Sunday, April 24, 2011

ஆபத்தான நேரங்களில் சிறந்த முடிவுகள் எடுக்கும் யானைகள்!


யானைகளுக்கு நீண்டநாட்களுக்கான ஞாபக சக்தி உள்ளது. அதிலும் ஆபத்தொன்று வருகின்றபோது அவற்றுக்கு இந்த ஞாபக சக்தி துணை நிற்கின்றது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள்.
வயது முதிர்ந்த யானைகள் இக்கட்டான கட்டங்களில் சிறந்த முடிவுகளை எடுக்கின்றன.
முன்னைய அனுபவங்களைக் கொண்டே அவை இந்த முடிவுகளை எடுக்கின்றன. ஆபிரிக்க யானைகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் முடிவில் இந்த விவரங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன.

கூட்டமாக வாழும் யானைகளுள் மிகவும் வயதான யானையே இக்கட்டான கட்டங்களில் மிகச் சிறந்த முடிவுகளை எடுக்கின்றது. தன்னுடைய ஞாபகத்தில் உள்ள முன்னைய அனுபவங்களின் அடிப்படையிலேயே இந்த முடிவுகள் எடுக்கப் படுகின்றன.
கூட்டமாக வாழும் யானைகள் மத்தியில் தலைமைத்துவத்துக்கு வயது மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. அதன் நீண்ட ஆயுள் அதற்கேற்ற மூளை வளர்ச்சி என்பன இங்கு பிரதான இடம் பிடிக்கின்றன.
யானைக் கூட்டமொன்று பொதுவாக 12 யானைகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. உணவு தேடல், ஓய்வெடுத்தல் என இவை கூட்டமாகவே செயற்படுகின்றன. இதில் ஒன்று இன்னொன்றுக்குப் பாதுகாப்பாகச் செயற்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சிங்கங்களுள் நன்கு வளர்ந்த சிங்கங்கள் யானைகளை வேட்டையாடி இடைஞ்சல் ஏற்படுத்தக் கூடியவை.
இந்த சிங்கங்களின் கர்ச்சனை சத்தம் கேட்டவுடன் அதைக் கூர்ந்து அவதானித்து கூட்டத்தின் தலைமை யானை தனது முன்னைய அனுபவங்களின் அடிப்படையில் செயற்பட்டு சிறந்த முடிவுகளை எடுத்து பதுங்குவதற்கு வழிகாட்டி தனது கூட்டத்தைக் காப்பாற்றுகின்றது.
கென்யாவின் காட்டுப்பகுதிக்குள் யானைகளின் செயற்பாடுகளை இரண்டு வருடங்களுக்கு மேல் நன்கு அவதானித்துள்ள சஸெக்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டொக்டர். மெக்கொம்ப் தலைமையிலான குழுவினர் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment