Thursday, March 3, 2011

"உருக வைத்த கடிதம் ஒன்று"


மனு,

நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்லையா? அது நிஜம் தானா? மாயை அல்லவா? உன்னால் தற்போது வேலையில் கவனம் செலுத்த முடிகிறதா? என் ஞாபகங்களை விலக்க முடிகிறதா? மறுபடியும் கேட்கிறேன் மனு நீ எப்படி இருக்கிறாய்?

இந்த நடு நிசியில் உனக்கு முதல் கடிதம் எழுதுகிறேன் மனு. எனக்கு என்னைப் பற்றிய நிறைய குழப்பங்கள் இருக்கிறது. எனக்கு நிறைய வேளைகளில் என்னை சமாளிப்பது கடினமாய் இருக்கிறது. அப்படியான நேரங்களில் நான் எவரையும் பார்க்க தவிர்க்கிறேன். என்னால் மனமுவந்து அளவளாவ முடியாமல் போய் விடுகிறது. என் எதையும் அடுத்தவர் மேல் திணிப்பதை நான் விரும்புவதில்லை. இந்த குழப்ப மனநிலையும் தான். குழப்பம் என்பதை விட ஒரு உறுமும் மனநிலை. எதற்கென்றே தெரியாமல் கோவம், எதையாவது போட்டு உடைக்கும் மனநிலை.அப்போது யாராவது என்னை தொந்தரவு செய்யும்போது நான் அவர்களை மிகவும் காயப் படுத்துகிறேன். அதுவும் நெருக்கமானவர்கள் என்றால் ஐ டேக் தெம் பார் கிராண்டட். அடைத்துக் கொண்டிருக்கும் சாக்கடையை குத்தி விட்டது போல் அவர்கள் மேல் பொழிந்து விடுகிறேன். பிறகு மிகவும் வருந்துகிறேன். அன்று நமக்குள் நடந்ததற்கு இதை ஒரு விளக்கமாக கூட கொடுக்க முடியவில்லை என்னால். ஆனால் நான் வருந்துகிறேன் மனு.

தனியாக இருக்க நான் பிரியப் படுகிறேன். ஐ ஆம் எ வெரி குட் கம்பானியன் பார் மைசெல்ப். இப்போது எனக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. நினைத்த பாட்டை கேட்டுக் கொண்டு, ஆடத் தோன்றினால் ஆடிக் கொண்டு, படித்துக் கொண்டு இப்படி தோன்றியதை எல்லாம் செய்து கொண்டு எல்லாம் முடிந்த பிறகு மனம் எதையோ நாடுகிறது. அது நீதான் மனு. என்னை யாரும் மிக நெருங்கி வந்தால் எனக்கு ஒரு வித பாதுகாப்பின்மை தோன்றுகிறது. திஸ் இஸ் யுவர் லிமிட் என்று சொல்கிறேன். ஆனால் உன்னிடம் அப்படி இல்லை மனு. நீ விலகி சென்றால் நெருக்கம் வேண்டுகிறேன். நீ ஏன் சொல்லாமலே சென்று விட்டாய் மனு? எது உன்னை மிக பாதித்தது?

