Wednesday, December 14, 2011

கமல் - நல்லவனா?...கெட்டவனா?

முதலில் அவன் இவன் என்று சொல்வதற்கு மன்னிக்கவும். மகாகவி பாரதியைச் சொல்வதில்லையா? அதுபோலதான் கமல் எனக்கும். சரி இனி விஷயத்துக்கு வருவோம். 

சர்ச்சைக்குரிய கடவுள் - நல்லவரா... கெட்டவரா... பற்றிய பதிவு தான் இது. சரி. கமல் - நல்லவரா... கெட்டவரா... தற்சமயத்திற்கு ஆத்திகவாதிகளுக்கு கெட்டவராகவும், நாத்திகவாதிகளுக்கு நல்லவராகவும் தென் படுகிறார். இது மாறவும் செய்யலாம். ஆத்திகவாதிகளுக்கு கெட்டவராக போனதில் ஆச்சர்யமில்லை. ஆனால் பகுத்தறிவாதிகளுக்கு, கமல் என்னும் ஆரியர் தேவையானவராக தெரிவது தான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமான விஷயம்.

இன்று பகுத்தறிவை மார்க்கெட்டிங் செய்யக் கூட, சினிமா நடிகரின் "வாய்ஸ்" தேவைப்படுகிறதோ என்னவோ. சமூகத்தை சீரழிப்பதில் பெரும்பங்கு சினிமாவுக்கு உள்ளது என்றார் அய்யா பெரியார். ஆனால் அதை தங்கள் சுயநலத்திற்காக மறந்து, நேத்து ராத்திரியம்மா... தூக்கம் போச்சுடி அம்மா... என்ற நாயகனை பகுத்தறிவை வளர்க்க அழைக்கிறார்களா.

அவரது கடவுள் மறுப்பு பேட்டி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஊடகங்களுக்கான ஒரு மலிவான தீனி. இது குறித்து இணையத்தில் செய்தி வெளியிட்டு, இருபது பேர் கமலை தாறுமாறாக திட்டவும், பத்து பேர் கமலை ஆதரிக்கவும் என ஒரு பின்னூட்ட விளையாட்டு நடத்துகிறார்கள். அதீதமான பார்வையாளர்களை தங்கள் செய்தி தளத்துக்கு வரவழைக்க ஒரு யுக்தி. அப்படியொரு விளம்பரம் பகுத்தறிவுக்கு தேவையா.

எந்த சூழ்நிலையிலும், அவாளை எதிர்த்து கொண்டே இருக்க வேண்டும் என்பதே அய்யா வகுத்த கொள்கை. பார்ப்பானை பார்த்தால் எப்படி அழைக்க வேண்டும் என்று பெரியார் சொன்னதை- COPY -> paste கொடுப்பவர்கள் மறக்கலாமா. நேற்று கூட முத்தமிழ் அறிஞர், டாக்டர் கலைஞர் "தேர்தலில் ஆர்யத்தை வீழ்த்த வேண்டும்" என்று யுத்தத்துக்கு தயாராவது போல் பேசி இருக்கிறார்.

தம் கட்சியில் ஆரியர்களின் காற்று கூட படக்கூடாது என்ற அய்யாவின் வார்த்தைகளை காற்றில் பறக்க விட்டு விட்டார்கள் - ஒரு பத்தி செய்திகளுக்காக. நிச்சயம் பகுத்தறிவாளர்களுக்கு செய்தி பஞ்சம் இருக்க போவதில்லை. யாமிருக்க பயமேன் என்பது போல் துக்ளக், தினமலர் இருக்க செய்திக்கு பஞ்சமேன்.

துக்ளக், தினமலர் இல்லையென்றால் ராமாயணத்து கால குடியை எழுதலாம். சீதை கற்புக்கரசியா, இல்லையா என்று கதைக்கலாம். அதை எல்லாம் விட்டு விட்டு ஆரியரை கடவுள் மறுப்புக்கு அழைப்பது - எந்த விதத்திலும் பகுத்தறிவுக்கு அழகல்ல.

இனி கமலை ஏசும் ஆத்திகர்கள் பக்கம் பார்வையை திருப்புவோம். கமலஹாசன் பேசியதற்கு ஏன் இவ்வளவு டென்சனாக வேண்டும் என்று தெரியவில்லை. கடவுளை மறுத்த முதல் மனிதன் கமலும் இல்லை. கடைசி மனிதனாகவும் இருக்க போவதில்லை. இது ஒரு கருத்து மோதல். விமர்சிக்க கூடிய தகுதி, சம்பந்தப்பட்ட நபருக்கு உள்ளதா என்று மட்டும் பாருங்கள்.

வழக்கம் போல, பல பகுத்தறிவு தலைகளை போல கமலுக்கும் அந்த தகுதி இருக்கிறதா என்று பார்ப்போம். கமல் கடவுள் மீதான நம்பிக்கையை மட்டுமா இல்லை என்றார். "திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை" என்று கூட இரண்டு திருமணங்கள் முடித்த பிறகு தான் சொன்னார். அப்போதெல்லாம், கல்யாணமானவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, "கமல் எப்படி திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்லலாம்" என்று டென்சன் ஆனார்களா... இல்லையே.

திருமண பந்தம், அதன் மகத்துவம் பற்றி அவரது பகுத்தறிவுக்கு எட்டியது அவ்வளவு தான் என்று பெரிசு படுத்தாமல் விட்டு விட்டார்களே. அதை போல் இப்போதும் விட்டு விடுங்கள்.

ஆத்திகம், நாத்திகம் என்று ஒரு பகுத்தறிவுப்பூர்வமான விஷயம் பேசும் போதும் படுக்கையறை உணர்வென்றெல்லாம் பேசுகிறார் என்றால், அவரது சிந்தனை எதனை சுற்றியே உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும். அப்பேர்பட்டவர் சொன்னதற்காகவா குதிக்கிறிர்கள்

No comments:

Post a Comment