Tuesday, December 13, 2011

அன்பு டாக்டர்களே, அருமை ரெப்புகளே!

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாக் காதல் நோயாளனாக இருந்தால் மட்டுமே டாக்டர் வீட்டில் பொறுமையாகக் காத்திருக்க முடியும்.

ஆனால் அப்படிப்பட்டவர்களுக்குக் கூட நிறைய சோதனைகள் உண்டாகின்றன. உதாரணம் : டோக்கன் சிஸ்டம் இல்லாத டாக்டர்கள் வீடு.

இந்த மாதிரி டாக்டர்களின் கதவருகில் டாஸ்மாக்கில் சரக்கு வாங்க முண்டுவது போல ஒரு ஆங்க்ரி மாப் எப்போதும் நிற்கிறது. கதவு திறக்கப்படும் போதெல்லாம் ஃபயர் ஆக்ஸிடெண்ட்டிலிருந்து தப்பிக்கிற மாதிரி ஒரு கூட்டம் உள்ளே போய் விழும். சில சமயம் டாக்டரே மல்லாக்க விழுகிற அளவுக்குப் போகிறது.

டோக்கன் சிஸ்டம் இருக்கிற இடங்களில் வேறு மாதிரி பிரச்சினைகள். காலையில் வந்து டோக்கனை வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய் விடுகிறார்கள். கிறுக்கன் மாதிரி ஒன்றரை மணிநேரம் கிளினிக்கில் நாம் காத்திருப்போம். அவர்கள் ஜாலியாக டிவி பார்த்துவிட்டு திருக்கழுக்குன்றம் கழுகு மாதிரி குறுக்கில் புகுந்து போவார்கள்.

இன்னும் சிலர் எந்த பிரியாரிட்டியும் இல்லாமல் வாம்மா மின்னலு என்று டாக்டர் அழைத்தது போல விலுக் விலுக்கென்று நமக்கு முன் புகுந்து விடுவார்கள்.

எங்கள் குரோம்பேட்டை டாக்டர் ஒருவரது கிளினிக்கில் வேறு மாதிரி கழுத்தறுப்பு.

பகலில் பசுமாடு தெரியாத 275 வயது ஆள் ஒருத்தரை டோக்கன் தருவதற்கு வைத்திருக்கிறார். உள்ளே மூன்று பேர் மட்டுமே இருக்கும் போது 37ம் நம்பர் டோக்கன் தருவார்! ஏற்கனவே உட்கார்ந்திருப்பவர் 48ம் நம்பர் டோக்கன் வைத்திருப்பார்.

ஒரு நாளைக்குக் குறைந்தது 8000 ரூபாய் சம்பாதிக்கும் அவர் டோக்கன் தருகிற ஆளுக்கு சம்பளமாக மாசம் ஆயிரமோ ரெண்டாயிரமோ தர மூக்கால் அழுவதால், இந்த மாதிரி வீதியில் படுத்திருக்கிறவர்கள், ரயிலில் பிச்சை எடுப்பவர்கள், ஐம்புலன்களில் மூக்கு மட்டுமே வேலை செய்பவர்கள் இவர்களை மட்டுமே வேலைக்கு வைப்பார். சம்பளத்தைக் குடு என்று கேட்பதற்குள்ளாகவே அவர்களுக்கு சுவாசம் நின்று விடும். ஆகவே போட்டதைத் தின்றுவிட்டு கார்ஷெட்டில் கிழிந்த பாயில் படுத்திருப்பார்கள்.

இது முதல் கழுத்தறுப்பு.

அடுத்தது மஹாகனம் பொருந்திய மெடிக்கல் ரெப்புகள்.

அவர்கள் டோக்கனும் வாங்குவதில்லை, காத்திருப்பதும் இல்லை. கதவு திறந்ததும் உள்ளே பூரும் அவர்களைப் பார்க்கும் போது தப்பான பழமொழி ஞாபகம் வரும். அவர்களோடு சண்டை போட்டுப் பாருங்கள், ம்ம்ம்ஹூம். கல்லுளி மங்கன் மாதிரி உட்கார்ந்திருப்பார்கள்.

அவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. அவர்களுக்குப் பாவம் பிழைப்பு!

நோயாளிகளை விட அவர்களுக்கு அதிக பிரியாரிட்டி தரும் டாக்டர்களைச் சொல்ல வேண்டும். காரணம் அவர்கள் தரும் ஓஸி மருந்துகள்.

மருந்துக் கம்பெனிகள் என்ன ஐடியாவில் இந்த இலவச சாம்ப்பிள்களைத் தருகின்றனவோ, ஆனால் டாக்டர்கள் சிலர் (கவனிக்கவும், சிலர்) பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள். எங்க ஊர் டாக்டர் வெறும் பிரிஸ்கிரிப்ஷன் தருவதோடு சரி. மருந்தே யாருக்கும் தருவதில்லை. ஓஸி வாங்குகிற மருந்துகளை என்னதான் செய்வாரோ! ஆனால் ஒரு நாளைக்கு நாற்பது ரெப்புகள் வருவார்கள். அவர் ஓஸி மருந்து வாங்கும் நேரத்தில் எந்தப் பேஷண்ட்டாவது செத்தாலும் அவருக்குக் கவலை இல்லை.

முப்பத்தைந்து வருடங்களாக பிராக்டீஸ் செய்து வரும் அவர் ஆரம்பத்தில் இப்படியெல்லாம் இல்லை.

கண் தெரியாமல், காது கேட்காமல், எழுதும் போது கை வைப்ரேட்டர் மாதிரி ஆடுகிற இந்த வயதில்தான் இவ்வளவு பணத்தாசை.

இது மாதிரி டாக்டரையோ, மெடிக்கல் ரெப்பையோ நான் பார்த்ததே இல்லை என்று சொல்பவர்கள் கையைத் தூக்குங்கள்?

No comments:

Post a Comment