Saturday, July 9, 2011

தோண்ட தோண்ட தங்க நகைக் குவியல்கள்

திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோவில் பாதாள அறையில் நேற்று 8-வது நாளாக தோண்ட தோண்ட தங்க நகைக் குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கோவிலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


பழமையான கோவில்

கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் பழமையான அனந்த பத்மநாபசாமி கோவில் உள்ளது. இங்கு மூலவர் அனந்த சயனத்தில் உள்ளார். இதனால்தான் இந்த ஊருக்கு திருவனந்தபுரம் என்ற பெயர் வந்தது.

இந்த கோவில் திருவிதாங்கூர் மன்னர் பரம்பரைக்கு சொந்தமான அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

6 பாதாள அறைகள்

பிரசித்திபெற்ற இந்த கோவிலின் கருவறைக்கு அருகில் 6 ரகசிய பாதாள அறைகள் உள்ளன. அவை நீண்டகாலமாக பூட்டி சீல் வைக்கப்பட்டு இருந்தன. இந்த கோவிலின் நகை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவிலின் பாதாள அறைகளை திறந்து அங்குள்ள நகைகளை கணக்கெடுத்து பட்டியலிட்டு அனுப்பும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.இதற்காக கேரள ஐகோர்ட்டு நீதிபதிகள் அடங்கிய 7 பேர் கொண்ட ஒரு குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. அந்த குழுவினர் கடந்த திங்கட்கிழமை முதல் பாதாள அறைகளை திறந்து நகைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நகை குவியல்கள்

முதலில் திறக்கப்பட்ட 2 அறைகளில் தங்க குடங்கள், பொற்காசுகள் போன்றவை இருந்ததை கண்டு குழுவினர் ஆச்சரியம் அடைந்தனர். அதன் பின்னர் ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்தபோது அங்கிருந்த விலை உயர்ந்த தங்கம், வெள்ளி, வைரம், வைடூரிய நகைகள் மதிப்பீட்டு குழுவினரை வியப்பில் திக்குமுக் காட வைத்து விட்டது. கலைநயம் மிகுந்த பல பொருட்கள் விலை மதிப்பிட முடியாத அளவுக்கு இருந்தது.

இதற்கிடையே நேற்று முன்தினம் திறக்கப்பட்ட முதல் இரண்டு அறைகளில் கண்ணை பறிக்கும் நகைகள் மூட்டை, மூட்டையாக கட்டி வைத்து இருந்தன. முதல் அறையில் 18 அடி நீளம் உள்ள தங்க மாலைகள் உள்பட ஏராளமான நவரத்தின நகைகள் குவியல் குவியலாக இருந்தன. இவற்றின் மதிப்பு மட்டுமே ரூ.50 ஆயிரம் கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.

1000 கிலோ தங்க நாணயங்கள்

இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி காலத்துக்கு முற்பட்ட 17 கிலோ தங்க நாணயங்கள், நெப்போலின் மன்னர் கால 18 நாணயங்கள், பட்டுத்துணியால் போர்த்தப்பட்ட அபூர்வ வைரக்கற்கள், அத்துடன் 1000 கிலோ தங்க நாணயங்கள், தங்கத்தினால் ஆன சிறிய அணிகலன்கள், சிறிய தங்க யானை சிலைகளும் இருந்தன.

1772-ம் ஆண்டு முத்திரையுடன் கூடிய பொற்காசுகள், மன்னர் கார்த்திகை திருநாள் ராமவர்மாவின் ஆட்சிக்காலத்தை குறிப்பிடுவதாக அமைந் துள்ளது. பெல்ஜியம் ரத்தின கற்கள், 2 ஆயிரம் மாணிக்க கற்கள், ராணிகள் அணியும் தங்க ஒட்டியாணங்கள், மன்னரின் கிரீடங்கள், தங்க வாள்கள் சாமிக்கு அணிவிக்கப்படும் தங்க சால்வைகள், தங்கத்தால் பொதியப்பட்ட உத்திராட்ச மாலைகளும் கிடைத்துள்ளன.

ரூ.1 லட்சம் கோடி

நேற்று 6-வது நாளாக கணக்கெடுப்பு பணி நீடித்தது. நேற்றும் தோண்ட தோண்ட தங்கம், வைரம், வைடூரியம் என நவரத்தினங்கள் அடங்கிய நகைகள் ஏராளமாக கிடைத்தன. மேலும் சாமிக்கு அணிவிக்கப்படும் தங்க வைர கிரீடங்கள் உள்பட பல வகையான நகைகளும் குவியல் குவியலாக உள்ளன.

