Wednesday, December 7, 2011

கருணாநிதி குடும்பம் தயாரிக்கும் திரைப்படங்களைப் புறக்கணிப்பீர்

Photobucketஇன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகிய தாங்கள் இன்றைய நிலையில் காக்கை வன்னியனைப் போலவும் எட்டப்பனைப் போலவும் நடந்து கொள்கிறாரோ என்கிற ஐயப்பாடு உலகத் தமிழர்களாகிய எங்களுக்கு ஏற்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தர் கூறியதுபோல் 'நன்மை செய்யப் பிறந்த நீ, நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாதிரு' என்பதற்கு அமைய கருணாநிதி தனது கையாலாகத்தனத்தை வெளிக்காட்டும் விதமாக செந்தமிழன் சீமான் போன்ற தமிழ் உணர்வாளர்களைக் கட்டுப்படுத்த கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். 

ரோம் எரியும் போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனைப் போல் இலங்கைத் தமிழர்களும் இந்திய மீனவர்களும் ஒருசேர அன்றாடம் அழிக்கப்பட்டுவரும் நிலையில் தன்னைத்தானே உலகத்தமிழினத் தலைவர் என்று தம்பட்டமடித்துக் கொள்ளும் தாங்கள் செம்மொழி மாநாட்டுக் கேளிக்கையிலும் நித்தம் ஒரு பாராட்டு விழாக் குளியலிலும் மூழ்கி களியாட்டம் போட்டதை உலகத் தமிழினம் ஒருபோதும் மன்னிக்காது. ஒரு இலட்சம் ஈழத்தமிழர் கொல்லப்பட்டதற்கு உங்களால் செம்மொழி மாநாட்டில் ஒரு இரங்கல் தீர்மானம்கூட போட முடியவில்லையா?

உலகில் 10 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்தும் 2009, முள்ளிவாய்க்கால் போரில் ஒரு இலட்சம் ஈழத்தமிழர்களாகிய நாங்கள் இனப்படுகொலைக்கு ஆளானதை யாராலும் தடுக்க முடியவில்லை. சராசரித் தமிழனுக்குச் சர்வதேச அரசியல் சதுரங்க ஆட்டத்தின் விளையாட்டு நுட்பங்கள் எதுவும் புரியவில்லை. யானையைப் பார்த்த குருடர்களின் கற்பனையைப் போல சர்வதேசங்களுக்கும் எங்களின் பிரச்சினை அவரவர்க்கும் ஒருவிதமாகத் தோன்றி, எங்களின் இலட்சியமான தாயகக் கனவு மீண்டும் முறியடிக்கப்பட்டது.

காங்கோ, சூடான், ருவாண்டா, காசா போன்ற பகுதிகளில் நடந்த இனப்படுகொலைகளைக் கண்டிக்கும் இந்தியா தனது காலடியில் அப்பாவி ஈழத்தமிழர்கள் இனஅழிப்புக்கு ஆளானதைக் கண்டிக்க மனமில்லை. தமிழையும், தமிழினத்தையும் காக்க உலகச் செம்மொழி மாநாடு நடத்துவதாகக் கூறிய உங்களால் (தமிழக முதல்வர் கருணாநிதியால்) ஈழத்தமிழரின் இனப்படுகொலையைக் கண்டிக்கத் துணிவு இல்லாவிட்டாலும், இலங்கைத் தீவு ஓரு இனப்படுகொலை; செய்த நாடாக உலகநாடுகள் பலவும் தற்போது அங்கீகரித்துவரும் நிலையிலும், உங்களுக்கு அதை ஏற்றுக்கொள்ளும் மனிதாபிமானம் ஏன் இல்லாமல் போனது?. சிங்கள அதிபர் ராஜபக்சேவும் அவரது இராணுவமும் செய்த போர்க்குற்றத்தை ஆராய ஐ.நா.மன்றம் நியமித்த மர்சூகி தரூஸ்மன் தலைமையிலான மதியுரைக் குழுபற்றி ஆதரிக்கின்றீர்களா, எதிர்க்கின்றீர்களா? என்பது பற்றி நீங்கள் இதுவரை வாய் திறக்கவில்லை. காரணம் கேட்டால், காங்கிரஸ் தயவில் ஆட்சிக்கட்டிலில் உள்ள என்னால், காங்கிரசின் தமிழின விரோதப் போக்கைத் தட்டிக்கேட்க இயலாது என்று போலிச் சமாதானம் கூறுவீர்கள்.

உணர்வுள்ள பிற அரசியல் கட்சிகள் காங்கிரசின் தமிழின விரோதச் செயல்களைத் தட்டிக்கேட்டு அம்பலப்படுத்தினால் கூட அவர்களையும் பிடித்து தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து விடுவது நியாயமா?. நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளும் அளவிற்கு அப்படி என்ன தவறாகப் பேசினார்? 

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை பற்றி ஆலோசனை வழங்க ஐ.நா.மன்றம் நியமித்த மதியுரைக் குழவைப் பற்றிய மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாட்டை கூறுமாறு கேட்டதற்காகவா? அல்லது பல ஆண்டுகளாகச் சிங்களக் கடற்படையின் அட்டூழியத்தினால் நூற்றுக்கணக்கானத் தமிழக மீனவர்கள் மடிந்து கொண்டிருப்பதை மௌனமாக பார்த்துக்கொண்டு, கடிதம் மட்டும் எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டு, வெகுண்டு எழுந்து, இனியும் ஒரு தமிழக மீனவன் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டான் என்றால், தமிழகத்தில் வாழும் ஒரு சிங்கள மாணவனும் உயிருடன் திரும்ப மாட்டான் என்று எச்சரிக்கைச் செய்ததற்காகவா? எதற்காக துடிதுடித்து, பதைபதைத்து சீமானைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தீர்கள். 

இரண்டு இனத்திற்குள் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் பேசியதாக இந்திய நாட்டின் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் போட்டதென்பது, சிங்கள இனம் உங்களுக்கு உறவு அல்லவே! தமிழர்கள் உங்களின் தொப்புள்கொடி உறவல்லவா? மற்றொரு நாட்டில் வாழும் ஒரு இனத்தை, அது நமது இந்திய மீனவர்களைக் கொன்று குவிப்பதைக் கண்டு வெகுண்டு எழுந்து அந்தச் சிங்கள இனத்திற்கு எதிராகப் பேசுவது எந்த வகையில் இந்திய இறையாண்மைக்கு எதிரானது? 1990களில் நீங்கள் கூட தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டால் தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும்! என்று ஆவேசமாகப் பேசியது எல்லாம் எங்களுக்கு இன்னும் நினைவிருக்கிறதே.

சிங்களர்களுக்கு வக்காளத்து வாங்கி, சீமானைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளிய நீங்கள், முள்ளிவாய்க்கால் போரில் சிறு குழந்தைகளும், பெண்களும், முதியோர்களும் என பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பீரங்கிகளாலும் விமானத்தினாலும் சுற்றி வளைத்து சிங்களர்களால் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, இப்போது சிங்களர்களுக்காகக் கொதித்த உங்களது இரத்தம் ஏன் தமிழர்களுக்காக அன்று கொதிக்கவில்லை? மத்திய அரசின் கொள்கைதான் எங்களது கொள்கை என்று கூறும் நீங்கள், மத்திய அரசான காங்கிரசின் ஒட்டுமொத்த தமிழின விரோதப் போக்கை, பதவியைக் காப்பாற்றிக்கொள்ள நீங்கள் ஆதரிக்கலாம். ஆனால் உணர்வுள்ள தமிழர்கள் எப்படி ஆதரிக்க முடியும்? ஈழத்தமிழினத்தையும், தமிழக மீனவர்களையும் ஒட்டுமொத்தமாக அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படும் சிங்கள அரசை ஆதரிக்கும் மத்திய அரசின் அயலுறவுக் கொள்கைதான் தங்களதும், காங்கிரசினதுமான கொள்கையா?

இலங்கைக்கு ஒருபக்கம் ஆயதத் தளவாடங்களையும், உளவு வேலைகளையும் செய்து கொண்டே, போர் நிறுத்தம் கோரிப் போராடிக் கொண்டிருந்த தமிழர்களை ஏய்க்க, நீங்களும் போர் நிறுத்த உண்ணாவிரதம் மேற்கொண்டீர்கள். அப்போது உங்களது ஆதரவால் ஆட்சி செய்து கொண்டிருந்த சோனியாவின் நடுவண் அரசுக்கு நெருக்கடி கொடுத்திருந்தால், ஈழத்தில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி ஒரு இனப்படுகொலையை தடுத்து ஒரு இலட்சத்திற்கும் மேலான எமது தமிழ் உறவுகளைக் காப்பாற்றியிருக்கலாம். பண்டாரவன்னியன் கதை எழுதினால் போதுமா? எதிரிகளைத் துணிவுடன் எதிர்க்கும் அவரது வீரத்தில் சிறிதளவேனும் உங்களிடம் காணமுடியவில்லையே ஏன்? முள்ளிவாய்க்கால் போரில் கடைசி இரண்டு தினங்களில் 50,000 தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள் என மேலைநாடுகளின் செய்தி நாளேடுகள் ஆதாரபூர்வமாகச் செய்திகளை வெளியிட்டபோது, தங்களது வாரிசுகளின் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சி 20,000 தமிழர்கள் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள் எனச் செய்தி வெளியிட்டது. 'தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப்போட்டாலும், கட்டுமரமாய் மிதந்து தமிழர்களைக் காப்பேன்!' என்று நீங்கள் எழுதியபடி நடந்து காட்டியிருந்தால் உலகத் தமிழர்கள் எல்லாம் உங்களைப் போற்றி வணங்கி இருப்பார்கள்!

போர் முடீந்த பிறகு விழித்துக்கொண்ட மேற்குலக நாடுகளின் முயற்சியால், ஐ.நா.வின் மனிதஉரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்களின் ஆதரவோடு இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை நடத்த கடந்த ஆண்டு கொண்டு வந்த தீர்மானத்தைக்கூட இந்தியா தனது நட்பு நாடுகளைச் சேர்த்துக் கொண்டு முறியடித்தன. அப்போதுகூட தாங்கள், மத்திய அரசின் தமிழருக்கெதிரான போக்கை கண்டிக்காதது மட்டுமன்றி, ஒருபடி மேலேபோய், தமிழகத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி சர்வதேச அளவில், இராஜபக்சேவுக்கு வக்காலத்து வாங்கியது எந்த வகையில் தமிழினத் தலைவரெனத் தாங்கள் கூறிக்கொள்வது நியாயம்? தன் கைவிரலால் தனது கண்ணைக் குத்திக்கொள்வது போல், தமிழினத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவது துரோகத்தனமாகாதா?

போர் முடிந்த பிறகும், முள்வேலி முகாம்களில் சர்வதேச மனித உரிமைச்சட்டத்திற்குப் புறம்பாக அடைக்கப்பட்ட 3 இலட்சம் அப்பாவி ஈழத்தமிழர்களை, 4 மாதங்களில் அவரவர் வசிப்பிடங்களில், உரிய நிவாரண உதவிகளோடு மீள்குடியமர்த்தம் செய்வோம் என்று ராஜபக்சே இந்தியாவுக்கும், ஐ.நா.வுக்கும் அளித்த வாக்குறுதியைக்கூட இன்றுவரை நிறைவேற்றவில்லை. இன்றுவரை, 80,000 க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் முள்வேலி திறந்தவெளி சிறையில் அடிப்படைவசதிகளின்றியும், சிங்களர்களால் அன்றாடம் தங்களது கற்புகளைப் பறிக்கொடுத்தும் அல்லல்பட்டு வருகின்றனர். 

விசாரணை என்ற பெயரில் 20,000 இளைஞர்களும் சிறுவர்களும் சிங்களர்களின் கைகளில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களில் பாதிப்பேர் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை. விசாரணை என்ற பெயரில் பெண் கைதிகளைத் தனியே அழைத்து சென்று கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டு வருகின்றனர். வன்னிப் பகுதியில் சுமார் 1,60,000 க்கும் மேற்பட்ட வீடுகள் குண்டுவீச்சுகளால் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா.மதிப்பீட்டுக்குழு தெரிவித்துள்ளது. இத்தனை பேரழிவுகளும் எங்களுக்கு வரக் காரணம், நாங்கள் நாதியற்ற தமிழினம் என்பதால், ஒருவகையில் எங்களைக் கொன்றது எங்களின் தாய்மொழி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது?

