Friday, April 8, 2011

நிமிடத்துக்கு நிமிடம் கடத்தலில் புதிய யுக்தி : பணம் கடத்தலில் அரசியல்வாதிகள் சாகசம்

என்ன தான் தேர்தல் கமிஷன் அதிரடி சோதனைகளை மேற் கொண்டாலும் அத்தனையும் தாண்டி அரசியல் கட்சியினர் நிமிடத்துக்கு நிமிடம் தங்களின் கடத்தல் யுக்தியில் மாற்றம் செய்து, கமிஷனுக்கே, "அல்வா' கொடுக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அமரர் ஊர்தி முதல் ஆம்னி பஸ் வரை பணம் கடத்திய கட்சியினர், தற்போது பணம் வினியோகிக்கும் பணியை கனக்கச்சிதமாக அரங்கேற்றி வருகின்றனர்.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தேர்தல் கமிஷன், கழுகு கண் பார்வையைக் கொண்டு அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை நடந்த சோதனைகளில் தமிழகம் முழுவதும், 30 கோடி ரூபாய் வரை பணமாகவும், பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளது தேர்தல் கமிஷன். தேர்தல் கமிஷன் எந்த அளவுக்கு தன் பிடியை இறுக்கியதோ, அந்த அளவுக்கு ஆளும் கட்சியினரும், மற்ற கட்சியினரும் பணக் கடத்தல் பணிகளில் பல்வேறு யுக்திகளை கையாளத் துவங்கி விட்டனர். தேர்தல் கமிஷனின் வாகன சோதனைகளில் இருந்து தப்பிக்கும் வகையில் முதலில், அரசியல் பிரமுகர்களால் நடத்தப்படும் தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ்கள், அவர்களின் பினாமிகளால் நடத்தப்படும் ஆம்புலன்ஸ்கள் மட்டுமின்றி அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ்களும் பணக் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்டன. இது குறித்து செய்தி வெளியான நிலையில், தேர்தல் கமிஷனின் கிடுக்கிப்பிடி சோதனைகள் ஆம்புலன்ஸ்களிலும் நடத்தப்பட்டது.



அமரர் ஊர்தி: ஆம்புலன்சில் பணம் கடத்தப்படுவது தெரியவந்த நிலையில், கடத்தல் தந்திரத்தில் மாற்றத்தை மேற்கொண்டனர். அதற்கு அவர்கள் பயன்படுத்தத் துவங்கியது தான் அமரர் ஊர்திகள். ஆம்புலன்ஸ்கள், அமரர் ஊர்திகளில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நெடுஞ்சாலைகள், மாநகர சாலைகளில் வணிகர்கள் என்ற போர்வையில் பணம் கடத்தல் பணியை தி.மு.க., மேற்கொண்டது. இதை அறிந்து கொண்ட தேர்தல் கமிஷன், சாலைகளில் சோதனையை பலப்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆளும் கட்சி, இந்த சோதனைகளுக்கு எதிராக வணிகர்களை தூண்டி விட்டது. வணிகர்களும், ஆளும் கட்சியை திருப்தி படுத்தும் வகையில் கடை அடைப்பு போராட்டம் அறிவித்தனர். இதனால், தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்கள் தீவிரமாக கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டதால், இந்த கடத்தல் முறையிலும் மாற்றம் நிகழ்ந்தது. அடுத்ததாக லாரி புக்கிங், ரெகுலர் சர்வீஸ், கூரியர்கள் மூலம் கடத்தல் பணிகள் நடந்தது. கிராம, நகர அளவில் உள்ள அனைத்து மளிகைக் கடைகள், நகை அடகுக் கடைகள் அனைத்திலும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பட்டியலில், கடைகளில் கடன் பெற்றவர்கள் விவரங்கள் சேகரித்து, 3,000 ரூபாய் வரை கடன் வைத்துள்ளவர்களுக்கு பணம் செலுத்தி வருகிறது. நகை அடகுக் கடைகளில், 4,000 ரூபாய் நகைகளை அடகு வைத்துள்ள நகைகளையும், பணத்தை செலுத்தி நகையை மீட்டு, அவர்களின் ஓட்டுக்களையும் பெற்று வருகின்றனர்.


தேர்தல் கமிஷனுக்கு "தண்ணி காட்டி' தங்களின் பணம் வழங்கும் யுக்தியை நிமிடத்துக்கு நிமிடம் மாற்றம் செய்து திட்டத்தை அரங்கேற்றி வருகின்றனர்.இவர்களின் அடுத்த இலக்கு பால்காரர்கள், சிறு காய்கறி வியாபாரிகள், கருவாடு வியாபாரிகள், ஸ்டவ், குடை ரிப்பேர் செய்வோர். இவர்கள் மூலம், வீடுகளில் உள்ள ஓட்டுக்களுக்கு ஏற்ப பணத்தை வழங்கவும் முடிவு செய்துள்ளனர். இவ்வாறு வழங்கும் வியாபாரிகளுக்கு கமிஷன் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.


ஆம்னி பஸ்களில் பயணிக்கும் பணம் : -வாக்காளர்களுக்கு கொடுக்க கோடிக்கணக்கான ரூபாய் பணம், நாள்தோறும் ஆம்னி பஸ்கள் மூலம் பாதுகாப்பாக கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க, தேர்தல் பறக்கும் படையினரின் கண்காணிப்பை அதிகரிக்கவேண்டியது அவசியமாகியுள்ளது. கார்கள், ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் சென்றால் ரெய்டு நடத்தப்படுகிறது என்பதால், பொதுமக்கள் செல்லும் வாகனங்களில் பணத்தை கடத்தினால் தேர்தல் கமிஷனை ஏமாற்றலாம் என்பதால் அந்த வழியில் பணத்தை அதிகளவில் கடத்துகின்றனர்.குறிப்பாக, ஆம்னி பஸ்களில் பணத்தை எடுத்துச் செல்வது மிகுந்த பாதுகாப்பாக உள்ளது. பொதுமக்களின் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு பல்வேறு ஆம்னி நிறுவனங்கள், பார்சல் சர்வீஸ்களை நடத்தி வருகின்றன. திருச்சிக்கு ஆம்னி பஸ் மூலம் கடத்தப்பட்ட ஐந்து கோடி ரூபாய் பணத்தை தேர்தல் அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்த சம்பவம் நடந்தது. இதன் மூலம், ஆம்னி பஸ்களில் வாக்காளர்களை கவனிக்க பணம் கடத்துவது அம்பலமாகியுள்ளது.


அரசியல்வாதிகள் மற்றும் அவரது உறவினர்கள், பினாமிகள் பெயரில் பல ஆம்னி பஸ்கள் இயங்குவதால், பணம் எளிதாக கடத்தப்படுகிறது. நேர்மையான முறையில் தேர்தலை நடத்தவேண்டும் என்றால், ஆம்னி பஸ்களில் பணக்கடத்தலை தடுக்க தேர்தல் கமிஷன் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, திருச்சியில் துவங்கிய அதிரடியை சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களிலும் தொடரவேண்டும்.

No comments:

Post a Comment