சில சமயங்களில் ஐ ஆம் ஸெல்ப் ஒப்செஸ்ட் என்று தோன்றுகிறது மனு. என்னை நான் பார்த்து கொண்டே இருப்பது எனக்கு அவசியமாகிறது. என் மனநிலை தொடர்ந்து ஒரே மாதிரி இருப்பதில்லை. உதாரணதிற்கு, இந்த வாழ்க்கையை ஒரு உடை மாற்றும் லாவகத்துடன் கழைந்திட முடிந்தாலோ, தொடர் ஓட்ட பொருளாக யாரிடமாவது கை மாற்ற முடிந்தாலோ எத்தனை நன்றாக இருக்கும் யோசித்து கொண்டே இருக்கிறேன். பின் நீ நினைவில் மிதக்கிறாய். வாழ்க்கையே மாறினார்போல உனக்கு சொல்கிறேன். இந்த வாழ்கை தான் எத்தனை சுவாரஷ்யங்களை உள்ளடக்கி இருக்கிறது மனு. ரோஜாக்களின் அடுக்கு இதழ்களை பாரேன். எத்தனை நேர்த்தி, எத்தனை அழகு. இந்த வெயில், இந்த பூக்களின் சுகந்தம் எல்லாம் எல்லாம் என்ன அதிசயம் இல்லையா மனு என்கிறேன். இதில் எதை நான் என்பது. இது தான் நான் என்று ஒரு வகையில் நம்பிக் கொண்டே வருகையில் அந்த நானுக்கு சம்பந்தம் இல்லாத வேறு ஒரு செயலை செய்கிறேன். ஒரு கட்டத்தில் மிகுந்த சோர்வுற்று என்னையே நான் கை விட்டு விடுகிறேன். இந்த நானை இரு காதுகளைப் பிடித்து எங்கேயாவது தூக்கி வீசி விடலாம் போல் இருக்கிறது மனு.

நீ எனக்கு மிக முக்கியம் மனு. எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்றாலும் கூட நீ என்னொடு இருக்கவே பிரியப் படுகிறேன் மனு. இது கூட எனக்கு சுய நலமாகவே படுகிறது. என் நம்பிக்கையின்மையை உன் மேல் திணிக்கிறேனோ? ஒரு நிலையற்றவளோடு நீ எப்படி இருப்பாய் மனு? ஆனாலும் எனக்கு நீ வேண்டும் மனு. உன்னோடு இருக்கும்போது எனக்கு எல்லாமே கிடைத்து விட்டது போல் இருக்கிறது. உன்னை இழுத்துக் கொண்டு ஏதாவது ஒரு காட்டுக்குள் போய் விடனும் போல் கூட இருக்கும். அதெல்லாம் முடியாது எனும்போது ஒருவித சலிப்பு வருகிறது. சலிப்பென்ற உணர்வு ஒருவர் இடம் கொடுப்பதற்கு முன்னேயே வந்து ஆக்கிரமித்து கொள்கிறது. இங்கிதமென்று எதுவுமில்லை அதனிடம்.

நீ இல்லாத இந்த சமயங்களில் நாம் பேசிகொண்டிருந்த போது, சிதறியிருந்த உரையாடல் துணுக்குகளை உண்டே என் நேரம் செல்கிறது மனு. என்னால் எதுவுமே செய்ய முடிய வில்லை மனு. புது இடத்துக்கு சென்று விடலாம் என்று தோன்றினால் கூட எத்தனை நாளைக்கு ஓட முடியும் என்றே தோன்றுகிறது. நான் என்ன செய்யட்டும் மனு? இப்படி யோசித்து யோசித்து நான் சிதறிக் கொண்டிருக்கிறேன் மனு. இதையெல்லாம் படித்துவிட்டு நீ என் மேல் பரிதாபப் படாதே. நீ எனக்கு இடம் கொடுக்காதே மனு. நான் காற்றிலாடும் கொடி, நீ இடம் கொடுத்தால் இறுகப் பற்றிகொள்வேன். உனக்கு மூச்சு முட்டும். எனக்கு அன்பை எந்த இடத்தில் நிறுத்துவது தெரியாது? அதற்கு பெயரெல்லாம் கிடையாது. எல்லா கோடுகளையும் அழித்து விட்டு, திசை காட்டிகளை கழற்றி விட்டு நடப்பதே எனக்கு சௌகர்யம். உனக்கு எந்த உத்திரவாதமும் கொடுக்கும் நிலையில் நான் இல்லை. உன் கேள்விகளுக்கும் என்னிடம் பதில் இல்லை.

காதலின் இதயம் நீ மனு. உன்னை காதலிக்கிறேன் மனு.

No comments:

Post a Comment