Wednesday, December 14, 2011

நடிகைகளும்,நாடகமாடும் ஊடகங்களும்...

நடிகைகள் - தங்கள் குடும்ப பிரச்சனையாக இருந்தாலும் சரி, பாலியல் ரீதியாக சந்திக்கின்ற பிரச்சனையாக இருந்தாலும் சரி அல்லது வேறு பிரச்சனை, சர்ச்சை என்று எந்த ஒன்றில் மாட்டிக் கொண்டாலும் சரி, பிரஸ் மீட் வைப்பதற்கு தயங்குவதே இல்லை. பிரஸ் மீட் வைப்பது என்பது அவர்களது சொந்த விஷயம் தான். ஆனால் ஊடகங்கள் மூலம் அவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள்... மேலும் அவை மக்களின் பார்வைக்கு வரும்போது, அது பல நேரங்களில் கேலிக்குரிய விஷயங்களாக மாறி, "இவங்களுக்கு வேற வேலையே இல்லையா" என்பது மாதிரியான வார்த்தைகள் சொல்லத் தான் வழி வகுக்கும்.

என்ன நோக்கத்திற்காக பிரஸ் மீட் வைக்கிறார்களோ - அதன் நோக்கமே முற்றுமாக அழிந்துவிடும். அதற்காக மாத்திரம் ஊடகங்களை தவிர்க்க சொல்லவில்லை. கேலி பொருளாக, கேவல பொருளாக தாங்கள் மாற்றப்படுகிறோம் என்பதை உணராமல் இருக்கிறார்கள். நடிகைகளை - ஊடகங்கள் எப்படி பார்க்கிறது. நடிகைகள் குறித்த செய்திகளுக்கு - இணையங்களில் வருகிற கமெண்ட்ஸ் எப்படி உள்ளது. அருவருக்கத்தக்க ரீதியில். இணையதள பொறுப்பாளர்களின் மட்டுறுத்தலுக்கு பிறகு வருகிற கருத்துரை தான் அந்த லட்சணத்தில் உள்ளது.

உண்மையிலேயே கமெண்ட்ஸ் வருகிறதா அல்லது விறுவிறுப்புக்கு அவர்களே கமெண்ட்ஸ் போட்டு கொள்கிறார்களா? ஆக, எதற்காக அவர்கள் குறித்த செய்தி பயன்படுத்தப்படுகிறது. சீரியஸான நான்கு செய்திகளுக்கு நடுவே சற்றே சிரிக்க, இளைப்பாற... அவ்வளவு தான். இல்லையென்றால் ஆபாசப்படம் என்று தெரிந்தும் - நடிகை ரஞ்சிதா பற்றிய சீடி காட்சிகளை ஒளிபரப்பி இருப்பார்களா?

பலநேரங்களில் நடிகைகள் பற்றிய செய்திகளுக்கு சில ஊடகங்கள் நாக்கை தொங்க போட்டு கொண்டு அலைகிறது. ஊடகங்களுக்கு -இன்றைக்கு கூடங்குளம் முக்கியமா? சோனா முக்கியமா? என்றால் நக்கீரனின் வால்போஸ்டரை பார்த்து தெரிந்து கொள்ளலாம். சோனா தான் அலங்கரிக்கிறார். ஒருவரின் அந்தரங்க விஷயங்களில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் அதற்கு தாங்களாகவே அனுமதிக்கிறார்கள் நடிகைகள். அதையும் உணராமலே இருக்கிறார்கள்.

ஊடகங்களில் சில மாதங்களுக்கு முன் வனிதா விஜயகுமாரே நிறைந்திருந்தார். அப்பாவுக்கும், மகளுக்கும் இடையே நடக்கும் குடும்ப தகராறு. தமிழகத்தில் எந்த குடும்பத்திலும் -இம்மாதிரியான சண்டைகள் நடக்கவில்லையா? உடனே ப்ரஸ் மீட்... ஊடகங்கள் லைவ் ஷோவே நடத்தியது. குழந்தையை இழந்த ஒரு பெண்ணுக்கு நீதி கேட்டல்ல. விறுவிறுப்பான செய்திகளுக்காக மாத்திரம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

புவனேஸ்வரி, ரஞ்சிதா, வனிதா, சோனா... நடிகைகள் பிரஸ்மீட் வைக்க தயங்கப்போவதில்லை. ஆனால் நடிகைகள், ஊடகங்கள் தங்களுக்காக போராடுவதாக பெருமிதம் கொள்கிறார்கள். நடிகைகள் ஒன்றை உணர தவறுகிறார்கள். தன் பிரச்சனைகளை தீர்க்க ஊடகங்கள் எதற்கு என்பதை. வனிதாவை பற்றிய செய்தி போட்ட தினமலர் தான், அவரது தாயாரை (மஞ்சுளாவை) கிட்டத்தட்ட ................ தரத்துக்கு எழுதியது.

கல்கி என்றொரு பத்திரிகை ஊடகம் உள்ளது. எந்தெந்த செய்தியை வெளியிட வேண்டும் என்கிற சுயகட்டுப்பாடுடன் இருப்பார்கள். சிலர் "சொல்வதெல்லாம் வக்கிரம்" எழுத தொடங்குவார்கள். சிலர் "நடிகைகளின் கதை" வெளியிடுவார்கள். சில வருஷங்களுக்கு முன்னால், ஒரு பத்திரிகையில் (நாகரீகம் கருதி பெயர் சொல்லவில்லை) ஒரு கேள்வி-பதில் வந்திருந்தது. கேள்வி : நான் நடிகையாக என்ன செய்ய வேண்டும்? பதில் : சிலருடன் உடன்-படுக்கை செய்து கொள்ள வேண்டும். வக்ரத்தின் மொத்த வடிவமாக வந்து விழுந்த பதில்.

இப்படிப்பட்டவர்களின் ஊடகங்களுக்கு மத்தியிலா நீங்கள் நியாயம் கேட்கிறிர்கள். வெடகக்கேடு. "கணவனோடு சண்டையா? அதற்கான தீர்வை தான் தேட முனையவேண்டும்"... ஊடகங்கள் என்ன -வழக்கறிஞர் பணியையும் செய்கின்றதா? பாலியல் அத்துமீறலா? காவல்துறையிடம் புகார் கொடுப்பதோடு நிறுத்துவது தானே முறை. எதற்கு பிரஸ் மீட். ரஞ்சிதாவும் அந்த வேலை தான் செய்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் நீதியை எதிர்பார்க்கிறார்களா அல்லது அனுதாபத்தையா அல்லது வெற்று விளம்பரத்தையா. ஊடகங்கள் நீங்கள் சிரித்தாலும் படம் பிடிக்கும். அழுதாலும் படம் பிடிக்கும். நீங்கள் கீழே விழுந்தாலும் படம் பிடிக்கும். ஆனால் "நடிகை கீழே விழுந்தார்" என்று செய்தி போடாது. "நடிகை சறுக்கி விழுந்தார்" என்று தான் செய்தி போடும்.

சமீபத்தில் ஒரு நடிகை திருமணம் செய்து கொண்டார். சுவரொட்டியில் போடப்பட்ட செய்தி எப்படி இருந்தது தெரியுமா? "நாற்பது வயது நடிகை திருமணம்". அதற்கு முந்தின தினம் தமிழகத்தில் நடந்த எந்த முக்கிய நிகழ்வும் - அவர்களின் கண்ணுக்குப்படவில்லையா. தேவையற்றவைக்கெல்லாம் ஊடகங்களை பயன்படுத்தி - நியாயமான விஷயங்கள் கூட எடுபடாமல் போகும்.

No comments:

Post a Comment