Sunday, November 20, 2011

அதிர்ச்சித் தகவல்களும் அம்பலமாகும் உண்மைகளும் சமூக சீர்கேடுகளும்

முப்பது வருடகால யுத்தம், அழுகை, கதறல், ஓலம், ஒப்பாரி என துன்பியல் வாழ்க்கையைக் கடந்து மற்றுமொரு பரிமாணத்தில் குடாநாடு காலடி எடுத்துவைத்திருக்கும் காலம் இது. எதிர்காலத்தை ஏக்கத்தோடு பார்த்த காலம் தள்ளிப்போய் எதிர்பார்ப்புகளை மனதில் விதைத்து நாளைய பொழுதுகளை நம்பிக்கையோடு எதிர்கொள்ளத் தயாராகியிருக்கிறது நம் தமிழச் சமூகம்.

இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் முளைவிட்டு எமது சமூகத்தின் ஆணிவேரையே அசைக்க முற்பட்டுக்கொண்டிருக்கும் புதியதொரு பிரச்சினையாக கலாசார சீர்கேடு மாறியுள்ளது.

ஆங்காங்கே நடக்கும் விபச்சாரம், பள்ளிக்குச் செல்லும் இளம் பெண்களின் கர்ப்பம் தரிப்பு வீதம் அதிகரிப்பு, சூறையாடப்படும் சிறுவர் வாழ்க்கை, கயவர்களின் கையில் சிக்கித் தவிக்கும் திருமணமாகாத பெண்கள், தென்னிலங்கை மக்களின் வருகை மற்றும் வெளிநாட்டு மோகம் ஏற்படுத்தியுள்ள நாகரிகத் தாக்கம் என இதனை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.

இப்போது அடிக்கடி சூடாகப் பேசப்படும் விடயம்தான் யாழில் கலாசார சீர்கேடு. இதன் உண்மை நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள நாம் அங்குசென்றபோது எமக்குக் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

ஆம்..! யாழ் மாவட்டத்தில் பதின்மூன்று வயது முதல் பத்தொன்பது வயது வரையான (பதின்ம வயது) பள்ளிப்பருவ இளம் பெண்கள் 211 பேர் கடந்த ஐந்து மாதங்களில் கர்ப்பமாகியுள்ளனர். இவர்களில் 90 வீதமானோர் பாடசாலைக்குச் செல்லும் மாணவியர். இதே காலப்பகுதியில் திருமணமாகாத 69 பேர் கர்ப்பம் தரித்துள்ளனர். அது தவிர 242 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 61 வீத அதிகரிப்பினை இந்தப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

இவ்வாறானதொரு நிலை ஏற்படுவதற்கு என்ன காரணம் என அறிந்துகொள்ள நாம் முயற்சித்ததுடன் இது குறித்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் தாய் சேய் நல வைத்திய அதிகாரி சிவசங்கர் திருமகள், வழக்கறிஞர் பொன். பூலோகசிங்கம் ஆகியோருடனும் யாழ். மாநகர முதல்வர் யோ.பற்குணராசாவுடனும் கலந்துரையாடினோம்.

சிவசங்கர் திருமகள்
தாய் சேய் நல வைத்திய அதிகாரி – யாழ். மாவட்ட சுகாதாரப் பணிமனை
“யாழ்ப்பாணத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பாலியல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக பாடசாலை மாணவர்களிடத்தே நன்னடத்தை பேணப்படுவதற்கான ஒழுங்குகளை செய்துவருகிறோம். ஆயினும் பாடசாலை மாணவர்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சிலர் கர்ப்பம் தரிப்பதும் மிகவும் கவலைக்குரிய விடயம். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

1. மேலதிக வகுப்புகள் எனக் கூறி இளவயதுப் பெண்கள் தவறான இடங்களுக்குச் செல்லுதல் கண்காணிக்கப்படுதல்
2. அளவுக்கதிகமான சுதந்திரம் மட்டுப்படுத்தப்படல்
3. பிள்ளைகளின் நண்பர்களுடைய பெற்றோருடன் உறவினைப் பேணுதல்
4. ஆசிரியர் – மாணவர் உறவில் நீண்ட விரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படுதல் (ஒவ்வொரு ஆசிரியரும் மாணவரை தன்னுடைய பிள்ளை என நினைத்தல் அவசியம்)
5. வேலையின்றித் திரியும் இளைஞர்களின் அடாவடித்தனங்களை மட்டுப்படுத்துதல்
6. லொட்ஜ் உரிமையாளர்களுக்குரிய சட்டதிட்டங்கள் வகுக்கப்படுதல்
7. பொதுக் கட்டிடங்களுக்கு அண்மித்ததாக மதுபானசாலைகள், விடுதிகள் அமைக்கப்படுவது தொடர்பான சட்டம் முன்மொழியப்படுதல்
8. பெண்கள் பாதுகாப்புக்கென பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்புப் பிரிவு உருவாக்கப்படுதல்
9. வாழ்க்கைத் தேர்ச்சி பாடசாலைகளில் உரிய முறையில் போதிக்கப்படுதல்
10. பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நடைமுறையிலிருந்து சமுதாயம் விடுபடுதல்

ஆகியவை அத்தியாவசியமானவையாகும். மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது. அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் மாற்றத்தை நினைக்கையில் எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்சமே மேலிடுகிறது. கர்ப்பம் தரித்துள்ள பள்ளி மாணவர்களை பார்த்து நான் பலதடவை கண்ணீர் வடித்திருக்கிறேன். இதனால் சட்டவிரோத கருத்தரிப்புகளும் அதிகரிக்கின்றன. திருமணம் முடித்தோரும் சட்டவிரோத கருத்தரிப்புகளை செய்துகொள்கின்றனர். இதன் பின்விளைவுகள் குறித்துத் தெரியாததால் நாளடைவில் பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவருகிறது. எது எவ்வாறாயினும் எங்களால் (பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை) இயன்றளவான செயற்திட்டங்களை முன்னெடுத்துவருகிறோம்“

வழக்கறிஞர் பொன்.பூலோகசிங்கம்

“இன்று யாழ்ப்பாண குடாநாட்டுக்குள் இருக்கின்ற நீதிமன்றங்களுக்கு வருகின்ற வழக்குகள் எங்களுக்கு யாழ்ப்பாண சமூகத்தினுடைய தற்போதையை நிலையை வெளிச்சமிட்டுக்காட்டுவதாக இருக்கின்றது. நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பதைப் போல நாங்கள் வெளிப்படையாகக் காண்கின்ற யாழ்ப்பாணத்து கட்டமைப்பு பெருமளவில் இன்று சீர்குலைந்துவிட்டது. அதற்கு ஆதாரமாக யாழ்ப்பாண குடாநாட்டில் இருக்கின்ற நீதிமன்றங்களுக்கு வருகின்ற குற்றவியல் வழக்குகள் பெரும்பாலும் சீர்குலைந்துபோயிருக்கின்ற யாழ் சமூகத்தின் கட்டமைப்பின் மறுபக்கத்தை எங்களுக்கு காட்டுகின்றன. வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தின் மத்தியில் நீண்டகாலமாக பேணிப்பாதுகாக்கப்பட்டு வந்த கலாசாரம், பண்பாடு, விழுமியங்கள், வாழ்வியல் அம்சங்சங்கள், வாழ்க்கையின் தேவைப்பாடுகள், இவை எல்லாமே ஏதோ ஒருவகையில் வித்தியாசமான தடத்தில் செல்வதாகப் பார்க்கிறேன். யாழ்.மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகளும் பாலியல் ரீதியிலான வழக்குகளுமே முன்னிலை வகிக்கின்றன.

பாலியல் சம்பந்தமான பிரச்சினைகள் எமக்கு அனுகூலமான விடயம் அல்ல. ஏனைய மாவட்டங்களை விட பாலியல் பிரச்சினைகளில் யாழ் மாவட்டம் குறைவான புள்ளிவிபரங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் கடந்த காலங்களை விட தற்போது அதிகரித்து வருகின்றமையை நாம் சிந்திக்க வேண்டும். மிகச்சிறந்த கலாசாரப் பண்பாடுடைய தமிழ்ச் சமூகம் எனப்போற்றப்படும் எமது கலாசாரத்துக்கு இது ஆரோக்கியமாக அமையாது என்பதே எனது கருத்து”

யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோ. பற்குணராசா

“பரப்பரப்பாக பேசப்படும் விடயமாக கலாசார சீரழிவு காணப்படுகின்றது என்பதை இணையத்தளங்களினூடாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். முப்பது வருடகால போரின் பின்னர் அங்கலாய்த்துக்கொண்டிருக்கின்ற இளைஞர்கள் இன்று சரி பிழைக்கு அப்பால் வேலைவாய்ப்பின்மையினூடாக பொருளாதார பிரச்சினையை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் குறிப்பிடும் இந்நிலைக்கு இது முக்கியமான காரணம். போர்க்காலச் சூழல் முழுமையான கல்வியை வழங்கத் தவறியது. இளைஞர்களின் நிலை கட்டுங்கடங்காத வகையில் உள்ளது. இவர்களுக்கு போதிய விழிப்புணர்வு வழங்கி சரியான முறையில் வழிநடத்துவதன் மூலம் நல்ல வகையில் திசை திருப்பலாம். தவறுகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டு விஷமத்தனமான பிரசாரங்களில் ஈடுபடாமல் கூட்டு முயற்சியில் பொறுப்புணர்வுடன் இவர்கள் வழிநடத்தப்பட வேண்டும்.

யாழில் இடம்பெறும் சமூக சீர்கேடுகள் மூடிமறைக்கப்படுகின்றனவா?

ஏன் மூடி மறைக்க வேண்டும்? இதனை நீங்கள் வெளிப்படையாகக் கண்டுகொண்டிருக்கிறீர்கள். இவ்வாறான சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் நடைபெறுவதில்லை. கொழும்பில் இதனை விட சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஏன் உலகளாவிய ரீதியில் இப்பிரச்சினை தலைதூக்கி நிற்கிறது. ஆனால் யாழில் ஒரு சிறு விடயம் ஏற்படுகின்ற போது அதனை விசுவரூபமாக பிரசாரப்படுத்தப்படுவது ஏன் என்று தெரியவில்லை.

இங்கு உள்ள லொட்ஜ்களில் பாடசாலை மாணவர்களின் வருகை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. அது எந்த வகையில் உண்மை? இந்த லொட்ஜ்கள் மாநகர சபை அனுமதியுடன்தான் நடத்தப்படுகின்றனவா? எனக் கேட்டபோது…

லொட்ஜ்கள் உண்மையிலேயே எமது அனுமதியின்றித் தான் நடத்தப்படுகின்றன. புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரின் வீடுகளே இன்று லொட்ஜ்களாக உபயோகிக்கப்படுகின்றன. அவற்றை உண்மையான சட்ட வரைவுக்குள் பதிவுசெய்ய வேண்டும் என்றால் உரிமையாளர்கள் அவ்விடத்தில் இருக்க வேண்டும். அதே நேரதத்தில் அந்த லொட்ஜ்கள் விடுதிகளாக்கப்படுவதற்குரிய அனுமதியை சுற்றுலாத்துறையினர் வழங்க வேண்டும். ஆனால் அவ்வாறு இங்கு செயற்படுத்தப்படவில்லை. அவ்வாறான சட்டதிட்டங்களை நாம் செயற்படுத்தும்போது வேலைவாய்ப்பு குறித்து லொட்ஜ் நடத்துநர்கள் கவலை கொள்கிறார்கள். ஆயினும் உரிய வகையில் அவற்றைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளோம்