இத்தகைய பேரழிவுகளை அன்றாடம் ஈழத்தமிழர்கள் சந்தித்து வரும்போது, சர்வதேச அளவில் இராஜபக்சேவிற்கு நல்லபெயர் வாங்கித்தருவதற்கான உங்களது அயராத முயற்சியால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் வேலிக்கு ஓணான் சாட்சி கூறுவதுபோல், சிங்கள அரசு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக உலகத்தினர் காதுகளில் பூ சுற்றிப் பார்த்தனர். பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளைப் பார்வையிட, சர்வதேச பத்திரிகைகளையோ, தொலைக்காட்சிகளையோ, சர்வதேச மனித உரிமை அமைப்பினரையோ இலங்கை அரசு அனுமதிக்க வேண்டுமென்று நீங்களோ, இந்தியாவோ இதுவரை ஒருவார்த்தை இலங்கையிடம் கேட்டதுண்டா? இலங்கைத் தமிழரின் அரசியலில் ஒரு எதிரானப் பாதையை தாங்களும் மத்திய அரசும் எடுத்ததற்குக் காரணம் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், இனஅழிப்பு ஆகிய படுபாதகச் செயல்களில் நீங்களும் மத்திய அரசும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்காளிகளாக இருக்க வாய்ப்புகள் உள்ளன என்று அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். காந்தியடிகளைப் பெற்ற இந்திய தேசம்தான் இன்றைக்கு முசோலினி வழியில் செயல்பட்டுக் கொண்டிருப்பதை மனிதகுலம் ஒருபோதும் மன்னிக்காது.

இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணப்பணிகள் மேற்கொள்ள முன்னர் ரூ.500 கோடி, தற்போது ரூ.1000 கோடி எனக் கொலைவெறியர்களுக்கே கூலி தந்து கொண்டிருக்கிறீர்களே தவிர, அந்த நிவாரணத் தொகை தமிழர்களுக்காகச் செலவிடப்பட்டனவா? என்று சர்வதேசத் தொண்டு நிறுவனங்களையாவது அனுப்பி கண்காணித்தீர்களா? இப்போதுகூட உங்கள் வேண்டுகோளை ஏற்று இலங்கைக்கு அனுப்பப்படும் சிறப்புத் தூதர்குழு முன்னர் போர்நிறுத்தம் செய்யச்சென்ற இந்தியாவின் முயற்சிபோல் தேர்தலுக்காக நடத்தப்படும் ஓரங்க நாடகம்தானே தவிர, தமிழருக்கு எவ்விதப் பயனையும் தரப்போவதில்லை. 

ஈழத்தமிழருக்குத்தான் இந்தியா துரோகம் செய்கிறது. இந்தியத் தமிழரான தமிழக மீனவர்களை இதுவரை 500க்கும் மேற்பட்டோரைச் சிங்கள கடற்படை சுட்டும், அடித்தும் கொன்று வருகிறதே. அதைக்கூட தட்டிக் கேட்காமல், அதற்கும் வெறும் கடிதங்களை மட்டும் அனுப்பி வந்தால், இதுவா தமிழரைக் காப்பாற்றும் இலட்சணம்? கடைசியாகச் சுட்டுக் கொல்லப்பட்ட செல்லப்பனுக்கு ரூ.3 இலட்சம் நிவாரண உதவி வழங்கினீர்கள். அரசு ஊழியர் ஊதிய உயர்வை முன்தேதியிட்டு வழங்கும் உங்கள் அரசு, இதற்குமுன் கொல்லப்பட்ட பிற மீனவர் குடும்பத்திற்கும் முன்தேதியிட்டு ஏன் ரூ.3 இலட்சம் நிவாரண உதவி வழங்கக்கூடாது? இரயில் விபத்தில் இறந்து போன குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய இந்திய அரசு, சிங்களக் கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பத்தாருக்கு வேலைவாய்ப்புத் தரவேண்டுமென்று கேட்டால்கூடவா உங்களது ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள்?

