்படுவது நம்மில் பலருக்கும் நிகழ்ந்திருக்கும். அப்படி இந்தக் குளிகைகளின் குறைபாடு என்ன? எப்படி அதைக் கடந்து வருவது? பார்க்கலாம்!
No comments:
Post a Comment