Saturday, July 9, 2011

வாகன ஓட்டிகளே உஷார் !!!

உலகிலேயே அதிகளவில் சாலை விபத்துகள் நடக்கும் நாடுகளில், இந்தியா முதலிடம் வகிக்கிறது என, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


இந்தியாவில் அதிக விபத்துகள் நடக்கும் மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வந்தது. ஆனால், அந்த இடத்தை தற்போது தமிழகம் பிடித்துள்ளது.

அந்த அளவுக்கு சாலைகளில் விபத்துகள் ஏற்பட, பற்பல காரணங்கள் உள்ளன.நம் நாட்டில், நீண்ட காலத்துக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. உதாரணமாக, 30 வயது நிரம்பிய ஒருவருக்கு, 20 வருட காலத்துக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகள், அவரது உடல்நிலை மற்றும் கண் பார்வை நல்ல நிலையில் இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அயல் நாடுகளில், இரண்டு வருடத்துக்கு ஒரு முறை உரிமத்தைப் புதுப்பிக்கும்படி சட்டம் உள்ளது.அடுத்தபடியாக, நான்கு வழி மற்றும் ஆறு வழிச் சாலைகளில், வலப்புறம் வந்து இணையும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள குறுக்குச் சாலைகள் மிக ஆபத்தானவை.

அயல் நாடுகளில், இதுபோல் இடையில் வந்து சேரும் குறுக்குச் சாலைகள், மேம்பாலம் அமைத்து, மறுபுறம் கொண்டுவரப்பட்டு, இடதுபுர ஓரத்தில் வந்து, பெரிய சாலையோடு சேரும்படி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அயல் நாடுகளைப் பார்த்து, ஆறுவழிச் சாலை அமைத்த நம் பொறியாளர்கள், இதைக் கவனிக்கத் தவறிவிட்டனர்.அதற்கடுத்து, நெடுஞ்சாலைகளில் விதி மீறல் செய்வோரைத் துரத்திப் பிடிக்க, ரோந்து ஹெலிகாப்டர்கள் தேவை.

ரோந்து வாகனங்களால் துரத்திப் பிடிக்க முடியாது. சமீபத்தில், அமைச்சர் ஒருவர் உயிரிழக்க காரணமான லாரியை பிடிக்க முடியாமல், பல நாட்கள் ஆனது. லாரியையே பிடிக்க முடியவில்லையெனில், காரை எப்படி துரத்திப்பிடிக்க இயலும்?

அதற்கடுத்து, வாகன நடமாட்ட தேவைக்கேற்ப, சாலைகளை அகலமாக விரிவுபடுத்தல் அவசியம். வளைவுகளை நேர் செய்வதோடு, நல்ல தரமான, மேடு, பள்ளமில்லாத சாலைகளாக, அனைத்து சாலைகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.இவை அனைத்தும் விரைந்து செய்ய முடியுமானால், சாலை விபத்தற்ற மாநிலமாக தமிழகத்தை நாம் நிச்சயமாக மாற்ற முடியும்.

No comments:

Post a Comment