"எலைட் ஷாப்கள், பெரிய ஷாப்பிங் மால்களில், "ஏசி' பார் வசதியுடன் திறப்பதற்கான முயற்சி நடக்கிறது' என குற்றம் சாட்டியுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி, இதற்கும் ஒரு "ஜே' போடுங்கள் என காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:: தேர்வாணையக் கழகத் தலைவரும், உறுப்பினர்களும் தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள். தங்களுக்கு வேண்டியவர்களை இப்பதவியில் நியமிக்க வேண்டி, இவர்களை தாங்களாகவே பதவிகளிலிருந்து விலகிக் கொள்ளும்படி கேட்கப்பட்டதாகவும், அவர்கள் அதற்கு இசைவளிக்காததால், பழி வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சொல்கின்றனர். அதிகாரிகளின் இல்லங்களில் சோதனை நடத்தியுள்ளனர். அதோடு விட்டு விடாமல், அதிகாரிகளை தேர்வாணைய அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புப் போலீசார் அழைத்து வந்துள்ளனர். அவர்களது இருக்கைக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அவர்களது கோப்புகளை ஆய்வு செய்து கைப்பற்றியதாகவும், அதன் பின் ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அங்கேயும் விசாரணை நடத்தியுள்ளனர். இதை பார்க்கும் போது, ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கிறோமா அல்லது எமர்ஜென்சி காலத்தில் வாழ்கிறோமா என்று தெரியவில்லை.
சமச்சீர் கல்வித் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று செயல்பட்டதால், சுப்ரீம் கோர்ட் வரை சென்று ஏற்படுத்திய தேவையற்ற செலவோடு, கோர்ட் தீர்ப்பு வரை காத்திருக்காமல், அவசரம் அவசரமாக 200 கோடி ரூபாய் செலவில் ஆட்சியாளர்கள், பழைய பாடத் திட்டத்தின் கீழ் அச்சடிக்க சொன்ன புத்தகங்களின் கதி என்ன?இதுவரை அப்புத்தகங்களை அச்சிட்ட உரிமையாளர்களுக்கு பணம் வழங்கவில்லை. தலைமைச் செயலக கட்டடம் ஆறு மாதமாக அப்படியே கிடக்கிறது. செம்மொழித் தமிழாய்வு நூலகத்தின் நூல்கள் எங்கே என்று தெரியவில்லை.
குளிர் சாதன வசதியுடன் கூடிய புதிய மதுக்கடைகளை, "எலைட் ஷாப்' என்ற பெயரில் துவங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன் அருகிலேயே "ஏசி' பார் துவங்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. புதிய மதுக்கடைகளை அரசு நடத்தும் என்றாலும், "ஏசி' பார்கள் தனியாரால் நடத்தப்படும் என்றும் செய்திகள் வந்துள்ளன.சிறிது நாட்களுக்கு பின், இந்த புதிய மதுக்கடைகள் பெரிய ஷாப்பிங் மால்களில், "ஏசி' பார் வசதியுடன் திறக்கப்படவுள்ளன என்றும் தெரிகிறது. அதற்கான உரிமம் பெற இப்போதே ஷாப்பிங் மால் உறுப்பினர்கள் அதற்கான முஸ்தீபுகளுடன் மேலிடத்தைச் சந்திக்கத் துவங்கி விட்டார்களாம். அ.தி.மு.க.,விற்கு ஓட்டளித்த மக்களுக்காக ஜெயலலிதா அரசின் மற்றொரு சாதனைத் திட்டம் இது. இதற்கும் ஒரு, "ஜே' போடுங்கள்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
|
No comments:
Post a Comment