Tuesday, December 13, 2011

முல்லைப் பெரியாறு: கேரள மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரும் கேரள அரசின் மனுவை, உச்ச நீதிமன்ற 'அரசியல் சாசன பெஞ்ச்' இன்று தள்ளுபடி செய்தது. 

அதேவேளையில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் மனு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு அந்த பெஞ்ச் உத்தரவிட்டது.

ஆனால், அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக, கேரள அரசும், அரசியல்வாதிகளும் பீதி கிளப்புவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை கேரள அரசு இதுவரை அமல்படுத்தவில்லை.

அதேவேளையில், முல்லைப் பெரியாறு அணையின் தற்போதைய நீர் மட்டமான 136 அடியை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும், அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதால், புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கேரள அரசு வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக, அம்மாநில பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 

கேரளாவில் நடந்த போராட்டங்களின்போது அணையை உடைக்க முயற்சிகள் நடந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

அவற்றில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்றும், அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக, கேரள அரசும், அரசியல்வாதிகளும் பீதி கிளப்புவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டது. 

அதேபோல், கேரள அரசு சார்பிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க உத்தரவிட வேண்டும் என்றும், அப்போதுதான் நில நடுக்கங்களில் இருந்து அணையை பாதுகாக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், திமுக சார்பில் நேற்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், அணையின் நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. 

மேலும், அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக அதிகரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்றும் திமுகவின் மனுவில் வலியுறுத்தப்பட்டது. 

இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பான தமிழகம் மற்றும் கேரள அரசின் மனுக்கள், நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் ஆர்.எம்.லோக்தா, தீபக்வர்மா, அனில்தவே, சந்திரமவுலி பிரசாத் ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட 'அரசியல் சாசன பெஞ்ச்' முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

கேரள அரசுக்குக் கண்டிப்பு..

அப்போது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிய கேரள அரசைக் கண்டித்த அரசியல் சாசன பெஞ்ச், அந்த மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

ஏ.எஸ். ஆனந்த் அறிக்கையின்படிதான், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். 

அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை, அணையின் நீர்மட்டம் குறைப்பது தொடர்பாக எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்பட மாட்டாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசுக்கு நோட்டீஸ்..

அதேவேளையில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் மனு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, அந்த பெஞ்ச் உத்தரவிட்டது.

இதுதொடர்பான விசாரணை நாளை மறுதினம் நடைபெறும் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் அறிவித்தது.

ஜெயலலிதாவுக்கு கண்டிப்பு... 

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக, கேரள அரசும், அரசியல்வாதிகளும் பீதி கிளப்புவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மற்றொரு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். 

அத்துடன், முல்லைப் பெரியாறு தொடர்பாக பத்திரிகைகளில் ஒருபக்கம் விளம்பரம் வெளியிட்டதற்காக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் கண்டனம் தெரிவித்தது. 

முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கு, விசாரணையில் இருக்கும்போது, அதுபற்றி விளம்பரம் செய்யக் கூடாது என்றும், நீதிமன்ற உத்தரவை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment