Saturday, July 9, 2011

பாம்பின் கால் பாம்பறியும்

95 மில்லியன் வருட தொல்படிவ எச்சத்தில் இருந்து அறிவியல் ஆய்வாளர்கள் கூர்ப்பின்போது எப்படிப் பாம்பு தனது கால்களை இழந்தது என்பதை அறிந்துகொண்டுள்ளனர். கால்களுடன் கூடிய பாம்புகளின் மூன்று தொல்லுயிர் எச்சங்களில் இதுவும் ஒன்று லெபனானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
 
இதற்கு பின்னங்கால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது, ஆனால் அடுத்தகாலை தொல்படிமப் பாறைகளில் காண்பதற்கு எக்ஸ்-கதிர் நுட்பம் தேவையாக இருந்தது. முள்ளந்தண்டு உயிரிகளின் தொல்லுயிரியல் சஞ்சிகையில் ஆய்வுக்குழு கால்கள் இழத்தலின் ஆரம்பக் கட்டத்தில் பாம்பு இருந்திருக்கின்றது என்று தெரிவித்தனர். Eupodophis descouensi எனப்படும் இனப் பாம்பினது கால்களையே உயர் நுணுக்க முப்பரிமாணப் படங்களின் உதவியுடன் அறிய முடிந்தது. இவற்றில் இருந்து ஒரு முடிவுக்கு வருதல் சாத்தியமாக உள்ளது. பாம்பு கணுக்கால் எலும்புகளைக் கொண்டிருப்பினும் அவை பாத எலும்புகளைக் கொண்டிருக்கவில்லை. இந்த ஆய்வில் இருந்து பாம்புகள் 150 மில்லியன் வருடத்திற்கு முன்னர் கூர்ப்பில் தோன்றியுள்ளது எனக் கருதலாம்.பரிணாம வளர்ச்சியின் போது, பாம்பின் கால்கள் ஒரு குறுகிய காலப்பகுதியில் மிகவும் குறைவாக வளர்ந்து பின்னர் மறைந்து போயின. இவற்றின் தேவை பாம்புகளில் குறைந்தமையே காரணம் ஆகும்.

இரண்டு கருதுகோள்கள் பாம்பின் தோற்றம் பற்றி உள்ளன. ஒன்றில், பல்லி வகைகள் வளைகள் உருவாக்கத்தொடங்கின, பின்னர் நிலக்கீழ் வசிவிடத்துக்கு ஏற்றவாறு தம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டன; அவற்றின் கால்கள் குறுக்கப்பட்டு பின்னர் இல்லாமல் போயிற்று; முதலில் முன்னவயவமும் பின்னர் பின்னவயவமும் மறைந்தன. இரண்டாவது கருதுகோளில், இவற்றின் தோற்றம் நீரில் நடைபெற்றன; கடல்வாழ் ஊர்வன மூலம் தோன்றின.

அறியப்பட்ட இருகால் பாம்புகளின் தொல்-எச்சங்களில் அவை பெரியதாக இருப்பது, இக்கருதுகோள் பற்றிய விவாதத்துக்கு துணை போகின்றது.

இந்தப்படிப்பு இவ்விரு கருதுகோள்களை மெய்ப்பிப்பதற்கு போதாது, இன்னமும் புதைபடிமங்களில் இருந்து தகவல்கள் பெறப்படல் அவசியம் என்று இவ்வாராய்வை மேற்கொண்ட முனைவர் ஹௌசே கூறினார். Eupodophis descouensi இனப் பாம்பு ஒரு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டது. பிந்தைய கிரித்தேசியக் காலத்தில், டைனசொர்கள் வாழ்ந்த காலத்தில் இவை ஊர்ந்து திரிந்திருக்கலாம். அசைவதற்கென்று இக்கால்கள் பயன்படுத்தப்பட்டன என்பதைவிட இவற்றிற்கு வேறு தொழில்களும் இருந்திருக்கலாம். பைதன் போன்ற இற்றைய காலத்துப் பாம்புகளில் குறுகிய நகர்நீட்சிகள் இருப்பது இதற்குச் சான்றாக அமைகின்றது, இவை பாலுறவின் போது இறுகப்பற்றிக்கொள்ள உதவியாக இருக்கின்றன.

No comments:

Post a Comment