இந்த நகைகளை வெளியே எடுத்து வந்து கணக்கிடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. விலைமதிக்க முடியாத, கலைநயம் மிக்க அரிய நகைகளாக அவை உள்ளன. இதனால் மொத்த நகைகளின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடியில் இருந்து 1 லட்சம் கோடியை தாண்டும் என்று கருதப்படுகிறது.

திருப்பதியை மிஞ்சுகிறது

உலகத்திலேயே பணக்கார கடவுளாக திருப்பதி ஏழுமலையான் கோவில்தான் இதுவரை இருந்து வருகிறது. தற்போது திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசாமி கோவிலில் கிடைத்துள்ள நகைகள் திருப்பதி கோவில் நகைகள் மற்றும் சொத்துக்களை மிஞ்சும் அளவுக்கு உள்ளது.

திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர் ஆட்சி காலத்தில், அரண்மனைகளை விட கோவில் ரகசிய அறைகளில் நகைகள் வைத்திருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என கருதி இதுபோல் நகைகளை சேர்த்து வைத்துள்ளனர். இவற்றில் சிலவற்றை சாமிக்கு சார்த்தவும், வீதியுலாவின்போது அணிவிக்கவும் பயன்படுத்தி உள்ளனர்.

பக்தர்கள் அதிகரிப்பு

திருவனந்தபுரம் கோவில் நகைகள் பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாவதை தொடர்ந்து உலகம் முழுவதும் இந்த கோவிலின் மீது பார்வை விழுந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மெட்டர் டிடெக்டர், கண்காணிப்பு கேமரா, ஸ்கேனர் வசதி செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே தரிசனத்துக்கு அனுப்பப்படுகிறார்கள்.

3 அடுக்கு பாதுகாப்பு

இதற்கிடையே கோவிலுக்கு பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக கேரள போலீஸ் டி.ஜி.பி. ஜேக்கப் புன்னூஸ் உயர் போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தை நேற்று கூட்டினார். உடனடியாக 2 பிரிவு விசேஷ அதிரடிப்படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள் என்று திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனர் மனோஜ் ஆபிரகாம் அறிவித்தார். கொள்ளை முயற்சியை தடுப்பதற்காக கோவிலுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து இரவு பகலாக 24 மணி நேர தொடர் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நகைகள் கணக்கெடுக்க எதிர்ப்பு

நகைகள் கணக்கெடுப்பு தொடர்ந்த நிலையில், “கோவிலில் சோதனை நடத்தக்கூடாது. அதனால் வெளியாகும் தகவலால் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளைபோக வாய்ப்பு உள்ளது” என்று கூறி ஒரு குழுவினர் கோவிலின் மேற்கு நடை முன் திரண்டு நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்கள், ஆய்வுக்குழுவினர் கோவிலுக்கு வெளியே வந்தபோது தடுத்து நிறுத்தி விவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. நிதிக்குவியல் பற்றி விரிவான செய்திகள் மற்றும் வரைபடங்கள் உள்ளிட்ட படங்களை வெளியிடுவது கோவில் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் என்று கூறினர்.

கோஷம்

கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள டி.பி.சுந்தரராஜன்தான் இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டி அவருக்கும் எதிராக கோஷம் போட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிபதிகள் சி.எஸ்.ராஜன், எம்.என்.கிருஷ்ணன், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள டி.பி.சுந்தரராஜன் ஆகியோர் கோவில் நிர்வாக அதிகாரியின் அறையில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் ஏராளமாக போலீசார் வரவழைக்கப்பட்டனர். போலீஸ் துணை கமிஷனர் பி.பி. ஜோஸ் தலைமையில் போலீசார் அவர்கள் 3 பேரையும் தக்க பாதுகாப்புடன் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இந்த நிதிக்குவியல் பற்றிய அறிக்கை அடுத்த மாதத்துக்கு (ஆகஸ்டு) முன்பு சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும் என ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர். நூற்றாண்டுகளாக, விலை உயர்ந்த பொருட்களை பாதுகாத்து வந்ததால் பொதுமக்கள் மத்தியில் மன்னர் குடும்பத்தினரின் மதிப்பு அதிகரித்துள்ளது.

ரகசிய அறை கதவில் பாம்பு படம் இருந்ததால் அதிர்ச்சி

பத்மநாபசாமி கோவில் ரகசிய பாதாள அறைகளில் உள்ள நகைகள் விவரம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணியின்போது மதிப்பீட்டு குழுவினர் ஒரு அறையை திறக்க முயன்றபோது அதன் கதவில் பாம்பு படம் வரையப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் அந்த அறையில் ஆபத்து எதுவும் இருக்கலாம் என்று கருதி, அதை திறக்காமல் விட்டு விட்டனர். பின்னர் உரிய பாதுகாப்புடன் அந்த அறையை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment