Thursday, December 15, 2011

பெண்கள் மேலே மையல் உண்டு. நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்

Mohandoss's new status message - 

2:34 PM me: இன்னிக்கு பீச்சிற்குப் போலாமா?
aeswari: ம்ஹூம் வேண்டாம்
me: ஏன்?
2:36 PM ஏன்னு கேட்டேன்?
2:45 PM உனக்கு என்னையெல்லாம் காதலிக்கிறதே பெரிசின்னு நினைப்பு 
இல்லையா?
aeswari: உன்னைக் காதலிக்கிறேன்னு எப்ப சொன்னேன்!
நீதான் அப்படி சொல்லிக்கிட்டிருக்கிற
2:50 PM r u thr?
2:52 PM ???
2:56 PM Okay I am leaving bye

காதல் உயிரை அலைக்கழிக்கும் ரகசியம் தெரிந்தும் திரும்பவும் விழுவதும் எழுவதுமாய் எத்தனையோ முறை பெண்களின் மீதான மையலில் நிலை தடுமாறியிருந்தால் பித்தம் கொள்ள வைத்தது நீ மட்டும் தான். ஒற்றை ரோஜாப்பூவை கைகளில் ஏந்திக் கொள்வதில் வரும் பெருமையாய் நினைத்து காதல் விளையாடிருக்கிறேன், பெருமைக்கான தகுதியை பெற்றுத்தருவது காதலின் வேலையில்லை என்று உணரவைத்தவள் நீ. கைகோர்த்து கடற்கரையில் நடப்பதோ, முதுகோடு மார் உரசும் பயணங்களோ காதல் இல்லை என்ற உன் தத்துவங்கள் கேட்கும் பொழுதும், நீ அருகில் இல்லாமல் இருக்கும் பொழுதும் நன்றாகத்தான் இருக்கின்றன. உள்ளத்தின் மேல் மட்டும் காதல் என்பது கட்டமைக்கப்பட்ட பொய்யாகத்தான் இருக்கமுடியும் என்று ஒப்புக்கொள்ளும் உன்னால், உன் உடல் மேல் எனக்கிருப்பது காமம் அல்ல அதுவும் காதலே என்று ஏன் புரியவில்லை.

March 3, 2008

4.11 PM raja: hi
me: hi dude :)
raja: நான் அகிலம் 
4:13 PM me: சொல்லு
raja: call me
me: சரி

“சொல்லு என்ன விஷயம்”
எங்களுக்கிடையில் அப்படியொரு உரையாடல் நடக்கவேயில்லாதது போல் அவளால் பேசமுடிந்திருந்தது, “என் தங்கச்சிக்கு புனேல ஒரு இன்டர்வியூ இருக்கு! யாராவது கூட்டிக்கிட்டுப்போகணும்”
“ஏன் சுத்தி வளைக்குற நேரா என்னைக் கூட்டிக்கிட்டு போகச்சொல்லேன்”
கனத்த மௌனம் ஒற்றை வார்த்தையில் முடிந்தது “சரி” தொலைபேசியை அணைத்தேன்.

March 12, 2008

10:15 AM aeswari: thanks
me: சரி
11:36 AM aeswari: un status message kEvalamaa irukku!
me: அப்படியா?
aeswari: illaiyaa
me: மாத்தணுங்கிறியா?
aeswari: athu un ishtam
11.40 AM me: //நெஞ்சமெல்லாம் காதல் - தேகம் எல்லாம் காமம் 
- உண்மை சொன்னால் என்னை - நேசிப்பாயா//
இது எப்படியிருக்கு?
11.45 AM me: இருக்கியா?
aeswari: hmm
innikku freeya irukkiyaa?
me: இருக்கேன் என்ன விஷயம்
aeswari: oru vishayam pesanum
me: வரவா?
aeswari: hmm
4.30 PM me: கிளம்பிக்கிட்டிருக்கேன்
4.32 PM aeswari: hmm

உன்னைவிட்டு இரண்டடி விலகியிருக்கும் சமயங்களில் ‘ஏன் நடிக்கிற இயல்பாய் இரேன்!’ என்றாய் இயல்பை இயல்பாய் இருக்கமுடியாமல் தான் விலகியிருந்தேன் என்பது உனக்குத் தெரியாததா! வேண்டுமென்றே சாலையோர சுடிதாரை கவனிக்கும் உச்சுக்கொட்டும் ஜொள்ளுவடிக்கும் என் சீண்டல்களைப் பொருட்படுத்தாமல் விலகியிருக்க முடிந்திருக்கிறது உன்னால், கவனிக்காதது போலவே கண்டுகொள்ளாதது போலவோ இருந்துவிடும் உனக்கு நான் முந்தைய இரவு ஒத்திகை பார்த்த உரையாடல்கள் கனவோடு கரைந்து போவது தெரிந்திருக்கப் போவதில்லை. 