பிறமாநிலத்திலுள்ள முதலமைச்சர்கள், தங்கள் மாநிலத்தில் மட்டுமன்றி, உலகில் பிறநாடுகளில் தங்கள் இனத்தவர் பாதிக்கப்பட்டால், கூட்டணி வைத்து இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்திய அரசைத் துணிவுடன் தட்டிக்கேட்டு உரிய நிவாரணம் தேடும்போது, தாங்கள் மட்டும் வெறும் கடிதம் விடு தூது நடத்திக்கொண்டு, காவிரி நீர், முல்லைப் பெரியாறு, பாலாற்று நீர், கச்சத் தீவு போன்ற தமிழர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக காவு கொடுத்துக் கொண்டு தமிழர்களைக் கண்ணீரும், செந்நீரும் சிந்திக்கொண்டிருக்க விடலாமா? எல்லை தாண்டி வந்தாலும் பிறநாட்டு மீனவரை இந்தியா உட்பட எந்தநாடும் சுட்டுக்கொன்ற வரலாறு உலகில் இல்லை. ஆனால் நட்பு நாடாகக் கருதப்படும் இலங்கை மட்டும்தான் தமிழக மீனவரைச் சுட்டுக் கொல்கிறது. இதைக்கூடவா நீங்கள் தட்டிக்கேட்கக் கூடாது? தட்டிக்கேட்ட சீமானையாவது தாங்கள் விட்டுவைக்கக் கூடாதா? சீமான் என்றால் உங்களுக்குச் சிம்மசொப்பனமா?

வாக்களித்த மீனவத் தமிழரையும் காப்பாற்ற உங்களால் முடியவில்லை. வாழ்விழந்த ஈழத்தமிழருக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்க இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை நடைபெறுவதற்கு ஆதரவாகக் குரலெழுப்பவும் உங்களால் முடியவில்லை. ஆனால் உலகெங்கும் வாழும் தமிழர்கள் உங்களைத் தலைவராக மதித்துப் போற்ற வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள். தமிழர் வாழ்வு எங்கு, எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, உங்கள் குடும்பத்தார் எடுக்கும் படங்களைப் பார்த்து உங்கள் பெட்டிகளை நாங்கள் டாலர்களாலும், பவுண்டுகளாலும் நிரப்பிக் கொண்டிருக்க வேண்டுமா என்கிற சிந்தனை அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர்உள்ளிட்ட புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களிடம் உருவாகி, உறுதிபெற்று வருகிறது. எங்களுக்காக ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை இரத்து செய்து தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டும்போது, ஈழத்தமிழர்களாகிய நாங்கள் மட்டும் தமிழர்களைக் காக்க மனமில்லாத தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பத்தார் வெளியிடும் திரைப்படங்கள் அனைத்தையும் தமிழர்கள் யாரும் பார்க்காமல் புறக்கணிக்கும் இயக்கம் நடத்த முடிவு செய்து விட்டோம். இதுகூட ஒருவகையில் அண்ணல் காந்தி காட்டிய இந்திய வழிமுறைதான். அடிமைப்படுத்தியோரை வெளியேற்ற அன்று காந்தி நடத்தியது அந்நியத் துணிகள் எரிப்புப் போராட்டம்! எம்மினத்தைக் கொத்தடிமைகளாக்க விரும்புவோரை எதிர்க்க உலகத்தமிழர்கள் இன்று நடத்தப்போவது 'கருணாநிதி குடும்பத் திரைப்பட புறக்கணிப்புப் போராட்டம்!'

உலகெங்கும் வாழும் தமிழர்கள் நமது ஒற்றுமையின் வலிமையை எடுத்துக்காட்ட இந்த இனமானம் காக்கும் அறப்போருக்கு ஒத்துழைப்பு தந்து வெற்றிபெறச் செய்திட வேண்டுகிறோம். அத்துடன், ஐ.நா.மன்றம் மேற்கொள்ளும் இலங்கைமீதான போர்க்குற்ற விசாரணைக்கான மதியுரைக் குழுவை மட்டுமே நம்பிக்கொண்டிராமல், ஈழத்தமிழின படுகொலை பற்றிய ஆதார ஆவணங்களைத் தொகுத்து தமிழர்கள் வாழும் அந்தந்ந நாட்டின் நீதிமன்றங்களில் இராஜபக்சே கும்பல் மீதும், அவர்களுக்குத் துணைபோன சக்திகள்மீதும் போர்க்குற்ற விசாரணை வழக்குகள் தொடுக்க முன்வர வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment