Saturday, March 26, 2011

ஓட்டுச் சாவடிகளில் “வெப்” காமிரா இயக்க நியமனம்: தேர்தல் பணியில் என்ஜினீயரிங் மாணவர்கள்


10 ஆயிரம் வாக்குச் சாவடிகளிலும் தேர்தல் நாளில் ஓட்டுப்பதிவை நேரடியாக ஒளிப்பதிவு செய்ய தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் 20 ஆயிரம் வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்றும் 10 ஆயிரம் வாக்குச் சாவடிகள் மிகவும் பதட்டமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன. 
 
இதன்படி இந்த வாக்குச் சாவடிகளில் “வெப்” காமிரா, கம்ப்யூட்டர் மற்றும் பிராட் பேண்ட்டுடன் கூடிய இணைய தள இணைப்பு வசதி மூலம் சென்னையில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.
 
இதன் மூலம் வாக்குப்பதிவின் போது ஏதேனும் முறைகேடு அல்லது வன்முறை சம்பவங்கள் நடந்தால் அந்தந்த மாவட்ட, மாநில தலைமை தேர்தல் அலுவலகங்களில் இருந்து கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். “வெப்” காமிரா இயக்கும் பணியில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
 
பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.சி.ஏ., எம்.சி., டி.சி.ஏ., கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட தொழில் நுட்ப படிப்பு பயிலும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக அவர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு வருகிறது.
 
இந்த மாணவர்கள் அனைவருக்கும் தேர்தலுக்கு முதல் நாளான ஏப்ரல் 12-ந் தேதி சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட உள்ளது. மறுநாள் (ஏப்ரல் 13-ந் தேதி) அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள். 2 நாட்களுக்கும் சேர்த்து ரூ.700 ஊக்க ஊதியமாக வழங்கப்படும். பதட்டம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் லேப்-டாப் கம்ப்யூட்டர்களை கையாளும் பணியில் தலா ஒரு மாணவர் வீதம் நியமிக்கப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment