Saturday, November 26, 2011

முக்கிய சேனல்கள் தெரியாததால் முணுமுணுப்பு... - பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு!

- நமது நிருபர்கள்
முதல்வர் ஜெயலலிதா சொன்னது போலவே, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை தொடங்கி விட்டார். 'இது அரசின் மிகப்பெரிய வெற்றி’ என்று சொல்லப்பட்டாலும், மக்கள் மத்தியில் ரியாக்ஷன் எதிர்மறையாகத்தான் இருக்கிறது. காரணம், இத்தனை ஆண்டுகளாக மக்கள் பார்த்து பழக்கப்பட்ட... இன்னும் சொல்லப்போனால், பார்க்காமல் இருக்க முடியாது என்றாகிவிட்ட பிரபலமான சில சேனல்கள் இந்த அரசு கேபிள் மூலமாக மக்களுக்குக் கிடைக்கவில்லை.

குறிப்பாக சன் குழுமத்தின் சேனல்கள், விஜய் டி.வி., ஆங்கில செய்தி சேனல்கள், சமீப காலமாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள தமிழ் டிஸ்கவரி உள்ளிட்ட எந்த கட்டண சேனலும் அரசு கேபிளில் ஒளிபரப்பு ஆகவில்லை. இதுதான் மக்களின் அதிருப்திக்குக் காரணம் என்பதை பொதுமக்களிடம் எடுத்த திடீர் கருத்துக் கேட்பு மூலம் நாம் அறிய முடிந்தது. ஆக, அ.தி.மு.க. அரசுக்குத் துவங்கிவிட்டது அடுத்த தலைவலி . இனி மக்களின் மனதைப் பார்ப்போம்... 

அனுராதா ரமணன், சேலம்

''என்னுடைய மகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டால், அடுத்து வீட்டில் பெரியதாக வேலை ஒன்றும் இல்லை. சன் டி.வி-தான் என்னுடைய ஒரே பொழுதுபோக்கு. காலை 10.30-க்கு 'மகள்’ சீரியலில் ஆரம்பித்து இரவு 10 மணிக்கு 'இதயம்’ சீரியல் வரை விடாமல் பார்ப்பேன். நடுவில் சன் செய்திகள் பார்த்து உலக நடப்புகளையும் தெரிந்து கொள்வேன். இப்போது அந்த சேனல் தெரியவில்லை. பைத்தியம் பிடித்த மாதிரி உள்ளது. எங்களிடம் 100 கூட வாங்கிக் கொள்ளட்டும். எங்களுக்கு பழையபடி அனைத்து சேனல்களும் தெரிய வேண்டும்.''

சூரிய கலா, சேலம்

''எங்கள் குழந்தைகள் டிஸ்கவரி சேனல், அனிமல் பிளானெட் சேனல்களை விரும்பிப் பார்ப்பார்கள். இந்த சேனல்கள் இப்போது ஒளிபரப்பு ஆவது இல்லை. நாங்கள் சன் டி.வி., சன் மியூசிக், ராஜ் டி.வி மற்றும் விஜய் டி.வி. சேனல் நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்போம். மேலும், இந்த சேனல்களில் தான் புதிய தமிழ்ப் படங்கள் உட்பட நிறைய சினிமாக்கள் போடுவார்கள். ஆனால், இப்போது அதை எல்லாம் பார்க்க முடியவில்லை. மொழி புரியாத வெளி மாநிலச் சேனல்கள் மட்டுமே ஓடுகின்றன. இதை எல்லாம் பார்த்து என்ன பண்ணப் போறோம்?''

தேன்மொழி, கோவை

''கோயமுத்தூர்ல சில இடங்கள்ல எல்லாச் சேனலும் தெரியுது... சில இடங்கள்ல தெரிய மாட்டேங்குது. எங்களுக்கு அரசு கேபிள் நிறுவனம் வரணும்ங்கிறதுல மாற்றுக் கருத்து கிடையாது. ஆனா, அதுல எல்லா சேனலும் தெரியுற மாதிரி வழி பண்ணணும்...''

யசோதா, ஈரோடு.