“முத தடவை நான் உன்கிட்ட காதல் சொன்னப்ப எப்படியிருந்தது”

எங்களுக்கிடையில் அமர்ந்திருந்த மௌனத்தை விரட்டும் ஆயுதமாய் கேள்வியொன்றைப் பொறுத்தி எய்த அம்பு அவளை அவ்வளவு சீண்டியதாகத் தெரியவில்லை. என் கேள்விக்கான அவள் பதிலைப் பற்றிய கற்பனைகளைச் சிதைத்து இந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கவே கூடாது என்று நினைக்க வைக்கும் அளவிற்கு பதில் இருந்தது.

“கோபமா வந்ததுச்சு, கால்ல போட்டிருக்கிறதைக் கழட்டி ஒன்னு வைக்கணும்னு நினைச்சேன்”
இதைச் சொல்லத்தான் அத்தனை யோசித்தாயா? இல்லை இப்படி நீ போடும் நாடகங்களை நான் நம்பிவிடுவதாய் நினைக்கிறாயா?

“அப்ப நீ என்னைக் காதலிக்கவே இல்லேங்கிறியா?”

எனக்காக இல்லாவிட்டாலும் அவள் தங்கையை பத்திரமாய் புனே அழைத்துச் சென்று வந்ததால் நன்றிக்கடனாய் கடற்கரையில் என் அருகில் அமர்ந்திருந்தாள். அருகில் என்றால் நானாய் உருவாக்கிய இரண்டடி தாண்டி சுண்டல்காரன் இடைபுகுந்து கூவிச் செல்லும் தொலைவில்.

“இல்லை”

“அப்ப நமக்குள்ள இப்ப நடக்கிறது”

இதற்கு அவளுடன் சாட்டிங்கில் உரையாடிவிடலாம் என்று நினைக்கும் அளவிற்கு மௌனம் அவள் மேல் பரவியிருந்தது. வார்த்தைகளைக் கோர்த்துக் கொண்டிருக்கலாம், கொட்டுவதற்கான அமிலத்தை அவளது உதடுகள் உருவாக்கிக் கொண்டிருக்கலாம், அங்கிருந்து விலகினால் வீட்டிற்குச் செல்ல எந்த பேருந்தை பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம்...

“நீ கன்ஸிடரேஷனில் இருக்கேங்கிறது தான் அதுக்கு அர்த்தம்.” அவள் அன்று வேதாளத்தை மட்டுமல்ல தன்னுடைய தேவதையையும் கடற்கரைக்கு அழைத்து வந்திருக்க வேண்டும். நான் வேதாளத்தை கழட்டிவிடவில்லையே?

“இன்னும் எத்தனை பேர் இருக்காங்க உன் கன்ஸிடரேஷனில்...?” தேவையில்லாததுதான், தவிர்த்திருக்கக் கூடியது தான், ஆனால் எங்கள் உறவில் முகமூடி ஒன்று என் முகத்தில் மாட்டப்பட்டு விடக்கூடாதென்பதில் நான் மிகவும் தெளிவாகயிருந்தேன். அவளை அத்தனை பாதிக்கவில்லை என் கேள்வி,

“நீ டைரி எழுதுவதானே?”

பேச்சை மாற்ற விரும்பினாளா தெரியாது, என் கேள்வி அவளுக்கு அயர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும் என்று ஊகித்தேன்.

“சாரி!”

“அது பரவாயில்லை சொல்லு...?”

“ஏன் கேக்குற?” என் பதில் கேள்விக்கு அவள் பதில் சொல்லப்போவதில்லை என்பதாய் அவள், நான் அவளிடம் கேள்வியொன்றையே கேட்காதது போல் உட்கார்ந்திருந்தாள். “எழுதுவேன்”

“எனக்கு உன் டைரி வேணும். எல்லா வருஷ டைரியும் இருந்தா கொடு இல்லாட்டி கடைசி மூணு வருஷ டைரி வேணும்.”

என்ன தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறாய், என்னிடம் நேரடியாய் கிடைக்காமல் அப்படியென்ன உனக்கு என் டைரியில் கிடைத்துவிடப் போகிறது. 

“எதுக்கு?”

“உன்னைக் காதலிக்க” அத்தனை இனிப்பான ஒன்றை இத்தனை கசப்புணர்ச்சியுடன் சொல்ல எங்கே படித்தாய், I love you இந்த மூன்று வார்த்தைகளில் என்ன இருக்கிறது என்று எத்தனையோ நாள் நினைத்திருக்கிறேன் ஆனால் இன்று உன்னைவிடவும் உன் வாய் உச்சரிக்கப்போகும் அந்த மூன்று வார்த்தைகளுக்கும் உன் கை தட்டப்போகும் அந்த மூன்று வார்த்தைகளுக்குத் தான் மதிப்பு அதிகமாய் இருக்கிறது என்பது எனக்கே கூட கொஞ்சம் ஆச்சர்யம் தான்.

