Saturday, July 9, 2011

பெற்றோர்களே சிந்திப்பீர்...!

சமச்சீர் கல்வி, நடைமுறைக்கு வருமா, வராதா என்ற எதிர்பார்ப்பும், விவாதமும் சூடாக நடந்து கொண்டிருக்கிறது. இவ்வேளையில், அரசு, அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், நான்காம் வகுப்பு வரை, செயல்வழிக் கற்றல் - ஏ.பி.எல்., என்ற அட்டை வழிக் கற்பித்தல் முறை, நடைமுறையில் உள்ளது.




இம்முறை தொடருமா, இல்லை நிறுத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.ஒவ்வொரு பள்ளியிலும், கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு மாற்றங்களுடன், தரமான முறையில், அதிக பொருட்செலவில் அச்சடித்துக் கொடுக்கப்பட்ட கற்றல் அட்டைகள், மூட்டை மூட்டையாக குவிந்து கிடக்கின்றன.

ஆந்திராவில், மலைக் கிராம மக்களின் குழந்தைகளுக்காக, செயல்வழிக் கற்றலை, முதன் முதலில் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தியது. இதை காப்பி அடித்துத் தான், கடந்த அரசு, மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து பள்ளிகளுக்கும், படிப்படியாக நடைமுறைப்படுத்தியது."அட்டை வழிக் கற்பித்தல் முறை, ஆசிரியர்களை சுறுசுறுப்பாக வேலை வாங்கும் திட்டம்' என, சிலர் குறிப்பிடுகின்றனர்.
"மாணவர்களையும், ஆசிரியர்களையும் சோம்பேறிகளாக்கி விடும்' என்கிறது இன்னொரு தரப்பு. "பெற்றோர் மத்தியில் இந்த கூத்து எடுபடவில்லை' என, சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

பள்ளிகளுக்கு கற்றல் அட்டைகள், பாடத்திற்கு ஏணிப்படி அட்டவணைகள் கொடுத்த பின், இன்றைய நிலையில், ஒன்று முதல், நான்காம் வகுப்பு வரை, ஏ.பி.எல்., முறை வேண்டுமா, வேண்டாமா என, ஓர் ரகசிய ஓட்டெடுப்பு நடத்தினால், 95 சதவீதம் ஆசிரியர்கள், இம்முறை வேண்டாம் என்றே ஓட்டளிப்பர்.

மாதம்தோறும், தொடக்கப் பள்ளி மாணவனுக்கு, 100 ரூபாய் உதவித் தொகை, தரமான பாட நூல், தரமான பயிற்சி புத்தகம், தரமான சீருடைகள், மதிய உணவு, தேர்வு முறைகள், மதிப்பெண் பட்டியல் வழங்குதல், மாணவன் முன்னேற்ற அறிக்கை, பெற்றோருக்கு வழங்குதல், மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக பள்ளிப் பதிவேடுகள் வழங்க வேண்டும்.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் ரெக்கார்டு ஷீட், மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்களில் போலிகள் நுழையா வண்ணம் வழங்க, அரசு நடவடிக்கை, போதுமான கட்டமைப்பு வசதி, தர மேம்பாடு, உபகரணங்கள் போன்ற வசதிகளை மேம்படுத்த வேண்டும்.மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள அ.தி.மு.க., அரசு, இதை செய்யுமா?

No comments:

Post a Comment