மற்றும் ஒருசில மாணவர்கள் லொட்ஜ்களுக்கு சென்று வருவதால் ஒட்டுமொத்த பாடசாலையின் நன்மதிப்பும் கெடுகிறது. ஒருசிலர் விடும் தவறால் ஒட்டுமொத்த யாழ்ப்பாணக் கலாசாரமும் சீர்கெடுகிறது எனக் கூற முடியாது. இதனைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்” என்றார்.

தமிழ்ச் சமூகத்தை பின்னடையச் செய்வதற்கு சில சக்திகளால் திட்டமிட்டுப்; பரப்பப்படும் விடயம் தான் இந்த சமுதாயச் சீர்கேடு குறித்த வதந்தி என சமுதாயத்தின் ஒரு தரப்பு கூறுகிறது. யாழில் மட்டுந்தான் பாலியல் பிரச்சினைகள் நடக்கின்றனவா? எனக் கேட்கிறது மற்றுமொரு தரப்பு. இது மூடி மறைக்கப்படுமானால் நமக்குத் தெரியாமல் வளர்க்கப்பட்டுவிடும். ஆதலால் உண்மையை வெளிப்படையாகக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிறது இன்னொரு தரப்பு.

இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினையும் பாலியல் தொடர்பான விழிப்புணர்வின்மையுமே அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இந்த இழி நிலைக்குக் காரணம் என்பதே பொதுவான கருத்தாக நிலவுகிறது.

தென்னிலங்கையர்களின் வருகையோடு விபச்சாரத்தை தொழிலாக செய்யும் பாலியல் தொழிலாளர்களின் வருகை யாழில் அதிகரித்துள்ளமையை நாம் வெளிப்படையாகக் காணக்கூடியதாக உள்ளது. அவர்கள் பாதுகாப்பான உறவினை மேற்கொள்கிறார்களா என்பதே இங்கு கேள்விக்குறியாகும். அதனை விட யுவதிகளும் பாடசாலை மாணவர்களும் இந்த வட்டத்துக்குள் உள்வாங்கப்படுவது கவலைக்குரியதே. இவர்கள் மூன்றாவது சக்தியினூடாக பலவந்தமாக இதற்கு ஆளாக்கப்படுகிறார்களா அல்லது தாமாகவே விரும்பி ஈடுபடுகிறார்களா என்பதை அறிந்துகொள்ள யாழிலுள்ள சகோதர மொழி பேசும் லொட்ஜ் உரிமையாளருடன் உரையாடினோம்.

“யாழ்ப்பாண நகரத்தில் இரவு ஏழு மணியானால் போதும் எனது கைத்தொலைபேசி அலறிக்கொண்டுதான் இருக்கும். அண்ணா ரூம் இருக்கிறதா? வரலாமா? என்று அடிக்கடி கேட்பார்கள். பாடசாலை மாணவர்கள் வருகிறார்கள். நான் இல்லை என்று சொல்லவில்லை. பல சந்தர்ப்பங்களில் நான் அவர்களை ஏசி அனுப்பியிருக்கிறேன். மிக இளவயதுப் பெண்கள் இங்கு வந்து தாமாகவே முன்வந்து தமது அடையாள அட்டையைக் கொடுத்து பதிவுசெய்யச் சொல்வதும் உண்டு. வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழ் இளைஞர்கள் இங்கு சிங்களப் பெண்களை அழைத்து வருவார்கள். பணம் படைத்த பலர் அறையின் வாடகையை விட மேலதிகமாக கொடுப்பதும் உண்டு” என்றார் அவர்.