10.10.2007
அகிலாவை வழியில் வைத்துப் பார்த்தேன், நல்லவேளை திருப்பிக்கொண்டு போகாமல் நின்று பேசினாள் ஹாஹா.

அவளும் அவளோட ட்ரெஸ்ஸிங் சென்ஸும் லூஸா ஒரு சுடிதார் போட்டுக்கொண்டால் அவள் உடலைப்பற்றிய உணர்வில்லாமல் போய்விடுமா?

சுடிதாரைத்தாண்டியும் அவள் உடலை உணர்ந்து கொண்டிருந்தேன், டைட் ஜீன்ஸும் டீஷர்ட்டும் அவளுக்கு எவ்வளவு பொறுத்தமாக இருக்கும் என்ற கற்பனையுடன். ஹாஹா.

March 15, 2008 மாலை என் அலுவலக கஃப்டேரியாவில்

“என்ன இது” முகத்தில் வீசியெறிந்த டைரி பக்கத்தை இன்னொருமுறை படித்துப் பார்த்துவிட்டு.

“ஒட்டுமொத்த டைரியில் உனக்கு இதுதான் தெரிஞ்சிதா?” மெல்லக் கேட்டேன்.
மௌனம், பேரர் கொண்டு வந்து வைத்த ஜூஸ் முழுவதையும் நான் குடித்து முடிக்கும் வரை மௌனம். அவளுடைய வார்த்தைகளை விட மௌனம் என்னை அலைக்கழிக்கக்கூடியது அவளுக்கும் அது தெரிந்து தானிருக்கும்.

“எனக்கு பயமாய் இருக்கு, என் உடம்பு மேல இருக்கிற க்ரேஸ் போனதுக்கு அப்புறம் நீ என்ன செய்வேன்னு நினைச்சா... இன்னிக்கு என் மேல் இருக்கிற க்ரேஸ் எல்லாம் நான் மறைச்சு வைச்சிருக்கிறதால - அப்படி நீ நினைக்கிறதால - நானும் மத்த பொண்ணுங்க மாதிரி ஹாய் பாய்னு பழகியிருந்தா என்கிட்டயும் ‘மையல்’ தான் இருந்துச்சு ‘பித்தம்’ இல்லன்னு நீ போய்டுவ வேற ஒருத்திய பார்த்துக்கிட்டு இல்லையா?”

ஒரு ஸ்டேட்டஸ் மெஸேஜ் இத்தனை பாடுபடுத்தும் என்று நான் நினைத்திருக்கவில்லை அவளுடைய மௌனத்தை நான் எடுத்துக் கொண்டேன்,

“என் உடம்பு மேல உனக்கு இப்ப இருக்கிற க்ரேஸை என்னால் வாழ்நாள் முழுக்க காப்பாத்திக்க முடியாது. அது யாராலையும் முடியும்னு நினைக்கலை.” எத்தனை நாட்களாய் இந்த விஷயத்தை மனதில் போட்டுக் கொண்டிருக்கிறாள் என்று தெரியவில்லை. 

“என் தங்கச்சி கூடயிருந்தப்பையும் நீ இப்படித்தானே நினைச்சிருப்ப?”

“அகிலா இது ஓவர், நீ பேசுறது அநாகரிகமாயிருக்கு.”

“ஆமாவா இல்லையா சொல்லு?”

“இல்லை, இப்ப என்ன தான்டி உன் பிரச்சனை, டைரியிலேர்ந்து ஒரு பக்கத்தை கிழிச்சிட்டு வந்து ஏன் என்னை டார்ச்சர் பண்ணுற. மீதி பக்கமெல்லாம் உன் மனசைப் பத்தி கவலைப்பட்டிருக்கேங்கிறதாலையா? இல்லை இந்த ஒரு பக்கத்தை கிழிச்சிட்டு என்னால் டைரியை உன்கிட்ட கொடுத்திருக்க முடியாதுன்னு நினைக்கிறியா?” நாங்கள் இருப்பது காஃபிடேரியா என்ற உணர்வில் மெதுவாய்க் கத்தினேன்.

“உனக்கு என்னை விட என் உடம்பு மேல தான காதல் அதிகம்?” வைரமுத்துவின் வரிகளை உணரும் பொழுது இருந்த துள்ளல் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் பொழுது இல்லை.

“ஆமாம்” நான் சொல்லி முடித்திருக்கவில்லை அதுவரை குடிக்கப்படாமல் இருந்த அவள் பக்கத்து ஜூஸ் முழுவதும் என்மேல் ஊற்றிவிட்டு அங்கிருந்து போய்விட்டாள்.
நான் ஸ்டேட்டஸ் மெஸேஜை மாற்றிவிட்டு காத்திருக்கிறேன்.

No comments:

Post a Comment