Wednesday, December 14, 2011

ஏழாம் அறிவு தோல்விக்கான ஏழு காரணங்கள்

இணையத்தில் துவைத்து காய போடப்பட்ட பின் தான் ஏழாம் அறிவு படம் பார்த்தேன். கதை போன்ற தகவல்கள் நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. எனவே நேரடியே மற்ற விஷயங்களுக்கு...

எது நன்றாக இருந்தது?

நிச்சயம் ஒரு வித்யாசமான கதை களம். இத்தகைய வித்யாசமான கதைகள் வருவதே அரிது தான். அந்த வகையில் நிச்சயம் இந்த படம் வரவேற்கபட வேண்டிய ஒன்று. 

சூர்யாவின் அர்ப்பணிப்பு போதி தர்மரில் நன்கு தெரிகிறது. உடலை (6 packs!!) என்னமாய் வைத்திருக்கிறார் !! ஆனால் சர்க்கஸ் கலைஞராக முதல் பாடலில் மட்டும் தான் கொஞ்சமாக ஏதோ செய்கிறார். அதன் பின் டென்ட் அருகே தான் சூர்யாவை பார்க்க முடிகிறது சர்க்கஸ் உள்ளே அல்ல. 

ஸ்ருதி போட்டோக்களில் பார்க்கும் போது எனக்கு அவ்வளவாக ஈர்க்க வில்லை. அவரது அம்மா சரிகாவை பார்க்கிற மாதிரியே இருந்தது. ஆனால் படத்தில் நன்கு நடித்துள்ளார். சொல்ல போனால் படத்தில் அதிகம் பேசுவது இவர் தான். நடுவில் வரும் இரண்டு மணி நேரத்திற்கு சூர்யாவை விட இவருக்கே அதிக வாய்ப்பு. ஒரு சில இடங்களில் தமிழ் சற்று இடறினாலும் பெருமளவு சரியாக செய்துள்ளார். நல்லதோர் புது வரவு. 

யம்மா யம்மா, இன்னும் என்ன தோழா உள்ளிட்ட பாடல்களுக்காக ஹாரிஸ் ஜெயராஜுக்கு பாராட்டு. ஆனால் சில பாடல்கள் காப்பி அடித்தது ஏனோ? 

இனி படம் சறுக்கியது எங்கே என பார்ப்போம்: 

படம் துவங்கியதும் பின்னணியில் ஒலிக்கிற குரல் இருக்கிறதே ! எங்கிருந்து தான் பிடித்தார்களோ? "பீகாரில் வெள்ளம்" என முன்பெல்லாம் திரை அரங்குகளில் படம் துவங்கு முன் நியூஸ் ரீல் ஓட்டுவார்கள். அதே மாதிரி குரல் உள்ள நபரை கூட்டி வந்து, அதே தொனியில் பேச வைத்திருக்கிறார்கள். இது அந்த காலத்து டாக்குமெண்டரி பார்க்கும் உணர்வையே தருகிறது. போதி தர்மருக்காக உழைத்த அவ்வளவு உழைப்பையும் இந்த குரலால் கெடுத்து விட்டார்கள். அதிலும் அந்த குரல் அதே தொனியில் முதல் இருபது நிமிடமும் பேசி கொண்டே இருக்கிறது. 

போதி தர்மர் போர்ஷன் முதலில் வந்திருக்க கூடாது. அவர் பற்றி எதிர்பார்ப்பை ஏற்றி சென்று பின்னர், பிளாஷ் பேக் ஆக வந்திருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த பின்னணி குரல் சூர்யா அல்லது ஸ்ருதி பேசியிருக்கலாம். 

முதலில் தான் போதி தர்மர் போர்ஷன் வரணும் என்றால் கமல், பார்த்திபன் போன்ற நமக்கு தெரிந்த குரலில் யாரையாவது பேச வைத்திருக்கலாம். This is a big let down.

அடுத்து என்னை வெறுக்கடித்தது வில்லன் குறித்த பகுதிகள். அவர் ஒரு சில வினாடி பார்த்தாலே அனைவரும் அவரது கண்ட்ரோலில் வருவார்கள் என்பது மிக பெரிய ரீல். அதுவும் ஒரு நிமிடத்தில் பத்து பதினைந்து பேர் அவர் பார்த்ததுமே அவர் "நினைக்கிற மாதிரி" செய்வதெல்லாம் சாரி ரொம்ப ஓவர். ஹிப்னாடிசம் பற்றி அனைவரும் அறிந்த விஷயம் ஒருவரை ஹிப்னாடிஸ் செய்ய குறைந்தது ஓரிரு நிமிடங்கள் ஆகும் என்பது !! இப்படியா ஓவராக காண்பிப்பது?

க்ளைமாக்ஸ் தவிர்த்து ஹீரோ அரவிந்துக்கு (சூர்யா) பாட்டு பாடுவதையும் ஸ்ருதி வண்டி பின்னே உட்கார்ந்து போவதையும் தவிர வேறு எந்த வேலையும் இல்லை. படம் முழுதும் வில்லனின் டாமினேஷன் தான். இப்படி ஹீரோவை முக்கால் வாசி படம் டம்மி ஆக்கியது சாதாரண ரசிகனுக்கு எப்படி ஏற்புடையதாகும் என தெரிய வில்லை.

இறுதியாக படக்குழுவினர் இந்த படத்துக்கு தந்த பேட்டிகளும், ஓவர் பில்ட் அப்பும் தான் நிறைய எதிர் மறை விமர்சனங்கள் வர காரணமாக அமைந்து விட்டது. 

இவ்வளவு குறைகள் கூறினாலும் கூட ஏழாம் அறிவு தவிர்க்க பட வேண்டிய படம் அல்ல. வித்யாசமான கதை களம் என்பதால் ஒரு முறை பார்க்க கூடிய படம் என்று தான் சொல்ல வேண்டும். 

விகடனில் இந்த வருடத்தின் இரண்டாவது அதிக மதிப்பெண் பெற்ற படம் (48/100) ஏழாம் அறிவு என்பது ஒரு ஆச்சரியமான தகவல் !

No comments:

Post a Comment