இவ்வாறு நாம் உரையாடிய லொட்ஜ்கள் பலவற்றின் உரிமையாளர்களும் இதேபோன்ற பதிலையே எமக்கு அளித்தனர்.

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக இணையத்தளங்கள், இணைய அரட்டை, சமூக வலையமைப்புகள் உட்பட ஏனைய இணைய வசதிகளை பயன்படுத்திக்கொள்ளும் இளைஞர்கள் தவறான கட்டமைப்புக்குள் தாமாகவே உள்வாங்கப்படுகின்றனர். இதனால் அவர்களுடைய சிந்தனையோட்டம் மாறுபடுகின்றது. அதன் பின்விளைவாக பாலியல் ரீதியிpலான இயல்பான தூண்டுதலுக்கு உள்ளாகி குற்றம் புரிகின்றனர். இதற்கு உதாரணமாக தாவடிப் பகுதியில் அண்மையில் நடைபெற்ற சம்பவத்தினைக் குறிப்பிடலாம்.

தமது சொந்த கிராமத்திலிருந்து சுமார் 32 கிலோ மீற்றர் தூரம் வந்த 16 வயதான யுவதிகள் இருவர் 20 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களுடன் பாலியல் உறவுகொண்டுள்ளனர். இவ்விடயம் பெற்றோரினூடாக வழக்கு விசாரணைக்கென நீதிமன்றுக்கு வந்துள்ளது. பாலியல் துன்புறுத்தலின் 1995 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் 16 வயது அல்லது அதற்குக் கீழ்ப்பட்ட பெண்களுடன் விரும்பியோ விரும்பாமலோ பாலியல் ரீதியிலாக தொடர்புகொண்டால் சட்டப்படி குற்றமாகும். ஆதலால் அந்த இளைஞர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. எனினும் இதன் பின்புலத்தில் நவீன தொடர்பாடல் முறைகளே காரணமாக அமைந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும். இவ்வாறு அடிக்கடி பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றவண்ணமே உள்ளன.

அத்துடன் யுத்தத்தின் பின்னர் புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட பாழடைந்த வீடுகளை இளைஞர்கள் தமது சட்டவிரோத தேவைகளுக்கென பயன்படுத்திக்கொள்கின்றனர். இவ்வாறான இளைஞர்களால் அப்பாவி யுவதிகள் பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டியமை அவசியமாகும். 2010 ஆம் ஆண்டு திருமணமாகாத கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 98 ஆக இருந்துள்ளது. இவ்வருடம்; ஐந்து மாதங்களில் மாத்திரம் 69 பேர் கர்ப்பம் தரித்துள்ளனர். அதேபோன்று 2010 இல் சிறுவர் துஷ்பிரயோகங்கள் 175 ஆக பதிவாகியுள்ளது. இவ்வாண்டு ஐந்து மாதங்களில் இது 242 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலை தொடருமானால் மிகப்பெரிய சமூகச் சீர்கேட்டினை எதிர்நோக்க வேண்டிய அபாயம் உள்ளதை யாரும் மறுப்பதற்கில்லை. அகன்று பரந்து விரிந்த அழகான மரம்போல் நமது சமுதாயம் காட்சியளித்தாலும் இவ்வாறான சமூகச் சீர்கேடுகள் எங்கோ ஒரு மூலையில் எமது ஆணிவேரை அரித்துக்கொண்டுதான் இருக்கும் என்பது நிதர்சனம்.

நடைமுறையைக் கவனமாக நோக்குகையில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், சமூக அக்கறையாளர்கள், அரச தரப்பினர் உட்பட அனைவருமே பேதங்களின்றி இவ்விடயத்தில் ஒருமித்த மனதுடன் கைகோர்ப்பதே இன்றைய தேவையாக உள்ளது.

யாழிலிருந்து எம்.ப்ரியந்தி
படங்கள்: ஜே.எஸ்.கே(நன்றி -வீரகேசரி )

No comments:

Post a Comment