Saturday, July 9, 2011

முகவரிகளுக்குப் பின்னால் இருக்கும் ரகசியங்கள்

உலாவியில் ஒரு இணையத்தளத்தின் முகவரியைத் தட்டிவிட்டதும், அத்தளத்தின் பக்கங்கள் கணினித்திரையை நிரப்பும் அந்த நொடியில் தொழில்நுட்பங்கள் நடத்தும் அதிரடித் திருப்பங்கள் மற்றும் சண்டைக்காட்சிகள் நிறைந்த ஈஸ்ட்மென் வண்ண திரைக்காவியத்தைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

இணையதள முகவரி என்பது பயனாளர்களின் வசதிக்காக மட்டுமே. உலாவியில் உள்ளிட்ட பிறகு, அது வலையிணைப்பு முகவர் எண்களாக (IP address) மாற்றப்பட்டே அதன் பக்கங்கள் பெறப்படுகின்றன. கிட்டத்தட்ட செல்பேசிகளின் தொலைபேசிப் புத்தகம் (phone books) போல, எண்களை நினைவில் நிறுத்தும் சிரமத்தை தவிர்த்துக் கொடுக்கும் எளிய வழிமுறை. இவ்விடத்தில் வலையிணைப்பு முகவர் எண்களின் கட்டமைப்பை நினைவில் கொள்க (xxx.xxx.xxx.xxx). மிக எளிதாகத் தோன்றினாலும், இதற்குப்பின் எவ்வளவு தொழிநுட்ப வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன,



 எத்தனை பேரின் மெனக்கெடல் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டே இப்பதிவு. நாம் செல்லும் தளத்தின் முகவர் எண் என்பது தளத்தின் வழங்கியைக் குறிக்கும் (web server), அவற்றை எப்படித் தெரிந்து கொள்வது?. அதற்கு மூன்று வழிகள் உள்ளன. ஒன்று, நமக்கு நாமே திட்டத்தின் படி start->run->cmd என்ற இடத்திற்கு சென்று ping என்ற கட்டளையுடன் தளத்தின் முகவரியை உள்ளிடவும். (பார்க்க படம்).

இரண்டு, பாரம்பரிய வழக்கப்படி நமது விருப்பத்தை நிறைவு செய்யும் பொருட்டு தளங்களின் முகவர் எண்ணைக் கண்டுபிடிக்கும் வசதியை ஏராளமான தளங்கள் இலவசமாக அளிக்கின்றன. சமயத்தில் முகவர் எண்ணுடன் அதன் இருப்பிடத்தையும் சேர்த்து வழங்குவது கூடுதல் சிறப்பு. உ.தா.http://www.selfseo.com/find_ip_address_of_a_website.php . மூன்று, தளத்தை நடத்துபவரை தொடர்பு கொண்டு கேட்பதன் மூலம் கிடைக்க வாய்ப்பிருப்பதால் முயற்சித்துப் பார்க்கலாம் :).இணையம் என்னும் கடலில் கோடிக்கணக்கான தளங்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான புதிய இணையத்தளங்களின் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. பல நூறு பெயர்கள் செயலிழக்கின்றன. இவற்றுக்கான முகவர் எண்களை யார் பராமரிக்கிறார்கள், எப்படி பழையன கழிதலையும், புதியன புகுதலையும் அவற்றிற்கேற்ப பிரதிபலிக்கிறார்கள் என்ற ஆச்சர்யம் தோன்றுவது இயல்பே.

 
இணைய தள முகவரிகளைப் பதிவு செய்பவர்கள் (domain name registrars), இணைய தள முகவரிகளையும் அவற்றுக்கான முகவர் எண்களை நிர்வகிக்கும் இணையத் தகவல் மையங்கள் (network information centers - nic), இணைய முகவரிகளையும், அவற்றுக்கான முகவர் எண்களையும் சேமித்து வைத்து தேவைக்கேற்ப பயனளார்களுக்கு இணைய பக்கங்களை வழங்கத் துணை புரியும் இணைய முகவரி வழங்கிகள் (domain name system servers - dns servers), மைய வழங்கிகள் மற்றும் இவையனைத்தையும் கட்டி மேய்க்கும் ICANN (internet corporation for assigned names and numbers) இவர்களனைவரின் கூட்டு முயற்சியில் தான் நாம் முதுகுக்கு ஏதுவான நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வசதியாக உலாவியில் முகவரியைக் கொடுத்து விட்டு இணையப் பக்கங்களைப் பெறுகிறோம்.

மேற்சொன்ன குழுவினர்களின் தலையாய வேலையே, நாள்தோறும் புத்தம் புதிதாக மலரும் இணையத்தளங்கள் மற்றும் அவற்றின் முகவர் எண்களை உலகமெங்கும் உள்ள இணைய முகவரி வழங்கிகளுக்குப் பரப்புவதும் (dns propogation), ஒரு பெயரில் ஒன்றிற்கு மேற்பட்ட இணையதள முகவரிகள் பதியப்படாமல் பார்த்துக் கொள்வதும் தான். இரண்டில் ஒன்று சொதப்பினாலும் மொத்தமும் அலங்கோலமாக வாய்ப்புகள் அதிகம். ஒரு புதிய இணையதளம் ஆரம்பித்து அது உலகம் முழுவதும் பார்வைக்குக் கிடைக்க அதிக பட்சம் மூன்று நாட்களாகலாம் :). அது பார்வையிடப்படும் பயனாளரின் இணைப்பில் உள்ள் இணைய முகவரி வழங்கிகளின் செயல்பாட்டைப் பொருத்தது.


கணினியில் இணையதளத்தைப் பார்வையிடும் முன் நாம் உள்ளிடும் இணையதள முகவரி முதலில் வலையிணைப்பு முகவர் எண்ணாக மாற்றப்பட்டு, அதன் பின் அந்த முகவர் எண்ணுக்குரிய வழங்கியிலிருந்து தேவையான பக்கங்களைப் பெற்றுக் கொள்கிறோம் என்பதையும், அவ்வாறு தள முகவரிகள், முகவர் எண்ணாக மாற்றம் பெறுவதை ping கட்டளை மூலம் காணப் பெற்றதையும், கடந்த இரண்டு நாட்களாக ஆழமான ஆன்மீகத்தில் மூழ்கித் திளைத்து மறந்திருக்க வாய்ப்பிருப்பதால் அவற்றை நினைவுறுத்தித் தொடரப்படுகிறது :).

முதலில் தள முகவரிகள் எவ்வாறு முகவர் எண்ணாக மாற்றம் பெறுகிறது?, யார் மாற்றுகிறார்கள்?. இந்த வேலையைச் செய்வது இணைய முகவரி வழங்கிகள் (DNS servers). ஒரு தளத்தின் முகவரியை உலாவியில் உள்ளிட்டதும், உலாவி செய்யும் முதல் வேலை இணைய முகவரி வழங்கிகளைத் தொடர்பு கொண்டு, தேவைப்படும் தளத்தின் முகவர் எண்ணைப் பெற்று, அதனை நோக்கிப் பயணிப்பது தான். இந்த இணைய முகவரி வழங்கிகளில் இந்த நிமிடத்தில் செய்ல்பட்டுக் கொண்டிருக்கும் அத்தனை தளங்களின் விபரங்களும் இருக்காது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் என்ன நடக்கும்?. வகுப்பறையில் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கும் போது பேனா மை தீர்ந்து விட்டாலோ அல்லது பேனாவே இல்லாமல் இருந்தாலோ முன்னால் அமர்ந்திருப்பவரிடம் கேட்டுப் பார்ப்போம், அவரிடம் இல்லையென்றால் அவருக்கு முன்னாடி இருப்பவரிடம், அங்கும் இல்லையென்றால் அதுக்கும் முன்னாடி.. இப்படியே சலசலப்பைக் கிளப்பி தொல்லை தாங்க முடியாமல் கடைசியில் பேராசிரியரே 'என்னப்பா வேணும், பேனாவா.. இந்தா' என்று கொடுத்துதவும் சம்பவங்களைக் கடந்திருப்பீர்கள் அல்லது பார்த்திருப்பீர்கள். கிட்டத்தட்ட அப்படியொரு சங்கிலித்தொடரமைப்பில் தான் இந்த வழங்கிகள் செயல்படுகின்றன.

கேட்கப்படும் தளத்தின் முகவர் எண் விவரங்கள் வழங்கியில் இல்லாத பட்சத்தில் அது மைய வழங்கியிடம் தொடர்பு கொள்ளும், அதிலும் இல்லையென்றால் கேட்கப்படும் இணைய முகவரியின் அதிகாரப்பூர்வ வழங்கியிடம் கேட்கப்படும். அங்கும் இல்லையென்றால் அப்படியொரு தளமே இல்லையென்று உலாவி கணினித் திரையில் புன்னகைக்கும். இவற்றில் மைய வழங்கிகள் பிரதேச அளவில் பல நிலைகளில் உள்ளன. உலக அளவில்ARIN (Canada, United States, some islands of the Pacific) ·RIPE NCC (Europe, parts of Asia) · APNIC (Asia, Pacific region) ·LACNIC (Latin America and the Caribbean) · AfriNIC (Africa) ஆகிய அமைப்புகள் முக்கிய மைய வழங்கிகளாக செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கும் மேலாக இணைய முகவரியின் தலைப்பகுதிக்கேற்ப அதிகாரப்பூர்வ வழங்கிகளும் (authoritative servers) செயல்படுகின்றன. அவைதான் கேட்கப்படும் இணையதளம் இருக்கிறதா, இல்லையா என்ற உறுதியான மற்றும் இறுதியானத் தகவலைத் தருகின்றன.



தள முகவரிகளின் தலைப்பகுதியைப் (top level domains) பொருத்து முகவரிகள் வகைப் படுத்தப்பட்டுள்ளன. உ.தா. .com, .org, .net, .biz, .edu etc.... பின்னாளில் இணைய தளங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகிய பின் மேலாண்மை வசிதிக்காகப் பல புதிய வகைத் தலைப்பகுதிகள் ICANN அமைப்பினால் அறிமுகப்படுத்தப்பட்டது, உ.தா .in,.univ,.uk,.au,.us etc. இது போன்ற ஒவ்வொரு வகைக்கும் ஒரு அதிகாரப்பூர்வ வழங்கி உள்ளது. இவற்றை நிர்வகிக்கும் பொறுப்பினை ICANN (internet corporation for assigned names and numbers) சர்வேதச அமைப்பின் கண்காணிப்பின் கீழ் பல நிறுவனங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. உ.தா. .com, .org, .net ஆகிய வகைத் தலைப்பகுதியைக் கொண்ட இணையதளங்களுக்கான அதிகாரப்பூர்வ வழங்கியை Network Solutions Inc. என்ற நிறுவனம் நிர்வகிக்கிறது. ஒரு இணையதள முகவரி புதிதாகப் பதிவு செய்யப்படுகிறது என்றால் அதன் தலைப்பகுதி (.com/.net..etc) வகைக்குரிய அதிகாரப்பூர்வ வழங்கியில் அந்த தள முகவரி அந்த தளத்தினுடைய வழங்கியின் முகவர் எண் தகவலோடு சேர்க்கப்பட்டு விடும், எனவே எந்த ஒரு தலைப்பகுதி வகைக்கும் அந்த நொடிவரை செயல்பாட்டில் இருக்கும் அனைத்து தளங்களின் முகவரிகளும் இந்த அதிகாரப் பூர்வ வழங்கிகளில் இருக்கும். ஒவ்வொரு வகைக்கும் ஒரு அதிகாரப்பூர்வ வழங்கி இருப்பதால் தான் ஒரே முகவரியில் இரு தளங்கள் இருக்க சாத்தியப்படுவதில்லை. அதே நேரம் www.example.com மற்றும் www.example.org ஆகிய இரண்டும் வெவ்வேறு வகை என்பதால் இரண்டும் தனித்தனியாக செயல்படுவது சாத்தியமே. அது போன்ற குழப்பங்களை சமாளிக்கவே பெரிய நிறுவனங்கள் தங்கள் தளங்களின் முகவரியை அனைத்து தலைப்பகுதிகளுக்கும் பதிவு செய்து விடுகின்றன. (உ.தா. microsoft.com, microsoft.net, microsoft.org..)


தன்னிடம் தளமுகவரி குறித்த விவரங்கள் இல்லாத நிலையில் இணைய முகவரி வழங்கிகள் எப்படி மேல்நிலை வழங்கிகளிடம் இருந்து கேட்டுப்பெறுகிறது என்பது குறித்துப் பார்த்தோம். ஒரு முறை இப்படி பயணித்துப் பெறும் தகவல்களை தற்காலிகமாக இணைய முகவரி வழங்கி தனது நினைவகத்தில் சேமித்து கொள்ளும் (caching). அதுபோக எல்லா இணைய முகவரி வழங்கிகளும் தங்கள் மேல்நிலை வழங்கிகளிடம் இருந்து மொத்தமாக அனைத்துத் தகவல்களையும் குறிப்பிட்டக் கால இடைவெளியில் தனது நினைவகத்தில் புதுப்பித்துச் சேமித்துக் கொள்ளும். பயனாளர்களுக்குத் தேவையான தகவல்களை ஒவ்வொரு முறையும் மேல்நிலை வழங்கிகளுக்குச் சென்று தகவல் பெறாமல் தானே வழங்குவதன் மூலம் குறுகிய நேரத்தில் தேவையைப் பூர்த்தி செய்யவும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது மேல்நிலை வழங்கிகளில் இருந்து தகவல்களைத் திரட்டிப் புதுப்பித்துக் கொள்வதால் முடிந்தவரை இணையத்தின் தற்கால நிலையினைப் பிரதிபலிக்கவுமே இந்த ஏற்பாடு. அந்த கால இடைவெளியில் உருவாக்கப்படும் புதிய இணையத் தளங்களையோ அல்லது ஒரு வழங்கியிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றப்படும் தளங்களையோ பார்வையிட முற்படும் போது சிரமங்கள் நேருவது உண்டு.

இதில் முதல் நிலை இணைய முகவரி வழங்கிகள் மிகவும் முக்கியம். அவற்றின் செயல்பாட்டுத் திறன், தகவல்களை மேல்நிலை வழங்கிகளிடம் இருந்து புதுப்பித்து கொள்ளும் கால இடைவெளி ( பொதுவாக 24 முதல் 72 மணி நேரம் வரை), எந்த அளவிற்கு மேற்கொண்டு பயணிக்காமல் தளத்திற்குரிய முகவர் எண்ணைத் தரமுடிகிறது ஆகியவை பயனாளரின் இணைய அனுபவம் விரைவானதாகவும், சொகுசாகவும் அமைவதற்கு மிக முக்கியம்.


இணையதள முகவரிகளை அவற்றிற்குரிய வலையமைப்பு முகவர் எண்களாக மாற்றித்தரும் முகவரி வழங்கிகள் மற்றும் அவை எப்படி செயல்படுகின்றன என்பது குறித்து ஓரளவு புரிதல் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். இப்பகுதியில் ஒவ்வொரு பயனாளரும் தங்களின் முகவரி வழங்கிகள் குறித்தான விவரங்களை அறிந்து கொள்வது பற்றியும், ஒவ்வொரு முறையும் இணைய தளங்களைப் பார்வையிடும் போது எங்கெங்கு பயனாளரின் வேண்டுகோள் பயணிக்கின்றன என்பது குறித்தும், இன்னபிற தகவல்கள் குறித்தும் தெரிந்து கொள்வோம்.


உங்கள் கணினியில் start->run->cmd என்ற இடத்திற்கு சென்று ipconfig/all என்ற கட்டளையினை வழங்கினால் உங்கள் வலையமைப்புத் தொடர்பு குறித்த ஜாதகத்தினைப் பெற்று கிரக நிலை குறித்து அறிந்து கொண்டு மகிழலாம். (பார்க்க படம்). அவற்றுள் DNS servers என்ற தலைப்பில் உங்களின் முதல் நிலை இணைய முகவரி வழங்கியின் வலையிணைப்பு முகவர் எண்ணைக் காணலாம். அனேக முகவரி வழங்கிகள் உங்களுக்கான இணையத்தொடர்பு வழங்கும் நிறுவனங்களாலேயே நிர்வக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையினைப் பொருத்து வழங்கிகளின் எண்ணிக்கை இருக்கும். துரிதமான சேவையின் பொருட்டு சுழல்முறையில் வேண்டுகோள்கள் வழங்கிகளுக்கிடையே பிரித்தளிக்கப்படும்.


அதேபோல் ஒரு இணையதள முகவரியினை உலாவியில் உள்ளிடும் போது உங்கள் வேண்டுகோள் எங்கெங்கெல்லாம் பயணிக்கிறது என்பதை அறிந்து கொள்ள start->cmd->run என்ற இடத்திற்கு சென்று tracert www.siteaddress.com என்ற கட்டளையினை வழங்கினால் காணப்பெறலாம். (பார்க்க படம்).

வதவதவென தளங்கள் வைத்திருக்கும் மிகப்பெரிய நிறுவனங்கள் சொந்தமாகவே முகவரி வழங்கிகளை வைத்து நிர்வகிப்பதுண்டு, உ.தா. Microsoft. வழங்கிகளின் கட்டமைப்புகள் குறித்தான தெளிவான புரிதல் இருந்தாலோ அல்லது தினமும் பொழுதுபோகாமல் வெகுநேரம் சும்மா இருக்கும் வாய்ப்பிருந்தாலோ சொந்தமாக முகவரி வழங்கிகள் வைத்து விளையாடலாம் :). அதே போல தடையில்லா இணைய இணைப்பும், மின்சார வசதியும் கொண்ட கணினிகளை 24 மணி நேரமும் இயக்கும் வரங்களைப் பெற்ற அதிர்ஷடசாலிகள் தங்கள் கணினியிலேயே தங்கள் இணையதளத்தை சேமித்து இணையத்தில் வலம் வரச் செய்யலாம் (self -webhosting). இது போன்ற சூழல்களில் வழங்கிகளாக கட்டமைக்கப்படும் கணினிகளின் செயல்திறன் மிக முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

ஒரே நேரத்தில் கூட்டம் கும்முவதால் சில நேரங்களில் உங்கள் இணையத்தளம் முக்கிமுனகுவதற்கு வாய்ப்பிருக்கிறது. சச்சின் 200 ஓட்டங்கள் பெற்றதில் www.cricinfo.com தளத்தின் இணைய வழங்கி சச்சினை விட அதிகமாக சோர்வடைந்து மயங்கியது சமீபத்திய உதாரணம். அது போன்ற சந்தர்ப்பங்கள் அடிக்கடி நிகழும் வாய்ப்பிருக்கும் தளங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இணைய வழங்கிகளை நிர்வகித்து வருகையாளர்களைச் சுழல் முறையில் வழங்கிகளிடையே பிரித்தனுப்புவது வழக்கம். அது போல அவற்றுள் ஏதேனும் ஒரு வழங்கி செயலிழந்தால் கூட, இணையதளம் தொடர்ந்து செயல்பட வைக்கும் பொறுப்பினை மீதமிருப்பவை கவனித்து கொள்ளும்.


மேலும் ஒரு இணையதளத்திற்கான பாதுகாப்பில் அவற்றின் முகவரி வழங்கிகள் மிகமிக முக்கியமான பங்காற்றுகின்றன. பொதுவாக முகவரி வழங்கிகளின் வலையிணைப்பு முகவர் எண்ணைத் தெரிந்து கொள்வது மிகச் சுலபம் என்பதால் எந்நேரமும் விஷமிகள் உள்ளே புகுந்து குச்சுப்புடி விளையாட வாய்ப்புண்டு, எனவே பாதுகாப்பு என்பது உண்மையாகவே கடுமையானதாக இருக்க வேண்டும், தாக்குதல் நடந்த பின் 'இனியும் பொறுக்க மாட்டோம், கடுமையாக கண்டிக்கிறோம்' என்று வீரவசனம் பேசி சமாளிக்க முடியாது. காரணம் முகவரி வழங்கியினுள் விஷமிகள் ஊடுருவினால், எந்தவொரு தளத்திற்குரிய முகவர் எண்ணிற்குப் பதிலாக அவர்களுக்குப் பிடித்ததை மாற்றி வைத்து விட்டு ஜோதியில் கலந்து விடுவார்கள். உதாரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு டிவிட்டர் தளத்திற்கு இம்முறையினைப் பின்பற்றி முகமூடி மாட்டப்பட்டது, முகமூடி உபயம்: இணையப்படைக் குடும்பத்தார், ஈரான் :).

நம் கணினிகள் உறங்கினாலும் இணையம் உறங்குவதில்லை. ஒவ்வொரு நொடியும் உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் யாருக்காகவோ அது ஓடிக் கொண்டே தான் இருக்கிறது. அந்த ஒவ்வொரு கணமும் எத்தனையோ முகவரி வழங்கிகள், இணைய வழங்கிகள் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள், மொத்த வலையமைப்பின் இணைய தள முகவரிகளை நிர்வகிக்கும் சர்வதேச அமைப்புகள், நிறுவனங்கள் ஆகிய அனைவரும் கூட்டாகச் சேர்ந்து நிறுத்தாமல் தொடர்ந்து ஆடும் ஆட்டமே, நம்மை இணையப் பக்கங்களை விரல்சொடுக்கும் நேரத்தில் பார்த்துப் படிக்க வகை செய்கிறது

No comments:

Post a Comment