Thursday, December 15, 2011

பெட்ரோல் விலை 65 பைசா உயர்த்தப்படும் ரூபாயின் மதிப்பு சரிந்ததால்!

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவடைந்துள்ளதையடுத்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் செலவும் அதிகரித்துள்ளது. இதையடுத்து பெட்ரோல் விலை இன்றிரவு முதல் லிட்டருக்கு 65 பைசா வரை உயர்தப்படவுள்ளது.

தமிழகத்தில் வரியையும் சேர்த்து விலை உயர்வு லிட்டருக்கு 75 பைசா உயரும் என்று தெரிகிறது.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப பெட்ரோல் விலையை மாற்றி அமைத்துக் கொள்ள கடந்த 2010 ஜூன் மாதம் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, கச்சா எண்ணெய்யின் சராசரி விலையை கணக்கில் கொண்டு, 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பெரிய அளவில் உயராத நிலையிலும் பெட்ரோல் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதே காரணமாகும்.

ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டதால், கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகரித்துள்ளது. டாலருடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு 46 பைசா சரிந்துள்ளது. இதன் மூலம் ஒரு டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு 54.17 ஆகிவிட்டது.

இதனால், ஒரு லிட்டர் பெட்ரோலை விற்றால் எண்ணெய் நிறுவனங்களுக்கு 55 முதல் 56 பைசா வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை ஈடுகட்ட விலை உயர்த்தப்படவுள்ளது. இதற்கான அனுமதியை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தந்தால், இன்றிரவு முதலே விலை உயரலாம்.

விரைவில் பெட்ரோல் மீது ரூ. 2 பசுமை வரி?:

இந் நிலையில் சுற்றுச்சூழல் மாசுபடுவதில் பெட்ரோல் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறி, அதைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில், பெட்ரோல் மற்றும் கார்களின் மீது பசுமை வரி விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு திட்டக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டால் பெட்ரோல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.2 உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment