Friday, April 8, 2011

ரூ. 20 "ஸ்டாம்ப்' பேப்பரில் உறுதிமொழி பத்திரம்:ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் வினோதம்

பல்லாவரம் தொகுதியில், பா.ஜ., ஆதரவுடன் போட்டியிடும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் ராமலிங்கம், வித்தியாசமான தனது தேர்தல் வாக்குறுதிகளை, 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் அச்சடித்து, அதை பிரமாணப் பத்திரமாக தயாரித்து, அதன் நகலை வாக்காளர்களிடம் வினியோகித்து பிரசாரம் செய்து வருகிறார்.பல்லாவரம் தொகுதியில், தி.மு.க., - அ.தி.மு.க., - பகுஜன் சமாஜ் - பா.ஜ., கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் உட்பட, 16 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


தி.மு.க., - அ.தி.மு.க., - பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் ஏற்கனவே பிரசாரத்தை துவக்கி தீவிரப்படுத்தி விட்டனர். ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் ராமலிங்கம், தேர்தல் களத்திற்கு சற்று தாமதமாக வந்தாலும், வித்தியாசமான முறையில் பிரசாரத்தை துவக்கியுள்ளார். தன் தேர்தல் வாக்குறுதிகளையும், அவர் எடுத்துக் கொண்ட உறுதிமொழியையும், 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் அச்சடித்து, அதை பிரமாணப் பத்திரமாக தயாரித்து, பத்திரத்தின் நகலை வாக்காளர்களிடம் வினியோகித்து ஓட்டு கேட்கிறார்.
அவர் தயாரித்துள்ள உறுதிமொழி பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டிருப்பதாவது:என்னை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுத்தால், மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து, 200 குடும்பங்களுக்கு தினம் ஒரு கேன் (20 லிட்டர்) மினரல் வாட்டர் சப்ளை செய்வேன். இதற்கு ஆகும் செலவிற்கு என் சம்பளத்தையும், தொகுதி மேம்பாட்டு நிதியையும் பயன்படுத்துவேன்.இந்த திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் தொகுதி முழுவதும் செய்து முடிப்பேன்.
இதன் மூலம், ஒவ்வொரு குடும்பமும் மாதம், 600 ரூபாய் மிச்சப்படுத்தலாம். என் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றால், தொகுதி மக்கள் என்னை திரும்ப பெறும் உரிமையை நான் வழங்குகிறேன்.தொகுதி மொத்த வாக்காளர்களில், 30 சதவீதம் பேர் எனக்கு எதிராக கையெழுத்திட்டால், பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன்.இவ்வாறு அந்த உறுதிமொழி பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment