Wednesday, December 14, 2011

தெளிவான கேபிள் "டிவி' வசதி கிடைக்க மசோதா நிறைவேற்றம்


கேபிள், "டிவி'யை டிஜிட்டலைஸ் செய்யும் மசோதா, பார்லிமென்ட்டில் நேற்று நிறைவேறியது. "இதன்மூலம், வாடிக்கையாளர்கள், தாங்கள் விரும்பிய சேனல்களை, கட்டுபடியான விலையில் மிகவும் தெளிவாகப் பார்க்க முடியும்' என, அரசு தெரிவித்துள்ளது. லோக்சபாவில் நேற்று மத்திய தகவல் ஒலிப்பரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி பேசியதாவது: 

கேபிள், "டிவி' நெட்ஒர்க்கில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில், அவற்றை டிஜிட்டலைஸ் செய்யும் நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இத்துறையில், அமெரிக்கா, பிரிட்டன், கொரியா போன்ற நாடுகளுக்கு இணையான தொழில்நுட்ப வசதியும், தரமும் நமக்கு கிடைக்கும். இந்த மசோதாவால், கேபிள் ஆபரேட்டர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் எனக் கூறுவதை ஏற்க முடியாது. "டிவி' பார்வையாளர்களின் நலன் கருதியே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விலை குறையும்செட் ஆப் பாக்ஸ்களின் விலை இனி குறையும். பார்வையாளர்கள், மொத்த சேனல்களுக்கும் கட்டணம் செலுத்தி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. 
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமே, சேனல்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யும். முக்கியமாக, டி.ஆர்.பி., மதிப்புக்காக சேனல்கள் மோதிக்கொள்ளும் விஷயத்துக்கு, இனி முற்றுப் புள்ளி வைக்கப்படும்.

உரிமம் ரத்து செய்யலாம் :சர்ச்சைக்குரிய விஷயங்களை ஒளிபரப்பியதற்காக,  சேனல்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்போது, டி.ஆர்.பி.., விஷயத்தை, சேனல்கள் சுட்டிக் காட்டுகின்றன. இனிமேல், இந்த விவகாரத்தை சந்தாதாரர்களின் பட்டியலே முடிவு செய்யும். மேலும், விதிமுறைகளை மீறும் சேனல்களின் உரிமத்தை ரத்து செய்யும் அதிகாரமும் அரசுக்கு இனி கிடைக்கும். இந்த மசோதா, எந்த ஒரு தரப்புக்கும் எதிரானது அல்ல.

நான்கு கட்டம் : இது தொடர்பாக ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தமும், நியாயமானது தான். வரும் 2014 டிச., 31க்குள், டிஜிட்டலைஸ் செய்யும் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. முதலில் பெருநகரங்களில் துவங்கப்படும் இந்தத் திட்டம், நான்கு கட்டங்களாக நிறைவேற்றப்படும்.

வாடிக்கையாளர் வசதி :வாடிக்கையாளர்கள், தாங்கள் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து கொள்ளும் வசதி, இதன் மூலம் கிடைக்கும். கேபிள் ஆபரேட்டர்கள், டி.ஆர்.பி., தர வரிசையை சார்ந்து இருக்கும் நடைமுறையை நீக்குவதுடன், வெளிப்படையான போக்குக்கும் வழி வகுக்கும். இவ்வாறு அம்பிகா சோனி பேசினார்.

இதையடுத்து, கேபிள் "டிவி' டிஜிட்டலைஸ் மசோதா நிறைவேற்றப் பட்டது. முன்னதாக இந்த மசோதா குறித்து பேசிய பல்வேறு கட்சி எம்.பி.,க்களும் எது கட்டணச் சேனல் என்பதை ஆபரேட்டர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், விஞ்ஞான வளர்ச்சிக்காலத்திலும் சோதிடம், கைரேகை, போன்றவற்றை இன்னமும் பலர் ஒளிபரப்புவது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

ஒழுங்குபடுத்த ஆலோசனை : மத்திய அமைச்சர் அம்பிகா சோனி, லோக்சபாவில் நேற்று கேபிள் டிவி நெட்ஓர்க் (முறைப்படுத்துதல்) சட்டத் திருத்த மசோதா தொடர்பாக பேசியதாவது: கேபிள் "டிவி'யில் ஒளிபரப்பாகும் விஷயங்களை ஒழுங்குமுறைப் படுத்துவது குறித்து, விரைவில் அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கருத்து கேட்கப்படும். அனைத்து தரப்பினரிடமும் பெறும் ஆலோசனைகளை அடிப்படையாக வைத்து, இது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படும். குறிப்பிட்ட, "டிவி' சேனல்களில் ஒளிபரப்பாகும் சில விஷயங்கள், ஒரு அம்மா என்ற முறையிலும், பாட்டி என்ற முறையிலும், எனக்கு மிகவும் கவலையை ஏற்படுத்துகின்றன. "டிவி' சேனல்களில் ஒளிபரப்பாகும் விஷயங்களை கண்காணிப்பதற்கு, இரண்டு அடுக்கு, சுய ஒழுங்குமுறை திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜூனில் இருந்து, தற்போது வரை, "டிவி' சேனல்களில் ஒளிபரப்பாகும் விஷயங்கள் குறித்து, 300 புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக குறிப்பிட்ட சில சேனல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அம்பிகா சோனி கூறினார்.

No comments:

Post a Comment