''இங்க பல இடங்களில 'பே சேனல்கள்’ எதுவும் தெரியலை. இலவச சேனல்கள் எல்லாம் மொக்கை போடுதுங்க. எவ்வளவு நேரத்துக்கு இதையே பார்த்துக்கிட்டு இருக்க முடியும். ஒரு வாரமா எதைத் திருப்பினாலும் மொழி புரியாத அரபு சேனலும், சங்கரா சேனலும்தான் வருது. கட்டண சேனல்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அனைத்து சேனல்களும் பார்க்க அரசு வழி பண்ணணும்.''

வள்ளி, கடலூர்.

''எவ்வளவு நேரம்தாங்க பொதிகையையே பார்த்துட்டு இருக்க முடியும்? அரசு கேபிள் நிறுவனம்... குறைந்த கட்டணம் என்பது எல்லாம் சரிதான். அதுக்காக பிடித்த விஷயங்களை பார்க்காம இருக்க முடியுமா? அவசரகதியில முடிவு எடுத்து இருக்காங்க. எல்லாச் சேனலும் பார்க்குற மாதிரி ஏற்பாடு செய்யணும்...''

மாலதி, கடலூர்.

''எங்க ஏரியாவுல சன் டி.வி., கே டி.வி., ஆதித்யா டி.வி., விஜய் டி.வி., சுட்டி டி.வி. எதுவுமே வரலை. வெறும் பொட்டியை வெச்சிக்கிட்டு என்​னாங்க பண்ணுறது? முதல்வரம்மா நல்லது செய்யறேன்னு நினைச்சிட்டு இப்படி பண்ணிட்டாங்கனு நினைக்கிறேன். இதனால மக்கள் அதிருப்திதான் அடைவாங்க... பார்த்துக்கோங்க!''

ஜப்ரூல் ஹக், வேலூர்

''காலையில எழுந்த உடனே சி.என்.என், டைம்ஸ் நவ் சேனல், டிஸ்கவரி, நேஷனல் ஜியாகரபி சேனல்கள்தான் பார்ப்பேன். என் ரூம்ல நைட் 12 மணி வரைக்கும் எஸ்.எஸ். மியூசிக் ஓடிட்டு இருக்கும். இப்போ எதுவுமே இல்லை. வீட்டுக்கு போகவே கடுப்பா இருக்கு. டிஷ் வாங்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்...''

கனிமொழி, காட்பாடி

''ரெண்டு நாளா தென்றல், நாதஸ்வரம் பார்க்காம இருக்கேன். திருமதி செல்வத்துல செல்வம் என்ன ஆனார்னு தெரியலை. வெளியூர்ல இருக்குற ஃப்ரண்ட்ஸ்கிட்ட போன் போட்டு கேட்குறேன். அவங்களுக்கும் தெரியலையாம். இப்படி திடீர்னு நிறுத்திட்டா என்ன பண்ணுறது? எங்களுக்கு அரசு கேபிளே வேண்டாம். பழையபடி இருந்தா போதும்...''

கவிதா, வேலூர்

''இப்ப 70-க்கு ஹிந்தி, மலையாளம், தெலுங்கு... போதாக்குறைக்கு டி.டி-யின் அத்தனை மொழி சேனலும் வருது. இதை எல்லாம் யார் பார்க்குறது? வீட்டுல ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கிட்டு உர்ர்ன்னு உட்கார்ந்து இருக்கோம். அரசாங்கம் இதே கட்டணத்தில் பழையபடி எல்லா சேனலையும் கொண்டு வரணும். அதுலதான் முதல்வர் ஜெயலலிதாவின் சாமர்த்தியம் இருக்குது!''

குறிப்பு: திருச்சி, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அரசு கேபிள் டி.வி. தொடங்கப்பட்டாலும் இன்னும் நடைமுறைக்கு வராததால் மக்கள் நிம்மதியுடன் அனைத்து சேனல்களையும் பார்த்து வருகிறார்கள். பிள்ளையார் பிடிக்கப் போய் ஏதோ ஒன்றாக மாறிய கதையாகத்தான் நடக்கிறது.

2 comments:

  1. திருச்சில அரசு கேபிள் வந்தாச்சு,அதுல சன் டி.வி ,கே டி.வி தனியாக இணைத்து வழங்கப்படுகிறது.மற்றும் உள்ளூர் சானல்களும் அதிகமாக வருகிறது.என்ன மாத வாடகை மட்டும் ரூபாய் 100.

    ReplyDelete
  2. மற்ற மற்ற மாவட்டங்களில் எப்படி சார் நிலவரம்?

    ReplyDelete