Saturday, March 26, 2011

அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகளில், தேர்தல் ஆணையம் தலையிட முடியாது! - பிரவீண்குமார்

அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகளில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. இது அவர்களது கொள்கை முடிவு என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.


வாக்காளர்கள் கட்டாயம் ஓட்டுப் போட வேண்டும். அச்சமில்லாமல், மனசாட்சிப்படி ஓட்டுப் போட வேண்டும் என்பதை வலியுறுத்தும் பிரசார வீடியோ சி.டி. மற்றும் போஸ்டர்கள் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கோட்டையில் நேற்று நடந்தது.

இதில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கலந்து கொண்டு சி.டி.யையும், போஸ்டர்களையும் வெளியிட்டார். அதனை கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் டி.ராஜேந்திரன், பி.அமுதா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "தேர்தலில் மக்கள் அவசியம் ஓட்டுப் போட வேண்டும். பணத்திற்காக ஓட்டுப் போடாமல் மனசாட்சிப்படி ஓட்டுப் போட வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் இன்று வீடியோ சி.டி. வெளியிட்டுள்ளோம்.

இதில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜெயம்ரவி, நடிகைகள் சுஹாசினி, ரோஹினி, இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, பத்திரிகையாளர் கோபிநாத் ஆகியோர் விழிப்புணர்வு பிரசாரம் செய்துள்ளனர்.

ஒவ்வொருவரின் பேச்சும் 10 வினாடிகள் முதல் 20 வினாடிகள் வரை இடம்பெற்றுள்ளது. இந்த பிரசாரத்தில் நானும், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அமுதாவும் பேசி இருக்கிறோம்.

வாக்கை பணத்திற்காக விற்பதா?

வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 'விலை மதிப்பில்லாத உங்கள் வாக்கை பணத்திற்காக விற்பதா? உங்கள் வாக்கினை சரியாக பயன்படுத்துவீர்' என்பது போன்ற பல்வேறு வாசகங்கள் கொண்ட 10 வகையான போஸ்டர்களும் வெளியிட்டுள்ளோம். ஒரு மாவட்டத்திற்கு 2 ஆயிரம் போஸ்டர்கள் வீதம் மொத்தம் 65 ஆயிரம் போஸ்டர்கள் அச்சிடப்பட்டு உள்ளன.

இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக போஸ்டர்கள் தேவைப்பட்டால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அச்சிட்டுக் கொள்ளலாம்.

பொது இடங்களில்...

வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள விரும்பும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பிரசார ஆடியோ, வீடியோ சி.டி.யை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வீடியோ வேன் மூலம் பொது இடங்களில் இந்த சி.டி. திரையில் ஒளிபரப்பப்படும். 'யு டியூப்' இணையதளத்திலும் ஒளிபரப்பப்படுகிறது.

அதுபோல வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட போஸ்டர்கள் கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், பொது இடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், வாக்குச்சாவடி அமைக்கப்படும் பகுதிகள் ஆகிய இடங்களில் ஒட்டப்படும்.

இலவச அறிவிப்புகள்

அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகள் வெளியிடுவதில் தேர்தல் கமிஷன் தலையிட முடியாது. அது அவர்களது கொள்கை முடிவு ஆகும். அரசியல்வாதிகள் வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்பது வழக்கம்தான். அதுபற்றி மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும். தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்கு அரசு திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலோ, அரசியல்வாதிகள் பணம் கொடுத்தாலோ அதை தடுப்பதுதான் தேர்தல் ஆணையத்தின் வேலையாகும்.

வாக்காளர்கள் பணம் கொடுப்பதை தடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சரியான ஆவணங்கள் வைத்திருப்பவர்களிடமோ, அவசரமாக மருத்துவமனைக்கு செல்பவர்களிடமோ பணம் பறிமுதல் செய்யக்கூடாது என்று அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம். அதனால் சிறு வணிகர்கள் இப்போது துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.

பணப் பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை

வாகன சோதனையாலும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையாலும் இதுவரை ரூ.20 கோடி ரொக்கப் பணமும், ரூ.7 கோடி மதிப்புள்ள பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதிகபட்சமாக மதுரையில் ரூ.3 கோடியே 80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

பணம் பட்டுவாடா நடக்கிறது என்று புகார் வந்தவுடன் பறக்கும் படையினர் அங்கே விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கிறார்கள். சாலைகள் மட்டுமல்லாமல், கடற்கரை என எந்த இடத்தில் பணம் பட்டுவாடா நடந்தால், அதுபற்றி குறிப்பிட்டு புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

11-ந் தேதி மாலைக்குள் கருத்து கணிப்பு

ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடப்பதால் தேர்தல் தொடங்கும் நாளான ஏப்ரல் 4-ந் தேதியில் இருந்து தேர்தல் முடியும் நாளான மே 10-ந் தேதி வரை கருத்து கணிப்போ, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்போ வெளியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை ஏப்ரல் 11-ந் தேதி மாலை 5 மணி வரை கருத்து கணிப்பு மட்டும் வெளியிடலாம். ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடக்கூடாது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நடிகர், நடிகைகள் நடித்துள்ள திரைப்படங்களை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மட்டும் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது, என்றார்.

No comments:

Post a Comment